எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

சிக்கன் மஞ்சூரியன்

சிக்கன் மஞ்சூரியன்


தேவையானவை :- எலும்பில்லாத கோழித்துண்டுகள் - 250 கி, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சோளமாவு - 2 டீஸ்பூன், சிவப்பு ஃபுட் கலர் - 1 சிட்டிகை, உப்பு - 1 டீஸ்பூன், முட்டை - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன். எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. குடைமிளகாய் - 1, பெரிய வெங்காயம் - 1, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- கோழியக் கழுவி சுத்தம் செய்து உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், சோளமாவு, முட்டை, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின் அதனை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் , குடைமிளகாயை சதுரத் துண்டுகளாக நறுக்கவும். 


இன்னொரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து ஹை ஃப்ளேமில் வைத்து வெங்காயம், குடைமிளகாயைப் போட்டு வதக்கவும். போட்டவுடனேயே சோயா சாஸ், டொமேடோ சாஸையும் சேர்த்துக் கலக்கவும். இதில் உடனேயே கோழியையும் போட்டு நன்கு கலந்து லேசாகத் தண்ணீர் ஊற்றிப் பிரட்டவும். சாஸ் எல்லாவற்றிலும் நன்கு கலந்ததும் இறக்கி சப்பாத்தி நான், ருமாலி ரொட்டி, குல்ச்சா ஆகியவற்றோடு பரிமாறவும். 


  

திங்கள், 28 செப்டம்பர், 2020

மாவடு இஞ்சி/மாங்காய் இஞ்சி மண்டி

மாவடு இஞ்சி/மாவடு இஞ்சி மண்டி. 


தேவையானவை:- மாவடு இஞ்சி - 100 கிராம், சி. வெங்காயம் - 15, வெள்ளைப்பூண்டு - 15, பச்சை மிளகாய் - 6, திக்கான அரிசி களைந்த தண்ணீர் - 2 கப், புளி - நெல்லி அளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து . வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம்- ஒரு துண்டு. கருவேப்பிலை -  1 இணுக்கு.

செய்முறை:- மாவடு இஞ்சியைத் தோல் சீவி நைசாக அரிந்து வைக்கவும். வெங்காயம் பூண்டு பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். அரிசி களைந்த தண்ணீரில் உப்புப் புளியைப் போட்டுக் கரைத்துச் சாறெடுத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து வெந்தயம் பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், மாவடு இஞ்சி போட்டு லேசாக வதக்கவும். இதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். அரிசி களைந்த தண்ணீர் திக்காக இல்லை என்றால் ஒரு டீஸ்பூன் பச்சரிசி, ஒரு துண்டு பெருங்காயம், கால் டீஸ்பூன் வெந்தயத்தைப் பொடித்துப் போடவும். மண்டி சுண்டியதும் இறக்கவும். இது தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். 
  

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

கருப்பட்டிப் பணியாரம்

கருப்பட்டிப் பணியாரம்.தேவையானவை:- பச்சரிசி -2 கப், வெல்லம் + கருப்பட்டி - 200 கி, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம்  ஊறவைத்து வடிகட்டி நிழலில் போடவும். பத்து நிமிடம் கழித்து மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். ஒரு கட்டி வெல்லத்தோடு கருப்பட்டியையு நைத்துப் போட்டு அரைக் கப் தண்ணீர் ஊற்றிக் கரைய விடவும். வெல்லமும் கருப்பட்டியும் கரைந்ததும் மாவில் வடிகட்டி ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி நன்கு பிசைந்து உருட்டி வைக்கவும். 

மறுநாள் எண்ணெயைக் காயவைத்து மாவைக் கரைத்துப் பணியாரங்களாக ஊற்றி நிவேதிக்கவும். எண்ணையோடு சிறிது நெய்யையும் சேர்த்துக் காய்ச்சி ஊற்றலாம். மிகவும் ருசியாக  இருக்கும். இது பிள்ளையார் நோன்பு ஸ்பெஷல் பணியாரம். இரத்த விருத்தி தரும். இரும்புச் சத்து உள்ளது. 

