எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 29 மார்ச், 2016

பங்குனி உத்திரம் ரெசிப்பீஸ் PANGUNI UTHTHIRAM RECIPES.1. சூஜி தேங்காய் பர்ஃபி
2. வாழைப்பூ அடை
3. மல்லி தோசை.
4. ரவை அரிசி வடை
5. கோஸ் சூப்
6. சிரட்டைப் புட்டு
7. வெந்தய ஊத்தப்பம்.
8. கத்திரி கொத்ஸு
9. மீல்மேக்கர் ரைஸ்
10. பரங்கிக்காய் பாயாசம்.
 1.சூஜி தேங்காய் பர்ஃபி
தேவையானவை :-
சூஜி  ( வெள்ளை ரவை ) -  2 கப், தேங்காய் – ஒரு மூடி, பால் – 4 கப், சர்க்கரை – 2 கப், நெய் – 1 கப், உப்பு – 1 சிட்டிகை, ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, முந்திரி – 20

செய்முறை:-
தேங்காயைப் பொடித்துக் கொள்ளவும். ஒரு பானில் நெய்யை ஊற்றி முந்திரியை வறுத்து எடுக்கவும். அதிலேயே மிதமான தீயில் சூஜியைப் போட்டு வெண்மையாகப் பொரியும்படி வறுக்கவும். தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு வறுபட்டு வாசம் வந்ததும் ( ப்ரவுன் ஆகக் கூடாது) கொதிக்கும் பாலை ஊற்றிக் கிளறி வேகவிடவும். வெந்ததும் ஒரு சிட்டிகை உப்பையும் சர்க்கரையையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து வெந்ததும் முந்திரி ஏலப்பொடி போட்டு தட்டில் கொட்டி துண்டுகள் போட்டு ஆறியதும் எடுத்து நிவேதிக்கவும். 

2. வாழைப்பூ அடை :-
தேவையானவை :-
பச்சரிசி – 1 கப், துவரம்பருப்பு – 1 கப், கடலைப்பருப்பு – 1 கப், வாழைப்பூ – பாதி, பெரிய வெங்காயம் – 1, சோம்பு – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 8, தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
பச்சரிசியைக் களைந்து தனியாக ஊறவைக்கவும். துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் களைந்து ஊறவைக்கவும். வாழைப்பூவில் நரம்பெடுத்து சுத்தம் செய்து வைக்கவும். மிக்ஸியில் மிளகாய், சோம்பு உப்பு சேர்த்துப் பொடித்து வாழைப்பூவைப் போட்டு அரைக்கவும். அதை வழித்து ஒரு பௌலில் போட்டு அரிசியைக் கொரகொரப்பாக அரைத்து ஊற்றவும். அதன்பின் பருப்பு வகைகளையும் கொரகொரப்பாக அரைத்து ஊற்றவும். தேங்காய்த் துருவல், மஞ்சள் தூள் சேர்த்து தோசைக்கல்லில் அடைகளாகச் சுட்டு சுற்றிலும் தேவையான எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாகச் சுட்டுப் பரிமாறவும். 

3. மல்லி தோசை.
தேவையானவை :-
கொத்துமல்லித்தழை – ஒரு கட்டு, தோசை மாவு – 10 டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் – 1, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி.

செய்முறை:-
கொத்துமல்லியை சுத்தம் செய்து தழைகளைப் பொடியாக அரிந்து வைக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக அரிந்து உப்பு சேர்த்து கொத்துமல்லித்தழையில் கலக்கி வைக்கவும். தோசைக்கல்லில் தோசை மாவை நன்கு தேய்த்து ஒரு கைப்பிடி கொத்துமல்லிக் கலவையைத் தூவி எண்ணெய் ஊற்றி மூடி போட்டு வேகவிட்டு திருப்பிப் போட்டும் வேக வைத்துப் பரிமாறவும். 

4. ரவை அரிசி வடை:-
தேவையானவை :- 
வெள்ளை ரவை – 1 கப், பச்சரிசிக் குருணை – 1 கப், மிளகு – 15, பெரிய வெங்காயம் – 1, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, இஞ்சி – ஒரு இஞ்ச் துண்டு, பச்சை மிளகாய் – 1, உப்பு – முக்கால் டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை :-
வெள்ளை ரவையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பச்சரிசிக் குருணையில் மிளகு கருவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும். ரவையை உப்புடன் சேர்த்து இந்தக் கலவையில் போட்டுப் பிசைந்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். எண்ணெயைக் காயவைத்து வடையை ஸ்டார் ஷேப்பில் தட்டிப் பொரித்தெடுக்கவும். 

