எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 செப்டம்பர், 2015

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். VINAYAGAR CHATHURTHI SPECIAL SPECIAL.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல். :-

1.ஸ்டஃப்டு சோளக் கொழுக்கட்டை (டாமலீஸ்)
2 அவல் வெல்லக் கொழுக்கட்டை
3. கொள்ளு காரக் கொழுக்கட்டை
4. வரகரிசி உப்புமாக் கொழுக்கட்டை
5. கேப்பை புட்டுக் கொழுக்கட்டை
6. அஞ்சுமாக் கொழுக்கட்டை
7. காய்கறி சீடைக் கொழுக்கட்டை
8. பச்சை மிளகாய்ச் சட்னி
9. இஞ்சிச் சட்னி
10. அரிசி பருப்பு சுண்டல்
11. காரட் அப்பம்.

1.ஸ்டஃப்டு சோளக் கொழுக்கட்டை ( டாமலீஸ் )


தேவையானவை :-
சோளக்கருது மடலுடன் – 2, பச்சரிசி மாவு – அரை கப், சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன், வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், சீஸ் – 1 டேபிள் ஸ்பூன், பால் – அரை கப், கொத்துமல்லித்தழை –  2 டீஸ்பூன் பொடியாக அரிந்தது, குக்னி – 1 ( வெள்ளரிக்காயில் ஒரு வகை), குட்டி தக்காளி – 1, பச்சை மிளகாய் – 1, உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:-

சோளக்கருதை மடல் உரித்து அந்த மடல்களை கொதிக்கும் வெந்நீரில் ஒரு நிமிடம் மூழ்க வைத்து சுத்தமாகத் துடைத்து வைத்துக்கொள்ளவும். சோளமுத்துகளை உதிர்த்து பால் சேர்த்து மையாக அரைக்கவும். வெறும் கடாயை அடுப்பில் வைத்து அரைத்த சோளத்தை ஊற்றிக் கிளறவும். இறுகிவரும்போது சோளமாவும் அரிசி மாவும் சேர்த்து உப்பு கொத்துமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கவும். இன்னொரு பானில் பாதி வெண்ணெயை உருகவைத்து வெங்காயத்தை மென்மையாக வதக்கவும். இதில் துருவிய சீஸை சேர்த்து கிளறி இறக்கி மாவில் போட்டு நன்கு பிசையவும். மிச்ச அரைடீஸ்பூன் வெண்ணெயை உருகவைத்து அதில் பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கட்டமாக நறுக்கிய தக்காளி, குக்னி போட்டு வதக்கி இறக்கவும். சோளமடல்களைத் துடைத்து மாவுக் கலவையை ஒரு ஸ்பூன் வைத்து அதன் நடுவில் குக்னி தக்காளி பச்சைமிளகாய் ஸ்டஃபிங்கை வைத்து மூடி மடலையும் எல்லாப் பக்கங்களிலும் செவ்வகப் பொட்டலம்போல் மூடி நூலால் கட்டி இட்லி பாத்திரத்தில் 30 நிமிடம் ஆவியில் வேகவைத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.


2 அவல் வெல்லக் கொழுக்கட்டை

தேவையாவை :-

பச்சரிசி மாவு – 2 கப், பேப்பர் அவல் – அரை கப் , துருவிய தேங்காய் – அரை கப், தூள் வெல்லம் – அரை கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன். வெந்நீர் – ஒண்ணேகால் கப்.

செய்முறை:-

அவலைப் பொடித்து துருவிய தேங்காய் வெல்லம் ஏலப்பொடி சேர்த்து நன்கு பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கொதிக்கும் வெந்நீரில் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து மாவைக் கொட்டிக் கிளறி மூடி வைக்கவும். ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து கிண்ணம் போல் செய்து அதில் அவல் பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைத்து நிவேதிக்கவும்.


