எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 டிசம்பர், 2015

கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ் , KARTHIGAI DEEPAM RECIPES.


கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ்

1.கார்த்திகை அவல் வெல்லப் பொரி
2.கார்த்திகை அடை
3.எள்ளுப் பொரி உருண்டை
4.கம்புப் பொரி உருண்டை
5.பொரி கடலை உருண்டை.
6.ஃப்ரூட்ஸ் & நட்ஸ் அவல்
7.வெல்லஅவல் பால்அவல் தேங்காய் அவல்.
8.பொரி பூந்தி சாலட்
9.பிசினரிசி பாசிப்பருப்புப் பாயாசம்.


1.கார்த்திகை அவல் வெல்லப் பொரி.


தேவையானவை :- அவல் – 2 கப், வேர்க்கடலை – 1 கைப்பிடி, பொட்டுக்கடலை – 1 கைப்பிடி, தேங்காய் – சின்ன கீத்து. வெல்லம் – அரை கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன். ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை :- வெறும் வாணலியில் வேர்க்கடலை, பொட்டுக்கடலையை வறுத்து ஒரு பௌலில் போடவும். நெய்யில் தேங்காயை சின்ன ஸ்லைசாக வெட்டி நன்கு வதக்கி க்ரிஸ்பானதும் எடுக்கவும். அவலை கொஞ்சம் கொஞ்சமாக நெய்யில் பொரித்து எடுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டிப் பாகுவைத்து அதில் ஏலப்பொடி சேர்த்து அவல் தேங்காய் வேர்க்கடலை பொட்டுக்கடலையைப் போட்டுப் புரட்டி உடனே இறக்கவும். வெல்லப்பாகு எல்லாப் பக்கமும் படுவது போல கரண்டியால் அவல் மிக்ஸரை கிளறி விடவும். லேசாக ஆறியதும் கரகரப்பாக இருக்கும் . நிவேதிக்கவும்.

2.கார்த்திகை அடை:-

தேவையானவை :- பச்சரிசி – அரை கப், புழுங்கல் அரிசி – அரை கப், உளுந்து – ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு – அரை கப், துவரம் பருப்பு – அரை கப் மிளகு – 20, தேங்காய் – ஒரு துண்டு பல் பல்லாக நறுக்கவும். உப்பு – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :- பச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் களைந்து ஊறவைக்கவும். பாசிப்பருப்பு துவரம் பருப்பை தனியாகக் களைந்து ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறியதும் முதலில் புழுங்கல் அரிசி பச்சரிசி உளுந்தை கரகரப்பாக அரைத்து அதில் பாசிப்பருப்பு துவரம்பருப்பை சேர்த்து அரைக்கவும். மிளகைத் தட்டிப் போட்டு உப்பு சேர்த்துக் கலக்கி தோசைக்கல்லில் அடையாகத் தட்டவும். இதன் மேல் தேங்காய்ப் பல்லுகளைப் பதித்து சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வேகவைத்து இறக்கி வெல்லம் வெண்ணெயோடு நிவேதிக்கவும்.

3.எள்ளுப் பொரி உருண்டை.

தேவையானவை :- நாட்டு எள்ளு – 1 கப், வெல்லம் – 1 கப். பச்சரிசி – ஒரு கைப்பிடி.

செய்முறை:- எள்ளைக் களைந்து காயவைத்து வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டுப் பொரிக்கவும். அரிசியை ஊறவைத்து வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும். இத்துடன் தூள் செய்த வெல்லம் நாட்டு எள்ளுப்பொரி சேர்த்து நன்கு சுற்றி சுற்றி எடுத்து உருண்டை செய்து நிவேதிக்கவும்

4.கம்பு பொரி உருண்டை

தேவையானவை :- கம்பு – 1 கப். வெல்லம் – 1 கப். வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை :- கம்பை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு பூப்போலப் பொரிந்ததும் எடுத்துப் பொடிக்கவும். வேர்க்கடலையையும் வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். வெல்லத்தைத் தட்டிப் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு வைத்து இதில் கம்பு வேர்க்கடலை கலவையைப் போட்டுக் கிளறி உருண்டைகள் பிடித்து நிவேதிக்கவும்.


5.பொரி பொட்டுக்கடலை உருண்டை.

தேவையானவை :- பொரி – 4 கப் பொட்டுக்கடலை – அரை கப், வெல்லம் – 1 கப். ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை :- பொட்டுக்கடலையை லேசாக வறுத்து பொரியுடன் போடவும். வெல்லத்தை கெட்டிப் பாகு காய்ச்சி ஏலப்பொடி சேர்க்கவும். இதில் பொரி பொட்டுக்கடலைக் கலவையை போட்டுக் கிளறி உடனடியாக உருண்டைகள் பிடிக்கவும். நிவேதிக்கவும். . ( உருண்டை பிடிக்கும்போது கையில் ஒட்டினால் சிறிது அரிசிமாவைத் தொட்டுக் கொள்ளவும். )


