எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஏப்ரல், 2015

புத்தாண்டு ரெசிப்பீஸ், மன்மத வருடம்,NEW YEAR RECIPES



இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வருடத்தின் பெயர் மன்மத வருடம். இந்தப் புத்தாண்டில் மனம் போல் மாங்கல்யம் அமைய அழகுக் கோலங்களும் அறுசுவையையும் வழங்கும் உணவு வகைகளையும் கொடுத்துள்ளோம்.

கருப்பட்டி ஆப்பம் தேங்காய்ப் பால்
கேப்பை இடியாப்பம் தாளிச்சது.
மாங்காய் வெல்லப் பச்சடி.
மாங்காய் உப்புப் பச்சடி.
வாழைப்பூ வடை
பரங்கிக்காய் புளிக்கறி
வெள்ளைமிளகாய் மண்டி.
பலாச்சக்கைக் குழம்பு
பாகற்காய் பிட்ளை

1.கருப்பட்டி ஆப்பம். தேங்காய்ப் பால். :-

தேவையானவை :-
பச்சரிசி – 2 கப்
புழுங்கல் அரிசி – 2 கப்
வெள்ளை உருண்டை உளுந்து – அரை கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்.
கருப்பட்டி – கால் கிலோ
உப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1
சீனி – 100 கி
ஏலக்காய்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:- பச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து துவரம் பருப்பு வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகப் போட்டுக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். நைஸாக அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

கருப்பட்டியை நைத்து அரை கப் தண்ணீரில் கரைய வைத்து வடிகட்டி மாவில் சேர்க்கவும். நன்கு தண்ணியாகக் கரைத்து ஆப்பச் சட்டியில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஸ்லாத்தினாற்போலச் சுழற்றி மூடி போட்டு வேகவைத்து எடுக்கவும். திருப்பிப் போட வேண்டாம்.

ஒரு தேங்காயை உடைத்துத் திருகிப் பால் எடுத்து 100 கிராம் சீனி ஏலத்தூள் கலந்து ஆப்பத்தில் ஊற்றி உபயோகிக்கவும். இதை மண் ஆப்பச் சட்டியில் செய்தால் சுவையாக இருக்கும்.

2. கேப்பை இடியாப்பம் ( தாளிச்சது )

தேவையானவை:-
கேப்பைமாவு – கால் கிலோ
உப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
வரமிளகாய் – 1
கருவேப்பிலை – 1 இணுக்கு
பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்.
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்.
எண்ணெய் – 2 டீஸ்பூன் தாளிக்க.

செய்முறை :- கேப்பை மாவை சலித்து உப்பு சேர்த்து அதன் மேல் எண்ணெய் ஊற்றவும். இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து மாவில் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி நன்கு பிசையவும். உருண்டைகளாக உருட்டி இடியாப்ப அச்சில் போட்டு இட்லித் தட்டில் துணி போட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

ஆறியதும் உதிர்த்து தயிரைக் கடைந்து அதில் போட்டு பிசறி வைக்கவும்.

எண்ணெயைக் காயவைத்துக் கடுகுபோட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பச்சை மிளகாய் வரமிளகாய் கிள்ளிப் போடவும். கருவேப்பிலை பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி இடியாப்பத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


3. மாங்காய் வெல்லப் பச்சடி:-

தேவையானவை:-

மூக்கு மாங்காய் – 1
பாசிப்பருப்பு – கால் கப்
வெல்லம் – 2 அச்சு
உப்பு – 1 சிட்டிகை
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கருவேப்பிலை – 1 இணுக்கு
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:-

மாங்காயை லேசாகத் தோல்சீவிப் பெரிய துண்டுகளாக்கவும். பாசிப் பருப்பை அரை கப் தண்ணீரில் வேகப் போடவும். முக்கால் பதம் வெந்ததும் மாங்காய்த் துண்டுகளைச் சேர்க்கவும். மாங்காய் கண்ணாடி போல் வெந்ததும் உப்பு சேர்த்து வெல்லத்தைத் தூள் செய்து சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும். தாளிக்கும் கரண்டியில் எண்ணெயில் கடுகு, உளுந்து கருவேப்பிலை, வரமிளகாய் கிள்ளிப் போட்டுத் தாளித்து பச்சடியில் கொட்டிக் கிளறி மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து உபயோகிக்கவும்.

