எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 19 அக்டோபர், 2021

5 ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட்

5 ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட்

 


தேவையானவை :- பைனாப்பிள் – 1 துண்டு, ஆப்பிள்பாதி, மஞ்சள் கிர்ணிப்பழம் – 1 துண்டு, பப்பாளி – 1 துண்டு, ஸ்ட்ராபெர்ரி – 6 , செர்ரி – 6 , டூட்டி ஃப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன், பால் – 2 கப், எம் டி ஆர் பாதாம் மிக்ஸ் – 1 டேபிள் ஸ்பூன், கல்கண்டு – 1 டேபிள் ஸ்பூன், குல்கந்து – 1 டேபிள் ஸ்பூன், குல்கந்து இல்லாவிட்டால் ரோஜாப்பூ – 1 + தேன் 1 டேபிள் ஸ்பூன், செம்பருத்தி – 1 பூ, குங்குமப்பூ – 1 சிட்டிகை.

 


செய்முறை:-

 

பைனாப்பிள், ஆப்பிள், மஞ்சள் கிர்ணி, பப்பாளி ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டி ஒரு பேசினில் போடவும். பாலில் குங்குமப்பூவையும் கல்கண்டையும் போட்டு சுண்டக் காய்ச்சவும். ஒரு டம்ளர் அளவு சுண்டியவுடன் இறக்கி வைத்து எம்டிஆர் பாதம் மிக்ஸ் கலந்து ஆறவிடவும். ஆறு அகல கப்புகளில் பழக் கலவையை வைக்கவும். ஒரு கரண்டி பாதாம் கலவையை ஊற்றவும். அதன் மேல் நான்காக வெட்டிய ஸ்ட்ராபெர்ரி வைத்து நடுவில் செர்ரியை வைத்து சுற்றிலும் டூட்டி ஃப்ரூட்டியால் அலங்கரிக்கவும். குல்கந்து என்றால் அப்படியே சேர்க்கவும். ரோஜாப்பூ என்றால் இதழ்களை உதிர்த்து எல்லாவற்றிலும் தூவி இத்துடன் பொடியாக அரிந்த செம்பருத்தி இதழ்களையும் தூவி ஒரு டீஸ்பூன் தேன் ஊற்றி பரிமாறவும்.

 

சனி, 16 அக்டோபர், 2021

4.செம்பருத்தி டீ

4.செம்பருத்தி டீ


 

தேவையானவை:- செம்பருத்திப் பூ – 4, துளசி இலைகள் – 6, அதிமதுரப் பொடி – கால் டீஸ்பூன், சுக்குப் பொடி – கால் டீஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன்.

 

செய்முறை:- ஒன்றேகால் கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் செம்பருத்திப் பூ, துளசி இலைகள், அதிமதுரப் பொடி, சுக்குப் பொடி, ஏலப்பொடி சேர்க்கவும். சில நிமிடங்கள் கொதித்து ஒரு கப் அளவு வந்ததும் இறக்கி மூடி வைக்கவும். சிறிது சூடு குறைந்ததும் வடிகட்டித் தேன் கலந்து பருகவும். 

 

 

செவ்வாய், 12 அக்டோபர், 2021

3.ஆவாரம்பூ மசியல்

3.ஆவாரம்பூ மசியல்

 


தேவையானவை:- உலர்ந்த ஆவாரம்பூ – இரு கைப்பிடி, கடலைப்பருப்பு + பாசிப்பருப்பு – இரு கைப்பிடி, சின்ன வெங்காயம் – 6, சாம்பார்பொடி – அரை டீஸ்பூன், பூண்டு – 1 பல், பச்சை மிளகாய் – 1, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் – 1 டீஸ்பூன், உளுந்து, சீரகம் – தலா அரை டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை.

 


செய்முறை:- கடலைப்பருப்பையும், பாசிப்பருப்பையும் கழுவி முக்கால் கப் நீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும். இதை ஊறவைத்த தண்ணீரோடு ப்ரஷர் பானில் போட்டுப் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம், தட்டிய பூண்டு, பச்சைமிளகாய் போட்டு சீரகத்தையும் சாம்பார் பொடியையும் போடவும். இதில் உலர்ந்த ஆவாரம்பூவையும் போட்டு நன்கு கலக்கி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து இறக்கவும். ஆறியதும் திறந்து உப்புச் சேர்த்து மசித்து எண்ணெயில் உளுந்து, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயப்பொடி தாளித்துக் கொட்டவும்.   

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

2.ஆவாரம்பூ கஷாயம்

2.ஆவாரம்பூ கஷாயம்

 


தேவையானவை:- ஆவாரம்பூ – உலர்ந்தது ஒரு கோப்பை, வல்லாரை இலை – உலர்ந்தது ஒரு கைப்பிடி, சோம்பு – ஒரு டீஸ்பூன், சுக்கு – உலர்ந்தது 5 கி, ஏலக்காய் – 10, பனங்கற்கண்டு – 1 டேபிள் ஸ்பூன்.

 

செய்முறை:- ஆவாரம்பூ, வல்லாரை, சோம்பு, சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடித்துக் கொள்ளவும். தேவைப்படும்போது இந்தப் பொடியில் இரண்டு டீஸ்பூன் எடுத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் காய்ச்சவும். அது ஒரு கப் அளவு வற்றியதும் பனங்கல்கண்டு போட்டு இன்னும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அருந்தவும்.

  

புதன், 6 அக்டோபர், 2021

1.தென்னம்பாளைப் பொடிமாஸ்

1.தென்னம்பாளைப் பொடிமாஸ்

 


தேவையானவை :- தென்னம்பாளை – 1/4 பாகம் , காராமணிஅரை கப், கடலைப்பருப்புஅரை கப், வரமிளகாய் – 10, சோம்பு – 1 டீஸ்பூன், சீரகம்அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன் , பெரிய வெங்காயம்2, உப்புஒரு டீஸ்பூன்,   தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் , கடுகு ,உளுந்துதலா 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.


 

செய்முறை :- தென்னம்பாளையை சுத்தம் செய்து உதிர்த்துக் கொள்ளவும். காராமணி, கடலைப்பருப்பைத் தனித்தனியாகக் களைந்து ஊறவைக்கவும். வரமிளகாய் சோம்பு சீரகத்தை உப்பு சேர்த்து அரைக்கவும். தென்னம்பாளையை லேசாக அரைத்து தண்ணீரில் கரைத்துப் பிழிந்து வைத்துக் கொள்ளவும். ,இத்துடன் காராமணி கடலைப்பருப்பை அரைத்து இட்லிப் பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து உதிர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் கருவேப்பிலையை வதக்கவும். அரைத்த மிளகாய் சோம்பு மசாலா போட்டு பச்சை வாசனைபோனதும் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து உதிர்த்த தென்னம்பாளைப் பொடிமாஸைப் போட்டு வதக்கவும். நன்கு வதக்கி உப்பு சேர்த்து தேங்காய்த் துருவல் போட்டுக் கலந்து இறக்கவும்.

 

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

குமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல்

 குமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல்


26.8.2021 குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ”நோய் தீர்க்கும் மலர் சமையல்” என்னும் தலைப்பில் எனது 19 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன. 

Related Posts Plugin for WordPress, Blogger...