எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 16 ஜூலை, 2015

சம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். SUMMER SPECIAL RECIPES.சம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். :-

1 . நுங்குப் பாயாசம்
2. மாங்காய் ஜூஸ் – பன்னா.
3. மிண்ட் லெமனேட்
4. நன்னாரி/வெட்டிவேர் சர்பத்
5. கத்திரி முருங்கை கீரைத்தண்டு பலாவிதை சாம்பார்
6. மிக்ஸ்ட் வெஜ் ரெய்தா
7. தேன்குழல் வற்றல்
8. கறிவடகம்
9. வெள்ளைமிளகாய் ஊறுகாய் 

1.நுங்குப் பாயாசம்.


தேவையானவை :-
இளநுங்கு – 5, பால் – அரை லிட்டர், சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன். அரிசி மாவு – 1 டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை:-
பாலைக்காய்ச்சி அதில் சிறிது எடுத்து அரிசி மாவு சேர்த்துக் கரைத்துத் திரும்பப் பாலில் ஊற்றிக் கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அதில் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். நன்கு ஆறியதும் ஏலப்பொடி போடவும். இளநுங்கை நீருடன் கையால் மசித்தோ அல்லது மிக்ஸியில் விப்பர் செய்தோ பாலுடன் நன்கு கலக்கி உபயோகப்படுத்தவும். மிகவும் ருசியான பாயாசம் இது.

2. மாங்காய் ஜூஸ் – பன்னா.

தேவையானவை :-
மாங்காய் – 1, சர்க்கரை – 1 கப், உப்பு -2 டீஸ்பூன், ப்ளாக் சால்ட் – ஒன்றரை ஸ்பூன், சீரகப் பொடி – 1 டீஸ்பூன் வறுத்துப் பொடித்தது, புதினா இலைகள் – கால் கப், மிளகு – அரை டீஸ்பூன்.

செய்முறை:-
மாங்காயைத் தோல் சீவி துண்டுகளாக்கி 2 கப் தண்ணீரில் வேக வைக்கவும். மென்மையானதும் ஆறவைத்து சர்க்கரை, உப்பு , ப்ளாக் சால்ட், சீரகப் பொடி புதினா இலைகள், மிளகு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டவும். 5 கப் தண்ணீர் ஊற்றி ஐஸ்துண்டுகள் போட்டுக் கொடுக்கவும். கடும் கோடையைச் சமாளிக்க டெல்லியில் அதிகம் வழங்கப்படும் பானம் இது.

3.மிண்ட் லெமனேட் :-

தேவையானவை:-
சர்க்கரை – ஒன்றரை கப், புதினா – அரை கப், எலுமிச்சை -2, தண்ணீர் – அரை லிட்டர், இஞ்சி – கால் டீஸ்பூன் துருவியது, க்ரீன் ஃபுட் கலர் – 1 சிட்டிகை.

செய்முறை:- சர்க்கரையில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும் வடிகட்டி திரும்பவும் சிறிது நேரம் திக்காக ஆகும்வரை கொதிக்க விடவும். இறக்கி ஆற விடவும். எலுமிச்சையில் ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். புதினாவைக் கழுவி வைத்துக் கொள்ளவும். சர்க்கரைப் பாகு சிறிது ஆறியதும் எலுமிச்சை ஜூஸ், புதினா, துருவிய இஞ்சி போட்டு பச்சைக் கலர் சேர்த்து மூடி 3 மணி நேரம் வைக்கவும். வடிகட்டி ப்ரிஜ்ஜில் வைத்து தேவையான போது ஒரு பங்கு லெமனேட்டுடன் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து உபயோகிக்கவும். இது பார்ட்டிகளிலும் ஃப்ளைட்டுகளிலும் வெல்கம் ட்ரிங்காகவும் கொடுக்கப்படுகிறது.

4. நன்னாரி/வெட்டிவேர் சர்பத்.

தேவையானவை:-
நன்னாரி அல்லது வெட்டிவேர் – 100 கிராம், சர்க்கரை – 200 கிராம், தண்ணீர் – அரை டம்ளர். ( பாதாம் பிசின் , எலுமிச்சை சாறு சிறிதளவு + ஐஸ்துண்டுகள் )

செய்முறை :- நன்னாரி அல்லது வெட்டி வேரை சுத்தம் செய்து நன்கு அலசி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பை சிம்மில் வைத்துப் பாதியாக வத்தவிடவும். சர்க்கரையை அரை டம்ளர் தண்ணீரில் போட்டு அடுப்பில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இந்தப் பாகில் நன்னாரி வேகவைத்த நீரை வடிகட்டிச் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் தேவைப்படும்போது கண்ணாடி டம்ளரில் கால் பங்கு சர்பத் எடுத்து அதில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து பாதம் பிசின் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி 4 ஐஸ்துண்டங்கள் போட்டுக் கொடுக்கவும். 


