எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 ஜூன், 2021

3.தக்காளி பட்டாணி பிரியாணி

3.தக்காளி பட்டாணி பிரியாணி


தேவையானவை:- தக்காளி – 6, பச்சைப்பட்டாணி – 1கப், பொன்னி பச்சரிசி – 2 கப், பெரிய வெங்காயம் 2,  இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பற்கள், நெய் – 2 டீஸ்பூன், முந்திரி – 6, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பட்டை, கிராம்பு , ஏலக்காய் – தலா 2, 2 டீஸ்பூன் தேங்காய், அரை டீஸ்பூன் கசகசா, 4 முந்திரி – அரைக்கவும். பச்சை மிளகாய் – 2, வரமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன். உப்பு – ஒரு டீஸ்பூன். கொத்துமல்லி, புதினா தழைகள் சிறிது.

செய்முறை:- தக்காளிகளை வெந்நீரில் போட்டுத் தோலுரிக்கவும். பச்சரிசியைக் களைந்து பத்துநிமிடம் ஊறவைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக அரியவும். புதினா கொத்துமல்லியைப் பொடியாக அரிந்துவைக்கவும். இஞ்சி பூண்டைத் தனியாக அரைக்கவும். தேங்காய், கசகசா, முந்திரியைத் தனியாக அரைக்கவும். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து பெரிய வெங்காயத்தை வதக்கவும். நன்கு வதங்கியதும் இரண்டாக வகிர்ந்த பச்சைமிளகாய் & இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். இது ப்ரவுனாக மாறியதும் பச்சைப் பட்டாணி, உப்பு, மிளகாய்த்தூள் ,தக்காளிச் சாறைச் சேர்க்கவும். நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்ததும் முந்திரி தேங்காய் கசகசாக் கலவையைப் போட்டு நன்கு பிரட்டி அரிசியைச் சேர்க்கவும். நான்கு கப் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். பத்து நிமிடம் கழித்துத் திறந்து பொடியாக அரிந்த கொத்துமல்லிபுதினாத் தழைகளைப் போடவும். நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். சிப்ஸ், வெங்காயத்தயிர்ப்பச்சடி, சில்லி சிக்கனுடன் இது அருமையாக இருக்கும். 

 

2.கப்ஸா சிக்கன் பிரியாணி ( அரேபியன்)

2.கப்ஸா சிக்கன் பிரியாணி ( அரேபியன்)


தேவையானவை :-- சிக்கன் – அரைகிலோ ( பெரிய துண்டுகளாக நறுக்கவும்).பாசுமதி அரிசி – அரைகிலோ, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு – பொடியாக அரிந்தது 2 டீஸ்பூன், தக்காளி – 1 ( வெந்நீரில் போட்டுத் தோலுரித்து மசிக்கவும் ),  கேரட் – 1 பெரிதாக சீய்த்துக் கொள்ளவும். காய்ந்த முழு எலுமிச்சை – 1, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், சிக்கன் ஸ்டாக் – 4 கப்,சிக்கன் க்யூப் – 2, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, கிஸ்மிஸ் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன்.பொடிக்க:- வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன், மிளகு, சீரகம் – தலா ஒரு டேபிள் ஸ்பூன், கிராம்பு – 4, ஏலக்காய் – 4, பட்டை – ஒரு துண்டு.

செய்முறை:- பாசுமதி அரிசியைக் கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். எண்ணெயைக் காயவைத்துப் பாதிக் காரட்டையும், கிஸ்மிஸையும் வறுத்து எடுக்கவும். அதே எண்ணெயில் வெங்காயத்தை நீளமாக அரிந்து போட்டு வதக்கவும். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை லேசாக வறுத்துப் பொடிக்கவும். வெங்காயம் தண்ணீர்போல வதங்கியதும் இஞ்சிபூண்டைச் சேர்க்கவும். அவை நன்கு வதங்கி வாசம் வரும்போது தக்காளிச்சாறைச் சேர்க்கவும். அதை வதக்கி எண்ணெய் பிரியும்போது சிக்கனைச் சேர்க்கவும். நன்கு பிரட்டி சிக்கன் வெள்ளையாக ஆகும்போது மிச்ச கேரட்,  காய்ந்த எலுமிச்சை ( இதை ஊசியால் அங்கங்கே ஓட்டை போட வேண்டும். ) பொடித்த மசாலா போட்டு சிக்கன் க்யூபை சேர்த்து சிக்கன் ஸ்டாக்கைச் சேர்க்கவும். மூடி போட்டு 20 நிமிடம் சிம்மில் வேகவைக்கவும். வெந்ததும் சிக்கனை எடுத்து வைத்துவிட்டு அதை வேகவைத்த தண்ணீரில் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.அதன்பின் உப்பும், குங்குமப்பூவும் சேர்த்து அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி மேலே மூடியை டைட்டாக வைத்து நன்கு வேகவைத்து இறக்கவும். பொடித்த மசாலாவை கொஞ்சமாகத்தூவி சிக்கனை எண்ணெயில் 10 நிமிடம் நன்கு பிரட்டிவிட்டு வேகவிடவும். பரிமாறும் சமயம் வறுத்த கிஸ்மிஸையும் கேரட்டையும் தூவி சிக்கனை மேலாக வைத்துப் பரிமாறவும். இதற்கு தக்காளிச் சட்னி தொட்டுக்கொள்ளலாம். காய்ந்த எலுமிச்சை போடுவதுதான் இதற்கு ருசி கொடுக்கும். காய்ந்த முழு எலுமிச்சை இல்லாவிட்டால் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்  கொள்ளலாம்.

