எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

நவராத்திரி ரெசிப்பீஸ். NAVRATHRI RECIPES.

1.காராமணி இனிப்பு சுண்டல்
2.சோளே சுண்டல்
3.ஸ்வீட் கார்ன் சாட்
4.முளைவிட்ட பயறு டாகோஸ்
5.பச்சை வேர்க்கடலை சுண்டல்
6.பச்சை பட்டாணி தேங்காய் மாங்காய் சுண்டல்.
7.ப்ரவுன் மொச்சை சுண்டல்
8.கொள்ளு சுண்டல்
9.நவதானிய மிக்ஸர்.
10.நவதானியப் பாயாசம்
11.எலுமிச்சை சாதம்.
12.பச்சை அவரை சுண்டல்.
13.எள்ளு சாதம்
14.சோயா சுண்டல்.
15.பகாளாபாத்
16.மொச்சை சுண்டல்
17.சர்க்கரை சாதம்
18.கோதுமை சுண்டல்
19.பால் சாதம்
20.பாசிப்பருப்பு சுண்டல்
21.கல்கண்டு சாதம்
22.ராஜ்மா சுண்டல்
23.வெண்பொங்கல்
24.கடலைப்பருப்பு சுண்டல்
25.தேங்காய் சாதம்
26.கொண்டைக்கடலை சுண்டல்
27.வெல்லப்புட்டு
28.பட்டர்பீன்ஸ் சுண்டல்.
29.சோள வடை
30.ஃப்ரூட் வெர்மிசெல்லி கீர்.

1.காராமணி இனிப்பு சுண்டல்

தேவையானவை:- காராமணி – 1 கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- காராமணியைக் களைந்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்தை சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டவும். குக்கரில் காராமணியைப் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் குழையாமல் வேகவிடவும். ஒரு பானில் நெய்யைக் காயவைத்துக் காராமணி வெல்லப்பாகு, தேங்காய், ஏலப்பொடி போட்டுக் கிளறி கெட்டியானதும் இறக்கி நிவேதிக்கவும்.

2.சோளே சுண்டல் :-

தேவையானவை:- பச்சைக் கொண்டைக்கடலை – 1 கப், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, சீரகம் – 1 தேக்கரண்டி, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, உப்பு- அரை டீஸ்பூன்.எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு- அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன். 

செய்முறை:- பச்சைக் கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு கால் தண்ணீர் தெளித்து ஒரு விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். மிக்ஸியில் வரமிளகாய், பச்சை மிளகாய், சீரகம் தேங்காய்த்துருவல்,உப்புப் போட்டு சுற்றவும். கொத்துமல்லித்தழையைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்து அரைத்த கலவையைப் போட்டுக்கிளறி வேகவைத்த சோளேயைச் சேர்க்கவும். கொத்துமல்லி தூவி இறக்கி நிவேதிக்கவும்.

3.ஸ்வீட் கார்ன் சாட்:-

தேவையானவை:- ஸ்வீட் கார்ன் முத்துக்கள் – ஒரு கப், வெள்ளரி – சின்னம் 1, ஆப்பிள் தக்காளி- சின்னம் 1, ஓமப்பொடி – ஒரு கைப்பிடி, மாதுளை முத்து – ஒரு கைப்பிடி, கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி. எலுமிச்சை சாறு – சில துளிகள், சாட் மசாலா- அரை டீஸ்பூன்.

செய்முறை:- ஸ்வீட் கார்ன் முத்துக்களை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வெள்ளரி, தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கொத்துமல்லித்தழையையும் பொடியாக அரியவும். ஒரு பௌலில் ஸ்வீட் கார்ன் முத்துக்களைப் போட்டு அதன் மேல் வெள்ளரி, தக்காளித் துண்டுகளைத் தூவி மாதுளை, கொத்துமல்லித் தழையையும் போடவும். அதன் மேல் ஓமப்பொடி தூவி எலுமிச்சை சாறு தெளித்து சாட் மசாலா தூவிக் கொடுக்கவும். சாட் மசாலாவில் உப்பு இருக்கும் என்பதால் தனியாக உப்பு தூவ தேவையில்லை.

