எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

புதன், 4 மே, 2016

உளுந்தமாவு அச்சு உருண்டை :- ( பின்னி ) - கோகுலம் GOKULAM KIDS RECIPES.

உளுந்தமாவு அச்சு உருண்டை :- ( பின்னி ) - கோகுலம் GOKULAM KIDS RECIPES.

உளுந்தமாவு அச்சு உருண்டை :- ( பின்னி )
தேவையானவை :-
வெள்ளை உருண்டை உளுந்து - 2 கப், வெள்ளை ரவை - கால் கப், கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன், மாவா ( இனிப்பில்லாத கோவா ) - ஒன்றரை கப், நெய் - ஒன்றரைகப், பால் - அரை கப், சீனி - 2 கப் , பால் - 2 டேபிள் ஸ்பூன் ( கடைசியில் சேர்த்துப் பிசைந்து அச்சு உருண்டை செய்ய ) ,ஊறவைத்துத் தோலுரித்து குச்சியாகப் பொடித்த பாதாம் - கால் கப். சூர்யகாந்தி விதைகள் - 2 டேபிள் ஸ்பூன். உடைத்த பிஸ்தா - 1 டீஸ்பூன். ஏலப் பொடி - அரை டீஸ்பூன்.
செய்முறை :-
வெள்ளை உருண்டை உளுந்தைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது சிறிதாக அரை கப் பால் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஒரு பானில் பாதி நெய்யைக் காயவைத்து ரவையையும் அதன் பின் கோதுமை மாவையும் போட்டு பொன்னிறமாக ஆகும்வரை நிதானமான தீயில் வறுக்கவும்.
இதில் மாவாவைப் போட்டு லேசாகச் சிவந்து வரும்வரை கிளறவும். இதில் அரைத்த உளுந்து விழுதையும் போட்டுக் கிளறவும். நிதானமான தீயில் 30 நிமிடம் கிளறியதும் மாவு உருண்டு வரும்போது மிச்ச நெய்யைச் சேர்க்கவும். தொடர்ந்து கிளற மாவு பொன்னிறமாக உதிர்ந்து நன்கு வாசனை வரத் தொடங்கும். அதில் ஏலப்பொடியையும் சீனியையும் சேர்த்துக் கிளறவும்.
குச்சியாக நறுக்கிய பாதாமையும் 2 டேபிள் ஸ்பூன் பாலையும் கலந்து நன்கு பிசையவும். இதை சமமாகத் தட்டி வட்ட வட்டமான அச்சுகளினால் வெட்டி எடுத்து மேலே சூரிய காந்தி விதைகளையும் பொடித்த பிஸ்தாவும் தூவி பரிமாறவும்.

இதில் அடங்கியுள்ள சத்துகள். & பயன்கள்.
குளிர்காலத்துக்கு ஏற்ற இனிப்பு. பண்டிகைப் பலகாரமும் கூட. ஆண் பெண் என இரு குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான உணவு. உளுந்தை களியாகச் செய்வதை விட இப்படி இனிப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். உளுந்து நார்ச்சத்து நிறைந்தது எளிதில் ஜீரணமாகும். உடலில் இருக்கும் எலும்புகளை உளுத்துப் போகாமல் காப்பாற்றுவதால்தான் இதற்கு உளுந்து என்று பெயர்.


