எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2018

அப்பளப்பூ, கிள்ளு வற்றல், சோற்று வற்றல், மிதுக்க வற்றல்.

அப்பளப்பூ :-

தேவையானவை:- உளுந்தமாவு - 2 கப், சீரகம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :- உளுந்தமாவில் சீரகத்தைத் தேய்த்துப் போடவும். பெருங்காயத்தையும் உப்பையும் நீரில் கரைத்து ஊற்றி கெட்டியாகப் பிசையவும். எண்ணெய் தடவி மடக்கி மடக்கி சப்பாத்திக் கல்லில் அடித்து நீளமான உருளைகளாக உருட்டவும். இதை மருந்து பாட்டில் மூடி அளவு  துண்டங்களாக வெட்டி வைக்கவும். ஒவ்வொன்றையும் நீள்வாக்கில் உளுந்து மாவு தூவி சப்பாத்திக் கல்லில் தேய்த்து நிழற்காய்ச்சலாக உலரவைத்து எடுத்து வைக்கவும்.


கிள்ளு வற்றல் :-

தேவையானவை :- பச்சரிசி - 1 கப், உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை :- பச்சரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைக்கவும். இதில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கூழ் கண்ணாடிபோல் நன்கு வெந்து வரும். தண்ணீரைத் தொட்டு மாவைத் தொட்டால் ஒட்டாமல் இருக்கும் இதுவே பதம்.

பாயின் மேல் நனைத்த துணியை விரித்து ஸ்பூனால் மோந்து ஊற்றலாம். அல்லது கையால் கிள்ளியும் வைக்கலாம். மாலை துணியில் இருந்து பிய்த்து சுளகில் அல்லது தட்டில் போட்டுக் காயவைக்கவும். இரு நாட்கள் காய்ந்ததும் ஈரமில்லாத காற்றுப்புகாத டின்னில் எடுத்து வைக்கவும்.

சோற்று வற்றல் :-

தேவையானவை. சோறு - 2 கப். உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை :- சோறு அல்லது கஞ்சிச் சோறை உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து வடகம் போல் கிள்ளி வெய்யிலில் காயவைத்து நன்கு காய்ந்ததும் எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும்.

மிதுக்க வற்றல் :-

தேவையானவை - மிதுக்க வற்றல் 200 கி, புளித்த மோர் - 1 கப், உப்பு - கால் டீஸ்பூன்.

கடைகளில் கிடைக்கும் கோவைக்காய்/மிதுக்க வற்றலை வாங்கி வந்து முதல் நாள் தண்ணீரில் ஊறப்போடவும். மறுநாள் இரண்டாக நெட்டு வாக்கிலோ அல்லது குறுக்கிலோ நறுக்கவும். மோரில் உப்பு சேர்த்து உரசி இந்த வற்றலையும் போட்டு நன்கு குலுக்கி ஊறவைக்கவும். மறுநாள் மோரிலிருந்து எடுத்து தட்டில் ஒத்தை ஒத்தையாகப் பரப்பி வெய்யிலில் காயவைக்கவும். திரும்ப இரவில் அதே மோரில் ஊறப்போட்டுக் குலுக்கி விடவும். இவ்வாறு மோர் தீரும்வரை குலுக்கிப் போட்டுக் காயவைத்து நன்கு காய்ந்ததும் காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

பொரிக்க தேவையானவை ;- எண்ணெய் - 200 கி.

இந்த அப்பளப்பூ என்னும் நாக்கு அப்பளம் ( இரண்டாக உடைத்தால் நாக்குப் போலிருக்கும் என்பதால் இப்பெயர் ) , கிள்ளு வற்றல், சோற்று வற்றல், மிதுக்க வற்றலைக் காயும் எண்ணெயில் பக்குவமாகப் பொரித்து வத்தல் குழம்பு, புளிக்குழம்பு, சாம்பார், மோர் + சாதத்துடன் தொட்டுக்கொள்ளக் கொடுக்கவும்.
  

2 கருத்துகள்:

  1. அப்பளப் பூ மட்டும் ட்ரை பண்ணப் போறேன். ஓரிரு வாரங்கள் கழித்து மீண்டும் பதிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி இமா க்றிஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...