எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 மே, 2015

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெஸிப்பீஸ் .ATCHAYA THRITHIYAI RECIPES.



அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெஸிப்பீஸ் :-


1.ரஸகுல்லா
2.ரஸ்மலாய்
3.தூத் பேடா.
4.தேங்காய் அல்வா
5.பால் பணியாரம்
6.வெள்ளைப் பணியாரம்.
7.பால் பாயாசம்.
8.பகாளா பாத் 
9.குழாய்ப் புட்டு.


1.ரஸகுல்லா :-

தேவையானவை :-
பால் – 1 லிட்டர்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
ஐஸ் துண்டு – 10
தண்ணீர் – 3 கப்
சீனி – முக்கால் கப்
குங்குமப்பூ – 1 சிட்டிகை ( கட்டைவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்து எடுத்தால் வருவது )
ரோஸ் எசன்ஸ் – சில சொட்டு.

செய்முறை:-
பாலைக் காய்ச்சவும். அது நன்கு கொதி வரும்போது எலுமிச்சை சாறை ஊற்றவும். பால் நன்கு திரிந்து திரண்டு வரும்போது இறக்கி ஐஸ்கட்டிகளைப் போடவும். ( பன்னீர் கடினமாக இல்லாமல் மென்மையாக கிடைக்க ஐஸ்கட்டி சேர்க்கிறோம். )

இறக்கி ஒரு வடிகட்டியில் காட்டன் துணியைப் போட்டு அதில் இந்தப் பனீரை ஊற்றவும். நல்ல தண்ணீரை அதன் மேல் ஊற்றி அலசி முடிச்சாய்க் கட்டி 30 நிமிடங்கள் நீரை வடிய விடவும். அதிகப்படி நீர் இருந்தால் காட்டன் துணியில் ஒற்றி எடுத்து ஒரு பவுலில் போட்டு உதிர்த்து வைக்கவும்.

இதை மென்மையாக ஆகும்வரை 10 நிமிடங்கள் நன்கு பிசையவும். இதுதான் முக்கியம். நன்கு மென்மையாக ஆனதும் நெல்லிக்காய் சைஸ் உருண்டைகளாக உருட்டவும்.

ஒரு ப்ரஷர் குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி முக்கால் கப் சீனியைப் போடவும். இரண்டும் கரைந்து கொதிவரும்போது உருட்டி வைத்த ரசகுல்லாக்களை ஒவ்வொன்றாக மெதுவாக வைக்கவும். நன்கு கொதித்ததும் வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடக்கி வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

இப்போது ரசகுல்லாக்கள் இருமடங்காக ஆகி இருக்கும். நன்கு ஆறியதும் ரோஸ் எஸன்ஸும் குங்குமப்பூவும் போட்டு குளிரவைத்துப் பரிமாறவும்.

2.ரஸ்மலாய் :-
தேவையானவை :-

ரசகுல்லா – 20
பால் – 1 லிட்டர்
கொழுப்பு நீக்காத கெட்டிப் பால் – 1 கப் அல்லது மில்க் மெய்ட் – 1 டேபிள் ஸ்பூன்.
சீனி – அரை கப்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
வனிலா எஸன்ஸ் – சில சொட்டுகள்
நெய் – 1 டீஸ்பூன்.
பாதாம் பிஸ்தா முந்திரி – தலா 10 ஊறவைத்துப் பொடியாக நறுக்கவும்.

செய்முறை:-
பால் பாத்திரத்தில் நெய்யைத் தடவி பாலை ஊற்றிக் காய்ச்சவும். சிறிது பாலில் குங்குமப்பூவைக் கரைத்து வைக்கவும். அவ்வப்போது கரண்டியால் கிளறிவிடவும். பால் பாதியாகக் குறுகியதும் கொழுப்பு நீக்காத கெட்டிப் பால் அல்லது மில்க் மெயிட் சேர்க்கவும். இரண்டும் கொதித்து வரும்போது சீனி போடவும். சீனி கரைந்து கொஞ்சம் திக்காக ஆகும்போது குங்குமப் பூவைப் போடவும்.

