எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

காய்கறி சீடைக் கொழுக்கட்டை

காய்கறி சீடைக் கொழுக்கட்டை


தேவையானவை :- சிவப்பரிசி – 1 கப், துருவிய காய்கறிக் கலவை – 1 கப், (காரட் பீன்ஸ், பச்சைப் பட்டாணி,), வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கவும். கொத்துமல்லித்தழை – சிறிது. தேங்காய்த்துருவல் – கால் கப். உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை :-  சிவப்பரிசியை மாவாக அரைத்துக் கால் டீஸ்பூன் உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சீடைக்காய்கள் போலவும் பட்டன் போலவும் தட்டி பேப்பரில் போடவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து நீர்க்கொழுக்கட்டைகள் போல வேகவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் வெங்காயம், காய்கறிக் கலவையை வதக்கி உப்பு சேர்க்கவும். அதில் கொழுக்கட்டைகளையும் தேங்காய்த் துருவலையும் கொத்துமல்லித்தழையையும் போட்டுக் கலக்கவும்.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

பழக் கொழுக்கட்டை

பழக் கொழுக்கட்டை


தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப், பழக்கலவை – பொடியாக நறுக்கிய ஆப்பிள், சிறுமலைப்பழம், பலாச்சுளை – ஒரு கப், கிஸ்மிஸ் – 30, பேரீச்சை – 6, தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்.உப்பு – 1 சிட்டிகை. சர்க்கரை – ஒரு சிட்டிகை. நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- ஒன்றேகால் கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து நெய்யையும் உப்பையும் சேர்க்கவும். மாவைக் கொட்டிக் கரண்டிக் காம்பால் குத்திக் கிளறி ஈரத்துணியால் மூடிவைக்கவும். ஆறியதும் நன்கு பிசைந்து கொழுக்கட்டை செய்ய உபயோகிக்கவும். பழக்கலவையோடு பொடியாக அரிந்த பேரீச்சை, கிஸ்மிஸ், தேன் கலந்து நன்கு கையால் மசித்து உருட்டி வைக்கவும். கொழுக்கட்டை மாவில் சொப்பு செய்து இந்த பழக்கலவையை ஃபில்லிங்காக நிரப்பிக் கொழுக்கட்டையை மூடி ஆவியில் பத்துநிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

புதன், 27 ஆகஸ்ட், 2025

அஞ்சுமாக் கொழுக்கட்டை

அஞ்சுமாக் கொழுக்கட்டை


தேவையானவை :- பச்சரிசி மாவு – கால் கப், புழுங்கரிசி மாவு – கால் கப்,சிவப்பரிசி மாவு – கால் கப் , கவுனரிசி மாவு – கால் கப் , கோதுமை மாவு – கால் கப் , துருவிய தேங்காய் – அரை கப், வெல்லம்+ கருப்பட்டி – 150 கிராம். ஏலப்பொடி – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, வெந்நீர் – ஒண்ணேகால் கப். வறுத்த எள்ளு – அரை டீஸ்பூன்.

செய்முறை :- ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக வெறும் பானில் மணல்போல வறுத்து ஒரு பௌலில் கொட்டவும். வெல்லத்தையும் கருப்பட்டியையும் ஒரு கப் தண்ணீரில் போட்டு இளம்பாகு வைத்து கரைத்து வடிகட்டவும். தேங்காய்த் துருவல் உப்பு ஏலப்பொடி எள் போட்டு மாவில் நன்கு கலந்து வெல்லக்கருப்பட்டிப் பாகு ஊற்றி நன்கு கிளறவும். மாவை நன்கு பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

கேப்பை புட்டுக் கொழுக்கட்டை


கேப்பை புட்டுக் கொழுக்கட்டை

தேவையானவை :- கேப்பை – 2 கப், தேங்காய்த் துருவல் – அரை கப், தூள் வெல்லம் – அரை கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை :- கேழ்வரகைக் களைந்து நீரை வடித்து மிக்ஸியில் திரித்து சலித்துக் கொள்ளவும். இதில் வெந்நீர் ஊற்றி லேசாகப் பிடித்துப் பிடித்துக் கிளறி பிடி பதம் வந்ததும் திரும்ப ஈரத்தோடு சலித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதைத் திரும்ப உதிர்த்து சூட்டோடு வெல்லம், தேங்காய்த்துருவல், உப்பு, ஏலப்பொடி சேர்த்துப் பிசறி கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

ஃப்ரூட் & நட்ஸ் மோதகம்

ஃப்ரூட் & நட்ஸ் மோதகம்


தேவையானவை:- பச்சரிசி ரவை – 2 கப், வெல்லத்தூள் – 1 1/2 கப், பேரீச்சை – 2, கிஸ்மிஸ் – 10, டூட்டி ப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 6, பாதாம் – 4., நெய் – ¼ கப், தேங்காய் துருவல் – ஒரு மூடி, ஏலக்காய் – 3.

செய்முறை:-  கடாயில்  நெய்யை ஊற்றி பச்சரிசி ரவையை வாசம் வரும்வரை வறுத்து 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகப்போடவும்.  உப்புமா போல உதிர்த்து அதில் ஏலத்தைப் பொடித்துப் போட்டுத் தேங்காய்த் துருவலுடன் கலக்கி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டி கொதிக்கவைத்து ரவையில் சேர்க்கவும். இறுகியதும் இறக்கி டூட்டி ப்ரூட்டி, பொடியாக நறுக்கிய பேரீச்சை, கிஸ்மிஸ், வறுத்து ஒடித்த பாதாம் முந்திரி, கலந்து. மாவை நன்கு பிசறி நெய் தொட்டு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...