எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

பாதாம் ஷோர்பா ( ஆல்மோண்ட் சூப்)

பாதாம் ஷோர்பா ( ஆல்மோண்ட் சூப்)


தேவையானவை:- பாதாம் – 1 கைப்பிடி, பால் – ஒன்றரை கப், தண்ணீர் – ஒன்றரை கப், வெண்ணெய் – 1 டீஸ்பூன், ஆல் பர்ப்பஸ் மாவு – அரை டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், சீனி – ஒரு சிட்டிகை, கரம் மசாலா – 1 சிட்டிகை, வெள்ளை மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை:- பாதாமை வெந்நீரில் ஒருமணி நேரம் ஊறவைத்துத் தோலுரிக்கவும். இரண்டு மூன்று பாதாமை அலங்கரிக்க எடுத்து வைத்துவிட்டு மிச்சத்தை அரைக் கப் பால் ஊற்றி நன்கு அரைக்கவும். ஒரு பானில் வெண்ணெயை உருகவைத்து ஆல் பர்ப்பஸ் மாவை சேர்த்து வாசம் வரும்படி நிறம் மாறாமல் வறுத்துப் பாலைச் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க விடவும். இது கொதிக்கும்போது அரைத்த பாதாமைச் சேர்த்து ஒன்றரைக் கப் நீர் ஊற்றி இன்னும் கொதிக்க வைக்கவும். இரு நிமிடம் கொதித்ததும் உப்பு, வெள்ளை மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், ஒரு சிட்டிகை ஜீனி சேர்த்து நன்கு கலக்கி இறக்கி சீய்த்த பாதாமால் அலங்கரிக்கவும். வெதுவெதுப்பாக அருந்தக் கொடுக்கவும்.

 

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

காலிஃப்ளவர் சூப்

காலிஃப்ளவர் சூப்


 

தேவையானவை:- காலிஃப்ளவர் – 10 பூ,  பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பருப்பு கடைந்த தண்ணீர் – 2 கப்,  எண்ணெய் – 1 டீஸ்பூன், சோம்பு – ½ டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, கல்பாசிப்பூ – 1 துண்டு, பட்டை – 1 துண்டு, உப்பு – ½ டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – சிறிது.

 

செய்முறை:- காலிஃப்ளவர் பூக்களை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுத்து வைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.

பானில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு போடவும், இதில் கல்பாசிப்பூ, பட்டை போட்டு அனைத்தும் பொரிந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் காலிஃப்ளவர் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதக்கியபின் வெங்காயம் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள் பொடியைப்போட்டு பருப்பு கரைத்த தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து வெந்ததும் உப்பு சேர்த்துக் கொத்துமல்லித்தழை தூவி அருந்தக் கொடுக்கவும்.

 

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

எவர்க்ரீன் சூப்

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்



 

தேவையானவை:-(ஒரு கட்டு கருவேப்பிலை, ஒரு கட்டு புதினா, ஒரு கட்டு கொத்துமல்லியில்) ஆய்ந்த தளிர் இலைகள் மட்டும். – தலா ஒரு பெரிய கைப்பிடி. அளவு எடுத்து அலசி வைக்கவும், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சைமிளகாய் – 1 , வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பட்டை – 1, இலை – 1, கல்பாசிப்பூ -1, சோம்பு -1/2 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், பால் – 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்

 

செய்முறை:-பெரிய வெங்காயம் தக்காளியை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.  பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து சோம்பு சீரகம் மிளகு, பட்டை, இலை, கல்பாசிப்பூ தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆய்ந்து கழுவிய தளிர் இலைகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள் உப்பு வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும்.ஆறியதும் திறந்து பச்சை மிளகாயை எடுத்துப் போட்டு விட்டு  நன்கு மசித்து அந்தச் சாறை வடிகட்டி எடுக்கவும். திரும்ப ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு மசித்து வடிகட்டவும். பருப்பும் வெங்காயமும் தக்காளியும் கரைந்து வரும்வரை இன்னும் அரை கப் தண்ணீர் கூட ஊற்றி வடிகட்டி எடுக்கலாம். வடிகட்டிய இரண்டரை கப் சூப்பில் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். இறக்கி பாலும் மிளகுத்தூளும் கலந்து குடிக்கக் கொடுக்கவும்.