4. மாங்காய் உப்புப் பச்சடி :-
தேவையானவை :-
வெல்லப் பச்சடிக்குச் சொன்ன அனைத்துமே
வெல்லம் தவிர.

செய்முறையும் அதே போலத்தான் வெல்லம் போடாமல் செய்யவும்.

5. வாழைப்பூ வடை :-

தேவையானவை :-
வாழைப்பூ – 1 அதில் வெளி மடலில் உள்ள 10 இதழ்களை உரித்து நரம்பெடுத்து வைத்துக் கொள்ளவும். ( உள்ளே இருக்கும் பிஞ்சுப் பூவை பால் கூட்டு செய்ய வைத்துக் கொள்ளலாம். )
துவரம் பருப்பு – அரை கப்
வரமிளகாய் – 6
சோம்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
மிளகு – 5
தேங்காய்த் துருவல் – 1 டீஸ்பூன் ( விரும்பினால்
பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும்.
உப்பு – கால் டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :- துவரம் பருப்பைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். ஆய்ந்த வாழைப்பூக்களைக் கழுவி நறுக்கி வைக்கவும். மிக்ஸியில் வரமிளகாய் சோம்பு சீரகம் உப்பு போட்டு பொடிந்ததும் வாழைப்பூவைப் போட்டு அரைக்கவும். பெருபெருவென அரைக்கலாம். துவரம்பருப்பை நீரை வடியவைத்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்துப் பூவுடன் சேர்க்கவும். தேங்காய்த் துருவல், பொடியாக அரிந்த வெங்காய்ம் சேர்த்து நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகள் செய்து வடை தட்டவும்.

எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து சூடாகப் பரிமாறவும்.

6. பரங்கிக்காய் புளிக்கறி:---

தேவையானவை :-
பரங்கிக்காய் – 1 கீத்து
சின்ன வெங்காயம் – 8
வெள்ளைப் பூண்டு – 4
வரமிளகாய் – 4
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து -  1 டீஸ்பூன்
சோம்பு – கால் டீஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு.
வெல்லம் – சிறு துண்டு.

செய்முறை:- பரங்கிக்காயை விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டை உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். புளியை உப்புப் போட்டு அரைகப் தண்ணீரில் ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு சோம்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் வெள்ளைப் பூண்டைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதங்கியதும் பரங்கிக்காயைக் கழுவிச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கி சாம்பார் பொடி போட்டு புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும். நன்கு கிளறி விட்டுக் கொதி வந்ததும் அடக்கி வைத்து மூடி போட்டு 10 நிமிடம் சிம்மில் வேக விடவும். வெந்ததும் இறக்குமுன் வெல்லம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.


7.வெள்ளைமிளகாய் மண்டி. :-

தேவையானவை :-
வெள்ளை மிளகாய் – 30
சின்ன வெங்காயம் – 20
வெள்ளைப் பூண்டு – 10
அரிசி களைந்த திக்கான தண்ணீர் – 2 கப்
புளி – பெருநெல்லிக்காய் அளவு.
உப்பு – அரை டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு.

வறுத்துப் பொடிக்க :-
பச்சரிசி – 1 டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிறு துண்டு.

செய்முறை:-
வெள்ளை மிளகாயை காம்பை சிறிது விட்டு வெட்டி இருபக்கமும் வகிர்ந்து வைக்கவும். வெங்காயம் வெள்ளைப் பூண்டை உரித்துக் குறுக்காக இரண்டாக வெட்டி வைக்கவும். அரிசி களைந்த தண்ணீரில் புளி உப்பைப் போட்டுக் கரைத்து வைக்கவும்.  

கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து போட்டு வெங்காயம் வெள்ளைப் பூண்டு வெள்ளை மிளகாய் கருவேப்பிலை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் புளி கரைத்த தண்ணீரை ஊற்றவும். கொதித்தும் சிம்மில் மூடி போட்டு 15 நிமிடங்கள் வைக்கவும்.

