எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

புதன், 28 அக்டோபர், 2020

தாளிச்ச பருப்பு.

தாளிச்ச பருப்பு:-


தேவையானவை :- துவரம்பருப்பு - 1 கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், வெங்காயம் - 2 டீஸ்பூன் பொடியாக அரிந்தது, கருவேப்பிலை - 1இணுக்கு, வரமிளகாய் - 1, உப்பு - கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன்.

செய்முறை :- குக்கரில் துவரம்பருப்பைக் கழுவிப் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து ஒரு விசில் வேகவைக்கவும். ( பதமாக இருக்க வேண்டும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு , உளுந்து தாளித்து சிவந்ததும், இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பொடியாக அரிந்த வெங்காயம், கருவேப்பிலை போட்டு உப்புச் சேர்த்து பருப்பைப் போட்டுக் கிளறி இறக்கவும். இது காரக் குழம்பு, புளிக்குழம்பு சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது. 
  

புதன், 21 அக்டோபர், 2020

மஞ்சள் காமாலைக்கான 8 உணவு வகைகள்

மஞ்சள் காமாலைக்கான உணவு வகைகள். 

மஞ்சள் காமாலை வந்ததும் கீழாநெல்லிச்சாறு குடிக்க வேண்டியது அவசியம். அத்துடன் வெள்ளை முள்ளங்கிச்சாறை எடுத்துப் பாலுடன் கலந்து குளுக்கோஸ் போட்டு அருந்தலாம். கோவை இலை, கரிசலாங்கண்ணி இலை, அருகம்புல் சேர்த்து அரைத்துச் சாறு பிழிந்து அருந்துவது நல்லது. 

உளுந்து சேர்த்திருப்பதால் இட்லி அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம். இதோ சில உணவுகள். ஆவியில் வேகவைத்து லேசாக உப்பும் சீரகமும் சேர்த்தது.

1.இட்லி இடியப்பம். 


இடியப்ப மாவில் உப்புப் போட்டு வெந்நீர் ஊற்றிப் பிசைந்து  இட்லி போலப் பிழிந்து கொடுக்கலாம். 

2.அரிசி உப்புமா. 


அரிசியை உடைத்து ஒரு ஸ்பூன் எண்ணெயில் சிறிது வெங்காயம், கடுகு தாளித்து உப்பு சேர்த்துக் குக்கரில் வேகவைத்துக் கொடுக்கலாம். 

3.புடலங்காய் கூட்டு 


புடலங்காய், வெங்காயம் சீரகம் பாசிப்பருப்புச் சேர்த்துக் குக்கரில் வேகவைத்து உப்பு சேர்த்து மசித்துக் கொடுக்கலாம்.

4. இட்லி 


உளுந்து கம்மியாகப் போட்டு ( அரிசி :உளுந்து = 6:1 ) என்ற விகிதத்தில் அரைத்து உப்பு சேர்த்துப் புளிக்க வைத்து இட்லியாக ஊற்றிக் கொடுக்கலாம்.

5. காரட் பொரியல்


ஆவியில் காரட்டை வேகவைத்து கால் ஸ்பூன் எண்ணெயில் சிறிது வெங்காயத்தை வதக்கி உப்பு சேர்த்துப் பிரட்டிக் கொடுக்கவும். 

6. உருளை பொரியல்.


உருளையைத் தோல் சீவிச் சதுரத் துண்டுகளாக்கி சிறிது உப்பு லேசாக மிளகாய்த்தூள் போட்டுப் பிரட்டி குக்கரில் நன்கு வேகவைத்து எடுத்துக் கால் ஸ்பூன் எண்ணெயில் வதக்கிக் கொடுக்கவும். 

7. பீன்ஸ் பொரியல்


பீன்ஸைப் பொடியாக அரிந்து ஆவியில் வேகவைத்து சிறிது எண்ணெயில் வெங்காயம், உப்பு சேர்த்துக் காரட் போல வதக்கிக் கொடுக்கவும். 

8. முட்டைக்கோஸ் கூட்டு 


முட்டைக்கோஸைப் பொடியாக அரிந்து பாசிப்பருப்போடு போட்டு சீரகம், வெங்காயம் சேர்த்து அரைக் கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவைத்துக் கொடுக்கவும். 