4.முளைவிட்ட பயறு டாகோஸ்:-

தேவையானவை:- மைதா – 1கப், கார்ன் ஃப்ளோர் – 1கப், எண்ணெய்- பொறிக்கத் தேவையான அளவு, உப்பு – அரை டீஸ்பூன், ஃபில்லிங் செய்ய :- முளைவிட்ட பாசிப்பயறு – 1 கப், தக்காளி – 2, வயலட் முட்டைக்கோஸ் – 4 இதழ்கள், வெங்காயத்தாள் – அரைக்கட்டு, குடைமிளகாய்- 1, கொத்துமல்லித்தழை- ஒரு கைப்பிடி, மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் – கால்டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன். எண்ணெய்- 2 டீஸ்பூன்.. தக்காளி கெச்சப் – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- மைதா, கார்ன் ஃப்ளோரை உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து பூரிகளாக சுட்டெடுத்து நடுவில் போட் போல மடக்கி வைக்கவும். முளைவிட்ட பாசிப்பயறை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஒரு தக்காளி, குடைமிளகாய், வெங்காயத்தாளைப் பொடியாக அரிந்து எண்ணெயில் வதக்கி உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வேகவைத்த பயறையும் போட்டு நன்கு கலந்து இறக்கவும். ஒரு தக்காளியையும் வயலட் முட்டைக்கோஸையும் நீளமாக நறுக்கவும். கொத்துமல்லித்தழையைப் பொடியாக அரியவும். டாகோஸில் முதலில் சிறிது தக்காளி முட்டைக்கோஸைத் தூவி பயறு மசாலாவை வைத்து அதன் மேல் சிறிது தக்காளி முட்டைக்கோஸ், கொத்துமல்லித்தழை தூவி கெச்சப்பை சிறிது ஸ்ப்ரே செய்து மடக்கிக் கொடுக்கவும்.

5.பச்சை வேர்க்கடலை சுண்டல்:-

தேவையானவை:- பச்சை வேர்க்கடலை – 2 கப், தேங்காய்த்துருவல்- 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய்- 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய்- 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா ஒரு டீஸ்பூன். பெருங்காயப் பொடி – ஒரு சிட்டிகை.

செய்முறை:- பச்சை வேர்க்கடலையை உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்துக் குக்கரில் ஒரு விசில் வேகவைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து பெருங்காயப்பொடி சேர்த்து வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு கருவேப்பிலை சேர்க்கவும். தேங்காயையும் போட்டு வெந்த வேர்க்கடலையைப் போட்டுப் புரட்டி எடுத்து நிவேதிக்கவும்.

6.பச்சை பட்டாணி தேங்காய் மாங்காய் சுண்டல்.

தேவையானவை:- பச்சைப் பட்டாணி – 2 கப், தேங்காய் கீற்று – நைஸாக அரிந்தது ஒரு கைப்பிடி, மாங்காய் கீற்று- நைஸாக அரிந்தது ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 1 பொடியாக அரிந்தது, கருவேப்பிலை கொத்துமல்லித்தழை – சிறிது, தாளிக்க எண்ணெய் கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து பச்சை மிளகாய் போட்டு பச்சைப் பட்டாணியை வதக்கி சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி பொடியாக அரிந்த கருவேப்பிலை கொத்துமல்லி மாங்காய் தேங்காய்க் கீற்றுகளைப் போட்டுக் கலந்து நிவேதிக்கவும். 


7.ப்ரவுன் மொச்சை சுண்டல்:-

தேவையானவை:- ப்ரவுன் மொச்சை – 1 கப், எண்ணெய்- 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா ஒரு டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், வரமிளகாய்- 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, தேங்காய்த்துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன். பெருங்காயப்பொடி – சிறிது

செய்முறை:- ப்ரவுன் மொச்சையை 12 மணி நேரம் ஊறப்போடவும். நீரைக் கழுவி புதிதாய் அரை கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து பெருங்காயப் பொடி போட்டு வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு கருவேப்பிலை சேர்க்கவும். கருவேப்பிலை பொறிந்ததும் வெந்த மொச்சையைப் போட்டு உப்பு சேர்த்து தேங்காய்த்துருவல் கலந்து இறக்கவும்.