 

ஞாயிறு, 20 ஜூன், 2021

1.மந்தி மட்டன் பிரியாணி ( அராபியன்)

1.மந்தி மட்டன் பிரியாணி ( அராபியன்)


தேவையானவை :- மட்டன் – அரைகிலோ ( பெரிய துண்டுகளாக நறுக்கவும்), பாசுமதி அரிசி – அரைகிலோ, பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 4, தாளிக்க :- ஆலிவ் ஆயில் நான்கு டீஸ்பூன் + இரண்டு டீஸ்பூன். பிரிஞ்சி இலை – 1, பட்டை – 1 துண்டு, ஏலக்காய் – 4, கிராம்பு – 4, கருமிளகு – 10. உப்பு – 2 டீஸ்பூன்.மந்தி மசாலா செய்ய:- ஏலக்காய் - 4, கிராம்பு - 4, கருமிளகு – 2 டீஸ்பூன், ஜாதிக்காய் - பாதி, சுக்குப் பொடி – 1 டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1 இவற்றை வறுத்துப் பொடிக்கவும்.

பெரிய கடாயில் நீளமாக அரிந்த பெரிய வெங்காயத்தை எண்ணெயில் போட்டுக் கண்ணாடிபோல் மினுங்கும் வரை வதக்கவும். இதில் இரு ஸ்பூன்கள் இஞ்சி பூண்டு பேஸ்டைச் சேர்க்கவும். பச்சை வாடை போகும்வரை வதக்கி பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, கருமிளகு எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். தக்காளியையும் பச்சைமிளகாயையும் மிக்ஸியில் அடித்துக் கூழாக்கிச் சேர்க்கவும். நன்கு வதக்கி எண்ணெய் பிரியும்போது மட்டனைச் சேர்க்கவும். 4 கப் நீர் ஊற்றி தேவையான அளவு மந்தி மசாலாவைச் சேர்க்கவும். 15 நிமிடங்கள் மூடி போட்டு வேகவைத்து இறக்கவும்.இன்னொரு பௌலில் வெண்ணெய், மந்தி மசாலா, உப்பு, மூன்றையும் கலந்து வைக்கவும். ஓவனை 200 டிகிரி வெப்பத்தில் வைக்கவும். வெந்த மட்டனை மட்டும் எடுத்து இந்த மசாலாவில் நன்கு புரட்டி பேக்கிங் ட்ரேயில் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.பாசுமதி அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஆலிவ் ஆயிலை சுடவைத்து அரிசியை மட்டும் வடித்துப் போட்டு மிதமான சூட்டில் 10, 15 நிமிடங்கள் வறுக்கவும். இந்த அரிசியை உப்பு சேர்த்து மட்டன் வேகவைத்த நீரில் போட்டு அலுமினியம் ஃபாயில் பேப்பரால் மூடி மூடியும் போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் நன்கு வேகவிடவும். வெந்தவுடன் இறக்கி அதன் நடுவில் ஒரு சிறிய கப்பில் நெய் ஊற்றி வைக்கவும். ஒரு கரித்துண்டை கேஸ் அடுப்பில் நன்கு பற்றவைத்து கங்கு போலானதும் நெய்யில் போட்டுத் திரும்ப அலுமினியம் ஃபாயில் பேப்பராலும் மூடியாலும் மூடவும். பரிமாறும் சமயம் திறந்து பெரிய தட்டில் பரிமாறி நடுவில் பேக் செய்த மட்டனை வைக்கவும். பச்சை மாங்காய் ரெய்தா, வெங்காய ஊறுகாய் இதற்குத் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

 

வியாழன், 17 ஜூன், 2021

30 வகை பிரியாணி ரெஸிபீஸ், குமுதம் சிநேகிதியில்.