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

மாவிளக்குச் சீடை

மாவிளக்குச் சீடை:-


இதை வெல்லச்சீடையாகவும் செய்யலாம். 

தேவையானவை :- மாவிளக்கு மாவு - 1 கப், (அல்லது பச்சரிசி மாவு - 1 கப், தூள் வெல்லம் - அரைகப். பச்சரிசி மாவில் வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றிப் பிசைந்து ஒரு நாள் முழுதும் வைக்கவும். ), தேங்காய்த்துருவல் -  1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 1, எண்ணெய் - பொரித்தெடுக்க.

செய்முற:- மாவிளக்கு மாவில் அல்லது வெல்லம் பச்சரிசி போட்ட மாவில் தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து லேசாக நீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்துப் பெரிய சீடைகளாக உருட்டிப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 


  

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

கற்பூரவல்லி/ஓமவல்லி பஜ்ஜி

கற்பூரவல்லி/ஓமவல்லி பஜ்ஜி.தேவையானவை:- கற்பூரவல்லி/ஓமவல்லி இலை - 10. பஜ்ஜி மிக்ஸ் - 1 கப், அல்லது கடலை மாவு -முக்கால் கப், அரிசி மாவு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன். எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. 

செய்முறை:- கற்பூரவல்லி/ஓமவல்லி இலைகளைப் பறித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பஜ்ஜி மிக்ஸை அல்லது கடலைமாவு அரிசி மாவு உப்பு மிளகய்த்தூளை கால் கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து கற்பூரவல்லி இலைகளை மாவுக்கரைசலில் நனைத்துப் பொரித்தெடுக்கவும். இது சளி, இருமலுக்கு நல்லது. கஷாயமாக சாப்பிட முடியாதவர்கள் இதில் இரண்டை சாப்பிடலாம். 
  

சனி, 19 செப்டம்பர், 2020

கோஸ் குருமா

கோஸ் குருமா. 


தேவையானவை:- முட்டைக்கோஸ் - 4 இதழ், பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1, தேங்காய் -  1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 6, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, பூண்டு - 2 பல், கொத்துமல்லித்தழை - சிறிது , கருவேப்பிலை - 1 இணுக்கு. உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று. 

செய்முறை:- முட்டைக்கோஸை தண்டு நீக்கி சிறு துண்டுகளாக வெட்டவும். வெங்காயம் தக்காளியையும் துண்டுகளாக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் தக்காளி கோஸ், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். ஓரிரு நிமிடம் வதங்கியதும் அரைத்த தேங்காய்க் கலவையை ஊற்றி லேசாகத் திறக்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்து கோஸ் வெந்ததும் இறக்கி சப்பாத்தி , தோசையுடன் பரிமாறவும். 
  

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

மொச்சை மண்டி.

மொச்சை மண்டி. 


தேவையானவை:- மொச்சை - 1 கப், அரிசி களைந்த கெட்டிக் கழுநீர்/மண்டி -2 கப், வெண்டைக்காய் - 8, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 8 பல் , பச்சை மிளகாய் - 10, தக்காளி - சின்னம் 1, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா - 1 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு. கருவேப்பிலை - 1 இணுக்கு. 

மண்டிப் பொடி :- ஒரு டீஸ்பூன் பச்சரிசி கால் டீஸ்பூன் வெந்தயம், நகக்கண் அளவு பெருங்காயத்தை வறுத்து நுணுக்கி வைக்கவும். 

செய்முறை:-  மொச்சையை முதல்நாளே ஊறப்போடவும். மறுநாள் குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவைத்து நீரை வடித்து வைக்கவும். வெண்டைக்காய், வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து துண்டுகளாக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றிக் கடுகு உளுந்து பெருங்காயம் வெந்தம் தாளித்துப் பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பூண்டு, வெண்டிக்காயைப் போட்டு வதக்கவும். அரிசி மண்டியில் உப்புப் புளியை ஊறப்போட்டுக் கரைத்து ஊற்றவும். இவை எல்லாம் கொதித்து வரும்போது மொச்சையைச் சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும் பத்து நிமிடம் சிம்மில் வைத்து நன்கு கொதித்துக் காரமும் உப்பும் மொச்சையில் சார்ந்ததும் மண்டிப் பொடியைப் போட்டு இன்னும் ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கவும். இது சாதத்தோடு சாப்பிட நன்றாக இருக்கும். தயிர்சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். 