ரஸகுல்லாக்களை எடுத்து நீரில் போட்டு லேசாக அமுக்கி ஜீராவை வெளியேற்றி விட்டு பாலில் போட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக விடவும். இறக்கி வைத்து வனிலா எஸன்ஸ் சேர்த்து பருப்புவகைகளத் தூவி குளிரவைத்துப் பரிமாறவும்.

3. தூத் பேடா :-

தேவையானவை :-

பால் – 2 லிட்டர்
பால் பவுடர் – 100 கி
சீனி – 2 கப்
முந்திரி – 30
நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை :-
முந்திரிகளை முழுதாக நெய்யில் வறுத்து வைக்கவும். பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் கரண்டி போட்டுக் காய்ச்சவும். பாதியாகக் குறுகும்போது பால் பவுடரைத் தூவிச் சேர்க்கவும். நன்கு உருண்டு வரும்போது சீனி சேர்க்கவும். மொத்தமாக அரைமணி நேரத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வெந்து இறுகி வரும்போது இறக்கி வைக்கவும். கையில் நெய்யைத் தடவிக் கொண்டு எலுமிச்சை சைஸ் உருண்டை செய்து அதில் முந்திரியைப் பதித்து வைக்கவும்.

4. தேங்காய் அல்வா :-

தேவையானவை :-
தேங்காய் – 2
காய்ச்சிய பால் – அரை லிட்டர்
கார்ன் ஃப்ளோர் – 1 டீஸ்பூன்
சீனி – ஒன்றரை கப்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி – 10
ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:-
தேங்காயை உடைத்து வெண்மையாகத் திருகி பால் ஊற்றி அரைக்கவும். அரைத்த விழுதை கார்ன் ஃப்ளோருடன் கலந்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு சீனியைச் சேர்க்கவும்.

அடுப்பில் வைத்துக் கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து சீனி கரைந்து கொதித்து அல்வா இறுகி வரும்போது நெய்யில் முந்திரியை வறுத்து அப்படியே போடவும். நெய் போட்டதும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வேறு பவுலில் மாற்றவும். ஏலப்பொடி தூவவும்.

5. குழாய்ப் புட்டு :-

தேவையானவை :-
பச்சரிசி – 2 கப்
தேங்காய் – 1
உப்பு – 1 சிட்டிகை.

குழாய்ப் புட்டு செய்ய குழாய்ப் புட்டுக்குழல் பாத்திரமும் மாவு சலிக்க சல்லடையும் வேண்டும்.

செய்முறை :-
பச்சரிசியக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் அரைத்து நைஸ் சல்லடையில் சலிக்கவும். மீதி அரிசியையும் குருணையையும் சேர்த்து அரைத்துச் சலிக்கவும். மாவில் உப்புக் கலந்துபிசறி வைக்கவும்.

தேங்காயை உடைத்து தோல் வராமல் மென்மையாகத் துருவவும். குழாய்ப் புட்டுப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நீர் ஊற்றவும். அதன் குழல் போன்ற பகுதியில் அச்சைப் போட்டு முதலில் கொஞ்சம் மாவு பின் தேங்காய்த் துருவல் போடவும். இதே போல் மூன்று லேயர் போட்டு பாத்திரத்தில் ஃபிட் செய்து அடுப்பில் வைத்து வேகவுடவும். பத்து நிமிடங்களில் வெந்துவிடும். வெந்ததும் இறக்கி மூன்று பாகங்களாகப் பிரிக்கவும். ஏலப் பொடியுடன் சீனியோ, வெல்லமோ அல்லது கொண்டக்கடலைக்குழம்போ வைத்துப் பரிமாறவும்.

6.. பால் பணியாரம் :-
தேவையானவை :-
பச்சரிசி  -  1 ஆழாக்கு
வெள்ளை உளுந்தம் பருப்பு - 1 ஆழாக்கு.
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய்பொறிக்கத் தேவையான அளவு.
காய்ச்சிய பால் - 1 லிட்டர்
ஜீனிஅரை கப்
ஏலப்பொடி - 1 சிட்டிகை.
செய்முறை:-
பச்சரிசி உளுந்தம்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும். ஒரு துணியில் துளை செய்து மாவை அதில் நிரப்பி துளித்துளியாய்க் காய்ந்த எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுக்கவும்.

