எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி ரெசிப்பீஸ் & கோலங்கள். AARUDHRA DHARISANAM, VAIKUNTA EEKADASI RECIPES & KOLAMS.

மாதங்களில் சிறந்தது மார்கழி. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத்கீதையில் கூறி இருக்கிறார் கிருஷ்ணர். இது சிவனுக்கும் பெருமாளுக்கும் உரிய மாதம். திருப்பாவையும் திருவெம்பாவையும் ஒலிக்கும் காலம், அரியும் அரனும் ஒன்று என்று சிறப்பிக்கும் மாதம். இம்மாதத்தில் சிவனடியார்கள் சிவனைத் தரிசித்து கைலாயம் அடைய ஆருத்ரா தரிசனமும், வைணவர்கள் பெருமாளின் பரமபதத்தை அடைய சொர்க்க வாசல் திறக்கும் வைகுண்ட ஏகாதசியும் ஒருங்கே இருப்பது சிறப்பு.

ஆடல் வல்லானின் அழகுத் திரு நடனத்தையும் ஆருத்ரா தரிசனத்தையும் கண்டு உபவாசமிருக்கும் சிவனடியார்கள் மாலையில் பிரதோஷ காலம் முடிந்ததும் காப்பரிசியை உண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். அதன் பின் களி, ஏழுதான் குழம்பு போன்றவற்றை உணவாகக் கொள்ளலாம்.


வைணவ பக்தர்கள் ஏகாதசியில் உபவாசமிருந்து துளசி தீர்த்தம் அருந்தி உபவாசத்தை முடிக்கலாம். அன்று பெருமாளைத் தரிசித்து சொர்க்க வாசல் வழி வந்து வீட்டில் விரதமிருந்து பெருமாளை தியானித்து இரவில் உறங்காமல் விழித்திருந்து மறுநாள் துவாதசி பாரணை செய்ய வேண்டும். பாரணை முடித்தபின் கருணைக்கிழங்கு , அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்ற சத்துமிகுந்த காய்கறிகளை உணவாகக் கொள்வது இறைநலமும் உடல் நலமும் பயக்கும்.

மிகுந்த விரதத்துக்குப் பின் களி கூழ் போன்றவற்றோடு காய்கறிகள் நிரம்பிய ஏழுதான் குழம்பு சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கும் செரிமானத்துக்கும் நல்லது. அதே போல் ஏகாதசி அன்று முழு நாள் விரதமிருந்து துளசி தீர்த்தம் மட்டுமே அருந்தி உணவை உட்கொள்ளும்போது குடலுக்கு பலம் தரவும் குடலில் இருக்கும் புழு பூச்சிகள் போன்றவை நீங்கவும் கருணையும் நெல்லியும் , முன்னோர்களுக்கு படைப்பதற்கு உரியதான அகத்தியும் சுண்டைக்காயும் சமைப்பதும் மிகுந்த நலன் பயக்கும்.

ஹரிஹரனை விரும்பும் இரு சாராரும் இவ்விரு விரதங்களையும் மேற்கொண்டு அன்று மட்டும் அதற்குக் கூறப்பட்டுள்ள உணவு வகைகளை மட்டும் உண்டால் இறை வழியிலும் இரை வழியிலும் உடல் நலமும் மனநலமும் பெறலாம்.

1.சிவப்பு காப்பரிசி
2.குருணை கோதுமைக் களி
3.கேப்பைக் கூழ்.
4.உளுந்தங்களி.
5.ஏழுதான் குழம்பு
6.சுண்டைக்காய் புளிக்குழம்பு.
7.கருணைக்கிழங்கு மசியல்
8.அகத்திக்கீரைத் துவட்டல்.
9.நெல்லிக்காய் தயிர்ப்பச்சடி
10.தேங்காய்ப்பால் வெல்லப் பாயாசம்.

1.சிவப்பு காப்பரிசி :-

தேவையானவை :-
சிவப்பரிசி – 1 கப், வெல்லம் – 1 கப், தேங்காய் – ஒரு கைப்பிடி பல் பல்லாக நறுக்கியது, பொட்டுக்கடலை – 1 கைப்பிடி, எள் – ஒரு டீஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை :- சிவப்பரிசியை நன்கு களைந்து நிழற்காய்ச்சலாக காயப்போட்டு சிறிது சிறிதாக வறுத்து எடுக்கவும். எள்ளை வறுத்து அதில் போடவும், பொட்டுக்கடலையை லேசாக சூடுபடுத்தி போடவும். தேங்காய்ப் பல்லை நெய்யில் வதக்கிப் போடவும். வெல்லத்தைப் பாகுவைத்து ஏலப்பொடி தூவி அதில் சிவப்பரிசிக் கலவையையும் தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். ஆறியதும் பொலபொலவென இருக்கும் நிவேதிக்கவும்.