3. கொள்ளு காரக் கொழுக்கட்டை:-

தேவையானவை :-

பச்சரிசி மாவு – 2 கப், கொள்ளு – 1 கப், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், ( வரமிளகாய் – 2, கருவேப்பிலை 2 ஆர்க், இவற்றை வறுத்து கால்டீஸ்பூன் உப்புடன் கரகரப்பாகப் பொடிக்கவும் ). பொட்டுக்கடலைப்பொடி – அரை டேபிள் ஸ்பூன். நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், தண்ணீர் – ஒண்ணேகால் கப்.

செய்முறை:-
பச்சரிசி மாவை மேல் சொன்னபடி மேல்மாவு தயாரித்து மூடிவைக்கவும். கொள்ளை வறுத்து அளவாகத் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பாதி கொள்ளைப் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுத்து மிச்ச கொள்ளுடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்து கொள்ளைப் போட்டு அதில் பொடித்த பொடியைப் போடவும். ஒரு நிமிடம் கிளறி இறக்கி நீர்க்க இருந்தால் பொட்டுக்கடலைப் பொடி போட்டு பிசைந்து நெல்லி அளவு உருண்டைகள் செய்யவும். மேல்மாவில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து கொள்ளு பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைத்து நிவேதிக்கவும். 


4. வரகரிசி உப்புமாக் கொழுக்கட்டை

தேவையானவை :-
வரகரசி – 1 கப் , கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். தண்ணீர் – 3 கப். ( பச்சைமிளகாய் – 1, காரட் – 1 பொடியாக துருவவும், தேங்காய்த் துருவல் – அரை கப் ) உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:-

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளித்து வெங்காயத்தை வதக்கவும். இதில் வரகரிசியையும் போட்டு லேசாக வறுத்து உப்பு சேத்து கொதிக்கும் தண்ணீரை ஊற்றி குக்கரில் ஒரு விசில் வைக்கவும். குக்கரில் முக்கால் பதம் வெந்திருக்கும். இறக்கி அதில் பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், காரட் துருவல் கலந்து நன்கு பிசைந்து பிடிகொழுக்கட்டைகளாக ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.

5. கேப்பை புட்டுக் கொழுக்கட்டை:-

தேவையானவை :-

கேப்பை – 2 கப், தேங்காய்த் துருவல் – அரை கப், தூள் வெல்லம் – அரை கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை :-

கேழ்வரகைக் களைந்து நீரை வடித்து மிக்ஸியில் திரித்து சலித்துக் கொள்ளவும். இதில் வெந்நீர் ஊற்றி லேசாகப் பிடித்துப் பிடித்துக் கிளறி பிடி பதம் வந்ததும் திரும்ப ஈரத்தோடு சலித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதைத் திரும்ப உதிர்த்து சூட்டோடு வெல்லம், தேங்காய்த்துருவல், உப்பு, ஏலப்பொடி சேர்த்துப் பிசறி கொழுக்கட்டைகளாகப் பிடித்து நிவேதிக்கவும்.

6. அஞ்சுமாக் கொழுக்கட்டை

தேவையானவை :-

பச்சரிசி மாவு – கால் கப், புழுங்கரிசி மாவு – கால் கப்,சிவப்பரிசி மாவு – கால் கப் , கவுனரிசி மாவு – கால் கப் , கோதுமை மாவு – கால் கப் , துருவிய தேங்காய் – அரை கப், வெல்லம்+ கருப்பட்டி – 150 கிராம். ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, வெந்நீர் – ஒண்ணேகால் கப். வறுத்த எள்ளு – அரை டீஸ்பூன்.

செய்முறை :-

ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக வெறும் பானில் மணல்போல வறுத்து ஒரு பௌலில் கொட்டவும். வெல்லத்தையும் கருப்பட்டியையும் ஒரு கப் தண்ணீரில் போட்டு இளம்பாகு வைத்து கரைத்து வடிகட்டவும். தேங்காய்த் துருவல் உப்பு ஏலப்பொடி எள் போட்டு மாவில் நன்கு கலந்து வெல்லக்கருப்பட்டிப் பாகு ஊற்றி நன்கு கிளறவும். மாவை நன்கு பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து இறக்கி நிவேதிக்கவும்.

