எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 26 மார்ச், 2015

சூப்ஸ் & ரசம்ஸ், SOUPS & RASAMS

சூப்ஸ் & ரசம்ஸ் :-


குளிர் முடிந்து வெய்யில் ஆரம்பிக்கும் நேரம் மாசி மாதம். இந்த மாதங்களில் சீதளம் என்னும் குளிர்ச்சியும் குளிர் காரணமாக உடல் நோவும் ஏற்படும். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க மூச்சுப் பயிற்சி ப்ரணாயாமம் போன்றவை செய்வது நல்லது.குளிர் காரணமா அடிக்கடி தண்ணீர் குடிக்க மாட்டாங்க பசங்களும் பெரியவங்களுமே. இந்த சூப் & ரசம் வகையறாஸ் நாவரட்சி போக்கி நீர்ச்சத்தை அளிக்கும்.

இந்தப் பருவத்தில் சூடாக ரசம், சூப் வைத்து அருந்தினால் உடலில் சள்ளைக்கடுப்பு, சளி, அசதி ஆகியவற்றைப் போக்கி சுறுசுறுப்பூட்டும். தெம்பு கொடுக்கும். எனவே இந்தப் பின்பனிக்காலத்தில் சில பாரம்பர்ய மற்றும் நவீன ரசம் & சூப்புகள் செய்து அருந்துங்கள். குளிரை விரட்டுங்க. க்ளைமேட்டைக் கொண்டாடுங்க. J


1.தூதுவளை ரசம்.

தேவையானவை :-
தூதுவளை – 1 கட்டு
வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
புளி – 1 நெல்லிக்காய் அளவு
உப்பு – ½ டீஸ்பூன்
வரமிளகாய் – 2
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
மல்லித்தூள் – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
பூண்டுப்பல் – 2
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்


செய்முறை:-

தூதுவளைக் கீரை முள்ளுடன் இருக்கும் கீரையை மட்டும் பார்த்து ஆய்ந்து கழுவி வைக்கவும். உரலில் மிளகாய், மிளகு சீரகம் பொடித்து பூண்டு தூதுவளைக் கீரையை வைத்து ஒன்றிரண்டாக நைத்து வைக்கவும். புளியை ஊறவைத்து இரண்டு கப் சாறு எடுத்து உப்பு சேர்த்து வைக்கவும். பருப்பை கடைந்து புளித்தண்ணீரில் சேர்க்கவும். அதில் மஞ்சள் தூளையும் மல்லித் தூளையும் போடவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், வெந்தயம் பெருங்காயப் பொடி போடவும். அதில் நைத்த விழுதைப் போட்டு அரை நிமிடம் வதக்கி புளித்தண்ணீரை ஊற்றவும். நுரைத்துப் பொங்கி வரும்போது கொதிக்கவிடாமல் இறக்கி உபயோகிக்கவும். இது சள்ளைக் கடுப்பை நீக்கும்.


2. வேப்பம்பூ எலுமிச்சை ரசம்.
தேவையானவை :-
வேப்பம்பூ – 1 கைப்பிடி
எலுமிச்சை – 1.
நெய் – 1 டீஸ்பூன்
மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 டீஸ்பூன்
பருப்பு கடைந்த தண்ணீர் – 2 கப்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்.
வரமிளகாய் – 1
கருவேப்பிலை – 1 இணுக்கு.
உப்பு – ½ டீஸ்பூன்
கொத்துமல்லித் தழை அரிந்தது – 1 டீஸ்பூன்

செய்முறை:-

நெய்யைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்ததும் வெந்தயம் சீரகம் போட்டு பொரிந்ததும் அதிலேயே இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை போடவும். அதில் வேப்பம்பூவைப் போட்டுப் புரட்டி வறுத்து பருப்பு கடைந்த தண்ணீரை ஊற்றவும். அதில் மிளகு சீரகத்தூளையும் மஞ்சள் பொடியையும் உப்பையும் சேர்க்கவும். நுரைத்து வரும்போது இறக்கி ஒரு எலுமிச்சையை விதையில்லாமல் சாறு பிழிந்து சேர்த்து கொத்துமல்லித் தழை போட்டு மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து உபயோகிக்கவும். இது பித்தத்தைப் போக்கும்.