2.குருணை கோதுமைக் களி:-

தேவையானவை:-
கோதுமை மாவு - 1 கப், அரிசிக் குருணை - 1/2 கப், தண்ணீர் - 6 கப்.. உப்பு - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:-
குருணையைக் கழுவித் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நன்கு வெந்ததும் கோதுமை மாவைத் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். உருண்டு வெந்து வரும்போது கிளறி உப்பு சேர்த்து இறக்கவும். முருங்கைக் கீரைக் குழம்புடன் பரிமாறவும்.

3.கேப்பைக் கூழ்;-

தேவையானவை:-
கேழ்வரகு மாவு - 1 கப், தண்ணீர் - 4 கப், உப்பு - 1 சிட்டிகை.

செய்முறை:-

கேப்பை மாவில் தண்ணீர் சேர்த்துக் கரைத்து அப்போதே அடுப்பில் வைத்துக் கிண்டவும் . கூழ் ஒட்டாத பதம் வந்ததும் ( கண்ணாடி போல மின்னும்). இறக்கி உப்பு சேர்க்கவும்.

அதை 3 பாகமாக பிரித்து ஒரு பாகத்தில் நெய்யும் சீனியும் சேர்த்து உண்ணவும்.

இன்னொரு பாகத்தில் மாவத்தல் பருப்புக் குழம்பு சேர்த்து உண்ணலாம்.

மூன்றாம் பாகத்தில் மோர் அல்லது தயிர் சேர்த்து கீரைப் பொரியல் அல்லது மசியல் சேர்த்து உண்ணலாம்.

அல்லது கேப்பை மாவில் தண்ணீரை ஊற்றிக் கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும். இரவு புளித்ததும் மறுநாள் காலையில் கிண்டி தயிர் உப்பு சேர்த்து சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து உண்ணலாம்.

4.உளுந்தங்களி.:-

தேவையானவை :-
வெள்ளை உருண்டை உளுந்து – 1 கப், பச்சரிசி – 1 கைப்பிடி, கருப்பட்டி – ஒன்னேகால் கப், நல்லெண்ணெய் – 50 மிலி. தண்ணீர் – 4 கப்

செய்முறை :-
வெள்ளை உருண்டை உளுந்தையும் பச்சரிசியையும் தனித்தனியே வாசம் வரும்வரை வறுத்து பொடித்து சலித்துக் கொள்ளவும். கருப்பட்டியை நைத்துப் போட்டு 4 கப் தண்ணீரில் கரைத்து அடுப்பில் ஏற்றி சூடாக்கி நன்கு கரைந்ததும் வடிகட்டி வைக்கவும். இதில் உளுந்து அரிசி மாவைப் போட்டு நன்கு கரைத்து அடுப்பில் ஏற்றிக் கிளறவும். நன்கு சுருண்டு வரும்போது நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் பக்கங்களில் பிரியும்போது இறக்கவும்.


5.ஏழுதான் குழம்பு :-

தேவையானவை :-
பரங்கிக்காய் – 1 சிறுதுண்டு, கத்திரிக்காய் – 1 , நாட்டு வாழைக்காய் – 1 சின்னம், அவரைக்காய் – 1 கைப்பிடி, பச்சை மொச்சை – அரை கப், சேனைக்கிழங்கு – 1 துண்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 1. வேகவைத்த துவரம் பருப்பு – அரை கப், புளி – நெல்லி அளவு. மஞ்சள் பொடி – 1 சிட்டிகை.. வறுத்து அரைக்க :- வர மிளகாய் – 4, மிளகு – 10, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் , தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், தாளிக்க – கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. எண்ணெய் – 4 டீஸ்பூன். உப்பு – முக்கால் டீஸ்பூன்

செய்முறை :-

அனைத்து காய்கறிகளை விரல் அளவில் நறுக்கி ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி மஞ்சள் பொடி போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி வேக விடவும். சேனைக்கிழங்கை தனியாக வேக வைத்து நீரை வடித்து வைக்கவும். எல்லாக் காய்களும் வெந்ததும் சேனையைச் சேர்த்துப் புளியைக் கரைத்து ஊற்றி இரண்டு கொதி வந்ததும் பருப்பை சேர்க்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் ஒவ்வொன்றாக வறுத்து கடைசியில் ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்து வெந்த காயில் போடவும். உப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி எண்ணெயில் கடுகு வரமிளகாய் பெருங்காயப் பொடி கருவேப்பிலை தாளித்து நிவேதிக்கவும்.

6.சுண்டைக்காய் புளிக்குழம்பு. :-

தேவையானவை :-
சுண்டைக்காய் – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு. சாம்பார் பொடி – 3 டேபிள் ஸ்பூன் , மஞ்சள் பொடி -  1 சிட்டிகை. சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 5, தக்காளி – 1, உப்பு – அரை டீஸ்பூன். தாளிக்க. :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, கருவேப்பிலை – 1 இணுக்கு. வெல்லம் – சிறு துண்டு.

