எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 14 செப்டம்பர், 2015

வரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ். VARALAKSHMI VIRATHAM RECIPES,

வரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ். VARALAKSHMI VIRATHAM RECIPES.1.தேங்காய்த் திரட்டுப்பால்
2.மோத்தி பாக்
3.எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை
4.ஓட்ஸ் வெஜ் கொழுக்கட்டை
5.கோதுமை ரவை இட்லி.
6.கற்பூரவல்லி/ஓமவல்லி பஜ்ஜி
7.மதுர் வடை.
8.தேன் பழப் பாயாசம்
.

1.தேங்காய்த் திரட்டுப்பால்

தேவையானவை :-

பொடித்த தேங்காய் – 4 கப், பால் – 1 கப், சர்க்கரை – ஒன்றரை கப், வெண்ணெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 2, பாதாம், பிஸ்தா – தலா 5 ( ஊறவைத்துத் தோலுரித்து மெலிதாகச் சீவவும்.)

செய்முறை:-

அடிகனமான பானில் வெண்ணெயை உருக்கி அதில் பொடித்த தேங்காயைப் போட்டு வறுக்கவும். பொன்னிறமாக வறுத்து அதில் சர்க்கரையையும் பாலையும் சேர்க்கவும். பத்து நிமிடங்கள் நன்கு கிளறி வெண்ணெய் பக்கங்களில் நெய்யாகப் பிரியும்வரை வேகவைக்கவும். ஏலக்காயை பொடித்து வைக்கவும். மெலிதாகச் சீவிய பாதாம், பிஸ்தா, பொடித்த ஏலத்தூள் போட்டு நன்கு கிளறி நிவேதிக்கவும்.

2.மோத்தி பாக்

தேவையானவை :-

கடலை மாவு – 2 கப், சர்க்கரை – 3 கப், இனிப்பில்லாத கோவா – 1 கப், தண்ணீர் – ஒன்றரை கப், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள் – கால் டீஸ்பூன், கேசரித் தூள் – 1 சிட்டிகை, பேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு. சில்வர் ஃபாயில் பேப்பர் – 1 அலங்கரிக்க பொடியாக நறுக்கிய பிஸ்தா முந்திரி பாதாம்  மூன்றும் சேர்த்து – 3 டீஸ்பூன்.

செய்முறை:-

கடலைமாவில் அரிசிமாவு, உப்பு, பேக்கிங் பவுடர் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். எண்ணெயைக் காயவைக்கவும். சல்லடை அளவு துளைகள் உள்ள ஜாரிணி கரண்டி உபயோகப்படுத்தி பூந்தி மாவை ஊற்றவும். பொடி முத்துக்களாக உதிரும் வண்ணம் ஜாரிணி கரண்டியை லேசாகத் தட்டவும். இனிப்பில்லாத கோவாவை பொடித்து வைக்கவும்.

தண்ணீரையும் சர்க்கரையையும் சேர்த்து கம்பிப் பாகு காய்ச்சவும். இதில் கேசரி கலர், ஏலக்காய்த் தூள், பொரித்த பொடி பூந்தி, கோவா அனைத்தயும் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறவும். இறுகத்தொடங்கும்போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டவும். பொடியாக நறுக்கிய பாதாம் முந்திரி பிஸ்தா போட்டு நன்கு பரப்பி சில்வர் ஃபாயிலைக் கொண்டு அலங்கரித்து சதுரத் துண்டுகள் போடவும். நிவேதிக்கவும்.

3.எள்ளுப் பூரணக் கொழுக்கட்டை

தேவையானவை :-

பச்சரிசி மாவு – 2 கப், உப்பு – ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்.

பூரணம் செய்ய – வறுத்த வெள்ளை எள் – 1 கப், வறுத்த வேர்க்கடலை – கால் கப், வெல்லம் முக்கால் கப், ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.

செய்முறை:-

ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து உப்பும் நல்லெண்ணையும் சேர்த்து பச்சரிசி மாவைக் கொட்டி கரண்டிக் காம்பால் கிளறி மூடி வைக்கவும். ஆறியதும் நன்கு மிருதுவாகப் பிசைந்து ஈரத்துணியால் மூடி வைக்கவும்.

வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, பொடித்த வெல்லம் ஏலப்பொடி சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். நன்கு பொடிந்தவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

மேல்மாவை எடுத்து வட்டமாகக் கிண்ணம்போல் தட்டி எள்ளுப் பூரணத்தை உள்ளே வைத்து மூடி ஆவியில் வேகவைத்து நிவேதிக்கவும்.


4.ஓட்ஸ் வெஜ் கொழுக்கட்டை.

தேவையானவை :-

அரிசி – 2 கப், ஓட்ஸ் – 1 கப், பொடியாக அரிந்த காரட் பீன்ஸ், பட்டாணி,குடைமிளகாய் – அரை கப், தேங்காய் துருவல் – அரை கப், உப்பு – அரை டீஸ்பூன், பொடியாக அரிந்த வெங்காயம் – 1. தாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வரமிளகாய் – 2  விதையை உதிர்த்துவிட்டு துண்டு துண்டாக ஒடித்து வைக்கவும். கருவேப்பிலை – 1 இணுக்கு. 

