எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அரிசிப் பருப்புச் சாதம்.

அரிசிப் பருப்புச் சாதம். 


தேவையானவை :- பச்சரிசி – 1 கப், துவரம்பருப்பு – கால் கப், தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 2, பச்சைமிளகாய் – 1, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, சாம்பார் தூள் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, கருவேப்பிலை – 1 இணுக்கு



செய்முறை:- பச்சரிசியையும் துவரம்பருப்பையும் கழுவி குக்கரில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவைத்து உதிர்க்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவைத்துக் கடுகு, உளுந்து கடலைப்பருப்பைத் தாளித்து வரமிளகாயையும் பச்சை மிளகாயையும் இரண்டாகக் கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூளும் கருவேப்பிலையும் போட்டுப் பொரிந்ததும் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், தக்காளியைச் சேர்க்கவும். நன்கு வதக்கி உப்பு, மஞ்சள்தூள், சாம்பார்தூள் சேர்த்து சுருள வதங்கியதும் இறக்கி ஆறவைக்கவும். இதில் வேகவைத்த சாதம் பருப்புக் கலவையைப் போட்டு நன்கு கிளறி நிவேதிக்கவும்.
  

புதன், 19 ஆகஸ்ட், 2020

சின்ன வெங்காய சாம்பார்.

சின்ன வெங்காய சாம்பார். 


தேவையானவை:- வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், உரித்த சின்ன வெங்காயம் -20, தக்காளி - 1, புளி - 3 சுளை, உப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - கால் இஞ்ச் கட்டி, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி - 1 சிட்டிகை. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து சீரகம் தலா 1 டீஸ்பூன், பெருங்காய்ப் பொடி - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1 இணுக்கு. கொத்துமல்லித்தழை - சிறிது. 

செய்முறை:- வேகவைத்த துவரம்பருப்பில் உரித்த சின்ன வெங்காயம், சதுரமாக வெட்டிய தக்காளியைப் போட்டுப் பெருங்காயமும் மஞ்சள் பொடியும் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி  ஒரு விசில் வரும்வரை குக்கரில் வேகவிடவும். வெந்ததும் திறந்து லேசாக கரண்டியால் மசித்து விடவும். உப்புப் புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி சாம்பார் பொடியைப் போட்டுக் கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கொதித்ததும் பெருங்காயப் பொடி கொத்துமல்லித்தழை தூவி இறக்கி வைத்துக் கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை தாளித்து இட்லி தோசை சாதத்துக்கு உபயோகப்படுத்தவும். 
  

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

திரட்டுப்பால்.

திரட்டுப்பால்.

தேவையானவை:- பால் - 1 லிட்டர், வெல்லம், கருப்பட்டி - 200 கி, எலுமிச்சை - அரை மூடி. 

செய்முறை:- பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றிக் காய்ச்சவும். நன்கு கொதித்து வரும்போது எலுமிச்சையின் விதையை எடுத்துவிட்டுச் சாறைப் பிழியவும். பால் திரண்டு விடும். சில சமயம் வெல்லம் கருப்பட்டியைப் போட்டாலே திரண்டு விடும். அதன் பின் சிம்மில் வைத்து அரைமணிநேரம் காய்ச்சி சுண்டியதும் இறக்கவும். 

கரண்டியை அதிகம் போட்டுக் கிளற வேண்டாம். அப்போதுதான் திரட்டுப்பால் கூடு கூடாக பாகு சேர்ந்து திரண்டு சுவையுடன் இருக்கும். இல்லாவிட்டால் மாவுபோல் ஆகி விடும். 
    

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

தாளிச்ச இடியாப்பம்

தாளிச்ச இடியாப்பம். 

தாளிச்ச இடியாப்பம். 



இதனைச் செட்டிநாட்டுப் பகுதிகளில் தாளிச்ச இடியாப்பன் என்பார்கள். 

