வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே மிகச் சிறப்பான சமையலைச் செய்ய முடியும் என்பது அதன் சிறப்பு. மிகக் குறைவான பொருட்களே தேவை. சிறிது எண்ணெய் மட்டுமே அதிகம் சேர்ப்பார்கள். செட்டிநாட்டு உணவுகளில் மசாலை என்பது சிறப்பு. அம்மியில் மிளகாய் சோம்பு அரைத்துச் செய்வார்கள். கிட்டத்தட்ட தினமும் ஒரு மசாலை இருக்கும்.
ஒரு நாள் சமையலிலேயே பொருத்தமாக சமைப்பார்கள். சாம்பார் என்றால் மசாலை, பிரட்டல், மண்டி, வடை , துவையல் போன்ற பக்க பதார்த்தங்களும், கெட்டிக் குழம்பு என்றால் பொரியல், துவட்டல் போன்ற பக்க பதார்த்தங்களும் ( வெஞ்சனங்களும் ) சூப்பு, இளங்குழம்பு என்றால் காரமான பக்கபதார்த்தங்களும் செய்வார்கள்.
ஒன்றில் தேங்காய் போட்டால் இன்னொன்றில் பருப்பு போடுவார்கள். இன்னொன்றைக் காரமாக சமைப்பார்கள். காய்கறி தோதுபார்த்துத்தான் தொட்டுக்கொள்ள வைப்பார்கள்.