  

வியாழன், 17 செப்டம்பர், 2020

காலிஃப்ளவர் சொதி.

காலிஃப்ளவர் சொதி. 


தேவையானவை:- காலிஃப்ளவர் சின்னம் - 1, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, தேங்காய் - அரை மூடி, பச்சை மிளகாய் - 6, வரமல்லி - 1 டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 6, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, கசகசா - அரை டீஸ்பூன், தாளிக்க - எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பட்டை, இலை, பூ, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று.  கருவேப்பிலை - இணுக்கு , உப்பு - 1 டீஸ்பூன். 

செய்முறை:- காலிஃப்ளவரை சுத்தம் செய்து பூக்களாகப் பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் மூன்று நிமிடம் போட்டு வடிக்கவும். பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கீறிய பச்சைமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, தேங்காய் ஆகியவற்றை வெதுப்பவும். இத்துடன் பொட்டுக்கடலை, பூண்டு, இஞ்சி சேர்த்து அரைத்து வைக்கவும். 

கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை இலை பூ, கிராம்பு, ஏலக்காய் போட்டு அதில் வெங்காயம் தக்காளியைப் போட்டு வதக்கவும். கருவேப்பிலை சேர்த்து அரைத்த மசாலாவையும் போட்டுத் திறக்கவும். இத்துடன் காலிஃப்ளவரைச் சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். இன்னும் ஐந்து நிமிடங்கள் வெந்ததும் பொடியாக அரிந்த கொத்துமல்லி தூவி இறக்கவும். இது சாதம் தோசை, சப்பாத்தி இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். 
  

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

கத்திரிக்காய் கொத்துமல்லிப் பச்சடி

கத்திரிக்காய் கொத்துமல்லிப் பச்சடி.


தேவையானவை:- கத்திரிக்காய் - 4 , கொத்துமல்லி - அரைக்கட்டு, துவரம்பருப்பு + பாசிப்பருப்பு -  இரண்டு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு, பச்சைமிளகாய் - 3, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1 , தாளிக்க :- எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- பாசிப்பருப்பையும் துவரம்பருப்பையும் குக்கரில் போட்டு அரை கப் நீரூற்றி மஞ்சள்தூள், பெருங்காயத்துண்டு சேர்த்து இரண்டு விசில் வைக்கவும். தக்காளி, வெங்காயம், கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். கொத்துமல்லியையும் சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பருப்புடன் கத்திரிக்காய், வெங்காயம் , தக்காளியைப் போட்டு பச்சைமிளகாயையும் வகிர்ந்து போட்டு நன்கு வேகவிடவும். வெந்ததும் கொத்துமல்லியையும் உப்பையும் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி இறக்கவும். இது சாதம், தோசை, இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.   
  

வியாழன், 10 செப்டம்பர், 2020

முட்டை குருமா

முட்டை குருமா:-


தேவையானவை:- முட்டை - 4 , பெரிய வெங்காயம் - 1 , தக்காளி - 1, தேங்காய் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - 6, பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், சின்னவெங்காயம் - 1, பூண்டு - 2 பல், இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு, கசகசா - 1 டீஸ்பூன். தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை , கல்பாசிப்பூ - எல்லாம் சிறிது.

செய்முறை:- முட்டைகளை 7 நிமிடம் அவியவைத்துத் தோலுரித்து வைக்கவும். வெங்காயம் தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய், சோம்பு, சீரகம், பச்சைமிளகாய், மிளகு, பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, கசகசா, உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை, கல்பாசிப்பூ போட்டுத் தாளிக்கவும். இதில் வெங்காயம் தக்காளியை வதக்கி அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து 3 கப் நீர் ஊற்றிக் கொதிக்க விடவும். குருமா கொதி வரும்போது முட்டைகளை வகிர்ந்து போடவும். ஐந்து நிமிடம் கொதித்ததும் கொத்துமல்லித் தழை சேர்த்து இறக்கவும். இதை சப்பாத்தி, பூரி, பரோட்டா, சாதம் ஆகியவற்றோடு சாப்பிட நன்றாக இருக்கும். 

