எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 மார்ச், 2015

தைப்பூசம் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். THAIPOOSAM RECIPES



இந்த நிவேதனங்கள் ஃபிப் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. 

அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர்மா, பெசரட்,  பேசன் லட்டு, பாதாம் பேரீச்சை ப்ரெட் ரோல். 

1.வெஜ் அக்கி ரொட்டி :-



தேவையானவை :-

பச்சரிசி மாவு – 2 கப்
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் ஊறவைத்தது
பெரிய வெங்காயம் – 2
காரட்,கோஸ் – 1 டேபிள்ஸ்பூன் துருவியது.
பச்சைமிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை – 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
வெண்ணெய் – 1 டீஸ்பூன்.
உப்பு – 3/4 டீஸ்பூன்.

செய்முறை:-

அரிசிமாவை ஒரு பேசினில் போட்டு அதில் ஊறவைத்த கடலைப்பருப்பு, பொடியாக அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, துருவிய காரட், கோஸ், தேங்காய், சீரகம், வெண்ணெய், உப்புப் போட்டு நன்கு கலந்து பின்பு தேவையான தண்ணீர் தெளித்துப் பிசையவும்.
இரண்டு மணி நேரம் ஊறியதும் வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து மெல்லிசாகத் தட்டவும். தோசைக்கல்லில் பட்டர் பேப்பரில் தட்டியதை அப்படியே மாற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு நிதானமான தீயில் மூடிபோட்டு வேகவைத்து மறுபுறமும் திருப்பி எண்ணெய்விட்டு வேகவைத்து எடுக்கவும். இதுவே வெஜ் அக்கி ( அரிசி )  ரொட்டி


2. உக்காரை :-

தேவையானவ

பாசிப் பரு‌ப்பு - 1 க‌ப்
சீனி  - 1 க‌ப்
இடியாப்ப மாவு – 1 டேபிள் ஸ்பூன்
தே‌ங்கா‌ய் துருவ‌ல் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
மு‌ந்‌தி‌ரி - 15
ஏல‌க்கா‌ய் - 2

செ‌ய்முறை

பாசிப்பருப்பைக் கழுவி வேகப்போடவும். முக்கால் பதம் வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரிலேயே சிறிது நெய்யில் வறுத்த இடியாப்பமாவைப் போடவும். நன்கு கிளறி பருப்பும் மாவும் சேர்ந்து வெந்து வந்ததும் சீனியைப் போடவும். சீனி கரைந்து வரும்போது தேங்காய்த் துருவலும் சேர்க்கவும். நன்கு கிளறி கெட்டியாகும்போது நெய்யில் முந்திரி பொரித்துப் போடவும். ஏலக்காயைப் பொடித்துப் போட்டு கிளறி இறக்கவும்.

3. சீப்புச்சீடை :-

தேவையானவை:-

பச்சரிசி - 4 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
தேங்காய் - 1 முழுதாக
உப்பு - 3 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க ( 350 கிராம்)
செய்முறை:-
பச்சரிசியைச் சிறி்து நேரம் ஊறவைத்து வடிகட்டியில் போட்டு பின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும். வெறும் வாணலியில் போட்டு மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும்.
பொட்டுக்கடலையையும் பொடித்துச் சலிக்கவும். தேங்காயைத் துருவி அரைத்து 2 கப் தண்ணீர் ஊற்றிப் பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். சூடாகும்போது உப்பு போட்டு இறக்கவும். திரிந்தது போல் இருக்கும். இது வெதுவெதுப்பாக இருக்கும்போது அரிசி., பொட்டுக்கடலை மாவில் ஊற்றிப் பிசையவும்.
சீப்புச்சீடைக்கட்டையில் உருண்டையாக் உருட்டிப்போட்டு மாவைப் பேப்பரில் பிழியவும். அதை 3 இன்ச் துண்டுகளாக வெட்டி இரண்டு நுனிகளையும் விரலில் சுற்றி ஒட்டவும். எல்லா மாவையும் இதுபோல் செய்து எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்கவும்.

4. திரட்டுப்பால்:-

தேவையானவை :-
பால் – 2 லிட்டர்
கருப்பட்டி – 200 கி
வெல்லம் – 1 துண்டு.
எலுமிச்சைச் சாறு – சில சொட்டு.

செய்முறை:-
பாலை அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். நன்கு பொங்கி வரும்போது எலுமிச்சை சாறு சில துளிகள் பிழியவும். அதிகம் வேண்டாம் புளிக்கும். இல்லாவிட்டால் தயிர் ஒரு ஸ்பூன் விடவும். நன்கு திரைந்து விடும்.  வெல்லம் கருப்பட்டியை நைத்து அந்தத் தண்ணீரை சிறிது வடித்து அதில் போட்டுக் கரைந்ததும் வடிகட்டி திரும்பத் திரைந்த பாலில் ஊற்றவும். தீயை மிதமாக வைத்து 20 நிமிடங்களில் ஓரளவு சுண்டியதும் இறக்கவும். அதிகம் கரண்டி போட்டுக்கிளற வேண்டாம். லேசாகப் பாகுடன் இருந்தால் சுவையாக இருக்கும்.


