2.கப்ஸா சிக்கன் பிரியாணி ( அரேபியன்)
தேவையானவை :-- சிக்கன் – அரைகிலோ ( பெரிய துண்டுகளாக நறுக்கவும்).பாசுமதி அரிசி – அரைகிலோ, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு – பொடியாக அரிந்தது 2 டீஸ்பூன், தக்காளி – 1 ( வெந்நீரில் போட்டுத் தோலுரித்து மசிக்கவும் ), கேரட் – 1 பெரிதாக சீய்த்துக் கொள்ளவும். காய்ந்த முழு எலுமிச்சை – 1, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், சிக்கன் ஸ்டாக் – 4 கப்,சிக்கன் க்யூப் – 2, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, கிஸ்மிஸ் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன்.பொடிக்க:- வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன், மிளகு, சீரகம் – தலா ஒரு டேபிள் ஸ்பூன், கிராம்பு – 4, ஏலக்காய் – 4, பட்டை – ஒரு துண்டு.
செய்முறை:- பாசுமதி அரிசியைக் கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். எண்ணெயைக் காயவைத்துப் பாதிக் காரட்டையும், கிஸ்மிஸையும் வறுத்து எடுக்கவும். அதே எண்ணெயில் வெங்காயத்தை நீளமாக அரிந்து போட்டு வதக்கவும். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை லேசாக வறுத்துப் பொடிக்கவும். வெங்காயம் தண்ணீர்போல வதங்கியதும் இஞ்சிபூண்டைச் சேர்க்கவும். அவை நன்கு வதங்கி வாசம் வரும்போது தக்காளிச்சாறைச் சேர்க்கவும். அதை வதக்கி எண்ணெய் பிரியும்போது சிக்கனைச் சேர்க்கவும். நன்கு பிரட்டி சிக்கன் வெள்ளையாக ஆகும்போது மிச்ச கேரட், காய்ந்த எலுமிச்சை ( இதை ஊசியால் அங்கங்கே ஓட்டை போட வேண்டும். ) பொடித்த மசாலா போட்டு சிக்கன் க்யூபை சேர்த்து சிக்கன் ஸ்டாக்கைச் சேர்க்கவும். மூடி போட்டு 20 நிமிடம் சிம்மில் வேகவைக்கவும். வெந்ததும் சிக்கனை எடுத்து வைத்துவிட்டு அதை வேகவைத்த தண்ணீரில் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.அதன்பின் உப்பும், குங்குமப்பூவும் சேர்த்து அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி மேலே மூடியை டைட்டாக வைத்து நன்கு வேகவைத்து இறக்கவும். பொடித்த மசாலாவை கொஞ்சமாகத்தூவி சிக்கனை எண்ணெயில் 10 நிமிடம் நன்கு பிரட்டிவிட்டு வேகவிடவும். பரிமாறும் சமயம் வறுத்த கிஸ்மிஸையும் கேரட்டையும் தூவி சிக்கனை மேலாக வைத்துப் பரிமாறவும். இதற்கு தக்காளிச் சட்னி தொட்டுக்கொள்ளலாம். காய்ந்த எலுமிச்சை போடுவதுதான் இதற்கு ருசி கொடுக்கும். காய்ந்த முழு எலுமிச்சை இல்லாவிட்டால் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!