எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 டிசம்பர், 2019

வெங்காயம் தக்காளி உருளை திறக்கல்.

வெங்காயம் தக்காளி உருளை திறக்கல்.

தேவையானவை :- வெங்காயம் - 1, தக்காளி - 2, அவித்த உருளைக்கிழங்கு சின்னம் - 1, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை :- வெங்காயம் தக்காளியைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். இதில் உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு, அவித்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து லேசாக பிசைந்து போடவும். அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் சிம்மில் வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். இது இட்லி தோசை, பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

சனி, 7 டிசம்பர், 2019

30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்

30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்

தேவையானவை :- மூங்கில் அரிசி – 1 கப் , நாட்டுச் சர்க்கரை – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை,
செய்முறை :- மூங்கில் அரிசியை ஊறவைத்து கொரகொரப்பாக அரைக்கவும். இதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். வெந்ததும் நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் இறக்கி ஏலப்பொடி தூவி நிவேதிக்கவும். விரும்பினால் நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துப் போடலாம்
 

வியாழன், 5 டிசம்பர், 2019

29. துவாதசி – சுண்டைக்காய், பாகற்காய், சேனைக்கிழங்குப் பச்சடி.

29. துவாதசி – சுண்டைக்காய், பாகற்காய், சேனைக்கிழங்குப் பச்சடி.

தேவையானவை :- சுண்டைக்காய் – 1 கப், பாகற்காய் – 1, சேனை – 1 துண்டு, கிள்ளு பதமாக வேகவைக்கப்பட்ட துவரம்பருப்பு – அரை கப், சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், தக்காளி – 1, புளி – 1 நெல்லி அளவு, உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து – தலா 1 டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, கருவேப்பிலை – 1இணுக்கு, வெல்லம் – சிறு துண்டு.
செய்முறை:-  சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி நீரில் போடவும். பாகற்காயை விதையில்லாமல் பொடியாக நறுக்கவும். சேனைக்கிழங்கை ஒரு இஞ்ச் துண்டுகள் செய்து எண்ணெயில் வதக்கி வேக வைத்து நீரை வடித்து வைக்கவும். புளியை இரண்டு கப் நீரில் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி போட்டு வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து சுண்டைக்காயையும் பாகற்காயையும் போட்டு நன்கு வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதிக்கும்போது பருப்பையும் வெந்த சேனையையும் சேர்க்கவும். மூடி போட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து வெந்ததும் வெல்லம் போட்டு இறக்கி நிவேதிக்கவும்.
 

செவ்வாய், 3 டிசம்பர், 2019

28. வைகுண்ட ஏகாதசி – கம்புப் புட்டு

28. வைகுண்ட ஏகாதசி – கம்புப் புட்டு.  

தேவையானவை :- வறுத்த கம்பு மாவு – 1 கப், நாட்டுச் சர்க்கரை –அரை கப், தேங்காய்த்துருவல் – அரை கப், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை :- கம்பு மாவில் உப்பை சேர்த்துத் தண்ணீர் தெளித்துப் பிசறி ஈரத்தோடு பெருங்கண்ணிச் சல்லடையில் சலித்து ஆவியில் பத்து நிமிடம் வேகவைக்கவும். வெந்ததும் நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து நன்கு கலக்கி நிவேதிக்கவும்.
 

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

27. விஜயதசமி – பால் பணியாரம்

27. விஜயதசமி – பால் பணியாரம்

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், உளுந்து – 1 கப், பால் அல்லது தேங்காய்ப் பால் – 3 கப் ( அ ) மில்க் மெய் – அரை டப்பா, சீனி – முக்கால் கப், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை :- பச்சரிசியையும் உளுந்தையும் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து வெண்ணெய் போல் அரைத்தெடுக்கவும் ( குருணை , திப்பி இருந்தால் வெடிக்கும். எனவே நைஸாக அரைப்பது முக்கியம் ) . பால் அல்லது தேங்காய்ப்பாலில் சீனியைச் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். மில்க் மெயிட் என்றால் இரண்டு கப் வெந்நீர் ஊற்றிக் கலந்து வைக்கவும்.  எண்ணெயைக் காயவைத்து அரைத்த மாவைச் சீடைக்காய் அளவு உருண்டைகள் செய்து வேகவைக்கவும். சூட்டோடு பாலில் போட்டு ஊறவைத்து நிவேதிக்கவும்.
 

