எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 29 மார்ச், 2016

ராமநவமி, புத்தாண்டு ரெசிப்பீஸ் . RAMANAVAMI, NEW YEAR RECIPES.ராமநவமி, புத்தாண்டு ரெசிப்பீஸ் :-

1. பனீர் போளி.
2. சௌசௌ பாத்
3. அரைக்கீரை வடை
4. கோதுமைப் புட்டு.
5. கொள்ளு சாலட்

6. பச்சைமிளகாய்த் தொக்கு
7. ஸ்டஃப்ட் பாகற்காய்
8. ப்ராகோலி மிளகுக் கறி.
9. ஆரஞ்சு தோல் பச்சடி.
10. மாங்காய் தேங்காய்ப் பாயாசம்


1.பனீர் போளி.

தேவையானவை :- மைதா – 2 கப், பனீர் – 200 கிராம், போரா ( தூள் சர்க்கரை ) – ஒரு கப், நெய் – 1 கப், எண்ணெய் – 1 கப். உப்பு – 1 சிட்டிகை

செய்முறை :- மைதாவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு திட்டமாகப் பிசைந்து எண்ணெயில் நான்கு மணி நேரம் ஊறப்போடவும். பனீரைத் உதிர்த்து போரா சேர்த்து நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மைதாவில் உள்ளங்கை அளவு உருண்டை எடுத்து கிண்ணம் செய்து எலுமிச்சை அளவு பனீரை எடுத்து உள்ளே பூரணமாக வைத்து போளியாகத் தட்டி நெய்யில் சுட்டு நிவேதிக்கவும்.

2. சௌசௌ பாத்:-

தேவையானவை:- வெள்ளை ரவை – 1 கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – பாதி, காரட், பீன்ஸ், பட்டாணி – 1 கப் நறுக்கியது, கருவேப்பிலை – 2 இணுக்கு, கொத்துமல்லித்தழை – 1 கைப்பிடி, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 20 மிலி, கடுகு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- வெள்ளை ரவையை வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் கடலைப்பருப்பு வேர்க்கடலை தாளித்து பெரிய வெங்காயம் கருவேப்பிலை, காய்கறிக்கலவையைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து இரண்டேகால் கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் இரு நிமிடங்களுக்குப் பிறகு தக்காளியைச் சேர்த்து ரவையைத் தூவவும். கட்டிகள் இல்லாமல் கிளறி தண்ணீரை உறிஞ்சி நன்கு வெந்ததும் இறக்கி கொத்துமல்லித்தழை தூவி நெய் ஊற்றி நிவேதிக்கவும்.

3.அரைக்கீரை வடை:-

தேவையானவை :- கடலைப்பருப்பு – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், உளுந்து – ஒரு கைப்பிடி, அரைக்கீரை – ஒரு கட்டு, பெரிய வெங்காயம் – 1, சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வரமிளகாய் – 1. உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- கடலைப்பருப்பு துவரம்பருப்பு உளுந்தை இரண்டு மணி நேரம்  ஊறவைத்து மிளகாய் சோம்பு சேர்த்து கெட்டியாக கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மாவில் போட்டு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து எண்ணெயைக் காயவைத்து ஆமை வடைபோல தட்டி பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

4.கோதுமைப் புட்டு.:-

தேவையானவை:- சம்பா கோதுமை – 1 கப், சர்க்கரை – கால் கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- சம்பாகோதுமையை சிறிது சிறிதாக வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடிக்கவும். தண்ணீரைத் தெளித்துத் தெளித்துப் பிசையவும். ஓரளவு பிடிக்கும் பதம் வந்ததும் உப்பு சேர்த்து நன்கு பிசறி இட்லித் தட்டில் பத்து நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சர்க்கரை, தேங்காய்த்துருவலைக் கலந்து நிவேதிக்கவும்.

5.கொள்ளு சாலட்:-

தேவையானவை :- கொள்ளு – 1 கப், வெள்ளரிக்காய் – சின்னம் – 1, காரட் – சின்னம் – 1, கொத்துமல்லித்தழை – சிறிது. சின்ன வெங்காயம் – 4 பொடியாக அரியவும். வரமிளகாய் பூண்டு சாஸ் – 2 டீஸ்பூன். உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:- கொள்ளை வறுத்து குக்கரில் வேகவைத்து நீரை வடித்து வைக்கவும். இதில் உப்பு வரமிளகாய் பூண்டு சாஸை சேர்த்து நன்கு கலக்கவும். வெள்ளரிக்காயையும், காரட்டையும் துருவிப் போடவும். சின்னவெங்காயத்தையும் கொத்துமல்லித்தழையையும் தூவிப் பரிமாறவும்.