7. காய்கறி சீடைக் கொழுக்கட்டை

தேவையானவை :-

சிவப்பரிசி – 1 கப், துருவிய காய்கறிக் கலவை – 1 கப், (காரட் பீன்ஸ், பச்சைப் பட்டாணி,), வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கவும். கொத்துமல்லித்தழை – சிறிது. தேங்காய்த்துருவல் – கால் கப். உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை :- 

சிவப்பரிசியை மாவாக அரைத்து கால் டீஸ்பூன் உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சீடைக்காய்கள் போலவும் பட்டன் போலவும் தட்டி பேப்பரில் போடவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து நீர்க்கொழுக்கட்டைகள் போல வேகவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் வெங்காயம், காய்கறிக் கலவையை வதக்கி உப்பு சேர்க்கவும். அதில் கொழுக்கட்டைகளையும் தேங்காய்த் துருவலையும் கொத்துமல்லித்தழையையும் போட்டுக் கலக்கி நிவேதிக்கவும்.


8. பச்சை மிளகாய்ச் சட்னி

தேவையானவை :-

அதிக காரமில்லாத பச்சைமிளகாய் – 20, சின்னவெங்காயம் – 15, உப்பு – அரை டீஸ்பூன், புளி – 2 சுளை, பெருங்காயம் – சிறிது. எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை :-

சின்னவெங்காயத்தை உரித்து பச்சைமிளகாய் புளி உப்பு பெருங்காயம் வைத்து நைசாக அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்துக் கொட்டி உப்புக் கொழுக்கட்டைகளுக்குத் தொட்டுக்கொள்ள உபயோகிக்கவும்.

9. இஞ்சிச் சட்னி :-

தேவையானவை :-

வரமிளகாய் – 2, இஞ்சி – 4 இஞ்ச் சதுரமுள்ள துண்டு, உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன். புளி – 2 சுளை. உப்பு – அரை டீஸ்பூன். வெல்லம் – 1 டீஸ்பூன் . எண்ணெய் – 2 டீஸ்பூன் , கடுகு – கால் டீஸ்பூன்.

செய்முறை :-

ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வரமிளகாயையும் உளுந்தம் பருப்பையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் நீக்கி கழுவி துண்டுகள் செய்து மிளகாய் உளுந்து உப்பு புளி வெல்லம் போட்டு மைய அரைக்கவும். மீதி ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி காரக் கொழுக்கட்டைகளுக்குத் தொட்டுக் கொள்ள உபயோகிக்கவும்.


10. அரிசி பருப்பு சுண்டல்.:-

அரிசி, பாசிப்பருப்பு – தலா 1 கப், தேங்காய்த் துருவல் – கால் கப், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, வரமிளகாய் – 1. உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை :-
அரிசியையும் பருப்பையும் களைந்து கொதிக்கும் நீரில் போடவும். குழையுமுன் கிள்ளுபதத்தில் வடிகட்டி ஆறவிடவும். வெந்து மலர்ந்திருக்கும் அதில் உப்பையும் தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு உளுந்து கடலைப்பருப்பை தாளித்து கருவேப்பிலை வரமிளகாயை வறுத்து அரிசி பருப்பு சுண்டலைக் கொட்டி நன்கு கிளறி இறக்கி நிவேதிக்கவும்.

11. காரட் அப்பம்.

தேவையானவை :-

புழுங்கல் அரிசி – அரை கப், பச்சரிசி – அரை கப், உளுந்து –  1 டேபிள் ஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், காரட் – 1, வெல்லம் – 150 கிராம், ஏலக்காய் – 1. உப்பு – 1 சிட்டிகை. எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-

புழுங்கல் அரிசி பச்சரிசி வெந்தயம் உளுந்து துவரம் பருப்பைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். இதை நைஸாக அரைத்து அதில் காரட்டைத் துருவிப் போட்டு வெல்லம் உப்பு ஏலக்காய் சேர்த்து இன்னும் நைஸாக அரைத்து எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாகப் பொரித்து எடுக்கவும்.

-- இந்தக்கோலங்களும் ரெசிப்பீஸும் செப் 15, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...