வெள்ளி, 29 நவம்பர், 2019

26. திருக்கார்த்திகை – சிவப்பரிசி அவல் பொரி

26. திருக்கார்த்திகை – சிவப்பரிசி அவல் பொரி

தேவையானவை :- சிவப்பரிசி அவல் – 1 கப் மண்டை வெல்லம் – 150 கி, நெய் – 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பல் – 2 டீஸ்பூன், முந்திரி – 10. ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.
செய்முறை:- சிவப்பரிசி அவலைக் களைந்து நீரை ஒட்ட வடிக்கவும். வெல்லத்தைத் துருவி சிறிது நீர் சேர்த்துக் கெட்டிப் பாகு வைக்கவும். இதில் ஏலப்பொடியைச் சேர்க்கவும். ஒரு வாணலியில் நெய்யைக் காயவைக்கவும். அதில் முந்திரியையும் தேங்காய்ப் பல்லையும் வறுத்து அவலைப் போடவும். ( அவல் ரொம்ப ஊறக்கூடாது ) அவலை உதிரி உதிரியாக வறுத்து சூட்டோடு இருக்கும் வெல்லப்பாகில் கொட்டிக் கிளறவும். வெல்லப்பாகு நன்கு சுற்றிலும் பட்டு மொறுமொறுப்பாக அவல் பொரிந்ததும் இறக்கி நிவேதிக்கவும்.
 

புதன், 27 நவம்பர், 2019

25. நவராத்திரி – நவரத்ன சுண்டல்

25. நவராத்திரி – நவரத்ன சுண்டல்

தேவையானவை :- கருப்பு கொண்டைக்கடலை , வெள்ளைக் கொண்டக்கடலை, பாசிப்பயறு, ப்ரவுன் தட்டைப்பயறு, மொச்சை, பச்சைப் பட்டாணி, கொள்ளு, வெள்ளைக் காராமணி, சோயா பீன்ஸ், - தலா ஒரு கைப்பிடி., எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு உளுந்து – தலா – 1 டீஸ்பூன், வரமிளகாய் 4, தேங்காய் – அரை மூடி, உப்பு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:- அனைத்து பயறு வகைகளையும் தனித்தனியாக வாசம் வரும்வரை வறுத்துத் தனித்தனியாக முதல்நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் தனித்தனியான கிண்ணங்களில் போட்டுக் குக்கரில் குழையாமல் வேகவைத்து எடுத்து நீரை வடித்து  ஒன்று சேர்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்துப் வெந்த பயறு வகைகளைக் சேர்த்து உப்புப் போடவும். வரமிளகாயைத் தேங்காய்த்துருவலோடு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து சுண்டலில் போட்டு நன்கு கலந்து நிவேதிக்கவும்.
 

திங்கள், 25 நவம்பர், 2019

24. திருவாதிரை – வெந்தயக் களி

24. திருவாதிரை – வெந்தயக் களி

தேவையானவை :- புழுங்கல் அரிசி – 1 கப், வெந்தயம், உளுந்து – தலா 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – கால் கப், நாட்டுச் சர்க்கரை – 1 கப்
செய்முறை :- புழுங்கல் அரிசியைக் களைந்து ஊறவைத்து நைஸாக அரைக்கவும். உளுந்தையும் வெந்தயத்தையும் நைஸாக அரைக்கவும். இவை இரண்டையும் சேர்த்து மூன்று கப் தண்ணீரில் நன்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் இந்தக் கலவையை ஊற்றிக் கிளறவும், பாதி நல்லெண்ணெயையும் சேர்க்கவும். நன்கு வெந்து ஒட்டாமல் வரும்போது நாட்டுச் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் மிச்ச நல்லெண்ணையையும் ஊற்றி நன்கு கலக்கி வேகவைத்து இறக்கி நிவேதிக்கவும்
 

