எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

மல்லாட்டைச் சட்னி

மல்லாட்டைச் சட்னி



தேவையானவை:- வரமிளகாய் – 3, வேர்க்கடலை வறுத்துத் தோல் நீக்கியது - 1 கைப்பிடி, உப்பு - 1/2 டீஸ்பூன், புளி - 1 சுளை, பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், உளுந்து - 1/2 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- வெறும் வாணலியில் வரமிளகாய், வேர்க்கடலையை லேசாக வறுக்கவும். அதன் பின் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும். வெங்காயத்துடன் மிளகாய், வேர்க்கடலை, உப்பு, புளி போட்டு நன்கு அரைக்கவும். சட்னி பதத்திற்குத் தேவையான தண்ணீர் ஊற்றவும். ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

 

புதன், 13 ஏப்ரல், 2022

கொள்ளுப் பொரியல்

கொள்ளுப் பொரியல்



தேவையானவை :- கொள்ளு - அரை கப், சின்ன வெங்காயம் -2, பூண்டு - 1 பல், வரமிளகாய் 1, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு -கால் டீஸ்பூன்

செய்முறை:- வெறும் வாணலியில் கொள்ளை வாசம் வரும்வரை வறுத்து நீர் விட்டுக் களைந்து குக்கரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். நீரை வடிக்கவும். வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டை உப்போடு அரைத்து வைக்கவும். ஒரு பானில்  எண்ணெய்யைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் அரைத்த மசாலாவையும் கொள்ளையும் போட்டு உடனே அடுப்பை அணைக்கவும். மசாலா அதிகம் வேகக் கூடாது. உடல் எடையைக் குறைக்கும்.

 

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

கறுப்பு உளுந்து தோசை

கறுப்பு உளுந்து தோசை



தேவையானவை:- இட்லி அரிசி – 2 கப், கறுப்பு உளுந்து – அரை கப், உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 100 மிலி

செய்முறை:- இட்லி அரிசியையும் கறுப்பு உளுந்தையும் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு மைய அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து எட்டுமணி நேரம் புளிக்க விடவும். தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு எடுத்துக் காரச் சட்னியுடன் பரிமாறவும்.

 

வியாழன், 7 ஏப்ரல், 2022

ஃபலாஃபல்

ஃபலாஃபல்



தேவையானவை :- வெள்ளைக் கொண்டைக்கடலை ( காபூலி சன்னா) – 2 கப், மைதா – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். கொத்துமல்லித்தழை – கால் கப், வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன் , சீரகம், 1 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பூண்டு – 5 பல், ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- வெள்ளைக் கொண்டைக் கடலையைக் கழுவி 12 மணி நேரம் ஊறவைக்கவும். நீரை வடித்து மிக்ஸியில் கொண்டைக் கடலை, மைதா, பெரிய வெங்காயம், கொத்துமல்லித் தழை, சீரகம், மிளகு, பூண்டு, மிளகாய்த்தூள், ஏலப்பொடி, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். வடைகளாகத் தட்டி வெள்ளை எள்ளில் புரட்டி வைத்து எண்ணெயைக் காயவைத்துப் பொன்னிறமாகப் பொரிக்கவும். மயோனிஸுடன் பரிமாறவும்.

 

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

சோளே க்ரேவி

சோளே க்ரேவி



தேவையானவை :- பச்சைக் கொண்டைக்கடலை – 1 கட்டு, பெரிய வெங்காயம் - 1, வெள்ளைப் பூண்டு - 4 பல், இஞ்சி – 2 இன்ச் துண்டு, தக்காளி 1 , சிவப்பு மிளகாய்த்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன், மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்,சீரகப் பொடி – அரை டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், உப்பு - 2 டீஸ்பூன், பட்டை - 1 இன்ச்,, கிராம்பு  - 1, ஏலக்காய் - 1., சீரகம் – 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:- பச்சைக் கொண்டைக்கடலையை உரித்துக் கொள்லவும். இஞ்சி பூண்டை மைய அரைக்கவும். வெங்காயம் தக்காளியைத் தனித்தனியாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டை வதக்கவும். அது சிவந்ததும் அரைத்த தக்காளி மசாலாப் பொடிகள், உப்பு சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்ததும் பச்சைக் கொண்டைக் கடலை, உப்பு போட்டுத் தேவையான தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும். இறக்கி பட்டுராவுடன் பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...