வெறும் வாணலியில் பச்சரிசி வெந்தயம், பெருங்காயத்தை வறுத்துப் பொடித்து வைக்கவும். மண்டியை இறக்குமுன் இந்தப் பொடியைத் தூவி ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். காரம் அதிகமாக இருந்தால் ஒரு சிட்டிகை சீனி அல்லது வெல்லம் சேர்க்கலாம்.

8.பலாச்சக்கைக் குழம்பு:-

தேவையானவை :-
பலாச்சக்கை – கால் பாகம் ( பலாப்பழம் எடுத்த பின் மீந்திருக்கும் சக்கைப் பகுதி )
சின்ன வெங்காயம் – 8
வெள்ளைப் பூண்டு 4
தக்காளி – 1 சின்னம்
புளி – பெருநெல்லிக்காய் அளவு
உப்பு – அரை டீஸ்பூன்
சாம்பார் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை.
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
சோம்பு – கால் டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
கருவேப்பிலை – 1 இணுக்கு
வெல்லம் – 1 துண்டு.

செய்முறை :-
பலாப்பழங்களைப் பூரியபின் மீந்திருக்கும் சக்கைப் பகுதியில் இருக்கும் நார்களை வெட்டிவிடவும். முள் பகுதியையும் சுத்தமாக வெட்டி எடுத்து விடவும். இரண்டுக்கும் இடைப்பட்ட சதைப் பகுதியைச் சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் வெள்ளைப் பூண்டை உரித்து குறுக்காக வெட்டி வைக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் உப்புடன் ஊறவைத்துச் சாறெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து போட்டு வெடித்துச் சிவந்தவுடன் வெந்தயம் சோம்பு சீரகம் பெருங்காயம் தாளித்துப் பொரிந்ததும் கருவேப்பிலை வெங்காயம் தக்காளி பூண்டு போட்டு வதக்கி வெட்டி வைத்த பலாச்சக்கைத் துண்டுகளைச் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கி சாம்பார் பொடி மஞ்சள் பொடி போட்டு புளித்தண்ணீரை ஊற்றவும். கொதி வந்ததும் சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து வெல்லம் தட்டிப் போட்டு இறக்கவும். மிகவும் ருசியான மணமான குழம்பு இது.


9. பாகற்காய் பிட்ளை:-

தேவையானவை :-

பாகற்காய் – 2
துவரம் பருப்பு – கால் கப்
கடலைப் பருப்பு – 1 கைப்பிடி
தட்டைப் பயிறு – 1 கைப்பிடி
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை.
கருவேப்பிலை – 1 இணுக்கு.

வறுத்து அரைக்க:-
வரமிளகாய் – 4
வர மல்லி – 2 டீஸ்பூன்
பச்சரிசி – 1 டீஸ்பூன்
உளுந்து – 1 டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை :-
பாகற்காயைக் கழுவி வட்டமாகத் துண்டுகள் செய்யவும். பெரிய வெங்காயம் தக்காளியைக் கழுவித் துண்டுகளாக்கவும். 3 ப்ளேட் வைக்கும் குக்கரில் முதலில் துவரம் பருப்பையும் கடலைப் பருப்பையும் கழுவிப் போட்டு போதிய நீர் ஊற்றி வைத்து அடுத்த தட்டில் தட்டைப் பயிறை வறுத்துப் போட்டுத் தேவையான தண்ணீர் ஊற்றி வைக்கவும். மேல் தட்டில் பாகற்காயை அரை டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி வெங்காயம் தக்காளி மஞ்சள் பொடி போட்டு லேசாக நீர் தெளித்து குக்கரை இரண்டு விசில் வரும்வரை வைக்கவும்.

பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.

குழம்புப் பாத்திரத்தில் உப்புப் புளியைக் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி போட்டுக் கொதிக்கும்போது பாகற்காயைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் தட்டைப் பயறைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து துவரம் பருப்பு பாசிப்பருப்பை லேசாக மசித்துச் சேர்க்கவும். பொடித்த பொடியையும் சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு உளுந்து வெந்தயம் சீரகம் பெருங்காயம் கருவேப்பிலை தாளித்துப் போட்டுக் கலந்து விட்டு சில நிமிடம் கழித்து உபயோகிக்கவும்.

டிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் ஏப்ரல் 1 - 15 , 2015 தமிழ்ப் புத்தாண்டு இதழில் வெளிவந்தது. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...