சனி, 23 நவம்பர், 2019

23. ஆனித்திருமஞ்சனம் – பச்சரிசிக் கேசரி

23. ஆனித்திருமஞ்சனம் – பச்சரிசிக் கேசரி

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – ஒரு டீஸ்பூன், சீனி – 2 கப், நெய் – 2 கப், கேசரி பவுடர் – 1 சிட்டிகை, குங்குமப்பூ – 1 சிட்டிகை, பால் கால் கப், முந்திரி, திராட்சை – தலா – 10, ஏலப்பொடி – கால் டீஸ்பூன், பச்சைக்கற்பூரம் – 1 சிட்டிகை.
செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுக்கவும். அதன் பின் களைந்து குக்கரில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி சூட்டோடு சீனியைச் சேர்த்து மசிக்கவும். அத்தோடு பாலில் கொதிக்கவைத்த் குங்குமப்பூவையும், கேசரி கலரையும் போட்டு உருக்கிய நெய்யையும் ஊற்றி நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸைப் போட்டு ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கிளறி நிவேதிக்கவும். 
 

வியாழன், 21 நவம்பர், 2019

22. கிருஷ்ண ஜெயந்தி – வரகு சீப்புச்சீடை.

22. கிருஷ்ண ஜெயந்தி – வரகு சீப்புச்சீடை.

தேவையானவை :- வரகரிசி மாவு– 1கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு – கால் கப், தேங்காய்ப் பால் – முக்கால் கப், உப்பு – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:- வரகரிசியை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுக்கவும். இதில் உளுந்து மாவைப் போட்டு உப்பும் வெண்ணெயும் சேர்த்துக் கலந்து வைக்கவும். தேங்காய்ப்பாலை சூடுபடுத்தி இம்மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். நன்கு பிசைந்து சீப்புச்சீடை அச்சில் போட்டுப் பிழிந்து மூன்று இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். வெட்டிய இரு பக்கங்களையும் இணைத்து ஒட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுத்து நிவேதிக்கவும்.
  

செவ்வாய், 19 நவம்பர், 2019

21. கந்தர் சஷ்டி – கந்தரப்பம்

21. கந்தர் சஷ்டி – கந்தரப்பம்

தேவையானவை :- பச்சரிசி – 2 கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கைப்பிடி, வெல்லம் – 200 கிராம், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 4, எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.
செய்முறை:- பச்சரிசி, உளுந்து, வெந்தயம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு அனைத்தையும் ஒன்றாகப் போட்டுக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். இதை கிரைண்டரில் போட்டு அரைத்து முக்கால் பதம் அரைத்ததும் வெல்லத்தைத் தூள் செய்து சேர்த்து தேங்காய்துருவலையும் சேர்க்கவும். நன்கு அரைந்ததும் மாவை வழித்து ஏலக்காயை ஒரு ஸ்பூன் சீனியுடன் தோலோடு பொடி செய்து சேர்க்கவும் . எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாகப் பொரித்து நிவேதிக்கவும்.
  

