எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 மே, 2023

காரட் தக்காளி சூப்

காரட் தக்காளி சூப்


தேவையானவை:- காரட் – 1, தக்காளி – 1, வெங்காயம் -1, உப்பு – அரை டீஸ்பூன், பால் – கால் கப், பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1.

செய்முறை:- ஒரு ப்ரஷர் பானில் காரட் தக்காளி வெங்காயத்தைப் பெரிய துண்டுகளாக வெட்டிப் போட்டு இரண்டரை கப் தண்ணீர் ஊற்றவும். அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் இலை எல்லாவற்றையும் போட்டு ஒரு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய்,, இலையை நீக்கிவிட்டு காரட் தக்காளி வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். அதே தண்ணீரில் போட்டு உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும். பால்சேர்த்து அருந்தக் கொடுக்கவும். 

இது சத்துக்குறைச்சலைப் போக்கும். பெரியவர்கள் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

 

திங்கள், 22 மே, 2023

சௌசௌ கூட்டு

சௌசௌ கூட்டு


தேவையானவை:- சௌசௌ – 1, பாசிப்பருப்பு + கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் -1, பெரிய வெங்காயம் – பாதி, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். தாளிக்க- எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை – 1 இணுக்கு.  

செய்முறை:- சௌசௌவைத் தோல் சீவிப் பொடிப்பொடியாக அரியவும். பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் கழுவி அரைமணிநேரம் ஊறவைக்கவும். பெரிய வெங்காயத்தையும் பொடியாக அரியவும். பச்சைமிளகாயைக் கீறி வைக்கவும். ஒரு ப்ரஷர் பானில் ஊறவைத்த பருப்புகள்,சௌசௌ, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகத்தைப் போட்டு ஒரு விசில் வைத்து இறக்கி உப்பு சேர்த்து மசிக்கவும். எண்ணெயில் உளுந்து சீரகம் கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். 

இது வாய்க்கு இதமான இளசான கூட்டு.

 

ஞாயிறு, 14 மே, 2023

கீரைத்தண்டுப் பொரியல்

கீரைத்தண்டுப் பொரியல்


தேவையானவை:- இளசான முளைக்கீரைத்தண்டுகள் – நார் நீக்கி நறுக்கியது ஒரு கப், பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் – 6, எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், கடுகு, உளுந்து – தலா அரை டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:- கீரைத்தண்டின் தோல் உரித்துப் பொடியாக அரிந்து வைக்கவும். பாசிப்பருப்பை அரைமணிநேரம் ஊறவைக்கவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து போட்டு இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கி அதன்பின் கீரைத்தண்டையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இதில் ஊறவைத்த பருப்பை நீருடன் சேர்த்து நன்கு கலக்கி மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும். 

வயிற்றுக்குத் துன்பம் தராத பொரியல் இது. நார்ச்சத்து இருப்பதால் குடலில் தேங்கிய கழிவுகளை நீக்கும்.

 

வியாழன், 11 மே, 2023

புதினா தோசை

புதினா தோசை


தேவையானவை:- தோசை மாவு – 4 கரண்டி, ஆய்ந்த புதினா இலைகள் – இரண்டு கைப்பிடி, சீரகம் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 4, பச்சைமிளகாய் – 1, எண்ணெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை:- புதினா இலைகளைக் கழுவி வைக்கவும். சின்னவெங்காயத்தையும் பச்சைமிளகாயையும் பொடியாக அரியவும். தோசைக்கல்லில் ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றிப் பரப்பி அதில் அரைக்கைப்பிடி புதினா இலைகள், சிறிது பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், சீரகத்தைத் தூவவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேகவைத்துப் பரிமாறவும். 

வாய் துர்நாற்றம் போக்கும். பசியைத் தூண்டும்.

திங்கள், 8 மே, 2023

மொளகுபொடி

மொளகுபொடி


தேவையானவை:- மோர்மிளகாய் – 2, உளுந்தம்பருப்பு – 1 கப், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- உளுந்தம்பருப்பை நன்கு வாசம் வரும்வரை வறுக்கவும். இதில் கடைசியாக மோர்மிளகாயைச் சேர்த்து சூடு ஏறியதும் இறக்கவும். உப்புடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும். 

சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு நெய்விட்டுப் பிசைந்து பரிமாறவும். வயிற்றுக்கு இதமான பொடி இது. 

நோய்க்குப் பின் தேறிவரும்போது வாய்க்கு ருசியாகவும் இருக்கும். 

 

ஞாயிறு, 7 மே, 2023

சுண்டை வத்தல் மணத்தக்காளி வத்தல் குழம்பு

சுண்டை வத்தல் மணத்தக்காளி வத்தல் குழம்பு



தேவையானவை:- சுண்டைவத்தல் – அரைக் கைப்பிடி, மணத்தக்காளி வத்தல் – ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 10, தக்காளி – 1, வரமிளகாய் – 8, மல்லி – 1 டேபிள் ஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், மிளகு – 10, சீரகம் – 1 டீஸ்பூன். மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, நல்லெண்ணெய் – 50 மிலி. உப்பு – 2 டீஸ்பூன், புளி – 1 எலுமிச்சை அளவு. கருவேப்பிலை 1 இணுக்கு. கடுகு, வெந்தயம் பெருங்காயம் – சிறிது, வெல்லம் - சிறுதுண்டு.