  

புதன், 9 செப்டம்பர், 2020

தேன் நெல்லிக்காய்.

தேன் நெல்லிக்காய்.


தேன் நெல்லிக்காய்களைக் கடையிலேயே வாங்கி உண்போம் அதை வீட்டில் எப்படிச் செய்யலாம் எனப் பார்ப்போம். 

தேவையானவை :- முழு நெல்லிக்காய்கள் - 5, வெல்லம் - ஒரு கைப்பிடி, தேன் - 1 டேபிள் ஸ்பூன். 

செய்முறை:- நெல்லிக்காயில் மேற்புறமெங்கும் ஊசியால் துளையிட்டு ஆவியில் நன்கு வேகவைக்கவும். நெல்லிக்காய்கள் ஆறியபின் தேனும் வெல்லமும் கலந்து குலுக்கி வைக்கவும். மூன்று நாட்கள் வெய்யிலில் வைத்து எடுத்து  பத்து நாட்கள் நன்கு ஊறியபின் உபயோகிக்கவும்.   

  

திங்கள், 7 செப்டம்பர், 2020

வெண்டைக்காய் துவரன்.

வெண்டைக்காய் துவரன்


தேவையானவை :- வெண்டைக்காய் - 250 கி, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- வெண்டைக்காய்களைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்கி வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து வெண்டைக்காயை வதக்கவும். வெண்டைக்காயின் கொழ கொழப்புப் போகும்வரை சிம்மில் வைத்து நன்கு வதக்கி உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். சிம்மில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். எல்லாம் சேர்ந்து சோரச் சுண்டியபின் இறக்கவும். இதுவே துவரன். தயிர்சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளத் தோதானது. 

  

புதன், 2 செப்டம்பர், 2020

காரட் துவட்டல்.

காரட் துவட்டல். 


தேவையானவை :- காரட் - 2, சின்ன வெங்காயம் - 5, பச்சைமிளகாய் - 1, கடுகு, உளுந்து -தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை:- காரட்டைத் தோல்சீவிக் கழுவித் துருவவும். சின்ன வெங்காயத்தையும் பொடிப் பொடியாக அரியவும். பச்சைமிளகாயை இரண்டாக வகிரவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்துப் பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும். பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு சிறிது வதங்கியதும் காரட் துருவலைச் சேர்க்கவும். நன்கு கலக்கி மூடிபோட்டு இரு நிமிடம் வெந்ததும் உப்புசேர்த்து நன்கு கலக்கவும். இன்னும் ஒரு நிமிடம் வெந்ததும் இறக்கவும். விரும்பினால் துருவிய தேங்காய் சிறிது சேர்க்கலாம். சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள நல்ல காம்பினேஷன். 


  

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

தயிர்வடை.

தயிர்வடை. தேவையானவை :- உளுந்தம்பருப்பு - 1கப், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், தயிர் - 2 கப் புளிப்பில்லாதது, உப்பு - அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1, காரட் துருவியது - 1 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை - 1டீஸ்பூன் , காராபூந்தி - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால் ) . எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. 

செய்முறை:- உளுந்தம் பருப்பையும் கடலைப்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வழுவழுப்பாக அரைத்து எடுக்கவும். எண்ணெயைக் காயவைத்து வடைகளாகப் பொரித்து எடுக்கவும். தயிரைக் கடைந்து லேசாக உப்பு சீனி சேர்த்து நன்கு கலக்கி வடைகளின் மேல் ஊற்றவும்.  துருவிய காரட் , கொத்துமல்லித்தழை தூவிப் பரிமாறவும். விரும்பினால் வடையின் மேல் கடுகு சீரகம் பெருங்காயத்தூள் தாளித்தும் கொட்டலாம். காராபூந்தி தூவியும் பரிமாறலாம். கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் தயிர்வடை ரெடி. 

  
Related Posts Plugin for WordPress, Blogger...