எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஆண்டவனுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் ரெசிப்பீஸ், HEALTHY RECIPES.

1. புழுங்கலரிசிப் புட்டு2. முளைக்கீரை வடை3. நெல்லிக்காய் சட்னி4. புதினா மல்லி பகோடா5. வேர்க்கடலை வெஜ் சாலட்6. பாகற்காய் சாதம்7. தேன் பழப் பச்சடி8. மதுவரக்கம்9. சோயாபீன்ஸ் சுண்டல்10. ஹெல்த் ட்ரிங்க். 
1.புழுங்கலரிசிப் புட்டு

தேவையானவை :-
புழுங்கல் அரிசி – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், தேங்காய்த்துருவல் – முக்கால் கப் தூள் வெல்லம் – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:-
புழுங்கல் அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைத்து மிஷினில் அரைத்து சலிக்கவும். பாசிப்பருப்பையும் அரை மணி நேரம் ஊறவைத்து மாவுடன் பிசறி இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும். தூள் வெல்லத்தையும் ஏலப்பொடியையும் தேங்காய்த் துருவலையும் கலந்து உபயோகிக்கவும். ஆவியில் வேகவைப்பதால் செரிமானத்துக்கு நல்லது. வெல்லம் இரத்த விருத்தி  கொடுக்கும்.

2முளைக்கீரை வடை

தேவையானவை :-
பச்சரிசி , புழுங்கல் அரிசி, தினையரிசி – தலா கால் கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு துவரம்பருப்பு - தலா  அரை கப், முளைக்கீரை – 1 கட்டு, சிறிய வெங்காயம் – 15 , வரமிளகாய் – 6, சோம்பு – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 100 மிலி.

  செய்முறை:-
பச்சரிசி புழுங்கல் அரிசி தினையரிசையை ஒன்றாகப் போட்டுக் களைந்து  இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பையும் ஒன்றாகக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும். முளைக்கீரையை ஆய்ந்து கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிய வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸியில் மிளகாய் சோம்பு உப்பு போட்டு அரைத்து அதில் பச்சரிசி புழுங்கல் அரிசி தினை அரிசியைப் போட்டுக் கரகரப்பாக அரைக்கவும். அதிலேயே பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பைப் போட்டு அரைத்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கரைக்கவும். அதில் பொடியாக அரிந்த வெங்காயம், முளைக்கீரையைப் போட்டு  நன்கு கலந்து தோசைக்கல்லில் அடைகளாகச் சுட்டு எடுக்கவும்.முளைக்கீரை இரும்புச் சத்து உள்ளது.

3. நெல்லிக்காய்ச் சட்னி:-

தேவையானவை :-
முழு நெல்லிக்காய் – 6, தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, புளிக்காத தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன். உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:-
நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி தேங்காய்த்துருவல் பச்சைமிளகாய், தயிர் உப்பு சேர்த்து அரைக்கவும். இது தோசைக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. விட்டமின் சி நிரம்பியது. சளிப் பிடிக்காது.  


4.புதினா மல்லி பகோடா:-

தேவையானவை:-
கடலை மாவு – ஒரு கப், சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் – 2, புதினா கொத்துமல்லித் தழை – இரு கைப்பிடி, சோம்பு – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
கடலை மாவு சோளமாவு அரிசி மாவை ஒரு பௌலில் போட்டு உப்பு மிளகாய்த்தூள் சோம்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். இதில் பொடியாக அரிந்த பச்சைமிளகாய் புதினா கொத்துமல்லித்தழையையும் போட்டு நன்கு கலக்கவும். எண்ணெயைக் காயவைக்கவும். காய்ந்த எண்ணெயில் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி மாவைக் கரண்டிக் காம்பால் கலக்கி அதன் பின் தண்ணீரை தெளித்துப் பிசைந்து காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக உதிர்த்துப் போட்டு நன்கு பொரு பொருவென்று வெந்ததும் எடுக்கவும். புதினா கொத்துமல்லித்தழை அஜீரணத்தைப் போக்கிப் பசியைத் தூண்டும்.


5.வேர்க்கடலை வெஜ் சாலட்.
தேவையானவை:-
அவித்த வேர்க்கடலை – 1 கப், பொடியாக அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( காரட், பீட்ரூட், வெள்ளரி, இளம் பீன்ஸ், வயலட் முட்டைக்கோஸ், ) பெரிய வெங்காயம் – சிறியது ஒன்று பொடியாக நறுக்கவும். தக்காளி- சிறியது ஒன்று பொடியாக நறுக்கவும். தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி, மிளகு சீரகப் பொடி – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:-
ஒரு கண்ணாடி பௌலில் அவித்த வேர்க்கடலையைப் போடவும். அதன் மேல் பொடியாக அரிந்த காய்கறிக்கலவையைப் போடவும். அதன் மேல் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் தக்காளியைப் போட்டு மிளகு சீரகப் பொடியைத் தூவி உப்பையும் தூவவும். கொத்துமல்லித்தழையைத்தூவி விரும்பினால் சில துளி எலுமிச்சை சாறைச் சேர்த்துப் பரிமாறவும். வெயிட்டைக் குறைக்கும் இந்த சாலட் சத்து மிக்கது. விட்டமின்ஸ் & மினரல்ஸ் நிரம்பியது.


6.பாகற்காய் சாதம்.