செய்முறை:- வெறும் வாணலியில் வரமிளகாய், மல்லி, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு,மிளகு, சீரகத்தை வாசனை வரும்வரை வறுத்துப் பொடிக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துச் சாறு எடுத்து உப்பும் மஞ்சள்தூளும் சேர்த்து வைக்கவும். நல்லெண்ணையைக் காயவைத்து சுண்டை வத்தல், மணத்தக்காளி வத்தலைப் பொரித்து எடுத்துத் தனியே வைக்கவும். அதே எண்ணெயில் கடுகு வெந்தயம் பெருங்காயம் தாளித்து சுத்தம் செய்த சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் அரைத்த பொடியைப் போட்டுப் புளித்தண்ணீரை ஊற்றவும். கொதித்துச் சுண்டும்போது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் சுண்டை வத்தல், மணத்தக்காளி வத்தலைச் சேர்த்து இறக்கவும். 

சூடாக சாதத்தோடு பரிமாறவும். பசியைத் தூண்டும் குழம்பு இது. நாவின் கசப்பைப் போக்கும்.

 

வெள்ளி, 5 மே, 2023

அவரைக்காய் இளங்குழம்பு

அவரைக்காய் இளங்குழம்பு



தேவையானவை:-அவரைக்காய் – 12, வேகவைத்த துவரம்பருப்பு – அரை கப், பச்சை மிளகாய் – 1, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு. புளி – 3 சுளை, உப்பு – அரை டீஸ்பூன், சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1சிட்டிகை. தாளிக்க:- எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் – தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:- அவரைக்காயை நார் எடுத்து இரண்டாக நறுக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் அரியவும். பச்சை மிளகாயை இரண்டாக வகிரவும். இவை அனைத்தையும் ஒரு ப்ரஷர் பானில் போட்டு கால் கப்நீரூற்றி ஒரு விசில் வைத்து இறக்கி லேசாக மசித்து விடவும். புளியை இரண்டு கப் நீரில் ஊறவைத்துக் கரைத்து உப்பு சேர்த்து இதில் ஊற்றவும். சாம்பார்பொடி, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்க விட்டு இருநிமிடங்கள் கழித்து கொத்துமல்லித்தழை சேர்த்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்து சீரகம் தாளித்துக் கொட்டவும். 

இது காரம் குறைவாக இளசாக இருப்பதால் குழைவான சாதத்தோடு சாப்பிட நன்றாக இருக்கும். 

வியாழன், 4 மே, 2023

இஞ்சிப் புளிக்காய்ச்சல்

இஞ்சிப் புளிக்காய்ச்சல்



தேவையானவை:- மாவடு இஞ்சி/இஞ்சி – 100 கி, பச்சைமிளகாய் – 4, வரமிளகாய் – 4 , புளி – எலுமிச்சை அளவு, உப்பு – 2 டீஸ்பூன், வெல்லம் – 1 அச்சு. நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு,உளுந்து கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 துண்டு, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:- மாவடு இஞ்சி அல்லது இஞ்சியைத் தோல்சீவித் துருவிக் கொள்ளவும். பச்சைமிளகாயைப் பொடியாக அரிந்து கொள்ளவும். வரமிளகாயைக் கிள்ளி வைக்கவும். எலுமிச்சையை உப்புடன் சேர்த்து முக்கால் கப் தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து வைக்கவும். நல்லெண்ணையைக் கடாயில் காயவைத்துக் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம் தாளித்து வரமிளகாயைப் போடவும். அதன் பின் பச்சை மிளகாய், துருவிய இஞ்சி போட்டு நன்கு வதக்கி மஞ்சள்தூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதித்துச் சுண்டும்போது வெல்லம் சேர்க்கவும். 

இது குடலை சுத்தப்படுத்தும். பசியைத் தூண்டும். மயக்கம் நீக்கும்.





 

திங்கள், 1 மே, 2023

தூதுவளை ரசம்

.தூதுவளை ரசம்



தேவையானவை:- தூதுவளை இலைகள் – ஒரு கைப்பிடி, வெந்த துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், தக்காளி – 1, வரமிளகாய் – 2, மிளகு சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் – 2, மல்லித்தூள், மஞ்சள்தூள் தலா கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன் , புளி – ஒரு நெல்லி அளவு. தாளிக்க. எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு. கருவேப்பிலை, கொத்துமல்லி சிறிது.

செய்முறை:- தூதுவளை இலைகளை ( முள் இருக்கும் ) பார்த்து ஆய்ந்து வரமிளகாய், மிளகு, சீரகம், தக்காளி, பூண்டுப்பல்லோடு சேர்த்து நைத்து வைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்துச் சாறு எடுத்து உப்பு, மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து சீரகம், வெந்தயம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து நைத்து வைத்த தூதுவளையைப் போட்டுப் பிரட்டவும். இதில் புளித்தண்ணீரை ஊற்றவும். நுரைத்து வரும்போது கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். 


இது சள்ளைக்கடுப்பு எனப்படும் உடல்வலியைப் போக்கும். அப்படியேவும் அருந்தலாம். குழைவான சோற்றில் ஊற்றி மசித்தும் சாப்பிடலாம்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...