8.கொள்ளு சுண்டல் :-

தேவையானவை:- கொள்ளு – 1 கப், வரமிளகாய்- 1, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் கடுகு உளுந்து தலா அரை டீஸ்பூன். பெருங்காயப் பொடி – சிறிது.

செய்முறை:- கொள்ளை வறுத்து நீர் சேர்த்துக் களைந்து கல் அரித்து சிறிது நேரம் ஊறவிடவும். அதன் பின் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வரும்வரை வேகப்போடவும். வரமிளகாயையும் தேங்காய்த்துருவலையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து பெருங்காயப்பொடி தாளித்து தேங்காய்ப் பொடியைப் போட்டுக் கொள்ளைச் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.

9.நவதானிய மிக்ஸர்.

தேவையானவை:- முந்திரி, பாதாம் – தலா ஒரு கைப்பிடி, பிஸ்தா ஓட்டுடன் – 1 கைப்பிடி, பரங்கி விதை – ஓட்டுடன் ஒரு கைப்பிடி, வறுத்த உப்புக் கொண்டக்கடலை – ஒரு கைப்பிடி, ஊறவைத்து வறுத்த பச்சைப் பட்டாணி -1 கைப்பிடி, ஊறவைத்து வறுத்த காராமணி – 1 கைப்பிடி, ஊறவைத்து வறுத்த பச்சைப் பயறு -1 கைப்பிடி, வறுத்த வேர்க்கடலை -1 கைப்பிடி, உப்பு –அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி. நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:- முந்திரி பாதாமை நெய்யில் வறுத்து ஒரு பௌலில் போடவும். பிஸ்தாவையும் பரங்கி விதையையும் வெறும் வாணலியில் உப்புத் தண்ணீர் தெளித்து வறுத்து எடுத்து அதில் போடவும். உப்புக் கொண்டைக்கடலையைத் தோல் நீக்கிச் சேர்க்கவும். வறுத்த காராமணி, பச்சைப்பயிறு, பட்டாணி, வேர்க்கடலை சேர்த்துக் கலந்து  வைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கருவேப்பிலையைப் பொறித்து அதில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து இந்த மிக்ஸரைக் கொட்டி அடுப்பை அணைத்து நன்கு கிளறி நிவேதிக்கவும்.

10.நவதானியப் பாயாசம்

தேவையானவை :- தினை, சாமை, வரகு, ராகி, கம்பு, பார்லி, தட்டைப் பயிறு, சோளம், சிவப்புக் கைக்குத்தல் அரிசி. – தலா கால் கப். பால் – ஒன்றரை லிட்டர், சர்க்கரை – முக்கால் கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி -1 சிட்டிகை, நெய்- 2 டீஸ்பூன்.

செய்முறை:- தினை சாமை வரகு ராகி கம்பு பார்லி தட்டைப்பயிறு, சோளம், சிவப்புக்கைக்குத்தல் அரிசி ஆகியவற்றைச் சுத்தம் செய்து வெறும் வாணலியில் லேசாக வாசம் வருவரை வறுத்து மிஷினில் நன்கு நைஸாக அரைத்து வைக்கவும். இதில் ஒரு கப் மாவு எடுத்து இரண்டு டம்ளர் பாலில் கரைத்து இன்னொரு டம்ளர் பால் ஊற்றி வேக விடவும். நன்கு வெந்து மாவு ஒட்டாத பதம் வந்ததும் சர்க்கரை சேர்த்து மிச்ச பாலை ஊற்றி நன்கு கொதித்ததும் நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போடவும். ஏலப்பொடி தூவி நிவேதிக்கவும்.


11.எலுமிச்சை சாதம்.

