எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

கொத்துமல்லி பச்சைமிளகாய் சட்னி.


கொத்துமல்லி பச்சைமிளகாய் சட்னி. :-


தேவையானவை :-

கொத்துமல்லி - 1 கட்டு, பச்சைமிளகாய் - 4, சின்ன வெங்காயம் - 6, பூண்டு -1பல். உப்பு - அரை டீஸ்பூன், புளி - ஒரு சுளை., பெருங்காயம் - சிறு துண்டு.  தாளிக்க - எண்ணெய், கடுகு, உளுந்து தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை :- கொத்துமல்லியை சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கவும். இத்துடன் பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு உப்பு புளி பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெயில் கடுகு உளுந்து தாளித்து உபயோகிக்கவும்.
  

வியாழன், 24 ஜனவரி, 2019

தக்காளி உருளை திறக்கல்.

தக்காளி உருளை திறக்கல்.

தேவையானவை :-  பெ. வெங்காயம் - 2, தக்காளி - 2, அவித்த உருளைக்கிழங்கு -1, பச்சை மிளகாய் - 2, மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன், உப்பு -அரைடீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை -1இணுக்கு.

செய்முறை :-  பெரிய வெங்காயம் தக்காளியைப் பொடிப்பொடியாக நறுக்கவும். உருளையை லேசாக உதிர்த்து வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளிவைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்துபோட்டு கருவேப்பிலை பச்சைமிளகாய் வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். வதங்கி வரும்போது உதிர்த்த உருளையைப் போட்டு உப்பு மிளகாய்ப்பொடி சேர்த்துக் கிளறி ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும். இரண்டு நிமிடம் கொதித்ததும் இறக்கி இட்லி தோசையுடன் பரிமாறவும்.
  

செவ்வாய், 1 ஜனவரி, 2019

பூண்டுப் பொடி.

பூண்டுப்பொடி. :-

தேவையானவை :- துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 4, பூண்டு - 4 பல், புளி - 1 சுளை, உப்பு - கால்டீஸ்பூன், கருவேப்பிலை சிறிது. எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை:- வெறும் வாணலியில் துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் சிவப்பாக வறுத்து இறக்கவும். எண்ணெய் விட்டு வரமிளகாயை வறுத்து புளியைப் போட்டு அடுப்பை அணைக்கவும். சூடாக இருக்கும்போது பூண்டையும் கருவேப்பிலையையும் போட்டுப் புரட்டவும்.

மிக்ஸியில் மிளகாய், உப்பு, புளியைப் போட்டு நன்கு சுற்றி அதன் பின் பருப்புகளைப் போட்டு நைஸாக அரைக்கவும். கடைசியில் பூண்டைப் போட்டுச் சுற்றி இறக்கவும். கருவேப்பிலையைக் கிள்ளிப் போட்டுக் கலக்கவும். இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய்யுடன் போட்டுப் பிசைந்து உண்ணலாம்.
  

ஞாயிறு, 18 நவம்பர், 2018

பருப்புப் பொடி.

பருப்புப் பொடி.

தேவையானவை :- துவரம்பருப்பு -  கால் கப், பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, வரமிளகாய் - 1, பூண்டு - 1 பல், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை :- வெறும் வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் வரமிளகாய், பொட்டுக்கடலை, பெருங்காய்த்தூள், போட்டுப் புரட்டி பூண்டையும் உப்பையும் போட்டு இறக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் பொடித்து வைக்கவும். சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்தப் பருப்புப் பொடியைச் சேர்த்து உண்ணலாம்.

புதன், 31 அக்டோபர், 2018

முட்டை தேங்காய்க் குழம்பு.:-

முட்டை தேங்காய்க் குழம்பு.:-

தேவையானவை :- முட்டை 4, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி, மல்லித்தூள் – 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, புளி – 2 சுளை, உப்பு – 1 டீஸ்பூன், அரைக்க :- தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு, சீரகம், மிளகு தலா கால் டீஸ்பூன், ஒரு சின்ன வெங்காயம் ஒரு பூண்டு, தாளிக்க :- எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்.


செய்முறை:- முட்டைகளை வேகவைத்துத் தோலுரிக்கவும். பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கி வைக்கவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துச் சாறெடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து வெந்தயம் தாளித்து வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும். இதில் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். கொதிக்கும்போது உரித்த முட்டைகளைக் கீறிப் போடவும். இரு நிமிடங்கள் கொதித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து இன்னும் ஒரு கொதி வைத்து இறக்கி சூடான சாதத்தோடு பரிமாறவும்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...