எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

விசேஷ சமையல் ரெசிப்பீஸ். RECIPES FOR FUNCTIONS & CEREMONIES1. மாம்பழ சாம்பார் :-

தேவையானவை :-
மாம்பழம் – 6 ( பாதி பழுத்தது )
சின்ன வெங்காயம் – 100 கி
தக்காளி – 4
துவரம் பருப்பு – 2 கப்
புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு
உப்பு – அரைக்கைப்பிடி
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – 4 இணுக்கு
சீனி அல்லது வெல்லம் – 1 டீஸ்பூன் அளவு

பொடிக்க:-
மிளகாய் – 20
மல்லி – 1 கப்
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்.
பெருங்காயம் – 1 துண்டு

இவற்றில் பெருங்காயத்தையும் பச்சரிசியையும் நன்று வறுத்து அதில் மற்ற பொருட்களைப் போட்டு அரைப்பதம் வறுத்து அரைத்து வைக்கவும்.

செய்முறை:-

குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்கவும். வெங்காயம் தக்காளியைக் கழுவித் துண்டுகளாக்கி நீரூற்றி மஞ்சள் பொடி போட்டு வேகப்போடவும். அதில் மாம்பழங்களைக் கழுவி மூன்றாக வெட்டி வேகப்போடவும். இரண்டு நிமிடம் வெந்ததும் உப்பு புளியைக் கரைத்து ஊற்றவும் . 10 கப் அளவு ஊற்றலாம். இதில் அரைத்த பொடியையும் கரைத்து ஊற்றவும். தண்ணீர் பார்த்து குழம்பு திக்காக இருந்தால் இன்னும் சேர்க்கலாம். வெந்த துவரம் பருப்பை மசித்துச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதி வந்து பச்சை வாசனை போன பின்பு சீனி அல்லது வெல்லம் சேர்த்து இறக்கவும்.

பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை தாளித்துக் கொட்டி உபயோகிக்கவும்.

2. ஆப்பிள் மோர்க்குழம்பு :-

தேவையானவை :-
ஆப்பிள் – 2
தயிர் – 1 லிட்டர் பாலை உறைய வைக்கவும்.
தேங்காய் – 1 துருவவும்.
பச்சைமிளகாய் – 6
சீரகம் – 2 டீஸ்பூன்
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி – தலா 1 டீஸ்பூன் ஊறவைக்கவும்.
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – 2 டீஸ்பூன்.

தாளிக்க:-
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – 4 இணுக்கு.

செய்முறை:-

ஆப்பிளைத் தோல் சீவி விதை நீக்கி  மெல்லியதாக நீளமாக நறுக்கிக் கொள்ளவும். தயிரைக் கடைந்து வைக்கவும்.

ஊறவைத்த கடலைப்பருப்பு, துவரம் பருப்பு பச்சரிசியை பச்சைமிளகாய், சீரகம், தேங்காத் துருவலோடு சேர்த்து விழுதாக அரைக்கவும். மஞ்சள் பொடி போட்டு 8 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். அது சூடேறும் போது ஆப்பிள் துண்டுகளைச் சேர்க்கவும்.

லேசாக மேலே நுரைத்து வரும்போது உப்பு சேர்த்து கடைந்த தயிரை ஊற்றவும். தேங்காய் எண்ணெயில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

3. அவரைக்காய் இளங்குழம்பு :-

தேவையானவை :-
அவரைக்காய் – ½ கிலோ
பெரிய வெங்காயம் – 6
தக்காளி – 6
பூண்டு- 4 பல்
துவரம் பருப்பு – 1 கப்
பெருங்காயம் – 1 சிறுதுண்டு.
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – அரைக்கைப்பிடி
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 8
சாம்பார் பொடி – 4 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – 4 இணுக்கு கொழுந்தாக.
கொத்துமல்லி – 1 கட்டு

செய்முறை:-

துவரம் பருப்பைக் குழைய வேக வைக்கவும். வெங்காயம் தக்காளியைக் கழுவி நீளவாக்கில் நறுக்கவும். அவரைக்காயை நரம்பு எடுத்து இரண்டாக நறுக்கவும். பூண்டைத் தோலுரித்து நைத்து வைக்கவும். பச்சை மிளகாயைக் கழுவி இரண்டாக வகிர்ந்து வைக்கவும். கொத்துமல்லியை சுத்தம் செய்து கழுவிப் பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிது வெங்காயம் தக்காளியைத் தனியாக எடுத்து வைக்கவும்.