5. கத்திரி முருங்கை மாங்காய் கீரைத்தண்டு பலாவிதை சாம்பார்.

தேவையானவை:-

கத்திரிக்காய் – 2, முருங்கைக்காய் – 1, மாங்காய் – 1, தண்டுக்கீரைத் தண்டு – 1, பலாவிதை – 10, வேகவைத்த துவரம் பருப்பு – 1 கப், உரித்த சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 1, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, சாம்பார் தூள் – 1 டேபிள் ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – கால் இஞ்ச் துண்டு, வரமிளகாய் – 2, கருவேப்பிலை – 1 இணுக்கு. 

செய்முறை:-
பலாவிதையை இரண்டாக வெட்டித் தோலுரித்து குக்கரில் பருப்போடு வேகவைத்துக் கொள்ளவும். அதில் முருங்கை, கத்திரி, கீரைத்தண்டு, சின்னவெங்காயம் தக்காளி பெருங்காயம் மஞ்சள்தூள் போட்டு திரும்ப ஒரு சவுண்ட் வைத்து வேக வைத்து அடுப்பை அணைக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து சாம்பார் தூள் போட்டு வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து காய் குழையாமல் லேசாகக் கிளறிவிட்டு மாங்காய் & புளிக்கரைசலை ஊற்றவும். அது கொதித்தது பச்சை வாசனை போனதும் எண்ணெயில் கடுகு உளுந்து பெருங்காயம் இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் கருவேப்பிலை தாளித்து அதில் போட்டு சிறிது நேரம் முடி வைத்துப் பின்பு உபயோகப்படுத்தவும்.


6.மிக்ஸ்ட் வெஜ் ரெய்தா:-

தேவையானவை :-

தயிர் – 2 கப், காரட் துருவியது – 1 டேபிள் ஸ்பூன், வயலட் முட்டைக்கோஸ் – 1 இலை தண்டு இல்லாமல் பொடியாக நறுக்கவும், பிஞ்சு பீன்ஸ் – 2 பொடியாக நறுக்கவும், வெங்காயம் சின்னது - 1 பொடியாக நறுக்கவும், தக்காளி சின்னது – 1 பொடியாக நறுக்கவும், வெள்ளரிக்காய் – 1 பிஞ்சு பொடியாக நறுக்கவும், ஸ்ட்ராபெர்ரி – 2, மாதுளை முத்துக்கள் – 1 டீஸ்பூன், மல்லித்தழை – பொடியாக அரிந்தது 1 டீஸ்பூன் , உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:-
அனைத்தையும் கலந்து உபயோகிக்கவும்.

7. தேன்குழல் வற்றல்:-

தேவையானவை:-
புழுங்கல் அரிசி – 2 கப், தண்ணீர் – 12 கப், உப்பு – 2 டீஸ்பூன், ரிப்பன் பக்கோடா அச்சு & பிழியும் கட்டை , எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
புழுங்கல் அரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் நன்கு வழுவழுப்பாக ஆட்டி வைக்கவும். இதை முதல்நாளே ஃப்ரிஜ்ஜில் ஆட்டி வைத்து விடலாம். மறுநாள் காலையில் ஒரு பெரிய பாத்திரத்தில் 12 கப் தண்ணீரை சூடுபடுத்தவும். அதில் அரைத்த மாவைக் கரைத்துக் கொட்டி மரத்துடுப்பு அல்லது அரிகரண்டியால் விடாமல் கிளறவும். வெந்ததும் உப்பு சேர்த்து கையில் ஒட்டாமல் கண்ணாடி பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

மொட்டைமாடி அல்லது பால்கனியில் வெய்யில் படும் இடத்தில் ஒரு துணியைப் பிழிந்து பாயில் விரிக்கவும். ரிப்பன் பக்கோடா செய்யும் அச்சை அதன் கட்டையில் போட்டு மாவைக் கரண்டியால் எடுத்து ஊற்றி சூட்டோடு பிழியவும். பட்டை பட்டையாக வரும்படிப் பிழிந்து ஒரு நாள் முழுவதும் காயவைக்கவும். மறுநாள் அதை பின்பக்கம் தண்ணீர் தெளித்து உரித்து செவ்வக வடிவில் வெட்டி தட்டுகளில் காயவைக்கவும். தேவையான போது எடுத்து எண்ணெயைக் காயவைத்துப் பொரித்துக் கொள்ளலாம். வெள்ளை வெளேரென்று பொரிந்து வரும் இது சுவையில் அரிசி அப்பளம் போலவே இருக்கும். பெரியவர்கள் & குழந்தைகளுக்கும் ஏற்றது.

