எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

கிருஷ்ண ஜெயந்தி ரெசிப்பீஸ் KRISHNA JEYANTHI RECIPES.

கிருஷ்ண ஜெயந்தி ரெசிப்பீஸ்
1.அரிசி முறுக்கு
2.மைதா சீடை
3.ராகி ஓட்ஸ் மினி தட்டை
4.வரகு வெல்லச்சீடை
5.சாமை பருப்புக் கொழுக்கட்டை
6.கம்பு இனிப்பு உருண்டை
7.அவல் கார உருண்டை
8.கோதுமைப் புட்டு
9.தினை பால்சாதம்
10.ஸ்வீட்கார்ன் பாயாசம்

1.அரிசி முறுக்கு

தேவையானவை:-
இட்லி அரிசி – 4 கப், பொட்டுக்கடலை – ஒரு கப், பெருங்காயத்தூள் – சிறிது. உப்பு – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 20 கி, மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன், எள் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- அரிசியைக் களைந்து ஊறவைத்து கிரைண்டரில் நைஸாக ஆட்டவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். இட்லி மாவில் பொட்டுக்கடலைப் பொடி, மிளகாய்ப் பொடி, எள், சீரகம், உப்பு சேர்த்து வெண்ணெயையும் போட்டுக் காய்ந்த எண்ணெயை சிறிது ஊற்றி தண்ணீர் தெளித்துப் பிசையவும். அச்சில் போட்டுக் காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். நிவேதிக்கவும்.

2.மைதா சீடை

தேவையானவை:-
மைதா – 2 கப், அரிசி மாவு – 2 கப்.உப்பு – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், சீரகம்  - அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 1 கப். எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:-
மைதாவை ஒரு துணியில் கொட்டி ஆவியில் வேகவைக்கவும். வெந்தமாவை ஆறவைத்துச் சலித்து அரிசிமாவையும் அதனுடன் சலிக்கவும். ஒரு பௌலில் இரண்டு மாவையும் போட்டு உப்பு சீரகம் வெண்ணெய் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் தண்ணீர் தெளித்துப் பிசைந்து சீடைக்காய்களாக உருட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்கவும். நிவேதிக்கவும்.

3.ராகி ஓட்ஸ் மினி தட்டை

தேவையானவை :-
ராகி – 1 கப், ஓட்ஸ் – 1 கப், அரிசி மாவு, மைதா, வெள்ளை ரவை – தலா ஒரு டேபிள் ஸ்பூன், பச்சைமிளகாய் – 3, மிளகு சீரகத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு  - அரை டீஸ்பூன், சூடான எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், பொறிக்கத்தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:-
ஒரு பேசினில் உப்பு,வெண்ணெயைப் போட்டு நன்கு கலக்கவும். அதில் ராகி மாவு அரிசி மாவு வெள்ளை ரவையைப் போட்டுக் கலக்கவும். ஓட்ஸை மிக்ஸியில் பொடித்துச் சேர்க்கவும். பச்சைமிளகாயை நன்கு அரைத்து ஊற்றவும். இதில் மிளகு சீரகத்தூளைப் போடவும். காய்ச்சிய எண்ணெயை ஊற்றி நன்கு கலந்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து மினி தட்டைகளாகத் தட்டிப் பொரிக்கவும்.  


4.வரகு வெல்லச்சீடை

தேவையானவை:-
வரகு – 2 கப், உளுந்து – அரை கப், வெல்லம் – முக்கால் கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, தேங்காய்த்துருவல் – கால் கப், உப்பு – அரை டீஸ்பூன், எள் – அரை டீஸ்பூன். நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
வரகை நன்கு கல் மண் பொறுக்கி வெறும் வாணலியில் வறுத்து மாவாக அரைத்துச் சலிக்கவும். உளுந்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துச் சலிக்கவும். இதில் சுத்தம் செய்த எள் , நைஸாகப் பொடித்த ஏலப்பொடி, சன்னமாகத் துருவிய தேங்காய்த்துருவல் போட்டு நெய் ஊற்றிப் பிசறவும்.வெல்லத்தை சிறிது நீர் சேர்த்துக் கரைத்து வடித்து லேசாகக் கொதித்ததும் இறக்கி ஆறவைத்து மாவில் ஊற்றிப் பிசையவும். சிறிது நேரம் ஊறவைத்து சீடைகளாக உருட்டி எண்ணெயை மிதமாகக் காயவைத்துப் பொரிக்கவும்.