ஞாயிறு, 17 நவம்பர், 2019

20. தீபாவளி – பிஸ்தா சந்தேஷ்

20. தீபாவளி – பிஸ்தா சந்தேஷ்

தேவையானவை :- பால் 1 லிட்டர், எலுமிச்சை – 1 பழம், பிஸ்தா – அரை கப், பொடித்த சர்க்கரை – கால் கப். ஊறவைத்து பொடியாக சீவிய பாதாம் முந்திரி பிஸ்தா – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- பாலை நன்கு காய்ச்சிக் கொதிக்கும்போது எலுமிச்சையைப் பிழியவும். பால் நன்கு திரைந்து பனீர் கட்டிகளானதும் ஒரு துணியில் கட்டி நீரை வடிக்கவும். நீ நன்கு வடிந்து பனீர் உலர்ந்ததும் அதில் பொடித்த சர்க்கரையையையும் பொடித்த பிஸ்தாவையும் போட்டு அடுப்பில் வைத்து கிளறவும். இறுகியதும் இறக்கி உருண்டையாக தட்டி பின் வடை போல் சப்பட்டையாகத் தட்டி நடுவில் லேசாக கட்டைவிரலால் அமுக்கி அதில் பொடியாக சீவிய பாதாம் முந்திரி பிஸ்தா பதித்து நிவேதிக்கவும்.

வியாழன், 14 நவம்பர், 2019

19. பொங்கல் – சாமை பனங்கற்கண்டுப் பொங்கல்

19. பொங்கல் – சாமை பனங்கற்கண்டுப் பொங்கல்

தேவையானவை:- சாமை அரிசி – 1 கப், பனங்கல்கண்டு – ஒரு கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தேங்காய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:- சாமையைக் களைந்து ஊறவைக்கவும். பனங்கற்கண்டை 3 கப் நீரில் போட்டு கரையவிட்டு வடிகட்டவும். குக்கரில் கற்கண்டு கரைந்த நீரை விட்டு சாமையைப் போட்டு 2 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கி மசிக்கவும். நெய்யைக் காயவைத்து முந்திரி, கிஸ்மிஸ், தேங்காய்ப் பல்லைப் போட்டு வதக்கி ஏலத்தூளுடன் கொட்டிக் கிளறி நிவேதிக்கவும்.

புதன், 13 நவம்பர், 2019

18.மாசிமகம் – ஐந்து பருப்பு வடை

18.மாசிமகம் – ஐந்து பருப்பு வடை

தேவையானவை :- உளுந்தம்பருப்பு – ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு – 1 கைப்பிடி, பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, துவரம்பருப்பு – 1 கைப்பிடி, மைசூர்தால் – 1 கைப்பிடி, பச்சை மிளகாய் – 1, வரமிளகாய் – 1, இஞ்சி – சிறுதுண்டு, கருவேப்பிலை, கொத்துமல்லி – 1 கைப்பிடி, உப்பு – கால் டீஸ்பூன் , எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:- ஐந்து பருப்புக்களையும் ஒன்றாகப் போட்டுக் களைந்து ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியதும் நீரை வடித்து வைக்கவும்.மிக்ஸியில் முதலில் பச்சைமிளகாய், வரமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லியை உப்புடன் அரைக்கவும். இதில் பருப்பு வகைகளைப் போட்டுக் கொத்தாகச் சுற்றி எடுக்கவும். எண்ணெயைக் காயவைத்து மசால்வடைபோல் தட்டிப் போட்டுப் பொரித்து நிவேதிக்கவும்.
  

திங்கள், 11 நவம்பர், 2019

17.ஐப்பசி பௌர்ணமி – காய்கறி சாதம்

17.ஐப்பசி பௌர்ணமி – காய்கறி சாதம்

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பொடியாக அரிந்த காரட், உருளை, பீட்ரூட், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், காலிஃப்ளவர் கலந்து - 2 கப், வெங்காயம் – 1, தக்காளி – 1, மிளகாய் சோம்புத்தூள் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பட்டை – 1 துண்டு, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:- பச்சரிசியை சிறிது எண்ணெயும் உப்பும் விட்டு உதிரியாக வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து கடலைப்பருப்பைப் போட்டுத் தாளித்து பட்டை சேர்க்கவும். கருவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் பொடியாக அரிந்த காய்கறிக் கலவையையையும் போட்டு நன்கு வதக்கி உப்பும் மிளகாய் சோம்புத்தூளையும் சேர்க்கவும். நன்கு சுருள வதங்கியதும் இறக்கி வைத்து ஆறிய சாதத்தைப் போட்டுக்  கிளறி நிவேதிக்கவும்.