பாலைக் காய்ச்சி சீனி சேர்த்து ஏலப் பொடி போடவும். அதில் பொரித்த பணியாரங்களைப் போட்டு ஊறவைத்துப் பரிமாறவும்.

7. வெள்ளைப் பணியாரம்..:-

தேவையான பொருட்கள்.. :- பணியாரப் பச்சை ( பச்சரிசி ) - 2 ஆழாக்கு தலை தட்டி. வெள்ளை உளுந்து - அரிசியின் மேல் கோபுரமாக ( தோராயமாக 1/4 ஆழாக்கு) உப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - பொறிக்க.. செய்முறை:- அரிசி்யையும் உளுந்தையும் சேர்த்துக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

நன்கு மையாக அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயைக் கடாயில் காயவைத்து மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மேலெழும்பியதும் திருப்பி விட்டு சூடாக எடுத்து மிளகாய்த்துவையல்., () கதம்பச் சட்னி., () வெங்காயம் தக்காளி கெட்டிச் சட்னியுடன் பரிமாறவும்.. விருப்பம்:- அரை தேக்கரண்டி சீனியும் பாலும் விட்டு நன்கு மாவை அடித்து ஊற்றினால் பணியாரம் மென்மையாக வரும் . பி. கு. :- பணியாரம் ரொம்ப தட்டையாக வந்தால் இட்லி அல்லது தோசை மாவை சிறிது சேர்த்துக் கொள்ளவும். நடுவில் ரொம்ப உப்பலாக., கனமாக வந்தால் இடியாப்ப மாவு அல்லது அரிசி மாவை சேர்க்கவும்.

8 .பால் பாயாசம். :-

தேவையானவை:-
பால் – 2 லிட்டர்
பாசுமதி அரிசி – 1 டீஸ்பூன்
சீனி – 1 கப்

செய்முறை:-
பாலை குக்கரில் கொதிக்க விடவும். அவ்வப்போது கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும். பாதியாக சுண்டும்போது பாசுமதி அரிசியை மிக்ஸியில் பொடியாக்கி சிறிது பால் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். பால் மூன்றில் ஒரு பங்கு திக்காக ஆகும்போது சீனி சேர்த்துக் கரைந்து கொதித்து வாசனை வந்ததும் இறக்கவும். 


9. பகாளாபாத். :-

தேவையானவை :-
பச்சரிசி – கால் கிலோ
பால் – ஒன்றரை லிட்டர்
தண்ணீர் – அரை லிட்டர்.
தயிர் – அரை கப்
உப்பு – அரை டீஸ்பூன்
முந்திரி – 10
கிஸ்மிஸ் – 10
மாதுளை முத்துகள் – ஒரு கைப்பிடி
வெள்ளரிக்காய் – பொடியாக அரிந்தது ஒரு கைப்பிடி
துருவிய காரட் – ஒரு கைப்பிடி.
வெண்ணெய் – 2 டீஸ்பூன்

தாளிக்க :-
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
பச்சைமிளகாய் – 1 பொடியாக நறுக்கவும்.
கருவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை:-
அரிசியைக் களைந்து பாலும் நீரும் சேர்த்து கொதிக்கும்போது போட்டு வேக விடவும். சிம்மில் வைத்து நன்கு வெந்ததும் இறக்கி குழைத்து ஆறவைத்து வெண்ணெயும் தயிரும் உப்பும் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம் பெருங்காயம் பச்சைமிளகாய் கருவேப்பிலை தாளித்துப் போடவும் முந்திரி கிஸ்மிஸையும் பொரித்துப் போடவும்.

நன்கு தளரக் கிளறி மாதுளை முத்துகள் துருவிய காரட் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு குளிரவைத்துப் பரிமாறவும். 

வாசகி கடிதம் :)


டிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் ஏப்ரல் 15 - 30, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. 

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...