செய்முறை:-
சுண்டைக்காய்களை ஆய்ந்து நான்காக நறுக்கி தண்ணீரில் போடவும். புளியையும் உப்பையும் இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். இதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடியைப் போட்டு வைக்கவும். வெங்காயம் வெள்ளைப் பூண்டைத் தோலுரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும். தக்காளியையும் துண்டுகள் செய்யவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம் பெருங்காயம் வெந்தயம் போட்டுப் பொரிந்ததும் கருவேப்பிலை, வெங்காயம் வெள்ளைப் பூண்டைத் தாளிக்கவும். இதில் சுண்டைக்காய்களைப் போட்டு நன்கு வதக்கி அது நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் சாம்பார் பொடி புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து எண்ணெய் பக்கங்களில் பிரியும் போது வெல்லம் தட்டிப் போட்டு இறக்கவும்.

7.கருணைக்கிழங்கு எலுமிச்சை மசியல் :-

தேவையானவை :-
கருணைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – 4, எலுமிச்சை  - 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். இஞ்சி – அரை இஞ்ச் துண்டு பொடியாக அரியவும். உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – 4 டீஸ்பூன். கொத்துமல்லித் தழை – ஒரு கைப்பிடி பொடியாக அரியவும்.

செய்முறை :-

கருணைக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் வேகப்போட்டு தோலுரித்து மசித்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு  போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும், இஞ்சி கருவேப்பிலை போட்டு பச்சை மிளகாய்களை நான்காக கீறிப்போடவும். லேசாக வதங்கியதும் பெரியவெங்காயத்தை தண்ணீர் போல வதக்கவும். இதில் உப்பு , மஞ்சள் பொடி போட்டு மசித்த கருணையைப் போடவும். நன்கு சுருண்டு வரும்போது எலுமிச்சையை சாறு பிழிந்து ஊற்றி இறக்கவும். கொத்து மல்லித்தழை தூவி உபயோகப்படுத்தவும்.

8.அகத்திக்கீரைத் துவட்டல் :-

தேவையானவை :-
அகத்திக் கீரை – 1 கட்டு, பதமாக வேகவைக்கப்பட்ட பாசிப்பருப்பு – அரை கப், தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். தாளிக்க :- கடுகு – 1 டீஸ்பூன், உளுந்து – 2 டீஸ்பூன், வரமிளகாய் – 1. உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:-
அகத்திக் கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். இதில் பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி கீரையைப் போடவும். லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு சிம்மில் வைத்து பத்து நிமிடம் வேகவிடவும். அவ்வப்போது கிண்டி விடவும். வெந்ததும் உப்பு, வெந்த பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

9.நெல்லிக்காய் தயிர்ப்பச்சடி:-

தேவையானவை :-
நெல்லிக்காய் – 6, தயிர் – 1 கப், பச்சை மிளகாய் – 1 சிறியது . உப்பு – கால் டீஸ்பூன், தாளிக்க – கடுகு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை. எண்ணெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை :-
நெல்லிக்காயைக் கொட்டை எடுத்து பச்சைமிளகாய் உப்போடு சேர்த்து தயிர் விட்டு அரைக்கவும் . அந்த விழுதை வழித்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளவும். எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயப் பொடி, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். நிவேதிக்கவும்.


10.தேங்காய்ப்பால் வெல்லப் பாயாசம். :-

தேவையானவை :- தேங்காய் – 1, அரிசி- ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு – 1 டீஸ்பூன். வெல்லம் – 2 அச்சு. ஏலப்பொடி – 1 சிட்டிகை. முந்திரி கிஸ்மிஸ் – தலா – 4, நெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை :-

தேங்காயைத் திருகி அரை கப் கெட்டிப் பால் எடுக்கவும். அதைத் தனியே வைத்து விட்டு. ஒரு கப் இரண்டாம் பாலும் ஒரு கப் மூன்றாம் பாலும் எடுக்கவும். அரிசி பருப்பை லேசாக வெதுப்பி கொரகொரப்பாகப் பொடிக்கவும். இதை மூன்றாம் பாலில் போட்டு வேகவிடவும். வெல்லத்தைத் தட்டி இரண்டாம் பாலில் போட்டுக் கரைத்து வடிகட்டி அரிசி பருப்பு நன்கு வெந்ததும் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போட்டு ஏலப்பொடி தூவவும். லேசாக ஆறியதும் முதல் பாலை ஊற்றி நிவேதிக்கவும். 

ிஸ்கி:- இந்திவங்கள் 17. 12. 2015 குமம் பக்ி ஸ்ில் வெளிவந்தை. 
 

2 கருத்துகள்:

  1. சிவ விஷ்ணு ஸ்பெஷல் ரெஸிபீஸ் சூப்பர் ...அசராத உள்ளம் கண்டு வியக்கிறேன் அடி தூள்----சரஸ்வதிரசேந்திரன்

    பதிலளிநீக்கு
  2. அஹா மிக்க நன்றி சரஸ் மேம் !

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...