தேவையானவை:- பச்சரிசி சாதம் – 2 கப், எலுமிச்சை – 2 சாறு பிழியவும். மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு –அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், வேர்க்கடலை – 3 டீஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. வெந்தயம் – கால் டீஸ்பூன். எண்ணெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை:- எலுமிச்சையை சாறு பிழிந்து வடிகட்டி உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து வைக்கவும். வரமிளகாயை வெந்தயத்தோடு வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து கடலைப்பருப்பு, வேர்க்கடலை போட்டுத் தாளித்து பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும். பொறிந்ததும் எலுமிச்சைச் சாறை ஊற்றி வறுத்துப் பொடித்த பொடியைப் போட்டு அடுப்பை அணைக்கவும். சாதத்தை உதிர் உதிராக உதிர்த்துப் போட்டு நன்கு கலக்கி நிவேதிக்கவும்.

12.பச்சை அவரை சுண்டல்.

தேவையானவை:- பச்சை அவரை -2 கப், தக்காளி – 2, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு , உளுந்து தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- பச்சை அவரையை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ( முற்றிய அவரையில் இருக்கும் பருப்பை உரித்து எடுத்துக் கொள்ளவும். ) தக்காளியில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். ஒரு பானில் எண்ணெயை ஊற்றிக் கடுகு உளுந்து தாளிக்கவும். அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எண்ணெய் பிரியும்போது வேகவைத்த அவரையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். நிவேதிக்கவும்.  

13.எள்ளு சாதம்:-

தேவையானவை:- பச்சரிசி சாதம் – 2 கப், கறுப்பு எள் – 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 4, உளுந்தம் பருப்பு- 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய்- 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா 1 டீஸ்பூன்.

செய்முறை:- கறுப்பு எள்ளை எண்ணெய் விடாமல் வறுக்கவும். வரமிளகாயையும் உளுந்தம் பருப்பையும் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து உப்புடன் எள்ளையும் சேர்த்துப் பொடிக்கவும். ஒரு பானில் எண்ணெய் விட்டுக் கடுகு , உளுந்து கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளித்து இறக்கி சாதத்தை உதிர்த்துப் போட்டு அதில் எள்ளுப் பொடியைப் போட்டுக் கிளறவும். நெய்யை உருக்கி ஊற்றிக் கிளறி நிவேதிக்கவும்.

14.சோயா பீன்ஸ் சுண்டல்.

தேவையானவை:- சோயா பீன்ஸ் – 2 கப், காரட், குடைமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன் துருவியது, தாளிக்க – கடுகு, உளுந்து தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய்- 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- சோயாபீன்ஸை முதல் நாளே ஊறவைக்கவும். மறுநாள் உப்பு சேர்த்து தேவையான நீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்து காரட் குடைமிளகாயை வதக்கவும். இதில் சோயாபீன்ஸைச் சேர்த்துக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.

15.பகாளாபாத்

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பால்-1 லிட்டர்,தயிர் – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கிஸ்மிஸ், மாதுளை முத்துக்கள் தலா – 2 டீஸ்பூன், வெள்ளரி சின்னம் – 1 பொடியாக நறுக்கவும் , காரட் துருவியது – 1 டீஸ்பூன், கொத்துமல்லி - ஒரு கைப்பிடி பொடியாக அரிந்தது, பச்சை மிளகாய் – 1 பொடியாக அரிந்தது, மாவடு இஞ்சி- 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது. எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன். பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை. உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து பால் ஊற்றி குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவைத்து எடுத்து நன்கு குழைத்து வைக்கவும். ஆறியவுடன் உப்பையும் தயிரையும் சேர்க்கவும். எண்ணெயில் கடுகும் பெருங்காயமும் தாளித்துப் போடவும். கிஸ்மிஸ், மாதுளை முத்து, வெள்ளரி, காரட் துருவல்கள், கொத்துமல்லி, பச்சை மிளகாய், மாவடு இஞ்சி துருவல்கள் சேர்த்து வெண்ணெயும் போட்டு நன்கு கிளறி சிறிது நேரம் மூடி வைத்து நிவேதிக்கவும்.