செய்முறை:-

அரிசியை ஊறவைக்கவும். ஓட்ஸைப் பொடித்து வைக்கவும். அரிசி இரண்டு மணி நேரம் ஊறியதும் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். பொடித்த ஓட்ஸை இதில் போட்டுக் கலந்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து வரமிளகாய், உளுந்து, சீரகம், கருவேப்பிலை, தாளிக்கவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயம் , காய்கறிக் கலவையைப் போட்டு நன்கு வதக்கவும். தளரக் கரைத்த அரிசி ஓட்ஸ் கலவையை ஊற்றி நன்கு கிளறவும். பானில் ஒட்டாத பதம் வரும்போது தேங்காய்த் துருவலைப் போட்டு இறக்கவும்.

லேசாக ஆறியதும் நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து நிவேதிக்கவும்.

5.கோதுமை ரவை இட்லி.

தேவையானவை :-

கோதுமை ரவை – 2 கப், உளுந்தம் பருப்பு – அரை கப், உப்பு – கால் டீஸ்பூன்

செய்முறை :-

கோதுமை ரவையையும் உளுந்தையும் தனித்தனியாகக் களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். இட்லிக்கு அரைப்பதுபோல் உளுந்தையும் கோதுமை ரவையையும் தனித்தனியாக அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து இரவில் புளிக்க வைக்கவும். மறுநாள் காலை சாதாரண இட்லிகளைப் போல தயாரிக்கவும்.

இதில் பொடியாக அரிந்த கொத்துமல்லி, கருவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி, காரட், பட்டாணி தேங்காய்த் துருவல் கலந்து தயாரித்தால் கலர்ஃபுல்லாகவும் ருசியாகவும் இருக்கும்.

6.கற்பூரவல்லி/ஓமவல்லி பஜ்ஜி

தேவையானவை:-

கற்பூரவல்லி இலைகள் – 20 , அரிசி மாவு – கால் கப், மைதா – கால் கப், கடலை மாவு – அரை கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-

கடலை மாவு, அரிசி மாவு, மைதாமாவு, உப்பு, மிளகாய்த்தூள் பெருங்காயத்தூளை ஒரு பௌலில் போட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். கற்பூரவல்லி/ஓமவல்லி இலைகளைக் கழுவி சுத்தம் செய்து துடைத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு இலையையும் மாவில் தோய்த்து பஜ்ஜிகளாகப் பொறித்தெடுக்கவும். 

7.மதுர் வடை.

தேவையானவை :-

அரிசி மாவு – கால் கப், வெள்ளை ரவை – கால் கப், மைதா மாவு – அரை கப், கடலை மாவு – கால் கப், வெள்ளை எள் – 2 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 3, கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை – தலா இரண்டு டீஸ்பூன் பொடியாக அரிந்தது, வெண்ணெய் – அரை டேபிள் ஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் –  1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து அரிசிமாவு, வெள்ளை ரவை, மைதா, கடலைமாவு ஆகியவற்றோடு ஒரு சில்வர் பேசினில் போடவும். இதில் வெள்ளை எள், உப்பு, பொடியாக அரிந்த கருவேப்பிலை, கொத்துமல்லி, வெங்காயம், பச்சைமிளகாய், வெண்ணெய் , உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு கலக்கவும். ஒரு பானில் இரண்டு ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து இதில் ஊற்றிக் கலந்து அதன் பின் தேவையான தண்ணீரைத் தெளித்துப் பிசைந்து பத்து நிமிடங்கள் மூடி போட்டு ஊறவைக்கவும். நெல்லிக்காய் அளவு உருண்டைகள் செய்து மெல்லிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும். நிவேதிக்கவும்.


8.தேன் பழப் பாயாசம்

தேவையானவை :-

மாம்பழம் – 1 துண்டு, வாழைப்பழம் – 1 துண்டு, பலாச்சுளை – 2, சப்போட்டா – 1, ஆப்பிள் – 1 துண்டு, கொய்யா – சின்னம் 1 விதை நீக்கவும். பப்பாளி – 1 துண்டு, தர்ப்பூசணி – 1 துண்டு, பேரீச்சை – 4, கிஸ்மிஸ் – 10. பால் – 1 கப், தேன் – அரை கப்,

செய்முறை:-

மாம்பழம், வாழைப்பழம், பலாச்சுளை, சப்போட்டா, ஆப்பிள், கொய்யா, பப்பாளி, தர்ப்பூசணி, பேரீச்சை, கிஸ்மிஸ் ஆகியவற்றை ஜூஸர் மிக்ஸரில் போட்டு பால் சேர்த்து அரைக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து வடிகட்டி தேன் கலந்து நிவேதிக்கவும்.


1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...