 

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

காரட், தக்காளி சூப்

காரட், தக்காளி சூப்


 

தேவையானவை:- காரட் – 1 பெரிது, தக்காளி – 1 பெரிது, பெரிய வெங்காயம் – 1, வெள்ளை சாஸ் செய்ய :- வெண்ணெய் – 2 டீஸ்பூன், மைதா – 2 டீஸ்பூன், பால் – ½ கப், பட்டை இலை பூ ஏலக்காய் – எல்லாம் தலா ஒன்று., மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன்., க்ரீம் –  2 டீஸ்பூன் ( ஆப்ஷனல் )

 

செய்முறை:- காரட் பெரிய வெங்காயம் தக்காளியைத் துண்டுகளாக்கி குக்கரில் போடவும். அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி பட்டை இலை பூ ஏலக்காயை ஒரு வெள்ளைத் துணியில் முடிச்சாகக் கட்டிப் போடவும். ஒரு விசில் வரும்வரை வேகவைத்து ஆறவைக்கவும்.  பட்டை இலை மூடிச்சை எடுத்துப் போட்டு விட்டுக் காய்களை அரைத்து வடிகட்டவும். கடாயை சூடாக்கி அதில் வெண்ணெய் போடவும் வெண்ணெய் உருகும்போது மைதா சேர்த்துப் புரட்டவும். ஒரு நிமிடம் புரட்டியபின் பால் ஊற்றிக் கட்டிகள் இல்லாமல் கலந்து வேகவிடவும். கண்ணாடிபோல் வந்ததும் இறக்கி ஆறவிடவும். பரிமாறும்போது இரண்டு சாஸ்களையும் சூடாக்கி கப்பில் ஊற்றி அதில் உப்பு மிளகுத்தூள் தூவி அரை ஸ்பூன் க்ரீம் ஊற்றி சூப்ஸ்டிக்குடன் பரிமாறவும். இது எனர்ஜி கொடுக்கும்.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

வாழைத்தண்டு/பீட்ரூட்/காரட் சூப்

வாழைத்தண்டு/பீட்ரூட்/காரட் சூப்


 

தேவையானவை:- சின்ன வாழைத்தண்டு  - 1 அல்லது பீட்ரூட் பெரிது – 1 அல்லது காரட்  பெரிது 1., பாசிப்பருப்பு +துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, சின்னச் சீரகம் – 1 டீஸ்பூன், கசகசா – ½ டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், கொழுந்து கருவேப்பிலை – சிறிது., எண்ணெய் – 1 டீஸ்பூன்.

 

செய்முறை:-

 

பருப்புவகைகளுடன் வட்டமாக அரிந்த வாழைத்தண்டோ அல்லது ஸ்லைஸாக நறுக்கிய பீட்ரூட்டோ அல்லது துருவிய காரட்டோ போட்டு மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து கரண்டியால் லேசாக மசித்து அரை கப் தண்ணீர் சேர்க்கவும். சின்னச் சீரகத்துடன் கசகசகா சின்ன வெங்காயம் இரண்டு வைத்து அரைத்து வைக்கவும். மிச்ச வெங்காயத்தை வளையம் வளையமாக நைஸாக அரிந்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை மென்மையாக வதக்கவும். அதில் அரைத்த விழுதைப் போட்டு வதக்கி காய்கறி பருப்புக் கலவையை ஊற்றவும். தேவையான தண்ணீர் சேர்த்து உப்புப் போடவும். கொதி வந்ததும் இறக்கி கொழுந்து கருவேப்பிலை தூவிக் குடிக்கக் கொடுக்கவும். இது தொண்டைப்புண் கரகரப்பு வலி போக்கும் வயிற்றுப்புண்ணையும் போக்கும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...