6. ஃப்ரூட்ஸ் & நட்ஸ் அவல்.:-

தேவையானவை :- அவல் – 1 கப், ஆப்பிள் – 1 ( சின்னம் ), மாதுளை முத்துகள் – 1 கைப்பிடி, விதையில்லாத பேரிச்சம்பழம் – 4, கொப்பரை – 1 துண்டு, வறுத்த பாதாம், முந்திரி – தலா 6, தேன் – 2 டேபிள் ஸ்பூன். குங்குமப்பூ – 1 சிட்டிகை. கல்கண்டு – 1 டேபிள் ஸ்பூன். ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை :-

அவலை சுத்தம் செய்து ஒரு பௌலில் போடவும். அதில் தோலோடு துண்டுகள் செய்த ஆப்பிள், மாதுளை முத்துகள் சேர்க்கவும். வறுத்த பாதாம் முந்திரியை துண்டுகள் செய்து சேர்க்கவும். கொப்பரையை மெல்லிய ஸ்லைசாக செய்து சேர்க்கவும். கல்கண்டை சேர்க்கவும். பேரீச்சம் பழத்தை நான்காக துண்டு செய்து போடவும். ஏலப்பொடியைத் தூவவும். தேனில் குங்குமப்பூவைக் கலந்துவிட்டு மேலாக ஊற்றிக் கிளறி சிறிது நேரம் வைத்திருந்து நிவேதிக்கவும்.


8. வெல்ல அவல், பால் அவல், தேங்காய் அவல். :-

வெல்ல அவல் :- தேவையானவை – சிவப்பரிசி அவல் – 1 கப், நாட்டுச் சர்க்கரை – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை :- அவலைக் களைந்து வடிகட்டி சிறிது தண்ணீர் தெளித்து ஊறவைக்கவும். அதில் நாட்டுச் சர்க்கரை, ஏலப்பொடி தேங்காய்த் துருவல் , உப்பு கலந்து நிவேதிக்கவும்.

பால் அவல் :- தேவையானவை :- ரோஸ் அவல் – 1 கப் , தேங்காய் – அரை மூடி. பனங்கற்கண்டு – 1டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- தேங்காயைக் கீறி பனங்கற்கண்டுடன் போட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அரை கப் பால் எடுக்கவும். ரோஸ் அவலை சுத்தம் செய்து இந்தப் பாலை ஊற்றிக் கிளறி பத்து நிமிடம் கழித்து நிவேதிக்கவும்.

தேங்காய அவல் :- கைகுத்தல் அரிசி அவல் – 1 கப், தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன். கடுகு – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 ஆர்க், எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன்

செய்முறை :- கைகுத்தல் அரிசி அவலைக் களைந்து வடிகட்டி லேசாகத் தண்ணீர் தெளித்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். இதில் உப்பையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் , கருவேப்பிலை சேர்த்து வதக்கி அதில் அவல் தேங்காய்க் கலவையைக் கொட்டிக் கிளறி இறக்கி நிவேதிக்கவும்.


9. பொரி பூந்தி சாலட்

தேவையானவை :- பொரி – 1 கப், காரா பூந்தி – அரை கப், துருவிய காய்கறிக் கலவை – அரை கப் ( காரட், பீட்ரூட் ), சின்ன வெங்காயம் – 1 துருவவும். கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி, மிளகு சீரகப் பொடி – கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு – சில துளிகள்.

செய்முறை :-

ஒரு பௌலில் துருவிய காய்கறிக் கலவை, துருவிய வெங்காயம் பொடியாக அரிந்த கொத்துமல்லித்தழையைப் போட்டு மிளகு சீரகப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். பரிமாறும் சமயம் இதில் காராபூந்தியையும் பொரியையும் சேர்த்துக் கலக்கி உடனே பரிமாறவும்.

10.பிசினரிசி பாசிப்பருப்புப் பாயாசம்.

தேவையானவை :- பிசினரிசி ( ஜவ்வரிசி ) – 1 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், பால் 2 கப். சர்க்கரை – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10.

செய்முறை :- பாசிப்பருப்பை பதமாக வேகவைத்து இறக்கவும். ஒரு வாணலியில் நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸைப் பொரித்தெடுக்கவும். அதில் மிஞ்சும் நெய்யில் பிசினரிசியைப் போட்டு வறுக்கவும். பிசினரிசி பொரிந்ததும் ஒரு கப் கொதிநீர் விட்டு வேகவைக்கவும். வேகும்போதே பாசிப்பருப்பையும் 2 கப் பாலையும் சேர்க்கவும். பிசினரிசி கண்ணாடி போல வெந்ததும் சீனி சேர்த்துக் கரைந்து கொதித்ததும் இறக்கவும். இதில் ஏலப்பொடி, முந்திரி கிஸ்மிஸ் தேங்காய்த் துருவல் கலந்து நிவேதிக்கவும். 

ிஸ்கி :- இந்தெசிப்பீஸ் 3. 12. 2015 குமம் பக்ி ஸ்பில் வெளியானை. 

ிஸ்கி 2. ீபாவி பாரெசிப்பீஸை பாராட்டி எழியம்பம்பேட்டை என். சாம்பூர்த்ி அவர்கட்கும், வேலூர் சி. எஸ். ஆனந்திக்கும் ார்ந்தன்றி. ! 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...