எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 11 ஜனவரி, 2016

புத்தாண்டு ரெசிப்பீஸ். NEW YEAR RECIPES.

புத்தாண்டு ரெசிப்பீஸ் :-
1.டேட்ஸ் கேக்
2.ஸ்வீட் பான்கேக்
3.வெஜ் பான்கேக்
4.கீ ரைஸ்
5.நவ்ரத்ன குருமா
6.பாஸ்தா பட்டர் பெப்பர் ஃப்ரை
7.ஸ்பாகெட்டி டிலைட்
8.சைனீஸ் பஃப்ஸ்
9.ஆனியன் சமோசா


1.டேட்ஸ் கேக்:-

தேவையானவை:-

விதையில்லாத பேரிச்சம்பழம் – 200 கிராம், ஆல் பர்ப்பஸ் மாவு ( மைதா ) – 1 கப், சர்க்கரை – அரை கப், தண்ணீர் – 2 கப், ரீஃபைண்ட் ஆயில் – அரை கப், பேக்கிங்க பவுடர் – 2 டீஸ்பூன், பட்டை கிராம்பு – தலா 2 பொடித்தது.

செய்முறை:-
மைதாவையும் பேக்கிங் பவுடரையும் நன்கு கலந்து வைக்கவும். பேரிச்சையைப் பொடியாகத் துண்டு செய்யவும். தண்ணீரில் சர்க்கரை எண்ணெய் பேரீச்சம்பழம் பட்டை கிராம்பு பொடி போட்டு நன்கு வேகவிடவும். சிம்மில் 15 நிமிடம் வெந்ததும் இறக்கி ஆறவைத்து ஃப்ரிஜ்ஜில் 4 மணி நேரம் வைக்கவும். அதை எடுத்து ஜில்லிப்பு போனவுடன் மைதா, பேக்கிங்க் பவுடரைச் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் பிசையவும். பேக் செய்யும் தட்டில் மைதாவைத் தூவி இந்த மாவை கொட்டி செட் செய்யவும். சூடுபடுத்தப்பட்ட தோசைக்கல்லில் மணலைக் கொட்டி 40 நிமிடங்கள் பேக் செய்யவும். அல்லது குக்கரில் நீர் ஊற்றி உள்ளே பாத்திரத்தில் வைத்து வெயிட் போடாமல் 20 நிமிடம் வேகவிடவும். இம்முறையில் மேல்பாகம் சிறிது ஈரமாக இருக்கலாம். ஆறியவுடன் துண்டுகள் போடவும்.

2.ஸ்வீட் பான்கேக்

தேவையானவை:-

பான் கேக் மாவு /ஆல் பர்ப்பஸ் மாவு ( மைதா ) – 2 கப், சீனி – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், ஆப்பிள் -1, செம்மாதுளை முத்துக்கள் – 1 கப். ஃப்ரூட் ஜாம் – 1 கப். துருவிய சீஸ் – 1 கப்.

செய்முறை:-
ஆப்பிளைத் தோல் சீவி சன்னமாக அரைவட்ட ஸ்லைசாக வெட்டிக் கொள்ளவும். ஆல் பர்ப்பஸ் மாவில் உப்பையும் சீனியையும் சேர்த்துத் தேவையான தண்ணீர் ஊற்றிக் கட்டிகளில்லாமல் தோசை மாவுப் பதத்தில் கரைக்கவும். நான் ஸ்டிக் பானில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி உடனே ஸ்லாத்தி மெல்லிய தோசைகளாக சுடவும். சிறிது சீஸைத் தூவவும். அதில் ஒரு பக்கத்தில் மெல்லிய ஸ்லைசான ஆறு ஆப்பிள் துண்டுகள் அடுக்கி ஜாமைத் தடவவும். அதன் மேல் மாதுளையையும் தூவவும். ஆப்பிளும் மாதுளையும் தெரிவதுபோல் அரைவட்டமாக மடக்கி எடுத்துப் பரிமாறவும். 

