எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜூலை, 2018

கோலா உருண்டைக் குழம்பு/பருப்பு உருண்டைக் குழம்பு.

கோலா உருண்டைக் குழம்பு/பருப்பு உருண்டைக் குழம்பு.

தேவையானவை :-  துவரம்பருப்பு - அரை கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, சின்ன வெங்காயம் - 10, வெள்ளைப்பூண்டு - 8, தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், இளம் கருவேப்பிலை கொத்துமல்லி - சிறிது.  புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்,

தாளிக்க :- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து,வெந்தயம், தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு, கருவேப்பிலை - 1 இணுக்கு.

அரைக்க - 1  :- வரமிளகாய் - 4, சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் மிளகு - கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன்.

அரைக்க 2. - தேங்காய் - கால் மூடி , சின்ன வெங்காயம் - 2, பூண்டு - 1 பல், சோம்பு - சிறிது.

செய்முறை :- துவரம்பருப்பைக் கழுவி இரண்டுமணி நேரம் ஊறவைக்கவும். பெரிய வெங்காயத்தையும் இளம் கருவேப்பிலை, கொத்துமல்லியையும் பொடியாக அரியவும். சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு, தக்காளியை சுத்தம் செய்து துண்டாக நறுக்கி வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு வைக்கவும்.

துவரம்பருப்பை நீரை வடித்து வைக்கவும். மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ளவற்றில்  1 இல் இருந்து மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு உப்பு சேர்த்து நன்கு பொடிக்கவும். இதில் துவரம்பருப்பைச் சேர்த்து பெருபெருவென அரைத்து ஒரு பௌலில் போடவும். இதில் துருவிய தேங்காய் பொடியாக அரிந்த வெங்காயம் கருவேப்பிலை கொத்துமல்லி போட்டு நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகள் பிடித்து இட்லிப் பாத்திரத்தில் பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு, தக்காளி , கருவேப்பிலை போட்டு வதக்கவும். இதில் கரைத்துவைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். இரண்டு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ள 2 இல் இருப்பவற்றை அரைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். நன்கு கொதிவரத் துவங்கியதும் வெந்த கோலா உருண்டைகளைக் குழம்பில் சேர்க்கவும்.

இந்தக் கோலா உருண்டைகளை எண்ணெயில் வறுத்தும் போடலாம். அதே போல் இட்லிப் பாத்திரத்தில் அவிக்காமல் குழம்பை இன்னும் நீர்க்கக் கரைத்துக் கொதிக்க விட்டு ஒவ்வொன்றாக உருட்டியும் போட்டு வேகவைக்கலாம்.  அப்படி வேகவைக்கும்போது மூன்று மூன்றாக உருட்டிப் போட்டு வெந்து மேலே வந்ததும் மிச்சத்தையும் ஒவ்வொன்றாக உருட்டிப் போடவும். நடுவில் கரண்டி கொண்டு கிளறக்கூடாது. அப்படிக் கிளறினால் உருண்டைகள் உடைந்து குழம்பு கூழாகி விடும்.

இக்கோலா உருண்டைக் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். சாதம் தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...