எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

புதன், 12 ஜனவரி, 2022

கொள்ளுப் பொரியல்.

கொள்ளுப் பொரியல். 


தேவையானவை :- கொள்ளு - அரை கப், சின்ன வெங்காயம் -2, பூண்டு - 1 பல், வரமிளகாய் 1, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு -கால் டீஸ்பூன்

செய்முறை:- வெறும் வாணலியில் கொள்ளை வாசம் வரும்வரை வறுத்து நீரில் ஊறப்போடவும். அரைமணி நேரம் கழித்து அதைக் களைந்து குக்கரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். நீரை வடித்து வைக்கவும். 

வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டை உப்போடு அரைத்து வைக்கவும். ஒரு பானில்  எண்ணெய்யைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் அரைத்த மசாலாவையும் கொள்ளையும் போட்டு உடனே அடுப்பை அணைக்கவும். அதிகம் வேகவைக்கக் கூடாது. வெங்காயம் பூண்டின் பச்சை வாசனையோடு உண்பது சுவையாய் இருக்கும். 

எனவே அடுப்பில் இருந்து இறக்கி நன்கு கிளறி உண்ணக் கொடுக்கவும். இது உடல் எடையைக் குறைக்கும், ஊளைச் சதையையும் குறைக்கும். பூண்டு சேர்ப்பதால் வாய்வு பிடிக்காது. 

 

சாத்துக்குடி எலுமிச்சை ஜூஸ்

சாத்துக்குடி எலுமிச்சை ஜூஸ்


தேவையானவை:- சாத்துக்குடி 3, எலுமிச்சை - அரை மூடி, சீனி - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - இரண்டுகப்

செய்முறை:- சாத்துக்குடியை இரண்டாக நறுக்கி ஜூஸ் எடுத்து அதில் எலுமிச்சைச் சாறையும் சீனியையும் கலந்து தண்ணீர் விட்டு நன்கு கரைந்ததும் குளிர்வித்துக் குடிக்கலாம். இதில் இரண்டு புதினா இலைகளைப் போட்டு வைத்தால் வாசனையாக இருக்கும். 

 

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

பாசிப்பருப்புப் பணியாரம்

பாசிப்பருப்புப் பணியாரம்


பொதுவாக இதைக் கருப்பட்டிப் பணியார மாவில் ( பிள்ளையார் நோன்புக்கு இழை எடுத்தது போக மிச்சத்தைக் கருப்பட்டிப் பணியாரமாக ஊற்றுவோம். அன்றைக்கு ஒரு பகுதி கருப்பட்டிப் பணியார மாவை மிச்சம் வைத்து அதன் பின் வரும் வைகுண்ட ஏகாதசிக்கு இம்மாவில் பாசிப்பருப்பை வேகவைத்துப் போட்டுக் கலந்து பாசிப்பருப்புப் பணியாரமாக ஊற்றுவோம். ) 

தேவையானவை:- பச்சரிசி -2 கப், வெல்லம் + கருப்பட்டி - 200 கி, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. பாசிப்பருப்பு - கால் கப் 

செய்முறை:- பச்சரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம்  ஊறவைத்து வடிகட்டி நிழலில் போடவும். பத்து நிமிடம் கழித்து மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். ஒரு கட்டி வெல்லத்தோடு கருப்பட்டியையு நைத்துப் போட்டு அரைக் கப் தண்ணீர் ஊற்றிக் கரைய விடவும். வெல்லமும் கருப்பட்டியும் கரைந்ததும் மாவில் வடிகட்டி ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி நன்கு பிசைந்து உருட்டி வைக்கவும். 

மறுநாள் எண்ணெயைக் காயவைத்து மாவைக் கரைத்துப் பணியாரங்களாக ஊற்றி நிவேதிக்கவும். எண்ணையோடு சிறிது நெய்யையும் சேர்த்துக் காய்ச்சி ஊற்றலாம். மிகவும் ருசியாக  இருக்கும். இது பிள்ளையார் நோன்பு ஸ்பெஷல் பணியாரம். இரத்த விருத்தி தரும். இரும்புச் சத்து உள்ளது. 

இந்த மாவில் பாசிப்பருப்பை வேகவைத்து மசித்துக் கலந்து பணியாரங்களாக ஊற்றி எடுத்தால் அது பாசிப்பருப்புப் பணியாரம். 
 

புதன், 5 ஜனவரி, 2022

புட்டுக் கொழுக்கட்டை

புட்டுக் கொழுக்கட்டை


தேவையானவை:- பச்சரிசி  மாவு - 1 கப், தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், சீனி - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன். 

செய்முறை:-  பச்சரிசி மாவை லேசாக வறுத்து உப்புத்தூவி தண்ணீர் தெளித்துப் பிசறவும். அது பிடித்தால் கொழுக்கட்டையாகப் பிடிக்கும்படியும் உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இதுவே பக்குவம். இதை இட்லிச் சட்டியில் துணி போட்டு ஆவியில் வேகவைத்து எடுத்து சூட்டோடு சீனி தேங்காய், நெய் கலந்து கொழுக்கட்டையாகப் பிடிக்கவும். 
 

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

பிடிகருணை மசியல்

பிடிகருணை மசியல் :-


தேவையானவை :-
கருணைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – 4, புளி - 1 நெல்லி அளவு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை :-

கருணைக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் வேகப்போட்டு தோலுரித்து மசித்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு  போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்,  கருவேப்பிலை போட்டு பச்சை மிளகாய்களை நான்காக கீறிப்போடவும். லேசாக வதங்கியதும் பெரியவெங்காயத்தை தண்ணீர் போல வதக்கவும். இதில் உப்பு , மஞ்சள் பொடி போட்டு மசித்த கருணையைப் போடவும். உப்பு புளியை அரை கப் நீரில் நன்கு கரைத்து ஊற்றவும். அடிக்கடிக் கிளறிவிட்டு நன்கு  சுருண்டு வரும்போது  இறக்கவும். தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள சிறப்பாக இருக்கும் 

Related Posts Plugin for WordPress, Blogger...