எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 நவம்பர், 2019

26. திருக்கார்த்திகை – சிவப்பரிசி அவல் பொரி

26. திருக்கார்த்திகை – சிவப்பரிசி அவல் பொரி

தேவையானவை :- சிவப்பரிசி அவல் – 1 கப் மண்டை வெல்லம் – 150 கி, நெய் – 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பல் – 2 டீஸ்பூன், முந்திரி – 10. ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.
செய்முறை:- சிவப்பரிசி அவலைக் களைந்து நீரை ஒட்ட வடிக்கவும். வெல்லத்தைத் துருவி சிறிது நீர் சேர்த்துக் கெட்டிப் பாகு வைக்கவும். இதில் ஏலப்பொடியைச் சேர்க்கவும். ஒரு வாணலியில் நெய்யைக் காயவைக்கவும். அதில் முந்திரியையும் தேங்காய்ப் பல்லையும் வறுத்து அவலைப் போடவும். ( அவல் ரொம்ப ஊறக்கூடாது ) அவலை உதிரி உதிரியாக வறுத்து சூட்டோடு இருக்கும் வெல்லப்பாகில் கொட்டிக் கிளறவும். வெல்லப்பாகு நன்கு சுற்றிலும் பட்டு மொறுமொறுப்பாக அவல் பொரிந்ததும் இறக்கி நிவேதிக்கவும்.
 

புதன், 27 நவம்பர், 2019

25. நவராத்திரி – நவரத்ன சுண்டல்

25. நவராத்திரி – நவரத்ன சுண்டல்

தேவையானவை :- கருப்பு கொண்டைக்கடலை , வெள்ளைக் கொண்டக்கடலை, பாசிப்பயறு, ப்ரவுன் தட்டைப்பயறு, மொச்சை, பச்சைப் பட்டாணி, கொள்ளு, வெள்ளைக் காராமணி, சோயா பீன்ஸ், - தலா ஒரு கைப்பிடி., எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு உளுந்து – தலா – 1 டீஸ்பூன், வரமிளகாய் 4, தேங்காய் – அரை மூடி, உப்பு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:- அனைத்து பயறு வகைகளையும் தனித்தனியாக வாசம் வரும்வரை வறுத்துத் தனித்தனியாக முதல்நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் தனித்தனியான கிண்ணங்களில் போட்டுக் குக்கரில் குழையாமல் வேகவைத்து எடுத்து நீரை வடித்து  ஒன்று சேர்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்துப் வெந்த பயறு வகைகளைக் சேர்த்து உப்புப் போடவும். வரமிளகாயைத் தேங்காய்த்துருவலோடு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து சுண்டலில் போட்டு நன்கு கலந்து நிவேதிக்கவும்.
 

திங்கள், 25 நவம்பர், 2019

24. திருவாதிரை – வெந்தயக் களி

24. திருவாதிரை – வெந்தயக் களி

தேவையானவை :- புழுங்கல் அரிசி – 1 கப், வெந்தயம், உளுந்து – தலா 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – கால் கப், நாட்டுச் சர்க்கரை – 1 கப்
செய்முறை :- புழுங்கல் அரிசியைக் களைந்து ஊறவைத்து நைஸாக அரைக்கவும். உளுந்தையும் வெந்தயத்தையும் நைஸாக அரைக்கவும். இவை இரண்டையும் சேர்த்து மூன்று கப் தண்ணீரில் நன்கு கரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் இந்தக் கலவையை ஊற்றிக் கிளறவும், பாதி நல்லெண்ணெயையும் சேர்க்கவும். நன்கு வெந்து ஒட்டாமல் வரும்போது நாட்டுச் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் மிச்ச நல்லெண்ணையையும் ஊற்றி நன்கு கலக்கி வேகவைத்து இறக்கி நிவேதிக்கவும்
 

சனி, 23 நவம்பர், 2019

23. ஆனித்திருமஞ்சனம் – பச்சரிசிக் கேசரி

23. ஆனித்திருமஞ்சனம் – பச்சரிசிக் கேசரி

தேவையானவை :- பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – ஒரு டீஸ்பூன், சீனி – 2 கப், நெய் – 2 கப், கேசரி பவுடர் – 1 சிட்டிகை, குங்குமப்பூ – 1 சிட்டிகை, பால் கால் கப், முந்திரி, திராட்சை – தலா – 10, ஏலப்பொடி – கால் டீஸ்பூன், பச்சைக்கற்பூரம் – 1 சிட்டிகை.
செய்முறை:- பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுக்கவும். அதன் பின் களைந்து குக்கரில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி சூட்டோடு சீனியைச் சேர்த்து மசிக்கவும். அத்தோடு பாலில் கொதிக்கவைத்த் குங்குமப்பூவையும், கேசரி கலரையும் போட்டு உருக்கிய நெய்யையும் ஊற்றி நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸைப் போட்டு ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கிளறி நிவேதிக்கவும். 
 

வியாழன், 21 நவம்பர், 2019

22. கிருஷ்ண ஜெயந்தி – வரகு சீப்புச்சீடை.

22. கிருஷ்ண ஜெயந்தி – வரகு சீப்புச்சீடை.

தேவையானவை :- வரகரிசி மாவு– 1கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு – கால் கப், தேங்காய்ப் பால் – முக்கால் கப், உப்பு – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:- வரகரிசியை வெறும் வாணலியில் வாசம் வரும்வரை வறுக்கவும். இதில் உளுந்து மாவைப் போட்டு உப்பும் வெண்ணெயும் சேர்த்துக் கலந்து வைக்கவும். தேங்காய்ப்பாலை சூடுபடுத்தி இம்மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். நன்கு பிசைந்து சீப்புச்சீடை அச்சில் போட்டுப் பிழிந்து மூன்று இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். வெட்டிய இரு பக்கங்களையும் இணைத்து ஒட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுத்து நிவேதிக்கவும்.
  
Related Posts Plugin for WordPress, Blogger...