30 வகை பிரியாணி !




1.மந்தி மட்டன் பிரியாணி ( அராபியன்)

2.கப்ஸா சிக்கன் பிரியாணி ( அரேபியன்)

3.தக்காளி பட்டாணி பிரியாணி

4.தினை காளான் பிரியாணி

5.முயல் பிரியாணி

6.புதினா மல்லி பிரியாணி

7.முந்திரி பிரியாணி

8.பீட்ரூட் பிரியாணி

9.காடை/புறா பிரியாணி

10.நாட்டுக்கோழி பிரியாணி

11.சார்மினார் பிரியாணி

12.பெங்களூரு தொன்னை பிரியாணி

13.பலாக்காய் பிரியாணி

14.வான்கோழி பிரியாணி

15. இறால் பிரியாணி

16.மும்பை வெஜ் பிரியாணி

17. வாத்து பிரியாணி

18. மலபார் மீன் பிரியாணி

19.காவோ மோக் காய் (தாய் பிரியாணி)

20.நாசி பிரியாணி ( மலேஷியா)

21.முட்டை பிரியாணி

22.ப்ராக்கோலி பிரியாணி

23.மீல் மேக்கர்/சோயா சங்க்ஸ் பிரியாணி

24.பட்டர்பீன்ஸ் பேபிகார்ன் பிரியாணி

25.தெஹ்ரி(உருளை) பிரியாணி

26.தலச்சேரி பிரியாணி

27.சிந்தி மட்டன் பிரியாணி

28.ஹைதராபாதி கச்சி யெக்னி பீஃப் ( மாட்டிறைச்சி) பிரியாணி

29.பைனாப்பிள் பேரிச்சை ப்ரெட் பிரியாணி

30.தநாக் (ரெயின்போ) கீமா பிரியாணி


புதன், 16 ஜூன், 2021

காய்கறிப் புலவு.

காய்கறிப் புலவு/வெஜ் புலவ்.


தேவையானவை :- பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி அல்லது சீரகச்சம்பா அரிசி - 1 கப், காய்கறிக்கலவை - காரட், பீன்ஸ் , பட்டாணி, காலிஃப்ளவர், உருளை - 1 கப் சின்னமாக நறுக்கியது. பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சைமிளகாய் - 2, புதினா, கொத்துமல்லி - தலா ஒரு கைப்பிடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பட்டை கிராம்பு ஏலக்காய் - தலா 2 துண்டு, பிரிஞ்சி இலை, கல்பாசிப்பூ, மராட்டி மொக்கு - 1, சோம்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன். 

செய்முறை:- அரிசியைக் களைந்து 20 நிமிடம் நீரில் ஊறவைக்கவும். அடி கனமான ஒரு பானில் எண்ணெயை ஊற்றி நீளமாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு அதிலேயே பட்டை கிராம்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை, கல்பாசிப்பூ, மராட்டி மொக்கு, சோம்பு போட்டு வதக்கவும். தண்ணீர்போல் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். இத்துடன் காய்கறிக் கலவை, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், புதினா கொத்துமல்லி போட்டு நன்கு கிளறி உப்பு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். எல்லாம் கொதித்து வரும்போது  ஊறவைத்த அரிசியைச் சேர்க்கவும். அரிசி சேர்த்துக் கொதித்ததும் தீயை அடக்கி வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் குறைந்த தணலில் வேகவைத்து இறக்கவும். தயிர்ப்பச்சடி, சிப்ஸுடன் பரிமாறவும். 
 

செவ்வாய், 15 ஜூன், 2021

கருவேப்பிலைப் பொடி & கருவேப்பிலை சாதம்.

கருவேப்பிலைப் பொடி & கருவேப்பிலை சாதம். 



தேவையானவை :- கருவேப்பிலை - ஒரு கப் , உளுந்தம் பருப்பு - அரை கப், வரமிளகாய் - 8, உப்பு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு. எண்ணெய் - 2 டீஸ்பூன். சாதம் - 1 கப். 

செய்முறை:- தலா கால் டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உப்பைத் தவிர ஒவ்வொன்றாக வறுத்து எடுக்கவும். உப்பை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். ஆறியதும் பொடி செய்யவும்.  இதை அப்படியே தோசை, இட்லி போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம். 

சாதம் செய்ய :- சாதத்தை ஒரு பௌலில் போட்டு பொடியைத் தூவவும். மேலே ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றி நன்கு கிளறி வைத்து சிறிது நேரம் கழித்து பூந்தி தயிர்ப்பச்சடி, சிப்ஸ், வற்றல்களுடன் பரிமாறவும். 

 
Related Posts Plugin for WordPress, Blogger...