எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

விநாயகர் ரெசிப்பீஸ் - VINAYAGAR RECIPES.விநாயகர் ரெசிப்பீஸ் :-
1.எருக்கலங்கொழுக்கட்டை – தேங்காய் வெல்லப்பூரணம்
2.எருக்கலங்கொழுக்கட்டை – எள்ளு கருப்பட்டிப் பூரணம்
3.எருக்கலங்கொழுக்கட்டை – பருப்பு சர்க்கரைப் பூரணம்.
4 எருக்கலங்கொழுக்கட்டை – உளுந்துப் பூரணம்
5. எருக்கலங்கொழுக்கட்டை – காய்கறிப் பூரணம்.
6. அரிசி பருப்பு உருண்டைக் கொழுக்கட்டை.
7. ரவை சுகியன்.
8.கருப்பட்டி மோதகம்
9.கோதுமை அப்பம்.
10.சோள வடை
11.ஃப்ரூட் வெர்மிசெல்லி கீர்.


1.எருக்கலங்கொழுக்கட்டை – தேங்காய் வெல்லப் பூரணம்.

தேவையானவை :- பச்சரிசி – 2 கப், தேங்காய் – 1, வெல்லம் – அரை கப், ஏலக்காய் – 1சிட்டிகை. நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை. நெய்- 2 டீஸ்பூன், ஒடித்த முந்திரி – 10.

செய்முறை:- மேல்மாவு தயாரிக்க:- பச்சரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நைஸாக சிறிது தளர அரைக்கவும். பானில் நல்லெண்ணெயைக் காயவைத்து இந்த மாவைக் கொட்டி ஒட்டாத பதம் வரும் வரை சுருளக் கிளறவும். இறக்கி ஆறவிடவும். பூரணம் செய்ய :- தேங்காயைத் துருவி வெல்லம் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் நெய்யில் முந்திரியைப் பொரித்துப் பூரணத்தில் போட்டு அதை நன்கு பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகள் செய்யவும். மேல்மாவில் எலுமிச்சை அளவில் உருண்டைகள் எடுத்து சொப்பு செய்து இந்தப் பூரணத்தை உள்ளே வைத்து மூடி இட்லி பாத்திரத்திலோ அல்லது குக்கரில் வெயிட் போடாமலோ 20 நிமிடம் வேகவைத்து இறக்கவும். நிவேதிக்கவும்.

2.எருக்கலங்கொழுக்கட்டை – எள்ளு கருப்பட்டிப் பூரணம்.

தேவையானவை. :- பச்சரிசி – 2 கப், கறுப்பு எள்ளு – 1 கப், கருப்பட்டி – கால் கப், வெல்லம் – கால் கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை. நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- மேலே தேங்காய் வெல்லக் கொழுக்கட்டைக்கு மேல்மாவு தயாரிக்கச் சொன்னபடி தயாரித்து வைக்கவும். பூரணம் தயாரிக்க:- எள்ளைக் களைந்து கல் நீக்கி உலரவைத்து வெறும் வாணலியில் பொரிக்கவும். பொறிந்ததும் இறக்கி கருப்பட்டி வெல்லத்தைத் தூள் செய்து பொடித்துப் போடவும். ஏலப்பொடி சேர்க்கவும். இதை நன்கு பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகள் செய்து வைக்கவும். மேல்மாவில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து சொப்பு செய்து இந்த உருண்டைகளை வைத்து மூடி இட்லிப் பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைக்கவும். நிவேதிக்கவும்.


3.எருக்கலங்கொழுக்கட்டை – பருப்பு சர்க்கரைப் பூரணம்.

தேவையானவை :- பச்சரிசி – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப், சீனி – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை. நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- மேலே தேங்காய் வெல்லக் கொழுக்கட்டைக்கு மேல்மாவு தயாரிக்கச் சொன்னபடி தயாரித்து வைக்கவும். பூரணம் தயாரிக்க:- பருப்பு வகைகளைத் தனித்தனியாக வாணலியில் வாசம்வரும்வரை வறுத்து பெரபெரப்பாக உடைத்து லேசாகத் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து குக்கரில் ஒரு சவுண்ட் வேகவிடவும். சூட்டோடு இறக்கி சர்க்கரை ஏலப்பொடி தேங்காய்த்துருவல் போட்டுப் பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகள் செய்யவும். மேல் மாவில் எலுமிச்சை அளவு எடுத்து  சொப்பு செய்து இந்த உருண்டைகளை உள்ளே வைத்து மூடி ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும். நிவேதிக்கவும்.4 எருக்கலங்கொழுக்கட்டை – உளுந்துப் பூரணம்

தேவையானவை:- பச்சரிசி – 2 கப், வெள்ளை உருண்டை  உளுந்து – அரை கப், வரமிளகாய்- 2, பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன். தாளிக்க :- எண்ணெய், கடுகு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன். உப்பு அரை டீஸ்பூன்.

செய்முறை:- மேலே தேங்காய் வெல்லக் கொழுக்கட்டைக்கு மேல்மாவு தயாரிக்கச் சொன்னபடி தயாரித்து வைக்கவும். பூரணம் செய்ய:- வெள்ளை உருண்டை உளுந்தைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் உப்பு வரமிளகாய் சேர்த்துப் பெரபெரப்பாக அரைக்கவும். இதை இட்லிப் பாத்திரத்திலோ, குக்கரிலோ வைத்து வேகவைத்து உதிர்க்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து இந்த மாவை உதிர்த்துக் கிளறவும். மேலே தேங்காய் வெல்லக் கொழுக்கட்டைக்கு மேல்மாவு தயாரிக்கச் சொன்னபடி தயாரித்து வைக்கவும். மேல்மாவில் எலுமிச்சை அளவில் எடுத்து வட்டமாகத் தட்டி பூரணத்தில் நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளே வைத்து சோமாஸ் போல மடித்து ஆவியில் வேகவிடவும். நிவேதிக்கவும்.  