8 கப் தண்ணீரில் அவரைக்காய் வெங்காயம் தக்காளியை பச்சைமிளகாயை வேகப்போடவும். பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடி போட்டு உப்புப் புளியைக் கரைத்து ஊற்றவும். பருப்பை மசித்துச் சேர்த்துக் கொதித்ததும் இறக்குமுன் கொத்துமல்லியும் தட்டிய பூண்டும் சேர்த்து இறக்கவும்.

எண்ணெயில் கடுகு சீரகம் சோம்பு கருவேப்பிலை தாளித்து உபயோகிக்கவும்.

4. ரோஜாப்பூ பன்னீர் ரசம்:-

தேவையானவை :-

ரோஜாப்பூ – 10
பன்னீர் – 4 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 கப்
மிளகாய் – 10
தனியா – ½ கப்
மிளகு  - 10 கி
சீரகம் – 20 கி
புளி – 1 சாத்துக்குடி அளவு
உப்பு – அரைக் கைப்பிடி
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய்/நெய் – 4 ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை :-

ரோஜா இதழ்களை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பு மிளகாய், தனியா மிளகு சீரகத்தை லேசாக வெதுப்பி பொடித்து வைக்கவும். உப்புப் புளியைக் கரைத்து 12 கப் தண்ணீர் எடுக்கவும். இதில் மஞ்சள் தூள் ரசப் பொடியைப் போட்டுக் கொதிக்க விடவும்.

நுரைத்து வரும்போது நெய் அல்லது எண்ணெயில் கடுகு சீரகம் தாளித்து இறக்கவும். சிறிது சூடு அடங்கியதும் ரோஜாப்பூவிதழ்களைப் போட்டு பன்னீர் ஊற்றிக் கலந்து மூடிவைத்துப் பின் உபயோகிக்கவும்.

5. முளைவிட்ட பயறு முட்டைக்கோஸ் துவட்டல் :-

தேவையானவை :-
முளைவிட்ட பச்சைப் பயறு – 4 கப்
கோஸ் – 1 பெரிது
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
வரமிளகாய் – 2
தேங்காய் – 1 மூடி துருவவும்.
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
கருவேப்பிலை – 2 இணுக்கு
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:-

கோஸைக் கழுவி நீளமாக அரியவும். பச்சைப் பயிறைக் கழுவி வைக்கவும். பெரிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் கழுவி பொடிப்பொடியாக நறுக்கவும்.

எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு கருவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் பச்சை மிளகாயை வதக்கி பயறைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கியபின் கோஸைச் சேர்க்கவும். நன்கு கிளறி தண்ணீர் தெளித்து மூடி போட்டு அவ்வப்போது கிளறி வேக விடவும். வெந்ததும் உப்பு தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
6. பலகாய் மண்டி :-
தேவையானவை:-
கத்திரிக்காய் – 15
வாழைக்காய் – 2
உருளைக்கிழங்கு – 2
பலா விதை – 20
மாங்காய் – 2
முருங்கைக்காய் - 2
கத்திரி வத்தல் அவரை வத்தல் மாவத்தல் – 1/4 கிலோ
மொச்சை – ¼ கிலோ
பச்சை மிளகாய் –150 கி ரெண்டாக வகிர்ந்தது..
சின்ன வெங்காயம் – ¼ கிலோ
வெள்ளைப் பூண்டு – 100 கி
வர மிளகாய் - 6
அரிசி களைந்த தண்ணீர் – ஒரு பெரிய பாத்திரம் அளவு.
புளி - 1 சாத்துக்குடி அளவு
கடுகு - 2 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
கருவேப்பிலை - 4 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
வெல்லம் – சிறு துண்டு

வறுத்துப் பொடிக்க :-
பச்சரிசி – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 துண்டு.


செய்முறை:-
காய்கறிகளைக் கழுவி துடைத்து 1 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். மொச்சையை வறுத்துக் குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பலா விதையையும் இரண்டாக வெட்டி தோலுரித்து வேகவைத்து எடுக்கவும்.
சின்ன வெங்காயம்., பூண்டை தோல் உரித்து ரெண்டாக குறுக்கில் நறுக்கவும். வரமிளகாயை ரெண்டாக கிள்ளி வைக்கவும். புளியை அரிசி களைந்த தண்ணீரில் ஊறப்போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., பெருங்காயம்., வெந்தயம்., வரமிளகாய் ., கருவேப்பிலை போடவும்.. பச்சை மிளகாய் போட்டு 1 நிமிடம் வதக்கி பின் சின்ன வெங்காயம் ., பூண்டு போடவும். மற்ற காய்கறிகளைப் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கி புளி கரைத்த தண்ணீரை ஊற்றவும். மொச்சையையும் பலா விதையையும் சேர்க்கவும். கொதி வந்ததும் மிதமான தீயில் 20 நிமிடம் வைத்து கெட்டியானதும் இறக்குமுன் பொடித்த பொடியைப் போட்டு ஒரு துண்டு வெல்லம் போட்டு இறக்கவும்.

