எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

புதன், 19 அக்டோபர், 2016

ஐப்பசி ரெசிப்பீஸ். RECIPES FOR RAINY SEASON.

1.இனிப்பு சேவு:-

தேவையானவை:- பச்சரிசி மாவு – 1 கப், கடலை மாவு – 1 கப், சர்க்கரை – 3 கப், தண்ணீர் – 1 கப், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசி மாவையும் கடலைமாவையும் கலந்து நன்கு பிசைந்து எண்ணெயில் காராச் சேவு அச்சில் போட்டுப் பிழித்து தாம்பாளத்தில் பரத்தி வைக்கவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து முற்றியபாகு வைக்கவும். பாகு தண்ணீரில் போட்டால் உருண்டையாக எடுக்க வரவேண்டும். இந்தப்பாகை சேவில் போட்டு எல்லாப் பக்கமும் படும்படி நன்கு குலுக்கிக் கலக்கிவிட்டு ஆறியவுடன் உபயோகப்படுத்தவும்.


2.மிளகு சேவு :-

தேவையானவை:- பச்சரிசிமாவு – 1 கப், கடலை மாவு – 1/2கப், பாசிப்பருப்பு மாவு – ½ கப், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – 1 கைப்பிடி, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசி மாவு, கடலை மாவு, பாசிப்பருப்பு மாவுடன் உப்பு வெண்ணெய், ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, பொடியாக அரிந்த கருவேப்பிலை போட்டு நன்கு கலக்கவும். காய்ந்த எண்ணெய் இரண்டு ஸ்பூன் ஊற்றி நன்கு கெட்டியாகப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து காராசேவு அச்சில் போட்டுப் பிழிந்து மொறுமொறுப்பானதும் எடுக்கவும்.

3.ஸ்பைசி வேர்க்கடலை:-

தேவையானவை:- காய்ந்த வேர்க்கடலை – 1 கப், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், தக்காளி – 1, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்., மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, ஆம்சூர் – கால் டீஸ்பூன், உப்பு, கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- வேர்க்கடலையை நனைத்து வடிகட்டி வைக்கவும். தக்காளியை அரைத்து அதில் போட்டு அரிசி மாவு, மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள், ஆம்சூர், உப்பு சேர்த்து எல்லாப் பக்கமும் நன்கு புரட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.
  
4.பேணி மிக்ஸர்:-

தேவையானவை:- பேணி – 1 கப் ( ஓமப்பொடி ), ஊறவைத்த கடலைப்பருப்பு – அரை கப், முந்திரி – 30, கிஸ்மிஸ் – 30 , பாதாம் – 20, உப்பு – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பேணியை ஒரு பௌலில் போட்டு வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடலைப்பருப்பை நீரில்லாமல் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுத்து பேணியில் போடவும்.முந்திரி, பாதாம் ஆகியவற்றையும் பொன்னிறமாகப் பொரித்துப் போடவும். கிஸ்மிஸையும் பொரித்துப் போடவும். சூடாக இருக்கும்போதே மிளகாய்த்தூள் , கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் குலுக்கி உபயோகிக்கவும்.  

5.முள்ளுத் தேன்குழல் :-

தேவையானவை:- அரிசி மாவு – 2 கப், 1 கப் பாசிப்பருப்பு, கால் கப் கடலைப்பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பை லேசாக வறுத்துப் பொடித்துச் சலிக்கவும். வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், சீரகம், வெள்ளை எள் தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- உப்பையும் எண்ணெயையும் தவிர மற்ற பொருட்களை ஒரு பௌலில் போட்டு நன்கு கலக்கவும். உப்பைத் தண்ணீரில் கரைத்து மாவில் தெளித்து ஒவ்வொரு கட்டைக்காகப் பிசைந்து எண்ணெயைக் காயவைத்து முள்ளுத்தேன்குழல் அச்சில் உள்ளே எண்ணெய் தடவி மாவைப் போட்டுப் பிழியவும். லேசாக சிவந்து மொறுமொறுப்பானதும் எடுக்கவும்.

6.எள்ளடை. :-

தேவையானவை:- பச்சரிசி மாவு – 4 கப், பொட்டுக்கடலை – 1 கப், எள் – 2 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன், ஊறவைத்த கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 6 டீஸ்பூன், பூண்டு – 2, உப்பு – முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பச்சரிசி மாவை நீர் தெளித்து ஆவியில் வேகவைத்து எடுத்து ஒரு பௌலில் போடவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துச் சலிக்கவும். வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். வரமிளகாய் உப்பு பூண்டை மைய அரைத்து மாவில் போடவும். உப்பு, எள், கடலைப்பருப்பு வேர்க்கடலை எல்லாம் சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாகப் பிசையவும். எண்ணெயைத் தொட்டு பாலீதீன் ஷீட்டில் மெல்லிய அடைகளாகத் தட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.

7.கருவேப்பிலை குணுக்கு :-

தேவையானவை:- பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா கால் கப், உளுந்து, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டேபிள் ஸ்பூன், கொழுந்து கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, வரமிளகாய் – 4, உப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- அரிசி பருப்புகளைத் தனித் தனியாகக் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். வரமிளகாய், உப்பு, பெருங்காயத்தூளை முதலில் மிக்ஸியில் அரைத்து அரிசி பருப்பு வகையறாக்களை உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அடை மாவு பதத்துக்கு அரைக்கவும். இதில் கொழுந்து கருவேப்பிலையைச் சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து துளித்துளியாக ஊற்றி நன்கு பொரிந்ததும் எடுக்கவும்.

8.தினை துக்கடா.:-

தேவையானவை:- தினை மாவு – அரை கப், மைதா – அரை கப், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் ,மைதா, தினை மாவு ஆகியவற்றைப் போட்டு நன்கு கலக்கவும். இதில் தண்ணீரைத் தெளித்துக் கெட்டியாகப் பிசைந்து ஒரு பௌலில் போட்டு ஈரத்துணியால் மூடி அரைமணி நேரம் வைக்கவும். சப்பாத்தி போல இட்டு டைமண்ட் ஷேப்பில் கத்தியால் வெட்டி எடுத்து எண்ணெயைக் காயவைத்துப் பொரிக்கவும். 

டிஸ்கி:- இந்த ரெசிப்பீஸும் கோலங்களும் அக்டர் 20, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை

.

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...