தேவையானவை :-
பச்சரிசி சாதம் – 2 கப், பாகற்காய் – 1 சின்ன வெங்காயம் – 10, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 4, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், கடுகு , உளுந்து – தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்.

செய்முறை:- வரமிளகாயை உப்போடு சேர்த்துக் கரகரப்பாகப் பொடித்து வைக்கவும். பாகற்காயை குறுக்கே நான்காக நறுக்கி மெல்லிய ஸ்லைசாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து கடலைப்பருப்பைத் தாளித்து பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தையும் பாகற்காயையும் போட்டு மென் தீயில் மூடி வைத்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு மிளகாய்ப் பொடியைப் போட்டுக் கலக்கவும். அதில் தேங்காய்த் துருவலையும் போட்டுக் கலக்கி இறக்கி சாதத்தை உதிர்த்து ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது நன்கு கிளறி உடன் பரிமாறவும். இதை ஆறியபின் சாப்பிட்டால் கசப்பு அதிகம் ஏறிவிடும். உடன் சாப்பிடுவது நல்லது. இது வயிற்றில் உள்ள புழு பூச்சிகளை நீக்கும்.


7.தேன் பழப்பச்சடி:-

தேவையானவை:-
தேன் – 2 டேபிள் ஸ்பூன், மாம்பழம் – பாதி, வாழைப்பழம் -1, பலாச்சுளை – 6, பேரீச்சம்பழம் -4, கிஸ்மிஸ் – 10 ஆப்பிள் பாதி. மஞ்சள் கிர்ணி – ஒரு துண்டு, பப்பாளி – ஒரு துண்டு.

செய்முறை:- மாம்பழத்தைத் தோல்சீவி சிறு துண்டுகளாக்கவும். வாழைப்பழத்தையும் தோலுரித்து சிறு துண்டுகளாக்கவும். பலாசுளைகளையும் பேரீச்சையையும் பொடியாக அரியவும். ஆப்பிள், மஞ்சள் கிர்ணி, பப்பாளியைத் தோல்சீவி பொடியாக அரிந்து எல்லாவற்றையும் ஒரு பௌலில் போடவும். கிஸ்மிஸைத் தூவி தேனைக் கலந்து நன்கு மசித்து விட்டுச் சிறிதுநேரம் வைத்திருந்து பரிமாறவும். பழக்கலவை மலச்சிக்கலை நீக்கும். தேன் உடல் நலத்துக்கு நல்லது.

8.மதுவரக்கம்:-

தேவையானவை:-
தேங்காய் – 1, நாட்டு சர்க்கரை –அரை கப், ஏலப்பொடி –கால் டீஸ்பூன், உருக்கிய நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை.:- இளநியாகவும் இல்லாமல் முத்தலாகவும் இல்லாமல் மென் பதமான தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும். இதில் நாட்டு சர்க்கரை, ஏலப்பொடி, உருக்கிய நெய் ஊற்றி நன்கு கலந்துவிட்டு நிவேதிக்கவும். இளந்தேங்காய் குடல் புண்ணை ஆற்றும். நெய் சக்தி கொடுக்கும். சர்க்கரை எனர்ஜி கொடுக்கும்.

9.சோயாபீன்ஸ் சுண்டல்:-

சோயாபீன்ஸ்- 1 கப், தேங்காய்த்துருவல்- 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய்- 1 டீஸ்பூன், வரமிளகாய்- 2, கடுகு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயப் பொடி – சிறிது, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு –கால் டீஸ்பூன்.

செய்முறை:- சோயாபீன்ஸைக் கழுவி ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்துப் பெருங்காயப் பொடி போடவும். இதில் வரமிளகாய் கருவேப்பிலை போட்டு சுண்டலைப் போட்டு வதக்கவும். தேங்காய்த்துருவலைச் சேர்த்து இறக்கவும். இது ஊட்டச்சத்து மிகுந்த ப்ரோடீன் சுண்டல்  

10.ஹெல்த் ட்ரிங்

தேவையானவை:- காரட் – 1 , வாழைப்பழம் – 1 , கிவி 1 , ஆப்பிள் – பாதி, பைனாப்பிள்- ஒரு ஸ்லைஸ், ஐஸ் க்யூப்- 10,  இளநீர் -1 இளநீர் வழுக்கையுடன், கிஸ்மிஸ் -10  .

செய்முறை:- காரட்டைத் துருவவும். இதில் வாழைப்பழம் கிவி ஆப்பிள் பைனாப்பிளைத் தோல்சீவிப் பொடியாக அரிந்து போட்டு , கிஸ்மிஸையும் போட்டு இளநீரை வழுக்கையுடன் சேர்த்து அரைக்கவும் சிறிது சிறிதாக இளநீரையும் ஐஸ் கட்டிகளையும் போட்டு நன்கு அடித்து குளிரக் குளிரப் பரிமாறவும். ஊட்டச்சத்து மிகுந்த ஆரோக்கிய பானமாகுமிது. தாகவிடாயைப் போக்கும். 

டிஸ்கி:- இந்த ரெசிப்பீஸ் ஆகஸ்ட் 12, 2016 குமுதம் பக்தி ஸ்பெசஷலில் வெளியானவை.  

ிஸ்கி:- ஆடி ம ஸ்பல் ரெசிப்பியை பாராட்டியந்தாசி சி. எஸ். ரஞ்ாவுக்கு நன்றி :) 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...