5. கோஸ் சூப்:-
தேவையானவை :-
கோஸ் – கால் பாகம், உருளைக்கிழங்கு – 1, பால் – 2 கப், மைதா – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – 2 பல், பெரிய வெங்காயம் – 1, மிளகுத்தூள் – கால் டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்,
செய்முறை:-
கோஸ், உருளைக்கிழங்கு, பூண்டு, பெரிய வெங்காயத்தை குக்கரில் ஒரு விசில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வைக்கவும். ஒரு பானில் வெண்ணெயை  உருக வைத்து அதில் மைதாவைப் போட்டு வறுக்கவும். அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்துக் கண்ணாடி போல் ஆனதும் கோஸ் கலவையைச் சேர்த்து மிதமான சூட்டில் இறக்கவும். இதில் உப்பு மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும். 
6. சிரட்டைப் புட்டு:-
தேவையானவை :-
நன்கு வழுவழுப்பாகத் தேய்த்த துளையுள்ள கொட்டாங்கச்சி – 5, பச்சரிசி மாவு – 2 கப், தேங்காய்த்துருவல் -2 கப், சர்க்கரை – 1 கப், 
செய்முறை:-
பச்சரிசியை லேசாக வறுக்கவும். அதை சிரட்டையில் நிரப்பி தேங்காய்த் துருவலை மேலே நன்கு பரப்பி இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் நன்கு ( 20 நிமிடம் வேகவிடவும் ). வெந்ததும் இறக்கி சர்க்கரையைத் தூவிப் பரிமாறவும். அல்லது கடலைக் குழம்புடன் பரிமாறலாம்.

7. வெந்தய ஊத்தப்பம்.
தேவையானவை :-
வெள்ளைக்கார் அரிசி – 2 கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – கால் கப், உப்பு – அரை டீஸ்பூன், 
செய்முறை:-
வெள்ளைக்கார் அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக ஊறவைக்கவும். வெந்தயத்தைத் தனியாக ஊறவைக்கவும். முதலில் வெந்தயத்தைப் போட்டு பாதி அரைத்தபின் அரிசி உளுந்தைச் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து எட்டு மணி நேரம் ஊறவிடவும். தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் ஊத்தப்பமாக ஊற்றி மூடி போட்டி வெந்ததும் திருப்பி விட்டு வெந்ததும் இறக்கி தக்காளி காரச் சட்னி அல்லது கொத்துமல்லிச் சட்னியோடு பரிமாறவும். 
8. கத்திரி கொத்ஸு:-
தேவையானவை:-
கத்திரிக்காய் – கால் கிலோ, வரமிளகாய் – 10, மல்லி – 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 2, புளி – நெல்லி அளவு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 துண்டு, வெல்லம் – சிறு துண்டு, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், உளுந்து – 2 டீஸ்பூன். 
செய்முறை:-
கத்திரிக்காய், வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயைப் பொடியாக அரியவும். மிளகாய் மல்லியை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். உப்புப் புளியை ஊறவைத்து 1 கப் சாறு எடுக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து கத்திரிக்காய் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், உப்புப் புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். வறுத்த பொடியைப் போட்டு சில நிமிடம் கொதித்ததும் வெல்லத்தைப் பொட்டு இறக்கவும்.
  
9. மீல்மேக்கர் ரைஸ்:-
தேவையானவை.:-
பாசுமதி அரிசி – 2 கப், மீல்மேக்கர் – 1 கப், பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், தக்காளி – 2, கொத்துமல்லி புதினாத்தழை – 1 கைப்பிடி, பச்சைமிளகாய் – 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய் , கல்பாசிப்பூ, மராட்டி மொக்கு – தலா 2, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன். உப்பு – ஒரு டீஸ்பூன் , வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-
பாசுமதி அரிசியைக் களைந்து சிறிது எண்ணெயில் வறுத்து வைக்கவும். மீல்மேக்கரை வெந்நீரில் போட்டு அலசிப் பிழிந்து இரண்டாக நறுக்கி வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் கல்பாசிப்பூ, மராட்டி மொக்கு போட்டுத் தாளித்துப் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். இதில் மீல்மேக்கரைப் போட்டு நன்கு வதக்கி தக்காளி, கொத்துமல்லி புதினாத்தழை, இரண்டாக அரிந்த பச்சைமிளகாய் போட்டு அரிசியையும் போட்டுப் புரட்டி நான்கு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஒரு விசில் வேகவைத்து இறக்கி வெள்ளரி தயிர்ப்பச்சடியோடு பரிமாறவும்.

10. பரங்கிக்காய் பாயாசம். :-
தேவையானவை :-
நன்கு கனிந்து சிவந்த பரங்கிக்காய் – 1 துண்டு, பால் – 4 கப், சர்க்கரை – முக்கால் கப், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:-
முந்திரி கிஸ்மிஸை நெய்யில் வறுக்கவும். அதே நெய்யில் பரங்கிக்காயைத் துருவிப் போட்டு வறுக்கவும். ஒரு கப் பால் ஊற்றி குக்கரில் வேகவைத்து நன்கு மசிக்கவும். மிச்சப் பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் ஏலப்பொடி தூவி முந்திரி கிஸ்மிஸை சேர்த்து நிவேதிக்கவும். 

டிஸ்கி:- இந்த நிவேதனங்கள் 24.3. 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...