3. வெற்றிலை நெல்லிக்காய் ரசம்

தேவையானவை:

முழு நெல்லிக்காய் - 4,
வெற்றிலை - 8,
கருவேப்பிலை கொத்துமல்லி – ஒரு கைப்பிடி.
வரமிளகாய் – 2
வெள்ளைப்பூண்டு – 3 பல்
குறு மிளகு – ½ டீஸ்பூன்
சீரகம் _ ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்.

செய்முறை: நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றாமல் மிளகாய், பூண்டு வால்மிளகு சீரகம் ஆகியவற்றை கடாயில் வறுத்து அதில் சுத்தம் செய்து நறுக்கிய கருவேப்பிலை கொத்துமல்லி வெற்றிலை போட்டு மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதை ஆறவைத்து அரைத்து எண்ணெயில் வதக்கி அரைத்த நெல்லிக்காய் பேஸ்டையும் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும். உப்பைப் போடவும். நுரைத்துக் கொதிவரும் நிலையில் கொதிக்குமுன் இறக்கி வடிகட்டிக் கொடுக்கவும். இது சளியைப் போக்கும்.


4 இன்ஸ்டண்ட் தக்காளி ரசம்.

தேவையானவை :_

தக்காளி – 3
துவரம்பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
மிளகு – ½ டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
சாம்பார் பொடி – ½ டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
பெருங்காயம் – சிறு துண்டு
கருவேப்பிலை கொத்துமல்லி – சிறிது
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை:-

மிக்ஸியில் துண்டாக நறுக்கிய தக்காளி, துவரம்பருப்பு, வரமிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லி போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஒரு நிமிடம் ஓட்டி கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகும் வெந்தயமும் வறுத்து கரைத்த தக்காளித் தண்ணீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். வெந்தயம் போடுவதால் தக்காளியுடன் கொதித்தால் நல்ல ருசி கொடுக்கும். புளி போடாததால் கொதித்தவுடன் இறக்கினாலும் இந்த ரசம் கடுத்துப் போகாது.


5. பைனாப்பிள் ரசம்

தேவையானவை:-
பைனாப்பிள் – 3 ஸ்லைஸ்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
புளி – 2 சுளை
உப்பு – ½ டீஸ்பூன்
வரமிளகாய் – 2
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
பூண்டுப்பல் – 2
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:-

பைனாப்பிளையும் பருப்பையும் குக்கரில் தனித்தனியாக வேகவைக்கவும். பருப்பை நன்கு மசித்து பைனாப்பிளை துண்டாக மசித்து சேர்க்கவும். அதில் புளியையும் உப்பையும் இரண்டு கப் தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும். ( பைனாப்பிள் புளிப்பாக இருந்தால் புளி வேண்டாம் )

எண்ணெயைக் காயவைத்துக் கடுகு சீரகம் வெந்தயம் பெருங்காயத்தூள் தாளித்து மிளகாயை துண்டாக உடைத்துப் போடவும் மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு பூண்டையும் தட்டிப் போடவும். மஞ்சள் தூள் போட்டு கரைத்த பைனாப்பிள் பருப்புக் கலவையை ஊற்றவும். நுரைத்து வரும்போது இறக்கவும். இது நாவறட்சியைப் போக்கும்.
6. இளநீர் ரசம்

இளநீர் ரசம்.
தேவையானவை:-
இளநீர் – 2
துவரம்பருப்பு வேகவைத்தது – 1 டேபிஸ் ஸ்பூன்
தக்காளி – 1
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.
உப்பு – 1 டீஸ்பூன்
புளி – 2 சுளை.
எண்ணெய்/நெய் – 2 டீஸ்பூன்,
கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:-
உப்புப் புளியை ½ கப் தண்ணீரில் கரைத்து அதில் தக்காளியையும் இளநீரைத் தனியாக எடுத்து வைத்து விட்டு இளநீர் வழுக்கையையும் போட்டுப் பிசைந்து வைக்கவும். அதில் மிளகாய், மிளகு , சீரகத்தைப் பொடித்துப் போடவும்.வேகவைத்த துவரம் பருப்பைக் கரைத்து ஊற்றவும்.
எண்ணெயை/நெய்யைக் காயவைத்துக் கடுகு சீரகம், வெந்தயம் தாளித்து கருவேப்பிலை பெருங்காயப் பொடி போட்டுக் கரைத்து வைத்த கலவையை ஊற்றவும். அதுசூடேறி வரும்போது இளநீரை ஊற்றி நுரைத்து வந்ததும் இறக்கவும். இது தொண்டைக்கு இதமான ரசம்.