 

சனி, 9 நவம்பர், 2019

16.புரட்டாசி ராமர் பட்டாபிஷேகம்/ஏகாதசி – கோதுமை அப்பம்

16.புரட்டாசி ராமர் பட்டாபிஷேகம்/ஏகாதசி – கோதுமை அப்பம்

தேவையானவை :- கோதுமை – 1 கப், தூள் வெல்லம் – அரை கப், நெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை :- ஒரு பேசினில் கோதுமையையும் வெல்லத்தையும் போட்டு நன்கு கலக்கவும். தண்ணீரைத் தெளித்துத் தெளித்து இறுக்கமாகப் பிசையவும். நெய்யைத் தொட்டுக் கைகளால் அப்பம் அளவு தட்டி நெய்யைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.
  

வெள்ளி, 8 நவம்பர், 2019

15.காரடையான் நோன்பு – வெல்ல அடை

15.காரடையான் நோன்பு – வெல்ல அடை

தேவையானவை:- பச்சரிசி – ஒருகப், வெல்லம் – 1 கப், காராமணி – கால் கப், தேங்காய்ப் பல் – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை
செய்முறை :- பச்சரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். காராமணியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து வைக்கவும். ஒரு கப் வெல்லத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவிடவும். கரைந்ததும் காராமணியைப் போட்டு இரு நிமிடம் வேகவைத்து அதில் அரிசிமாவையும் போட்டுக் கிளறவும். நன்கு உருண்டு பந்து போலானதும் இறக்கி வைத்து ஆறவிடவும். ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து உள்ளங்கையில் தட்டி வடை போல் துளை செய்து ஆவியில் வேகவைத்து நிவேதிக்கவும்.
  

ஞாயிறு, 3 நவம்பர், 2019

14.வரலெட்சுமி விரதம் – எருக்கலங்கொழுக்கட்டை

14.வரலெட்சுமி விரதம் – எருக்கலங்கொழுக்கட்டை

தேவையானவை:- பச்சரிசி மாவு – 2 கப் , தேங்காய்த்துருவல் – ஒரு கப், வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.
செய்முறை:- ஒன்றேகால் கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து ஒரு சிட்டிகை உப்பும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயும் சேர்க்கவும். அதில் பச்சரிசி மாவைக் கொட்டிக் கரண்டிக் காம்பால் கிளறி மூடி வைக்கவும். பத்து நிமிடம் கழித்து மாவை கட்டியில்லாமல் நன்கு பிசைந்து வைக்கவும். தேங்காய்த்துருவலோடு வெல்லம் சேர்த்து வாணலியில் சுருளக் கிளறி ஏலப்பொடி போட்டு வைக்கவும். பிசைந்த மாவில் எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து சொப்புப் போல செய்து தேங்காய்ப் பூரணத்தை வைத்து மேலே கூம்பாக வரும்படி மூடவும். எல்லா மாவையும் இதுபோல் செய்து ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.
  

13.ஆவணி ஞாயிறு – குதிரைவாலி கற்கண்டு சாதம்.

13.ஆவணி ஞாயிறு – குதிரைவாலி கற்கண்டு சாதம்.

தேவையானவை :- குதிரைவாலி அரிசி – 1 கப், பால் – 1கப், தண்ணீர் – 2 கப், கற்கண்டு – 150 கி, நெய் – 50 கி. முந்திரி – 10.
செய்முறை:- குதிரைவாலி அரிசியை நன்கு களைந்து ஒரு கப் பாலும், 2 கப் தண்ணீரும் ஊற்றிக் குக்கரில் குழைய வேகவிடவும். கற்கண்டைப் பொடிக்கவும். குக்கரைத் திறந்து கற்கண்டுப் பொடியைப் போட்டு சூட்டோடு நன்கு கிளறவும். நெய்யைக் காயவைத்து முந்திரியைப் பொடித்துப் போட்டு மசியக் கிளறி நிவேதிக்கவும்.
  