5. சுர்மா, :-

தேவையானவை :-

ஆட்டா ( கோதுமை மாவு ) – 2 கப்
சன்ன ரவா – ½ கப்
நெய் – ½ கப்
பால் – ½ கப்
பொடித்த சீனி – ¾ கப்
ஏலக்காய் – 2
முந்திரி – 15
பாதாம் – 15
கிஸ்மிஸ் – 15
எண்ணெய் (அ) நெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
கோதுமை மாவுடன் சன்ன ரவையைக் கலந்து அரை கப் நெய்யை உருக்கி ஊற்றி நன்கு கலக்கவும். அதில் பாலைச் சேர்த்து நன்கு பிசையவும். சின்ன உருண்டைகள் செய்து அல்லது கனமான சப்பாத்திகளாகத் தேய்த்து நெய் அல்லது எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.

ஆறியதும் இந்த உருண்டைகளைப் பொடித்துக்கொள்ளவும். இதில் முந்திரி பாதாமை உடைத்து நெய்யில் பொரித்துப் போடவும். கிஸ்மிஸையும் நெய்யில் பொரித்துப் போடவும். பொடித்த சீனியைப் போட்டு ஏலக்காய்ப் பொடியையும் போட்டு எல்லாவற்றையும் நன்கு கலந்து உருண்டைகள் பிடித்து வைக்கவும்.


6. பெசரட், :-

தேவையானவை :-

பச்சரிசி – 1 கப்
பாசிப்பயறு – 2 கப்
பச்சை மிளகாய் – 2 பொடியாக அரியவும்.
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச் துருவவும்.
பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்.
சீரகம் – ½ டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 30 மிலி

செய்முறை :-

பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி ஊறவைக்கவும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கொரகொரப்பாக அரைக்கவும். அதில் பொடியாக அரிந்த பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், இஞ்சி, பெரிய வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து சிறிது கனமான தோசைகளாக சுட்டு திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக வேகவைத்து தக்காளித் துவையல் அல்லது மாங்காய்த் தொக்கு அல்லது கோங்குரா சட்னியுடன் பரிமாறவும்.

7. பேசன் லட்டு,:-

தேவையானவை :-

கடலை மாவு – 2 கப்
நெய் – ½ கப்
போரா ( பொடித்த சீனி ) – 1 கப்
கிஸ்மிஸ் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 4 பொடிக்கவும்.
( முந்திரி பாதாம் அக்ரூட் விரும்பினால் சேர்க்கலாம் )

செய்முறை:-

கடலை மாவை வெறும் வாணலில் மிதமான தீயில் 10 நிமிடம் வறுக்கவும். லேசாக நிறம் மாறி வறுபட்ட வாசனை வரும். அதன்பின் நெய்யை உருக்கி ஊற்றி விடாமல் 5 நிமிடம் திரும்ப வறுக்கவும். நல்ல மணமும் நிறமும் வந்தபின் கடாயைக் கீழிறக்கி வைத்து போராவைச் சேர்க்கவும். அதன் பின்னும் நன்கு கட்டிபடாமல் கிளறி ஏலக்காயைப் பொடித்துப் போட்டு கிஸ்மிஸைச் சேர்த்து நன்கு கிளறி ஆறவைக்கவும். முந்திரி பாதாம் அக்ரூட்டையும் விரும்பினால் சேர்க்கலாம். நன்கு ஆறியதும் மென்மையான உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.


8. பாதாம் பேரீச்சை ப்ரெட் ரோல்.:-

தேவையானவை :-

பாதாம் – 10
முழு பேரீச்சை – 10
ப்ரெட் – 10
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
அமுல் பட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
மைதா – ½ கப்
எண்ணெய் = பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை:-

பாதாமை வெந்நீரில் ஊறவைத்துத் தோலுரிக்கவும். பேரீச்சைகளை விதை நீக்கி பாதாமை வைத்து ஒரு ட்ரேயில் அடுக்கி தேன் ஊற்றி ஊறவைக்கவும். ப்ரெட்டின் ஓரங்களை வெட்டிவிட்டு அமுல் பட்டரை ஒரு பக்கம் தடவவும். மைதாவை சிறிது உப்பு சீனி போட்டுத் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.

தேனீல் ஊறிய பாதாம் பேரிச்சையை ப்ரெட்டில் வைத்து உருட்டி தண்ணீர் தொட்டு ஓரங்களை ஒட்டி ரோல் செய்யவும். பத்து ரோல்களும் தயாரானவுடன். மைதாவில் நனைத்து எண்ணெயில் பொரித்துப் பரிமாறவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...