7. ப்ராக்கோலி/ வயலட் கேபேஜ் சூப் :-

தேவையானவை :-

ப்ராகோலி அல்லது வயலட் கேபேஜ் – ½ பாகம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
உப்பு – ½ டீஸ்பூன்
மிளகுத்தூள் – ¼ டீஸ்பூன்
வெண்ணெய்/க்ரீம் – 1 டீஸ்பூன் விரும்பினால்

செய்முறை:-
ப்ராகோலி அல்லது வயலட் கேபேஜை துண்டுகளாக்கி பெரியவெங்காயம் தக்காளியையும் துண்டுகளாக்கி குக்கரில் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வேக விடவும். ஆறியதும் திறந்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

இதை சூடுபடுத்தி உப்பு சேர்த்து மிளகு தூவி விரும்பினால் க்ரீம் அல்லது வெண்ணெய் சேர்த்துப் பரிமாறவும்.பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சூப்

8. சுண்டைக்காய்/வெண்டைக்காய் சூப்

தேவையானவை:-
முற்றின வெண்டைக்காய் – 10  அல்லது முற்றின சுண்டைக்காய் – ஒரு கைப்பிடி (  தோராயமாக 30 )
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
கருவேப்பிலை – 1 இணுக்கு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பாசிப்பருப்பு – 1 கைப்பிடி
எண்ணெய் – 1 டீஸ்பூன்
சோம்பு – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
மிளகு – ½ டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு
பிரிஞ்சி இலை – 1 துண்டு
பட்டை – 1 துண்டு
உப்பு – ½ டீஸ்பூன்

செய்முறை:-
வெண்டைக்காய் என்றால் கழுவித் துடைத்து நறுக்கிக் கொள்ளவும். சுண்டைக்காய் என்றால் நறுக்கி தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.

பாசிப்பருப்பை வேகவைத்து 2 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு போடவும் இதில் பிரிஞ்சி இலை பட்டை போட்டு அனைத்தும் பொரிந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சுண்டைக்காய் அல்லது வெண்டைக்காய் போட்டு வதக்கவும் . இரண்டு நிமிடம் வதக்கியபின் வெங்காயம் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள் பொடியைப்போட்டு பருப்பு கரைத்த தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து வெந்ததும் உப்பு சேர்த்து வடிகட்டி அருந்தக் கொடுக்கவும். குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்றது இது.

9.  வாழைத்தண்டு/பீட்ரூட்/காரட் சூப்

தேவையானவை:-
சின்ன வாழைத்தண்டு  - 1 அல்லது பீட்ரூட் பெரிது – 1
அல்லது காரட்  பெரிது 1.
பாசிப்பருப்பு +துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
சின்னச் சீரகம் – 1 டீஸ்பூன்
கசகசா – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – ½ டீஸ்பூன்
கொழுந்து கருவேப்பிலை – சிறிது.
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:-

பருப்புவகைகளுடன் வட்டமாக அரிந்த வாழைத்தண்டோ அல்லது ஸ்லைஸாக நறுக்கிய பீட்ரூட்டோ அல்லது துருவிய காரட்டோ போட்டு மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து கரண்டியால் லேசாக மசித்து அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.

சின்னச் சீரகத்துடன் கசகசகா சின்ன வெங்காயம் இரண்டு வைத்து அரைத்து வைக்கவும்.மிச்ச வெங்காயத்தை வளையம் வளையமாக நைஸாக அரிந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை மென்மையாக வதக்கவும். அதில் அரைத்த விழுதைப் போட்டு வதக்கி காய்கறி பருப்புக் கலவையை ஊற்றவும். தேவையான தண்ணீர் சேர்த்து உப்புப் போடவும். கொதி வந்ததும் இறக்கி கொழுந்து கருவேப்பிலை தூவிக் குடிக்கக் கொடுக்கவும். இது தொண்டைப்புண் கரகரப்பு வலி போக்கும் வயிற்றுப்புண்ணையும் போக்கும்.

டிஸ்கி :- இந்தக் கோலங்களும் ரெசிப்பீஸும் பிப் 26 , 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...