3.வெஜ் பான்கேக்

தேவையானவை :-

பான் கேக் மாவு/ஆல் பர்ப்பஸ் மாவு/ மைதா – 2 கப், சீனி – 1 டீஸ்பூன், உப்பு – அரை – டீஸ்பூன், குச்சியாக நறுக்கி வதக்கிய வெங்காயம் காரட் பீன்ஸ்  - 1 கப். தக்காளி கெச்சப் – 1 டேபிள் ஸ்பூன். துருவிய சீஸ் – 1 கப்.

செய்முறை:-

ஆல் பர்ப்பஸ் மாவில் உப்பு சீனி போட்டுத் தண்ணீர் ஊற்றித் தோசைமாவுப் பதத்தில் கரைக்கவும். நான் ஸ்டிக் பானில் ஒரு கரண்டி மாவை ஊற்றி எல்லாப் பக்கமும் வரும்படி ஸ்லாத்தவும். சிறிது சீஸைத் தூவவும். தக்காளி கெச்சப்பையும் தடவவும். அதில் ஒரு பக்கம் வதக்கிய வெங்காயம் காரட் பீன்ஸை சிறிது பரப்பவும். வெந்தவுடன் காரட் பீன்ஸ் தெரியுமாறு அரைவட்டமாக மடித்து எடுத்துப் பரிமாறவும்.

4.கீ ரைஸ்
தேவையானவை :-
பாசுமதி அரிசி – 1 கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா – 10, உப்பு – அரை டீஸ்பூன், கொத்துமல்லித் தழை – ஒரு கைப்பிடி.
செய்முறை:-
பாசுமதி அரிசியைக் கழுவி இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் வேகவைத்து உதிர்க்கவும். நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸை வறுத்து அடுப்பை அணைக்கவும். அந்தச் சூட்டிலேயே பாசுமதி சாதத்தைக் கொட்டி உப்பும் பொடியாக அரிந்த கொத்துமல்லித்தழையும் சேர்த்து நன்கு கிளறவும். நவரத்ன குருமாவோடு பரிமாறவும்.

5.நவரத்ன குருமா :-
தேவையானவை :-
காரட் – 1 , காலிஃப்ளவர் – சின்னம் 1 பூக்களாகப் பிரிக்கவும். உருளை – சின்னம் - 1, குடைமிளகாய் – பாதி , ஃப்ரென்ச் பீன்ஸ் – 6 , பச்சைப் பட்டாணி – அரை கப் , பனீர் –  கால் பாக்கெட். ஒரு இன்ச் சதுரத் துண்டுகளாக நறுக்கவும். சௌ சௌ – கால், டபுள் பீன்ஸ் – ஒரு கைப்பிடி , பெரிய வெங்காயம் – 2, இஞ்சி – அரை இஞ்ச் துண்டு, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 6, தக்காளி – 1, வரமிளகாய்ப் பொடி – கால் டீஸ்பூன். மல்லிப் பொடி – கால் டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன், மிளகுப் பொடி – கால் டீஸ்பூன். மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன், வெந்தயக் கீரைப் பொடி – கால் டீஸ்பூன் உப்பு – 2 டீஸ்பூன், கெட்டித் தயிர் – அரை கப், பால் – அரை கப் , ஃப்ரெஷ் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன் , எண்ணெய்  - 20 கிராம், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, சீனி – 1 டீஸ்பூன்.

செய்முறை:-

பனீரை எண்ணெயில் வறுத்து வைக்கவும். அதிலேயே முந்திரி கிஸ்மிஸையும் வறுத்து வைக்கவும். குடைமிளகாய், பச்சைப் பட்டாணி தவிர மற்ற காய்கறிகளை சதுரத் துண்டுகள் செய்து தண்ணீர் தெளித்து குழையாமல் வேகவைக்கவும்.

இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் பெரிய வெங்காயத்தை அரைத்து தனியாக வைக்கவும். தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து அரைத்து வைக்கவும்.

மிச்ச எண்ணெயைக் காயவைத்து  இஞ்சி பூண்டு வெங்காய பேஸ்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி பேஸ்டைப் போடவும். அதுவும் சுருண்டு வெந்ததும் பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போட்டு வதக்கி அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, சீனி, கரம் மசாலா பொடி, மிளகுப் பொடி போடவும்.

தயிரில் பால் சேர்த்துக் கரைத்து அதில் ஊற்றவும். நன்கு கலக்கி அரைவேக்காடு வெந்த காய்கறிகளைப் போடவும். பனீரைச் சேர்க்கவும். வெந்தயக் கீரைப் பொடியைப் போட்டு முந்திரி கிஸ்மிஸ் சேர்க்கவும். க்ரீமையும் சிறிது பாலில் கரைத்து ஊற்றி 5 நிமிடம் சேர்ந்து வெந்ததும் இறக்கி குங்குமப்பூ சாதத்துடன் பரிமாறவும்.


6.பாஸ்தா பட்டர் பெப்பர் ஃப்ரை.:-

தேவையானவை :-

பாஸ்தா – 2 கப், பட்டர் – 1 டேபிள் ஸ்பூன், சீஸ் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன், மிளகுப் பொடி – கால் டீஸ்பூன்.ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்.

செய்முறை :-
ஆறு கப் நீரைக் கொதிக்கவைத்து பாஸ்தாக்களை சேர்க்கவும். கொதித்ததும் தீயை நிதானமாக்கவும். பத்து நிமிடங்களில் பாஸ்தா மென்மையாக வெந்ததும் இறக்கி நீரை வடிகட்டி ஆலிவ் ஆயில் சேர்த்துக் குலுக்கி  ஆறவிடவும்.

பானில் பட்டர் & சீஸைப் போடவும். இரண்டும் உருகும்போது சீனி & உப்பைச் சேர்க்கவும். உடனேயே வெந்த பாஸ்தாக்களை சேர்த்து நன்கு கலக்கி விடவும். மிளகுப் பொடி தூவிப் பரிமாறவும். 

7.ஸ்பாகெட்டி டிலைட்:-

தேவையானவை :-

ஸ்பாகெட்டி – அரை பாக்கெட், காரட் – 1, ப்ராகோலி – 4 பூக்கள், முட்டைக்கோஸ் – 2 இதழ், பார்ஸ்லி அல்லது கொத்துமல்லித்தழை – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன் கொரகொரப்பாகப் பொடிக்கவும். பூண்டு – 1 பல், ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன், தக்காளிச் சாறு – 1 கப் ( டொமேடோ பூரி )

செய்முறை :-

6 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து ஸ்பாகெட்டியை இரண்டாக அல்லது மூன்றாக மொத்தமாக உடைத்துப் போடவும். 20 நிமிடம் நிதானமான தீயில் வேகவைத்து வெந்ததும் நீரை வடித்து சிறிது ஆலிவ் ஆயில் போட்டு குலுக்கி வைக்கவும்.

காரட், ப்ராகோலி, முட்டைக்கோஸை குச்சி குச்சியாக நறுக்கவும். பானில் ஆலிவ் ஆயிலைக் காயவைத்து பூண்டை வதக்கி உப்பு சீனி சேர்த்து காரட் முட்டைக்கோஸ், ப்ராகோலியைப் போட்டு வதக்கவும். எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் போடவும். தக்காளிச் சாறை சேர்த்து நன்கு வதக்கி ஸ்பாகெட்டியைப் போட்டுக் கலக்கி இறக்கி பரிமாறவும். .