வெள்ளி, 1 நவம்பர், 2019

12.விநாயக சதுர்த்தி – டூட்டி ஃப்ரூட்டி மோதகம்

12.விநாயக சதுர்த்தி – டூட்டி ஃப்ரூட்டி மோதகம்

தேவையானவை :- பச்சரிசிக் குருணை – கால் கிலோ, பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, வெல்லம் – 100 கி, தேங்காய் – ஒரு துண்டு, நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், டூட்டி ஃப்ரூட்டி – 25 கி.
செய்முறை:- பச்சரிசிக் குருணையையும் பாசிப்பருப்பையும் வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுக்கவும். மூன்று கப் தண்ணீரில் வெல்லத்தைத் தட்டிப் போட்டு சூடாக்கி வெல்லம் கரைந்ததும் குருணையில் வடிகட்டி ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும். தேங்காயைப் பல்லுப் பல்லாக நறுக்கியோ துருவலாகவோ செய்து நெய்யில் வதக்கி வெந்த மாவில் போடவும், ஏலப்பொடியையும் டூட்டி ஃப்ரூட்டியையும் சேர்த்து சிறிது ஆறியதும் நன்கு பிசைந்து உருண்டைகள் பிடித்து ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.
 

திங்கள், 28 அக்டோபர், 2019

11.ஹனுமத் ஜெயந்தி – வெண்ணெய் ரொட்டி

11.ஹனுமத் ஜெயந்தி – வெண்ணெய் ரொட்டி

தேவையானவை:- மைதா – அரை கப், கோதுமை மாவு – அரைகப், சோடா உப்பு – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, சீனி – 1 டீஸ்பூன், வெண்ணெய் –அரை கப், அரிசிமாவு – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பொடி + சீனிப்பொடி – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- மைதா, கோதுமை மாவுடன் சோடா உப்பு, உப்பு, சீனியை சேர்த்து நன்கு கலந்து பாதி வெண்ணெயையும் போட்டுக் கலக்கவும். தண்ணீரைத் தெளித்துத் தெளித்துப் பிசைந்து பத்து நிமிடம் ஊறவிடவும். மீதி வெண்ணெயில் அரிசிமாவைப் போட்டுச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலந்து நன்கு குழப்பி வைக்கவும். பிசைந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து அரிசி வெண்ணெய்க் கலவையைத் தடவி மடித்து மடித்துத் தேய்க்கவும். பலமுறை மடித்துத் தேய்த்தபின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டவும். தோசைக்கல்லை சூடு செய்து இந்தத் துண்டுகளை எல்லாப் பக்கமும் படும்படி அப்பள இடுக்கியால் புரட்டிப் புரட்டிப் பொன்னிறமாக வேகவைத்து எடுத்து தேங்காய்ப்பொடி சீனிப்பொடி தூவி நிவேதிக்கவும்.

  

வெள்ளி, 25 அக்டோபர், 2019

10.ராமநவமி – பாசிப்பயறு கோசுமரி

10.ராமநவமி – பாசிப்பயறு கோசுமரி

தேவையானவை:- முளைவிட்ட பாசிப்பயறு – 1 கப், தக்காளி – பாதி, தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 1, எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன், வெள்ளரிக்காய் – 1, மாங்காய் – 1 துண்டு, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன்.
செய்முறை:- முளைவிட்ட பாசிப்பயறை ஒரு பௌலில் போடவும். இதில் பொடியாக அரிந்த கொத்துமல்லி, பச்சைமிளகாய், தக்காளி, வெள்ளரி, மாங்காய்த்துண்டுகள் , தேங்காய்த்துருவல், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கலந்து நிவேதிக்கவும். 
  