5. எருக்கலங்கொழுக்கட்டை – காய்கறிப் பூரணம்.

தேவையானவை.:- பச்சரிசி- 2 கப், உருளை – 1 பெரிது, காரட் – 1, பீன்ஸ் – 10, பச்சைப் பட்டாணி – கால் கப், பட்டர் பீன்ஸ் – ஒரு கைப்பிடி. மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, வெண்ணெய் – 1 டீஸ்பூன், இஞ்சி துருவல் – கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- மேலே தேங்காய் வெல்லக் கொழுக்கட்டைக்கு மேல்மாவு தயாரிக்கச் சொன்னபடி தயாரித்து வைக்கவும். பூரணம் செய்ய. உருளை, காரட்டைத் தோல் சீவி முழுதாக வேகவைத்து லேசாக மசிக்கவும். பட்டர் பீன்ஸ் பச்சைப் பட்டாணியையும் வேகவைத்து வைக்கவும். பீன்ஸையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். நெய்யைக் காயவைத்து இஞ்சி பச்சை மிளகாய் பீன்ஸ் போட்டு நன்கு வதக்கி பட்டாணி பட்டர் பீன்ஸ் போட்டு உப்பு போட்டு நன்கு பிரட்டவும் இதில் காரட் உருளையைப் போட்டுப் புரட்டி கொத்துமல்லித்தழை வெண்ணெய் போட்டு இறக்கவும். மேல் மாவில் எலுமிச்சை அளவில் எடுத்து வட்டமாகத் தட்டி காய்கறிப் பூரணத்தில் நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளே வைத்து சோமாஸ் போல மடித்து ஆவியில் வேகவைத்து இறக்கவும். நிவேதிக்கவும்.

6. அரிசி பருப்பு உருண்டைக் கொழுக்கட்டை.

தேவையானவை:- பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – கால் கப், துவரம் பருப்பு – கால் கப், உளுந்தம் பருப்பு – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி கருவேப்பிலைத் தழை- 3 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், வரமிளகாய்- 4, எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன். கடுகு உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:- பச்சரிசி, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு வரமிளகாயை வெறும் வாணலியில் தனித்தனியாக வெதுப்பி பெரபெரப்பாகப் பொடித்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி உப்புப்போட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்து பெருங்காய்த்தூள் போட்டு மாவைக் கொட்டிக் கிளறவும். சுருண்டு வரும்போது தேங்காய்த்துருவல், பொடியாக அரிந்த கருவேப்பிலை கொத்துமல்லித்தழை சேர்த்து இறக்கவும். ஆறியதும் உருண்டைக் கொழுக்கட்டை செய்து ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.

7. ரவை சுகியன்.

தேவையானவை:-சன்ன ரவை- ஒன்றரைக் கப், பச்சரிசி மாவு- ஒரு டேபிள்ஸ்பூன், மைதா -  ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- சன்ன ரவையை இரண்டு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவிடவும். இதில் பச்சரிசி மாவு மைதாவைச் சேர்த்து நெய் தொட்டு நன்கு பிசைந்து வைக்கவும். கடலைப்பருப்பை வேகவைத்து வெல்லம் தேங்காய் சேர்த்துக் கிளறிப் பூரணம் செய்து முந்திரியை வறுத்துப் போடவும். இந்தப் பூரணத்தை எலுமிச்சை அளவு உருட்டி வைக்கவும். ரவையை நன்கு பிசைந்து உருண்டைகள் எடுத்து கிண்ணங்களாகச் செய்து இந்தப் பூரணத்தை உள்ளே வைத்து மூடி எண்ணெயில் பொரித்து நிவேதிக்கவும்.  


8.கருப்பட்டி மோதகம்:- தேவையானவை:- பச்சரிசி – 2 கப், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு தலா கால் கப், கருப்பட்டி – கால் கிலோ, வெல்லம் – 50 கி. ஏலக்காய் – 2, நெய் – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- பச்சரிசி கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை வெதுப்பி கரகரப்பாகப் பொடிக்கவும். மூன்றரை கப் தண்ணீரைக் கொதிக்கவைத்துக் கருப்பட்டியையும் வெல்லத்தையும் நைத்துப் போடவும். அது கரைந்ததும் பாதி நெய்யை ஊற்றி இந்த மாவைக் கொட்டிக் கிளறி உப்பு சேர்த்து மூடி வைக்கவும். கட்டி தட்டாமல் கிளறி மாவு உருண்டு வெந்ததும் இறக்கி நெய்யில் முந்திரியைப் பொரித்துப் பொட்டு தேங்காய்த்துருவலை வதக்கி இதில் கொட்டி நன்கு பிசைந்து உருண்டைகள் செய்து ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.

9.கோதுமை அப்பம்.

தேவையானவை:- கோதுமை மாவு- 2 கப், மண்டை வெல்லம்- முக்கால் கப் துருவியது. சர்க்கரை- 4 டீஸ்பூன், ஏலத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய்- பொரிக்கத்தேவையான அளவு. ( விரும்பினால் நெய்யிலும் பொரிக்கலாம். )

செய்முறை:- கோதுமை மாவில் ஏலத்தூள், துருவிய வெல்லம், சர்க்கரை சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் நீரை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும். பத்துநிமிடம் அப்படியே வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து மாவை நன்கு அடித்து பெரிய கரண்டியில் ஊற்றி அப்பங்களாகப் பொரித்தெடுத்து நிவேதிக்கவும்.
 
டிஸ்கி:- இந்த ரெசிப்பீஸ் செப்டம்பர் - 9 , 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...