7. கொத்துமல்லி முந்திரி கட்லெட்

தேவையானவை :-
முந்திரி – 40 பருப்பு
கொத்துமல்லி – 2 கட்டு
கடலை மாவு – 3 கப்
அவித்த உருளைக்கிழங்கு – 12
ப்ரெட் – 2 பாக்கெட்
பெரிய வெங்காயம் – 2
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 2 இன்ச் துருவியது
பச்சை மிளகாய் – 5 பொடியாக நறுக்கியது
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
மைதா – 3 கப்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 3 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ப்ஸ் – 1 கோப்பை
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

கொத்துமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் இஞ்சி பச்சை மிளகாய் வெங்காயத்தை வதக்கி கடலைமாவைப் போடவும். லேசாக வறுபட்டதும் கொத்துமல்லியைப் போட்டு கரம்மசாலா, மிளகாய்த்தூள் வெண்ணெயைப் போட்டு அரை டீஸ்பூன் உப்புப் போட்டு நன்கு புரட்டவும். வெந்து உருண்டதும் இறக்கி முந்திரியை உள்ளே வைத்து ஓவல் சைஸில் சின்ன சின்ன கட்லெட்டுகளாக செய்யவும்.

அவித்த உருளைக்கிழங்கில் ப்ரெட்டைப் போட்டு உப்பு மிளகாய்ப் பொடி போட்டு லேசாக நீர் தெளித்துப் பிசையவும். இதில் சிறிது எடுத்து எண்ணெய் தொட்டு கப் போல செய்து கொத்துமல்லி கட்லெட்டுகளை இதனுள் வைத்து நன்கு உருட்டவும்.

அதிகம் எண்ணெய் சேர்க்க வேண்டாம் என்றால் இதையே ப்ரட் க்ரம்ஸில் புரட்டி தோசைக்கல்லில் சுற்றி எண்ணெய் விட்டு எல்லாப் பக்கமும் புரட்டி வேகவைத்து எடுக்கவும்.

இல்லாவிட்டால் மைதாவில் உப்பு மிளகாய்த்தூள் போட்டுக் கரைத்து கட்லெட்டுகளை நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும். இதில் சைஸ் பெரிசாக இருப்பதால் கணிசமாக இருக்கும். 

8 . ப்ராகோலி பட்டர் பீன்ஸ் புலவ்
தேவையானவை :-
பாசுமதி அரிசி – 4 கப்
ப்ராகோலி – 2
பட்டர் பீன்ஸ் – 300 கி
பெரிய வெங்காயம் – 4
தக்காளி – 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – 2 டீஸ்பூன்
கொத்துமல்லித் தழை – 1 டேபிள் ஸ்பூன்
புதினா – 20 இலை.
நெய் – 50 கி

அரைக்க
முந்திரி – 8
கசகசா – 2 டீஸ்பூன்
தேங்காய் – 1

தாளிக்க :-
பட்டை கிராம்பு ஏலக்காய் – தலா 4
சோம்பு – ½ டீஸ்பூன்.

செய்முறை:-

பாசுமதி அரிசியைக் களைந்து  சிறிது நெய்யில் வறுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளி, ப்ராகோலியைத் துண்டுகளாக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து 6 கப் தண்ணீர் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காயைப் போடவும். பொரிந்ததும் வெங்காயத்தை வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும். லேசாக சிவந்ததும் ப்ராகோலி பட்டர் பீன்ஸைப் போடவும். கிளறிவிட்டு பச்சை மிளகாய் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். தயிர் சேர்த்து மூடி 5 நிமிடம் சிம்மில் வேகவிடவும். இதில் அரிசியையும் அரைத்து வடிகட்டிய தேங்காய் முந்திரித் தண்ணீரையும் சேர்க்கவும். உப்பு போட்டு நன்கு கிளறி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ( அதிகம் வெந்தால் ப்ராகோலி குழைந்துவிடும் ) புதினா கொத்துமல்லியைத் தூவிப் பரிமாறவும்.

டிஸ்கி :- இந்தக் கோலங்களும் ரெசிப்பீஸும் மார்ச் 12 , 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...