தேவையானவை:- இடியாப்ப மாவு - 1 கப் , தயிர் - 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- இடியாப்பமாவை ஒரு பேசினில் போட்டு கால் டீஸ்பூன் உப்பைத் தூவவும். முக்கால் கப் தண்ணீரைக் கொதிக்கவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாவில் ஊற்றிக் கரண்டிக் காம்பால் கிளறவும். லேசாக எண்ணெயும் சேர்க்கலாம். நன்கு டைட்டாக இருக்கும்போது மாவை நன்கு பிசைந்து இடியாப்பக் கட்டையில் போட்டு இட்லிச் சட்டியில் பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுத்து உதிர்த்து வைக்கவும். 

தயிரை சிறிது நீர் சேர்த்துக் கடைந்து மாவில் தெளித்துப் பிசறி விடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு  உளுந்து தாளித்துப் பெரியவெங்காயம் இரண்டாக நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை தாளித்து மீதி உப்பைத் துவி இடியாப்பத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். இத்துடன் பச்சடி , கத்திரிக்காய் கோசமல்லி சேர்த்துப் பரிமாறவும். 
  

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

பொங்கல் சமையல் & பொங்கல் குழம்பு.

பொங்கல் சமையல் & பொங்கல் குழம்பு. 

பொங்கல் சமையலில் முதலில் சர்க்கரைப் பொங்கல், வெள்ளைப் பொங்கல் இடம் பெறும். இது இரண்டும் சூரியனுக்கு நேர் எதிரே கீழ் வாசலில் அல்லது முற்றத்தில் கோலமிட்டு ( முன்காலத்தில் - முப்பது வருடங்களுக்கு முன் அம்மா வீட்டில் சாமி வீட்டுக்கு எதிரில் கோலமிட்டு மணல் கொட்டி அதன் மேல் கோலமிடப்பட்ட செம்மண் யானையடிக்கல் வைத்து கோலமிடப்பட்ட இரும்பு அடுப்பை வைத்து அதன் மேல்)  கோலமிடப்பட்ட முறித்தவலையில் மஞ்சள் கொத்துக் கட்டிப் பொங்கல் இடுவார்கள்.  இப்போது எல்லாம் காஸ் அடுப்பில்தான். 

அதற்குள் அடுப்படியில் மூன்று குழம்பு, ரசம், நான்கு பொரியல் , ஒரு கூட்டு, பருப்பு, அப்பளம் நெய் தயார் செய்து இவற்றையும் இலையில் படைத்துக் கும்பிட்டு அடுப்புக்கும் சூரியனுக்கும் நிவேதித்துத் தேங்காய் உடைத்துத் தீப தூபம் காட்டி அதன் பின் சாமி அறைக்கு எடுத்து வந்து நிவேதித்து உண்பார்கள்.

கத்திரிக்காய், கருணைக்கிழங்கு, பரங்கிக்காய் இம்மூன்றையும் கெட்டிக் குழம்பு வைப்பார்கள். தக்காளி ரசம், பருப்பு, அப்பளம் பொரித்து நெய்யை உருக்கி வைப்பார்கள். வாழைக்காய் புளிக்கறி, அவரைக்காய், தட்டைப்பயித்தங்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன உப்புப் பொரியல். பலாக்காய் கூட்டு வைப்பார்கள். அம்மா வீட்டில் கீரை மசிப்பார்கள்.

இவற்றைப் படைத்துக் கும்பிட்டு உணவருந்தியதும் (சர்க்கரைப் பொங்கல் அநேகமாகத் தீர்ந்துவிடும். ) வெள்ளைப் பொங்கலை உருண்டையாக உருட்டி பெரிய பாத்திரத்தில் நீரில் போட்டு வைப்பார்கள். எல்லாக் காய்களையும் குழம்பையும் ரசத்தையும் பருப்பையும் ஒன்றாக்கிக் கொதிக்க வைத்து இறக்குவார்கள். இதுதான் பொங்கல் குழம்பு.

இரவு  ஆளுக்கொரு சோற்று உருண்டையுடன் மோர் ஊற்றி சுடச் சுட இந்தக் குழம்பையும் காயையும் கொடுப்பார்கள். தேவாமிர்தம். மறுநாள் இந்தப் பொங்கல் குழம்புடன் ஆப்பம் ( தேங்காய்ப்பாலும் உண்டு ) காலை டிபனாக இருக்கும். ஹ்ம்ம் அதெல்லாம் ஒரு காலம். :) 
    
Related Posts Plugin for WordPress, Blogger...