புதன், 23 அக்டோபர், 2019

9.ஆடிச் செவ்வாய் அம்மன் – அரியரிசி, துள்ளுமா, மாவிளக்கு

9.ஆடிச் செவ்வாய் அம்மன் – அரியரிசி, துள்ளுமா, மாவிளக்கு

தேவையானவை:- பச்சரிசி – 3 கப், தூள் வெல்லம் – 100 கி , அச்சு வெல்லம் – 100 கி, மண்டை வெல்லம் – 100 கி. நெய் – 1 டேபிள் ஸ்பூன், திரி.
செய்முறை:- மூன்று கப் பச்சரிசியையும் ஒவ்வொரு கப்பாக எடுத்துக் களைந்து தனித்தனியாக ஊறவைக்கவும்.
அரியரிசி:- ஒரு கப் ஊறவைத்த அரிசியை அரித்து எடுத்துத் தூள் வெல்லம் கலந்து நிவேதிக்கவும்.
துள்ளுமா:- இன்னொரு கப் ஊறவைத்த அரிசியை எடுத்து பெரபெரவென உரலில் இடித்தோ மிக்ஸியில் அரைத்தோ வைக்கவும். இதில் அச்சுவெல்லத்தைத் தூள் செய்து ஒரு சுற்றுச் சுற்றிநிவேதிக்கவும். (உரலில் போட்டு இடிக்கும்போது குருணையுடன் துள்ளி விழும் என்பதால் இது துள்ளுமா.)
மாவிளக்கு :- மூன்றாவதாக ஒரு கப் ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். மண்டை வெல்லத்தைத் துருவி மாவுடன் மிக்ஸியில் போட்டுச் சுற்றி எடுத்து உருண்டையாகக் கைகளால் உருட்டி ஒரு தட்டில் வைக்கவும். நடுவில் குழி செய்து திரி போட்டு நெய் ஊற்றி மாவிளக்கை ஏற்றி நிவேதிக்கவும்.

8.ஆடிப்பூரம் – அவல் தேங்காய் உருண்டை

8.ஆடிப்பூரம் – அவல் தேங்காய் உருண்டை

தேவையானவை :- ரோஸ் அவல் – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், தூள் வெல்லம் – 100 கி, ஏலத்தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை.
செய்முறை:- ரோஸ் அவலை மிக்ஸியில் பொடிக்கவும். இதில் உப்பை சேர்த்து கால் கப் தண்ணீர் தெளித்துப் பிசறி ஐந்து நிமிடம் வைக்கவும். அதிலேயே ஏலத்தூள், தேங்காய்த்துருவல், தூள் வெல்லம் போட்டு நன்கு பிசைந்து உருண்டைகளாகப் பிடித்து நிவேதிக்கவும்.
  

செவ்வாய், 22 அக்டோபர், 2019

7.ஆடிப்பெருக்கு – அரிசிப்பருப்பு சாதம்

7.ஆடிப்பெருக்கு – அரிசிப்பருப்பு சாதம்

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், துவரம்பருப்பு – கால் கப், தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 2, பச்சைமிளகாய் – 1, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, சாம்பார் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, கருவேப்பிலை – 1 இணுக்கு
செய்முறை:- பச்சரிசியையும் துவரம்பருப்பையும் கழுவி குக்கரில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து உதிர்க்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவைத்துக் கடுகு, உளுந்து கடலைப்பருப்பைத் தாளித்து வரமிளகாயையும் பச்சை மிளகாயையும் இரண்டாகக் கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூளும் கருவேப்பிலையும் போட்டுப் பொரிந்ததும் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதக்கி உப்பு, மஞ்சள்தூள், சாம்பார்தூள் சேர்த்து சுருள வதங்கியதும் இறக்கி ஆறவைக்கவும். இதில் வேகவைத்த சாதம் பருப்புக் கலவையைப் போட்டு நன்கு கிளறி நிவேதிக்கவும்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...