இவை அனைத்தும் செரிமானத்துக்கு ஏற்றது. 
  

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

சிக்கன் விண்ட்லூ.

சிக்கன் விண்ட்லூ


தேவையானவை :- சிக்கன் 350 கிராம்,(லெக் பீஸ் - 3 ) , பெரிய வெங்காயம் - 1 , பூண்டு - 4 பல், இஞ்சி - 1 இஞ்ச் துண்டு, வரமிளகாய் - 8 , வினிகர் - 1 டேபிள் ஸ்பூன், மல்லி - 1 டேபிள் ஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன் , சீரகம் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக் கீரை ( கசூரி மேத்தி ) - 1 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, கிராம்பு - 3. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன். வெங்காயத்தாள் - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது. 

செய்முறை:- மிளகாய்களை வினிகரில் ஊறப்போடவும். சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும். இஞ்சி பூண்டு வெங்காயத்தைக் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும். வினிகரில் ஊறிய வரமிளகாயோடு மல்லி, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு சேர்த்து மைய அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம் இஞ்சி பூண்டு மசாலாவை எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். அதில் சிக்கனைப் போட்டு நன்கு வதக்கி வினிகரோடு அரைத்த மசாலாவை ஊற்றவும் நன்கு கலக்கி விட்டு உப்பு , மஞ்சள்தூள், கசூரி மேத்தி சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் மூடி போட்டு 15 நிமிடம் சிம்மில் வேகவிடவும். வெந்ததும் பொடியாக அரிந்த வெங்காய்த்தாள் தூவி இறக்கி சப்பாத்தி, ரொட்டி, நான், குல்ச்சா உடன் பரிமாறவும். 
  

திங்கள், 12 அக்டோபர், 2020

சிக்கன் பிரியாணி.

சிக்கன் பிரியாணி.தேவையானவை.:-
சிக்கன் - 1/2 கி
பாஸ்மதி அரிசி - 3 கப்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட். - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
புதினா, கொத்துமல்லி - 3 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்தது.
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை இலை - 1
பட்டை - 4 இஞ்ச்
கிராம்பு  - 4
ஏலக்காய் - 4
கல்பாசிப்பூ - சிறிது.

செய்முறை:-
சிக்கனைக் கழுவி தண்ணீரை வடித்துப் பிழிந்து வைக்கவும். பாசுமதி அரிசியைக் களைந்து வறுத்து வைக்கவும். பிரஷர் குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பட்டை இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசிப்பூ போடவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு தண்ணீராக வதக்கவும்.  அதில் இஞ்சி பூண்டு விழுதைப்  போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கி சிக்கனைச் சேர்க்கவும். அதில் பாதி பொடியாக அரிந்த தக்காளி,தயிர், பச்சை மிளகாய், வரமிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் பொடி போட்டு, பாதி புதினா, கொத்துமல்லித்தழைகளைப் போட்டு வதக்கி அரை கப் தண்ணீர் ஊற்றி  3 விசில் வரும்வரை ப்ரஷர் குக்கரில் வைக்கவும்.

ஆறியதும் திறந்து பாசுமதி அரிசி, மிச்ச  தக்காளி, புதினா, கொத்துமல்லித்தழைகளை போட்டு 5 கப் தண்ணீர் உப்பு சேர்த்து கிளறவும். ( ஏற்கனவே ஒரு கப் தண்ணீரும் தயிரும் இருப்பதால் 5 கப் போதும் . ). ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். எலுமிச்சைச் சாறைப் பிழிந்து கிளறி சுடச் சுட உருளை சிப்ஸ், அவித்த முட்டை, கத்திரிக்காய் க்ரேவி, வெங்காயத் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்

வெள்ளி, 9 அக்டோபர், 2020

சிக்கன் சாப்ஸ்.

சிக்கன் சாப்ஸ். 


தேவையானவை:- சிறிதளவு எலும்புடன் கூடிய கோழித்துண்டுகள் - கால் கிலோ. வரமிளகாய் - 15 உப்பு - 1 டீஸ்பூன், முட்டை - 2 , எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கோழியைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போடவும். வரமிளகாயை உப்பு சேர்த்து மைய அரைத்துக் கோழியில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சுமார் அரைமணி நேரம் சிம்மில் வெந்தபிறகு உப்பு சேர்த்து இன்னும் சிறிது வேகவிட்டுச் சுண்டியதும் இறக்கவும். 