16.மொச்சை சுண்டல்:-

தேவையானவை:- மொச்சை – 2 கப், தேங்காய் – 1 துண்டு, வரமிளகாய் – 2, பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய், கடுகு, உளுந்து தலா – 1 டீஸ்பூன்.

செய்முறை:- மொச்சையை வறுத்து ஊறப்போடவும். ஆறுமணி நேரம் ஊறியதும் உப்பு சேர்த்துக் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து வைக்கவும். வரமிளகாயுடன் தேங்காய் பெருங்காயப் பொடி உப்பு சேர்த்துப் பொடித்து வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றிக் கடுகு உளுந்து தாளித்து மொச்சையைப் போட்டுக் கிளறி வறுத்த பொடி தூவி இறக்கவும். நிவேதிக்கவும்.

17.சர்க்கரை சாதம்:-

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், வெல்லம்-கால் கிலோ, பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, கடலைப்பருப்பு – 1 கைப்பிடி, தேங்காய் – 1 துண்டு பல்லுப் பல்லாக நறுக்கவும். பால் – அரை கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, நெய் – 1 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து நீரை வடித்து வைக்கவும். குக்கரில் அரிசியுடன் பாசிப்பருப்பு கடலைப்பருப்பு பாலுடன் நாலு கப் நீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும். வெல்லத்தைப் பாகு வைத்து வடிகட்டி வைக்கவும். குக்கரைத் திறந்து சாதத்தை மசித்து வெல்லப்பாகை ஊற்றவும். லேசாக சூடுபடுத்தி பொங்கல் ஒன்று சேர்ந்ததும் இறக்கி வைத்து ஏலப்பொடி தூவவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும். பல்லுப் பல்லாக நறுக்கிய தேங்காயையும் போட்டு நன்கு கிளறி நிவேதிக்கவும்.

18.கோதுமை சுண்டல்

தேவையானவை:- கோதுமை – 1 கப், வரமிளகாய் – 1, தனியா – ஒரு டீஸ்பூன், பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு உளுந்து தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- கோதுமையைக் களைந்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். 2 கப் நீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். வரமிளகாயையும் தனியாவையும் வறுத்து உப்புடன் பொடிக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து பெருங்காயப் பொடி தாளித்து கோதுமையைக் கொட்டவும் இதில் வறுத்த பொடியைப் போட்டுக் கிளறி தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

19.பால் சாதம்:-

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பால் 2 லிட்டர், சர்க்கரை – கால் கப்.

செய்முறை:- பச்சரிசியைக் களைந்து பாலில் வேகப்போடவும். அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சாதம் வெந்து பால் குறுகி வந்ததும் நன்கு குழைத்து மசித்துச் சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.

20.பாசிப்பருப்பு சுண்டல் :-

தேவையானவை:- பாசிப்பருப்பு – 2 கப், காரட் – 1 டீஸ்பூன், கொழுந்து கருவேப்பிலை – 1 கைப்பிடி, தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன், எண்ணெய், கடுகு உளுந்து தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1. உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவிடவும். எண்ணெயில் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்துத் துருவிய காரட் கொழுந்து கருவேப்பிலை சேர்க்கவும். கருவேப்பிலை பொறிந்ததும் உப்பையும் பாசிப்பருப்பையும் சேர்த்துக் கிளறி தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும். நிவேதிக்கவும்.

21.கல்கண்டு சாதம்:-

தேவையானவை:- பச்சரிசி – 1 கப், கல்கண்டு – 1 கப், நெய் – அரை கப், பால் – அரை கப், தண்ணீர் இரண்டு கப், ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் தலா – 10.

செய்முறை:- பச்சரிசியக் களைந்து பால் தண்ணீர் சேர்த்துக் குக்கரில் இரண்டு விசில்வரும்வரை வேகப்போடவும். கல்கண்டைப் பொடிக்கவும். குக்கரைத் திறந்து கல்கண்டைச் சேர்த்து நன்கு மசித்துக் கிளறவும். நெய்யை ஊற்றவும். சிறிது நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொறித்துப் போட்டு ஜாதிக்காய்ப் பொடி தூவிக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.