8.சைனீஸ் பஃப்ஸ்:-

தேவையானவை :-

ஆல் பர்ப்பஸ் மாவு/மைதா – 2 கப், வேகவைத்த கொண்டைக் கடலை – கால் கப், மீல்மேக்கர்/சோயா சங்க்ஸ் – கால் கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன், மல்லிப் பொடி – அரை டீஸ்பூன், கரம் மசாலா பொடி – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 கப், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், தண்ணீர் – 2 டீஸ்பூன்.பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், டால்டா – 2 டீஸ்பூன்.

செய்முறை:-

மைதாவுடன் பேக்கிங் பவுடரையும் உப்பையும் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து கடைசியில் டால்டா சேர்த்துப் பிசைந்து எண்ணெய் தடவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு பானில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கொண்டக்கடலை சோயா சங்க்ஸ், உப்பு, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலாப் பொடி போட்டு நன்கு வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து வேகவைத்து இறக்கவும். அரிசி மாவில் 2 டீஸ்பூன் எண்ணெயும் தண்ணீரும் சேர்த்துக் குழைத்து வைக்கவும். மைதாவில் ஒரு பெரிய உருண்டை எடுத்து மைதாவில் புரட்டி நன்கு பெரிய சப்பாத்தியாக சதுர அளவில் தேய்க்கவும். அதில் அரிசி எண்ணெய் பேஸ்டைத் தடவி செவ்வகமாக மடக்கி திரும்பத் தேய்க்கவும். திரும்ப அரிசி மாவு பேஸ்டைத் தடவி செவ்வகமாக மடக்கி நீளமாகத் தேய்க்கவும். அதை இரண்டாக வெட்டி உள்ளே மசாலாவை ஸ்டஃப் செய்து ஓரங்களை ஒட்டவும். கனமான தோசைக்கல்லைக் காயவைத்து 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரண்டு பஃப்ஸ்களையும் வேகவிடவும். அப்பளம் எடுக்கும் குறடினால் எல்லாப் பக்கமும் திருப்பி வேகவைத்துப் பொன்னிறமானதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

9.ஆனியன் சமோசா :-

தேவையானவை:-

மைதா – 2 கப், குளிர்ந்த தண்ணீர் – 1 கப், உப்பு – அரை டீஸ்பூன். ஸ்டஃபிங்குக்கு:- பெரிய வெங்காயம் – 6, மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன், மல்லிப் பொடி – கால் டீஸ்பூன், கரம் மசாலா பொடி – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன். எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு, கொத்துமல்லித் தழை – 1 கைப்பிடி.

செய்முறை :- மைதாவில் உப்பு போட்டு குளிர்ந்த தண்ணீர் ஊற்றி இறுக்கமாகப் பிசைந்து மூடி வைக்கவும். பெரிய வெங்காத்தை தோலுரித்து தயிர்ப்பச்சடிக்கு நறுக்குவது போல் நீளமாக நறுக்கி ஒரு டீஸ்பூன் எண்ணெயில் உப்பு, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, கரம் மசால் பொடி போட்டு இரு நிமிடங்கள் மட்டும் வதக்கவும். அதிகம் வேக வைக்க வேண்டாம். கொத்துமல்லித் தழையைக் கலந்து வைக்கவும்.

மைதாவை பெரிய சப்பாத்தி போல் மெல்லிதாக செவ்வகமாக இட்டு தோசைக்கல்லில் போட்டு லேசாக வேகவைத்து எடுக்கவும். ஒரு சப்பாத்தியை மூன்றாக கட் செய்து அதில் ஒரு ஓரத்தில் வெங்காய மசாலாவை வைத்து முக்கோணமாக மடித்துக் கொண்டே வரவும். முடிவில் பிரிந்து கொள்ளாமலிருக்க மைதா பேஸ்ட் ( ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் மைதாவைக் கரைத்து வைக்கவும்.) ஒட்டி எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். பரிமாறவும்.

ிஸ்கி:- ந்தெசிப்பீஸ் 31. 12. 2015 குமம் பக்ி ஸ்பில் வெளியை.
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...