முட்டைகளை நன்கு அடித்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துக் கோழித்துண்டுகளை அடித்த முட்டையில் நன்கு தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இது சும்மா சாப்பிடவும் நன்றாக இருக்கும். ரசம் சாதம் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். 
 

புதன், 7 அக்டோபர், 2020

கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு.

கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு.


இதை சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு, தக்காளி போட்டு வதக்கிப் புளிக்குழம்பு போல வைத்துக் கடைசியில் வெந்த துவரம்பருப்பைப் போட்டு இறக்கலாம். இது இன்னொரு டைப்பில் பருப்புகளை ஊறவைத்துத் தேங்காய் சோம்போடு அரைத்துச் செய்திருக்கிறேன். 

தேவையானவை :- கத்திரிக்காய் - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, தேங்காய் - 2 இன்ச் துண்டு, வரமிளகாய் - 6, மல்லி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பூண்டு - 1 பல், சின்ன வெங்காயம் - 1, உப்பு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய நெல்லி அளவு, எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன். தாளிக்க :- கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு. 

செய்முறை:- கத்திரிக்காயைத் துண்டங்களாக்கித் தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு தண்ணீரில் ஊறப்போடவும். தேங்காயைத் துருவி அத்துடன் வரமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, ஊறிய பருப்புகள் சேர்த்து மைய அரைக்கவும்.  

கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து அதில் கத்திரிக்காயையும் வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும். உப்புப் புளியை ஒரு டம்ளர் நீரில் நன்கு கரைத்து ஊற்றி மஞ்சள் பொடி போட்டு வேகவிடவும். வெந்து கொதிக்கும் போது அரைத்த மசாலாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். மசாலா வாடை போக வெந்து குழம்பு நல்ல மணம் வரும்போது இறக்கவும். இது சாதத்தோடு சாப்பிட நன்றாக இருக்கும். இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம். 

  

செவ்வாய், 6 அக்டோபர், 2020

மைதா அப்பம்.

மைதா அப்பம். 


தேவையானவை:- மைதா - 1 கப், ரவை, கோதுமை - 1 டீஸ்பூன் தலா, வெல்லம் - ஒரு அச்சு அல்லது தூள் வெல்லம் - கால் கப், ஏலக்காய் - 1 பொடித்தது, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- மைதாவுடன் ரவை கோதுமை கலந்து வெல்லத்தூள் ஏலப்பொடி போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றிக் கட்டிகள் இல்லாமல் கரைத்து ஐந்து நிமிடம் வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கரண்டியால் மோந்து ஊற்றி அப்பங்களாகப் பொரித்து எடுக்கவும். 

  

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

தால் ஃப்ரை

தால் ஃப்ரை.


தேவையானவை:- துவரம்பருப்பு - 1 கப், பெரிய வெங்காயம் - 1 , தக்காளி - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வரமிளகாய் - 1, பச்சைமிளகாய் - 2, உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக்கீரை - சிறிது. கொத்துமல்லி - சிறிது.

செய்முறை:-துவரம்பருப்பைக் கழுவிக் குக்கரிப் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். ஒரு பானில் நெய்யை ஊற்றி சீரகம், வரமிளகாய், வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். இதில் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், பச்சைமிளகாய்,  இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு வாசம் வரும்வரை வதக்கித் தக்காளியைச் சேர்க்கவும். உப்பையும் போட்டால் தக்காளி சீக்கிரம் மசியும். மசிந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா போட்டு எண்ணெய் பிரிந்ததும் வெந்த துவரம்பருப்பை நன்கு மசித்து ஊற்றவும். கொதித்ததும் காய்ந்த வெந்தயக் கீரை, கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.சப்பாத்தி, சாதம், மேத்தி பரோட்டா , நான் , ருமாலி ரொட்டி ஆகியவற்றோடு இது நன்றாக இருக்கும் 

  
Related Posts Plugin for WordPress, Blogger...