22.ராஜ்மா சுண்டல்:-

தேவையான்வை:- ராஜ்மா பீன்ஸ் – 1 கப், சீரகம் – அரை டீஸ்பூன், கொத்துமல்லி – ஒரு கைப்பிடி, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி – 1, உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- நெய் – 2 டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- ராஜ்மா பீன்ஸைக் குக்கரில் போட்டு உப்பு சேர்த்து நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். சீரகம் கொத்துமல்லி மிளகாய்த்தூள் தக்காளியை விழுதாக அரைக்கவும். நெய்யில் சீரகம் தாளித்து அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எண்ணெய் பிரிந்ததும் ராஜ்மா பீன்ஸை சேர்க்கவும். உதிரானதும் இறக்கி நிவேதிக்கவும்,

23.வெண்பொங்கல்:-

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், பாசிப்பருப்பு – முக்கால் கப், மிளகு, சீரகம் தலா – ஒரு டீஸ்பூன், நெய்- 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், முந்திரி – 20, கருவேப்பிலை – 1 இணுக்கு, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – 1 துண்டு. மிளகு சீரகத் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் களைந்து மிளகு சீரகம், பொடியாக அரிந்த இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் போட்டு குக்கரில் ஆறு கப் தண்ணீர் விட்டு ஒரு விசில் வேகவைக்கவும். இறக்கி லேசாக மசித்து உப்பு சேர்க்கவும். நெய்யில் உளுந்தம்பருப்பு, மிளகு சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து கருவேப்பிலை போட்டுப் பொரிந்ததும் மிளகுசீரகத் தூள் போட்டு பொங்கலில் கொட்டிக் கிளறி மூடிவைத்து நிவேதிக்கவும்.

24.கடலைப்பருப்பு சுண்டல்:-

தேவையானவை;- கடலைப்பருப்பு – 1 கப், தேங்காய்த்துருவல் -1 டேபிள் ஸ்பூன், தாளிக்க :- கடுகு, உளுந்து எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – கால் டீஸ்பூன். பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:- கடலைப்பருப்பைக் களைந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். கால் கப் நீரூற்றி குக்கரில் ஒரு விசில் வேகப்போடவும். எண்ணெயில் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை பெருங்காயப்பொடி தாளித்து கடலைப்பருப்பைச் சேர்த்து உப்புப் போடவும். நன்கு கிளறி தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும்.

25.தேங்காய் சாதம்:-

தேவையானவை:- பாசுமதி அரிசி அல்லது சீரகச் சம்பா அரிசி அல்லது பச்சரிசி – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 கப், முந்திரிப் பருப்பு – 20, நெய் – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய், கடுகு, உளுந்து தலா – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா மூன்று டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- அரிசியைக் களைந்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி சிறிது நெய் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து உதிராக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு உளுந்து கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளித்து கருவேப்பிலை இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் பச்சை மிளகாய் சேர்க்கவும். இதில் உப்பைச் சேர்த்து சாதத்தில் கொட்டவும். நெய்யில் தேங்காய்த் துருவலை வதக்கி அதில் தாளித்த சாதத்தைக் கொட்டிக் கிளறி நிவேதிக்கவும்.

26.கொண்டைக்கடலை சுண்டல் :-

தேவையானவை:- வெள்ளைக் கொண்டைக்கடலை அல்லது கறுப்புக் கொண்டைக்கடலை – 1 கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி – 1 டீஸ்பூன் துருவியது, வரமிளகாய் – 2 , கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன், கடுகு உளுந்து எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- வெள்ளை அல்லது கறுப்புக் கொண்டைக்கடலையை முதல்நாளே ஊறப்போடவும். மறுநாள் குக்கரில் உப்பு சேர்த்து நான்கு விசில் வேகவைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், இஞ்சி தாளித்துக் கருவேப்பிலை போடவும். கொண்டைக்கடலையைப் போட்டுக் கிளறி தேங்காய்த்துருவலைத் தூவி இறக்கவும்.  