இடுப்பு எலும்பை பலப்படுத்துகிறது. நினைவுத்திறனை அதிகரிக்கும். மெலிந்த குழந்தைகளின் சதை வளர்ச்சிக்கு ஏற்றது. ஆண் குழந்தைகளுக்கு பதின் பருவங்களில் உண்டாகும் எலும்பு வளர்ச்சிக்கும் பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு இடுப்பெலும்பை பலப்படுத்து பின்னாளில் குழந்தைப்பேறு காலங்களில் இடுப்பெலும்பு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கும். இதில் போடும் பாதாம் பிஸ்தா சூரியகாந்தி விதைகள் ப்ரோடீன் சந்து நிறைந்தவை.
இதில் சேர்க்கும் உளுந்தில் விட்டமின் பி அதிக அளவில் இருக்கிறது. இதில் ப்ரோட்டீன் , கார்போ ஹைட்ரேட் ( மாவுச் சத்து ) சுண்ணாம்புச் சத்து பாஸ்பரஸ் , நிரம்பியது. அதிலும் ப்ரோட்டீனும் விட்டமின் பியும் அதிக அளவில் இருப்பதால் எக்ஸர்சைஸ் செய்யும் குழந்தைகள் அதிகம் ஓடி ஆடி விளையாடும் குழந்தைப் பருவத்தினருக்கு இழந்த சத்துக்களை ஈடு செய்யும் மேலும் விட்டமின் பி உடலில் ரத்த சோகையைப் போக்கும். ஃபோலிக் ஆசிட் குறைபாட்டை நீக்கும். உளுந்து உணவைச் சாப்பிடுவதால் இது கொழுப்புச் சத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை இதமாக்கி இதயத்துக்கும் பலமளிக்கிறது.

100 கி உளுந்தில் 350 கலோரீஸ் கிடைக்கிறது. 1.5 கிராம் கொழுப்புச் சத்தும், 60 கிராம் கார்போஹைட்ரேட்டும், 24 கிராம் ப்ரோட்டீனும் கிடைக்கிறது. கோதுமையில் 100 கிராமில் 346 கலோரிகள் கிடைக்குது. இன்னும் ப்ரோட்டீன் 11.8 கிராம், கொழுப்பு 1.5 கிராம், தாதுக்கள் - 1.5 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம், மாவுச்சத்து 71.2 கிராம் , கால்சியம் - 41 மி. கி , பாஸ்பரஸ் - 306 மிகி, இரும்புச் சத்து 5.3 மிகி, ஜெட்ரோமின்41 - மைக்ரோகிராம், தயாமின் - 0.45 மி.கி., ரிபோஃப்ளோவின் - 0.17 மி.கி., நயாசின் - 5.5 மி.கி., ஃபோலிக் ஆசிட் - 142 மைக்ரோ கிராம் அளவு உள்ளது.மேலும் அமினோ அமிலங்களும் தாது உப்புகளும் இருக்கு.
சீனியை அளவோடு உபயோகப்படுத்துவதால் அது எனர்ஜியை கொடுக்குது. பாதாமில் நல்ல கொழுப்பு இருப்பதால் அது உடலுக்கு ஏற்றது. இதிலும் மாவுச்சத்து - 0 .24 கி, கொழுப்பு - 0.61 கி, ப்ரோடீன் - 0.26 கி கிடைக்குது. சூரிய காந்தி விதைகளில் ப்ரோட்டீன் 1.5 கி, கால்சியம் 5.6 மி கி, பொட்டாசியம் 68 மிகி இருக்கு.மாவாவுல சோடியம் பொட்டாசியம் கார்போ ஹைட்ரேட் மட்டுமில்ல. விட்டமின் ஏ, பி 12, பி 6, விட்டமின் சி, டி, இ, கால்சியம், காப்பர், ஃபோலேட், அயன் , மெக்னீஷியம், மாங்கனீஸ், நியாசின், பேண்டோதெனிக் அமிலம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின் , செலினியம், தையமின் , சின்க் எல்லாமே இருக்கு. நெய்யிலேருந்து உடல் இயக்கத்துக்குத் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்குது.

 
எனவே சத்துகள் நிரம்பிய உளுந்த மாவு உருண்டையை குழந்தைகள் விரும்பும் வண்ணம் சுவையாகச் செய்து கொடுத்து இந்த தீபாவளிக்கு அவர்கள் உடல்நலமும் மனநலமும் காப்போம்.

டிஸ்கி :-இந்த உணவுக் குறிப்பு ஃபிப்ரவரி 2016 கோகுலத்தில் வெளியானது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...