8. கறிவடகம். (சின்ன வெங்காயம் )

தேவையானவை:-

வெள்ளை உருண்டை உளுந்து – 2 கப், சின்ன வெங்காயம் – 1 கிலோ, பூண்டு – 10 பல், ( விரும்பினால் ), மிளகாய்ப் பொடி – 2 டீஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, சீரகம், - 2 டீஸ்பூன், கடுகு – 2 டீஸ்பூன், ஜவ்வரிசி – 1 கைப்பிடி.

செய்முறை:-
உளுந்தை அதிகாலையில் ஊறவைத்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் நைசாக ஆட்டி எடுக்கவும். சின்ன வெங்காயத்தைத் தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். சிறிது பிசறி வைக்கவும். பூண்டையும் கருவேப்பிலையையும் பொடியாக நறுக்கவும். அரைத்த உளுந்து மாவில் சின்ன வெங்காயம் , பூண்டு, கருவேப்பிலை, சீரகம், கடுகு, உப்பு, மிளகாய்ப்பொடி, ஜவ்வரிசி சேர்த்து நன்கு பிசையவும்.

பிசைந்து ஒரு சுத்தமான துணியைப் பிழிந்து பாயில் போட்டு அதில் வடகத்தைக் கிள்ளி வைத்து வெய்யிலில் காயவைக்கவும். மறுநாள் அந்தத் துணியிலிருந்து உரித்து தட்டுகளில் நன்கு காயவைத்து டப்பாக்களில் எடுத்து வைக்கவும். இதை ஒரு வருடத்துக்கு  உபயோகிக்கலாம். எண்ணெயில் வறுத்து தயிர்சாதத்துக்கும் கலவை சாதங்களுக்கும் தொட்டுக் கொள்ளலாம். கறிவடகக் குழம்பு, துவையல் ஆகியனவும் செய்யலாம். 

9. வெள்ளைமிளகாய் சுண்டைக்காய் ஊறுகாய்.

தேவையானவை :-
நார்த்தங்காய்/கிடாரங்காய்/எலுமிச்சங்காய்ச் சாறு – 1 கப், வெள்ளை மிளகாய் – 100 கிராம், பிஞ்சு சுண்டைக்காய் – ஒரு கைப்பிடி.  

செய்முறை:-

நார்த்தங்காய் அல்லது கிடாரங்காய் அல்லது எலுமிச்சங்காயை வாங்கிக் கழுவித் துடைத்து மேலும் கீழும் வகிர்ந்து உப்பு சேர்த்து ஒரு ஜாடியில் ( கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் ) போட்டு வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து காய்ச்சி ஆறிய தண்ணீரை 2 கப் அதில் சேர்க்கவும். இன்னும் இரு நாட்கள் கழித்து வெய்யிலில் வேடு கட்டி காயவைத்து எடுத்து வைக்கவும். இதிலுள்ள காய்களை அவ்வப்போது உப்பு ஊறுகாயாகவோ மிளகாய்ப் பொடி சேர்த்தோ உபயோகித்துக் கொள்ளலாம்.

அதில் அதிகப்படியாக இருக்கும் சாறை வெள்ளை மிளகாய் ஊறுகாய் செய்ய எடுத்துக் கொள்ளலாம். வெள்ளைமிளகாய்களைக் கழுவித் துடைத்து காம்பை பாதியாக கட் செய்து இருபுறமும் வகிர்ந்து வைக்கவும். சுண்டைக்காய்களைக் காம்பு ஆய்ந்து கீறி வைக்கவும். ஒரு ஜாடியில் வெள்ளை மிளகாய்களையும் சுண்டைக்காயையும் போட்டு நார்த்தங்காய்/கிடாரங்காய்/எலுமிச்சை உப்புச் சாறை ஊற்றவும். இரு தினங்கள் ஊறியபின் ஒரு நாள் வெய்யிலில் வேடுகட்டிக் காயவைத்து உபயோகிக்கவும். மிகவும் ருசியான ஊறுகாய் இது. தயிர்சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.


டிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் ஜூன் 21, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...