27.வெல்லப்புட்டு:-

தேவையானவை:-புழுங்கல் அரிசி – 1 கப், துவரம் பருப்பு – 2 டீஸ்பூன், வெல்லம் – 2 கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, மஞ்சள்தூள், உப்பு தலா – 1 சிட்டிகை.

செய்முறை:- புழுங்கல் அரிசியை ஊறவைத்து நீரை இறுத்துப் பொடித்துச் சலிக்கவும். துவரம்பருப்பை ஊறவைக்கவும்.புழுங்கலரிசி மாவை வெறும் வாணலியில் சிவப்பாக வறுக்கவும். ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் மஞ்சள் தூள் போட்டு உப்பைச் சேர்க்கவும் . இந்தத் தண்ணீரை ஆறிய மாவில் போட்டுப் பிசறி வைக்கவும். இதில் துவரம்பருப்பைச் சேர்த்து ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து இறக்கவும். வெல்லத்தைத் தூள் செய்து முத்துப் பாகு வைத்து அதில் இந்தப் அரிசி பருப்புக் கலவையப் போடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப்போட்டுக் கலந்து வைக்கவும். ஆறியது உதிர் உதிராய் வாசனையாக இருக்கும் இந்தப் புட்டு.

28.பட்டர்பீன்ஸ் சுண்டல்.:-

தேவையானவை:- பட்டர்பீன்ஸ் – 2 கப், இஞ்சி – 1 துண்டு, புதினா -  1 கைப்பிடி, தக்காளி – 1, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல்-2 டீஸ்பூன், எண்ணெய்- 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை:- பட்டர்பீன்ஸுடன் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வேகவைக்கவும். இஞ்சி புதினா தக்காளி மிளகாய்த்தூளை அரைத்து வைக்கவும். பானில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அரைத்த விழுதைப் போட்டுப் புரட்டவும். லேசாய் எண்ணெய் பிரியும்போது பட்டர்பீன்ஸைப் போட்டு தேங்காய்த்துருவலையும் போட்டு இறக்கவும்.

29. சோள வடை:- தேவையானவை:- சோளமாவு – 1 கப், அரிசி மாவு – அரை கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தழை- சிறிது, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- சோளமாவில் அரிசிமாவைப் போட்டு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது எண்ணெயைக் காயவைத்து ஊற்றி தண்ணீர் தெளித்து கெட்டி மாவாகப் பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும். வட்டமான மெல்லிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

30.ஃப்ரூட் வெர்மிசெல்லி கீர்.:-

தேவையானவை:- சேமியா – பாதி பாக்கெட். பால் – 1 லிட்டர். பழங்கள் –ஒரு கப் ( கட்டம் கட்டமாக அரிந்த ஆப்பிள், பைனாப்பிள், ஸ்ட்ராபெர்ரி , டூட்டி ஃப்ரூட்டி, மாதுளை, விதையில்லா கறுப்பு , பச்சை திராட்சைகள் ). சர்க்கரை – அரை கப், ரோஸ் எசன்ஸ் – சில சொட்டுகள், நெய் – 2 டீஸ்பூன், கிஸ்மிஸ், முந்திரி தலா – 10.

செய்முறை:- பாதிப் பாலைக் கொதிக்கவைத்து சேமியாவைச் சேர்த்துக் கிளறவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். மீதிப்பாலைக் காய்ச்சி ஆறவிடவும். பழக் கலவையில் சிறிது சர்க்கரை தூவிப் புரட்டி வைக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும். சேமியாவில் ஆறிய பால், பழவகைகள், முந்திரி கிஸ்மிஸ், ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கிக் குளிர்வித்து நிவேதிக்கவும்

டிஸ்கி:- இந்த நிவேதனங்கள் & கோலங்கள் அக்.7, 2016, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.  

 

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...