5.சாமை பருப்புக் கொழுக்கட்டை

தேவையானவை:-
சாமை – ஒன்றரை கப், பாசிப்பருப்பு – கால் கப், கடுகு, உளுந்து கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – கால் கப், கருவேப்பிலை – 1 இணுக்கு, மிளகு சீரகத்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை. எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்

செய்முறை:-
கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து கடலைப்பருப்பைத் தாளிக்கவும் அதில் கருவேப்பிலை பெருங்காயப்பொடி போட்டு ஐந்து கப் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் அதில் உப்பு சாமை, பாசிப்பருப்பைச் சேர்க்கவும். நன்கு வெந்து உருளும்போது தேங்காய்த்துருவல் மிளகு சீரகப்பொடியைச் சேர்த்து இறக்கி ஆறியதும் உருட்டி இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்து நிவேதிக்கவும்.

6.கம்பு இனிப்பு உருண்டை

தேவையானவை:-
கம்பு – 2 கப், மண்டை வெல்லம் – துருவியது ஒரு கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், சுக்கு, ஏலப்பொடி – தலா ஒரு சிட்டிகை.

செய்முறை:-
கம்பைப் பலமுறை தவிடு போக அலசி நீரை வடியவைக்கவும். இதை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை பொறித்து மிக்ஸியில் பொடிக்கவும். இதில் சுக்கு ஏலப்பொடியைச் சேர்க்கவும். துருவிய மண்டை வெல்லத்தைச் சேர்க்கவும். சிறிது நேரம் மூடி வைத்திருந்து வெல்லம் சேர்ந்ததும் நெய்யை உருக்கி ஊற்றி நன்கு கிளறி உருண்டைகள் பிடித்து நிவேதிக்கவும்.

7.அவல் கார உருண்டை

தேவையானவை:-
அவல் – 2 கப், வேகவைத்த காய்கறிக் கலவை – 1 கப் ( பொடியாக அரிந்த காரட், பட்டாணி, பீன்ஸ்), பொடியாக அரிந்த பச்சை மிளகாய் – 1, பொடியாக அரிந்த வெங்காயம் – ஒருடேபிள்பூன், பொடியாக அரிந்த கொத்துமல்லி – 2 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன். வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், சீஸ் – ஒரு ஸ்லைஸ்.

செய்முறை.
அவலை வறுத்துப் பொடிக்கவும். இதில் உப்பு பொடியாக அரிந்த பச்சைமிளகாய், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், காய்கறிக் கலவை போட்டு நன்கு கலக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லித்தழை போட்டு சீஸைத் துருவிப் போடவும். வெண்ணெயைச் சேர்த்து நன்கு கிளறி லேசாக தண்ணீர் தெளித்து உருண்டைகளாக உருட்டி நிவேதிக்கவும்.

8.கோதுமைப் புட்டு

தேவையானவை:-
சம்பா கோதுமை மாவு – 2 கப், தேங்காய்த்துருவல் – ஒரு கப், உப்பு - அரை டீஸ்பூன், சீனி – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:-
சம்பா கோதுமை மாவை வெறும் வாணலியில் வறுத்து ஆறவிடவும். இதில் உப்பு சீனி சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் தெளித்துப் பிசையவும். இட்லிப் பாத்திரத்தில் முதலில் தேங்காய்த்துருவலைப் பரப்பி அதன் மேல் சம்பா கோதுமை மாவை ஒரு கரண்டி வைத்து வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.

9.தினை பால்சாதம்

தேவையானவை:-
தினையரிசி – 1 கப், பால் – 2 கப், கண்டென்ஸ்ட் மில்க் – 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – கால் கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, நெய்- 2 டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10.

செய்முறை:-
தினையரிசியைக் களைந்து பால் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். இதை இறக்கி சர்க்கரை கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு கலந்து ஏலப்பொடி போடவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும்.

10.ஸ்வீட்கார்ன் பாயாசம்

தேவையானவை:-
ஸ்வீட் கார்ன் – 1 கப், பால்- 1 லிட்டர், நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா – 20, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் – ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை – அரை கப். பாதாம் – 6, ஏலப்பொடி, குங்குமப்பூ – தலா ஒரு சிட்டிகை,

செய்முறை:-
ஸ்வீட்கார்னை நன்கு வேகவைக்கவும். இதில் பாதியை எடுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். நெய்யைக் காயவைத்து முந்திரி கிஸ்மிஸ் பல்லுப்பல்லாக நறுக்கிய தேங்காய், ஸ்வீட் கார்ன் போட்டு வதக்கவும். இதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அரைத்த கார்ன் விழுதைச் சேர்த்து ஊற்றிக் கொதிக்க விட்டு சர்க்கரையைச் சேர்க்கவும். லேசாக சுண்டியதும் இறக்கி ஏலப்பொடி குங்குமப்பூ சேர்த்து பாதாமை பொடியாக நறுக்கித் தூவி நிவேதிக்கவும்

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...