6.பச்சைமிளகாய்த் தொக்கு:-

தேவையானவை :- ஊசிப் பச்சைமிளகாய் – 30, பெரிய வெங்காயம் – 2,புளி –எலுமிச்சை அளவு, உப்பு – அரை டீஸ்பூன், வெல்லம் – சிறு துண்டு, எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு. அரிசிமாவு – கால் டீஸ்பூன்.

செய்முறை:- பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் வட்டவட்டமாக நைஸாக நறுக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். எண்ணெயில் கடுகு பெருங்காயம் தாளித்து வெங்காயம் பச்சைமிளகாயை நன்கு சுருள வதக்கவும். புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். முக்கால் பதம் சுண்டியதும் அரிசிமாவைக்கரைத்து ஊற்றி வெல்லம் தட்டிப் போட்டு எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.


7.ஸ்டஃப்ட் பாகற்காய்:-

தேவையானவை :- குட்டிப் பாகற்காய் 20 ( மிதி பாகல் ), பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பூண்டு – 10 பல், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 1 கப், உப்பு – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன் பனீர் அல்லது சோயா சங்க்ஸ் விரும்பினால் – ஒரு டேபிள் ஸ்பூன் அளவு.

செய்முறை:- பாகற்காய்களைக் கீறி விதைகளை எடுத்துக் கொள்ளவும். பெரியவெங்காயம் தக்காளி பூண்டைப் பொடியாக நறுக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு பாகற்காய் விதை, வெங்காயம் தக்காளி பூண்டைப் போட்டு வதக்கவும். பனீர் அல்லது சோயா சங்க்ஸை இப்போது பொடியாக அரிந்து சேர்க்கலாம். உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து வேகவைத்து எடுக்கவும். இதைப் பாகற்காய்களுக்குள் ஸ்டஃப் செய்து நூலால் கட்டவும். ஒரு பானில் எண்ணெயை ஊற்றி பாக்ற்காய்களை வரிசையாக அடுக்கி சிம்மில் வேகவைத்து எல்லாப் புறமும் திருப்பிப் பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

8.ப்ராகோலி மிளகுக் கறி.:-

தேவையானவை :- ப்ராகோலி – 1, மிளகு – 20, உப்பு – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2 , எண்ணெய் – 2 டீஸ்பூன். கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன்.

செய்முறை;- ப்ராகோலியை அரை நெல்லிக்காய் சைஸில் வெட்டவும். இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்துப் பொன்னிறமானதும் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். தண்ணீர் போல வதங்கியதும் ப்ராகோலியைச் சேர்த்து உப்புப் போடவும். நன்கு கலக்கி மிளகைப் பொடிசெய்து  தூவி இறக்கிப் பரிமாறவும்.

9.ஆரஞ்சுத்தோல் பச்சடி.:-

தேவையானவை:- ஆரஞ்சுத் தோல் – 1 ஆரஞ்சின் தோலை எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும். புளி – ஒரு எலுமிச்சை அளவு. சாம்பார் பொடி – 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன். வரமிளகாய் – 2 வெல்லம் – 1 துண்டு.

செய்முறை:- எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து வெந்தயம், பெருங்காயம் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளிக்கவும். அதில் பொடியாக அரிந்த ஆரஞ்சுத் தோலைப் போட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து கெட்டியாக ஊற்றி சாம்பார்த்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும். கொதித்து எண்ணெய் பிரியும் போது வெல்லம் தட்டிப் போட்டு இறக்கவும்.


10.மாங்காய் தேங்காய்ப் பாயாசம்:-

தேவையானவை:- மாங்காய் – 1, தேங்காய் – அரை மூடி, பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, வெல்லம் – 2 அச்சு, ஏலப்பொடி – 1 சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:- மாங்காயை சன்னமாகத் துருவவும். தேங்காயையும் சன்னமாகத் துருவி வைக்கவும். பாசிப்பருப்பை இரண்டு கப் தண்ணீரில் குழைய வேகவிடவும்.வெந்து கரைந்ததும் துருவிய மாங்காயைப் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். கொதிக்கும் போது வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். இறக்கி ஆறவிடவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது துருவிய தேங்காயைச் சேர்த்து ஏலப்போடி தூவி நன்கு கலக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துச் சேர்த்து நிவேதிக்கவும். 


டிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் 8- 4- 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...