எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 செப்டம்பர், 2025

ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை

ஆட்டிக் கிண்டும் கொழுக்கட்டை



தேவையானவை:- இட்லி அரிசி  - 2 கப், துருவிய தேங்காய்  - 1 கப், பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப், வரமிளகாய் - 4  விதை நீக்கி சின்னதாக வெட்டவும்., கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், ஜீரகம் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை :- இட்லி அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். கொரகொரப்பாக அரைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து., சீரகம்., வரமிளகாய்., கருவேப்பிலை போடவும். வெங்காயம் போட்டு நன்கு வதக்கி  மாவை  ஊற்றவும். உப்பு  சேர்க்கவும். 5 நிமிடம் நன்கு கிளறி கையில் ஒட்டாமல் வரும்போது தேங்காய்த்துருவல்  சேர்க்கவும். அடுப்பை அணைத்து மாவைக்  கையால் நன்கு பிசைந்து எலுமிச்சை உருண்டைகளாகவும் பிடி கொழுக்கட்டைகளாகவும் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும். சூடாக வரமிளகாய் சட்னியோடு பரிமாறவும்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

கொள்ளு காரக் கொழுக்கட்டை

கொள்ளு காரக் கொழுக்கட்டை


தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப், கொள்ளு – 1 கப், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், ( வரமிளகாய் – 2, கருவேப்பிலை -  2 ஆர்க், இவற்றை வறுத்து கால்டீஸ்பூன் உப்புடன் கரகரப்பாகப் பொடிக்கவும் ). பொட்டுக்கடலைப்பொடி – அரை டேபிள் ஸ்பூன். நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், தண்ணீர் – ஒண்ணேகால் கப்.


செய்முறை:- பச்சரிசி மாவை வெந்நீர் ஊற்றி மேல்மாவு தயாரித்து மூடிவைக்கவும். கொள்ளை வறுத்து அளவாகத் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பாதி கொள்ளைப் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுத்து மிச்ச கொள்ளுடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்து கொள்ளைப் போட்டு அதில் பொடித்த பொடியைப் போடவும். ஒரு நிமிடம் கிளறி இறக்கி  நீர்க்க இருந்தால் பொட்டுக்கடலைப் பொடி போட்டுப் பிசைந்து நெல்லி அளவு உருண்டைகள் செய்யவும். மேல்மாவில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்துக் கொள்ளுப் பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைக்கவும்.

வியாழன், 11 செப்டம்பர், 2025

ட்ரைஃப்ரூட்ஸ் மோமோஸ்

ட்ரைஃப்ரூட்ஸ் மோமோஸ்


தேவையானவை:- மைதா – 2 கப்,  ஃபில்லிங் :- பாதாம் -15, பிஸ்தா – 15, முந்திரி – 15, பேரீச்சை – 6, கிஸ்மிஸ் – 30, செர்ரி – 10, டூட்டி ஃப்ரூட்டி – 1 டேபிள் ஸ்பூன், கொப்பரை – 2 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:- மேல்மாவு  செய்ய மைதாவில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு  ஒரு சிட்டிகை உப்புப் போட்டுப் பிசையவும். ஃபில்லிங்க் செய்ய பாதாம் முந்திரியை ஊறவைத்து துண்டுகளாக நறுக்கவும். பேரீச்சை பிஸ்தாவையும் நறுக்கவும். செர்ரியை கொட்டை எடுத்து சின்னதாக நறுக்கவும். கொப்பரையை லேசாக வாசம் வரும் பக்குவத்தில் வறுத்து டூட்டி ஃப்ரூட்டி, கிஸ்மிஸ் எல்லாவற்றையும் சேர்த்து தேன் ஊற்றிக் கலந்து பதினாறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து விரல்களால்  கிண்ணங்களாகத் தட்டி உள்ளே ஃபில்லிங்கை வைத்து  எருக்கலங்கொழுக்கட்டை மாதிரியோ அல்லது சோமாசி மாதிரியோ மடித்து ஓரங்களை நன்கு ஒட்டி ஆவியில் 10 – 15  நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

திங்கள், 8 செப்டம்பர், 2025

ஓலைக் கொழுக்கட்டை

ஓலைக் கொழுக்கட்டை


தேவையானவை :- பனை ஓலைக்குருத்து – ஒரு அடி நீளமும் மூன்று அங்குல அகலமும் உள்ளது =10. பச்சரிசிமாவு – 2 கப், வேகவைத்த காராமணி- 1 கைப்பிடி , கருப்பட்டி – முக்கால் கப், தேங்காய்த்துருவல் – ஒரு மூடி. உப்பு – 1 சிட்டிகை, ஏலப்பொடி – 1 சிட்டிகை.


செய்முறை:- பனைஓலைக் குருத்துகளை நீரில் நனைத்து வைக்கவும். பச்சரிசி மாவில் உப்பு, ஏலப்பொடி, வேகவைத்த காராமணி , தேங்காய்த்துருவல் போட்டு நன்கு கலக்கவும். கருப்பட்டியைக் கெட்டியாக  இளம்பாகு வைத்து மாவில் ஊற்றி  நன்கு பிசையவும். ஒரு ஓலையை எடுத்து அதில் நீளவாக்கில் கொழுக்கட்டை மாவை வைத்து இன்னொரு ஓலையால் மூடவும். இதேபோல் மீதி மாவையும் செய்து இட்லிப் பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைக்கவும். இந்தக் கொழுக்கட்டை நீளவாக்கில் இருக்கும்

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தேங்காய்ப்பால் கொழுக்கட்டை

தேங்காய்ப்பால் கொழுக்கட்டை



தேவையானவை:- இட்லி அரிசி- 2 கப், வெல்லம் - 1கப், தேங்காய் -  1, ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன், உப்பு -  1 சிட்டிகை

செய்முறை:- இட்லி அரிசியைக் கழுவி ஊறவைத்து கிரைண்டரில் நைஸாக ஆட்டிக் கொள்ளவும். அதிகப்படியான தண்ணீரை உறிஞ்ச சுத்தமான காட்டன் துணியில் மாவைக் கொட்டி மூடி வைக்கவும். தேங்காயைத் துருவி 3 பால் பிழிந்து கொள்ளவும். அரைத்த மாவை சீடைக்காய்கள் போலக் கிள்ளி நீளவாக்கில் உருட்டிப் போடவும். மூன்றாம் பாலில் வெல்லத்தைப் போட்டுக் கரைக்கவும். அதில் இரண்டாம் பாலையும் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். கொழுக்கட்டைகளைக் கையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துத் தூவவும். அடுத்துக் கொதிவந்ததும் அடுத்த கைப்பிடி தூவவும்..கொதித்ததும் கரண்டியால் நன்கு கிளறாமல் லேசாகக் கலக்கி விடவும். கொழுக்கட்டைகள் மேலே எழும்பி வந்ததும் கரண்டியால் நன்கு கலக்கி ஏலப்பொடி தூவி முதல் பால் ஊற்றி இறக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...