ஸ்டஃப்டு சோளக் கொழுக்கட்டை ( டாமலீஸ் )
தேவையானவை :- சோளக்கருது மடலுடன் – 2, பச்சரிசி மாவு – அரை கப், சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன், வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், சீஸ் – 1 டேபிள் ஸ்பூன், பால் – அரை கப், கொத்துமல்லித்தழை – 2 டீஸ்பூன் பொடியாக அரிந்தது, குக்னி – 1 ( வெள்ளரிக்காயில் ஒரு வகை), குட்டி தக்காளி – 1, பச்சை மிளகாய் – 1, உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:- சோளக்கருதை மடல் உரித்து அந்த மடல்களை கொதிக்கும் வெந்நீரில் ஒரு நிமிடம் மூழ்க வைத்துச் சுத்தமாகத் துடைத்து வைத்துக்கொள்ளவும். சோளமுத்துகளை உதிர்த்துப் பால் சேர்த்து மையாக அரைக்கவும். வெறும் கடாயை அடுப்பில் வைத்து அரைத்த சோளத்தை ஊற்றிக் கிளறவும். இறுகிவரும்போது சோளமாவும் அரிசி மாவும் சேர்த்து உப்பு கொத்துமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்கவும். இன்னொரு பானில் பாதி வெண்ணெயை உருகவைத்து வெங்காயத்தை மென்மையாக வதக்கவும். இதில் துருவிய சீஸை சேர்த்து கிளறி இறக்கி மாவில் போட்டு நன்கு பிசையவும். மிச்ச அரைடீஸ்பூன் வெண்ணெயை உருகவைத்து அதில் பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கட்டமாக நறுக்கிய தக்காளி, குக்னி போட்டு வதக்கி இறக்கவும். சோளமடல்களைத் துடைத்து மாவுக் கலவையை ஒரு ஸ்பூன் வைத்து அதன் நடுவில் குக்னி தக்காளி பச்சைமிளகாய் ஸ்டஃபிங்கை வைத்து மூடி மடலையும் எல்லாப் பக்கங்களிலும் செவ்வகப் பொட்டலம்போல் மூடி நூலால் கட்டி இட்லி பாத்திரத்தில் 30 நிமிடம் ஆவியில் வேகவைத்துத் தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக