எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

புரட்டாசி. பெருமாள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். PURATASI PERUMAL SPECIAL RECIPES.

புரட்டாசி. பெருமாள் ஸ்பெஷல்.

1.பால் பணியாரம்
2. சீனி அப்பம்
3. தக்காளி சேவை
4. தஹி சேமியா
5. ப்ரெட் வெஜ் ரோல்
6. சேப்பங்கிழங்கு சாப்ஸ்
7. கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
8. நெல்லிக்காய் மோர்க்குழம்பு
9. வெஜ் ஸ்க்யூவர்ஸ்
10 பூந்திப் பாயாஸம்.

1.பால் பணியாரம்:-

தேவையானவை :-


பச்சரிசி – 1 கப், வெள்ளை உருண்டை உளுந்து - ஒரு கப், உப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய்பொறிக்கத் தேவையான அளவு, காய்ச்சிய பால் - 1 லிட்டர், ஜீனி - 1/2 கப், ஏலப்பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:-
பச்சரிசி உளுந்தம்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும். ஒரு துணியில் துளை செய்து மாவை அதில் நிரப்பி துளித்துளியாய்க் காய்ந்த எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுக்கவும்.

பாலைக் காய்ச்சி சீனி சேர்த்து ஏலப் பொடி போடவும். அதில் பொரித்த பணியாரங்களைப் போட்டு ஊறவைத்துப் பரிமாறவும்


2. சீனி அப்பம்:-

தேவையானவை :-

வெள்ளை ரவை – 1 கப், அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், மைதா – ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை – முக்கால் கப், தேங்காய்த் துருவல் – கால் கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, பால் – அரை கப், எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- வெள்ளை ரவையையும் தேங்காய் துருவலையும் மிக்ஸியில் போட்டு பால் ஊற்றி அரைத்து எடுக்கவும். அதில் மைதா, அரிசிமாவு, சர்க்கரை ஏலப்பொடி உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் நன்கு கரைத்து வைக்கவும். பத்து நிமிடம் ஊறியதும் எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாக பொறித்தெடுத்து நிவேதிக்கவும்.

3. தக்காளி சேவை:-

தேவையானவை :-
இடியாப்ப மாவு – 1 கப், தக்காளி – 4, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, வரமிளகாய் – 1, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன். உப்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை:-

இடியாப்ப மாவில் கொதிக்கும் வெந்நீர் ஊற்றி நன்கு பிசைந்து இட்லி பாத்திரத்தில் இடியாப்பங்களை அச்சில் போட்டுப் பிழிந்து வேகவைத்து உதிர்த்து வைக்கவும்.

எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, கடலைப்பருப்புப் போட்டு சிவந்ததும் வரமிளகாய், பச்சை மிளகாயைக் கிள்ளிப் போட்டு கருவேப்பிலை போடவும். பொடியாக அரிந்த வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்கி, உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு சுருண்டு எண்ணெய் பிரியத் துவங்கியதும் இறக்கி வைத்து ஆறவிட்டு இடியாப்பத்தைக் கலந்து வைத்து ஐந்து நிமிடம் கழித்து உபயோகிக்கவும்.


4. தஹி சேமியா:-

தேவையானவை :-

சேமியா – 1 கப், புது தயிர் – 2 கப், நெய் – 1 டீஸ்பூன், முந்திரி – 10, கிஸ்மிஸ் – 10, பச்சை திராக்ஷை – 6, கறுப்பு திராக்ஷை – 6, ஆப்பிள் – 1 ஸ்லைஸ் தோலோடு துண்டு செய்யவும். வெள்ளரி – கால் பாகம் துண்டுகள் செய்யவும்.  செம்மாதுளை முத்துகள் – ஒரு டேபிள் ஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன். கொத்துமல்லித்தழை – 1 டீஸ்பூன் பொடியாக அரிந்தது.

செய்முறை :-

சேமியாவை ஒரு கப் தண்ணீரில் வேகவைத்து உப்பு சேர்க்கவும். தயிரைக் கடைந்து அதில் விதை எடுத்த கறுப்பு திராக்ஷை , பச்சை திராக்ஷையை இரண்டாக கட் செய்து போடவும், ஆப்பிள் வெள்ளரிக்காயை பல் பல்லாக துண்டு செய்து போடவும். மாதுளை முத்துக்களையும் சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு கலந்து சேமியாவில் போட்டு கலக்கவும். நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்து இதில் போட்டு கொத்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.

5. ப்ரெட் வெஜ் ரோல்:-

தேவையானவை :-

ப்ரெட் ஸ்லைஸ் – 10 துண்டுகள், அவித்த உருளை – 2, பொடியாக அரிந்த வெங்காயம் – 1, காரட் துருவியது – 1, பச்சைப் பட்டாணி – அரை கப், பச்சை மிளகாய் – 1 பொடியாக அரியவும். மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, முந்திரி – 10 வெண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

வெண்ணெயில் முந்திரி, வெங்காயம் காரட், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி மிளகாய்த்தூள், கரம் மசாலாதூள், உப்பு சேர்க்கவும். அதில் அவித்த உருளைக்கிழங்கை மசித்துப் போட்டு கொத்துமல்லித்தழை சேர்த்து நன்கு பிசைந்து நீள குலாப் ஜாமூன் போல உருட்டி வைக்கவும்.

ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி தண்ணீரில் லேசாக நனைத்துப் பிழிந்து இந்த குலாப் ஜாமுன் உருண்டைகளை உள்ளே வைத்து நீளமாக ரோல் செய்து எல்லாப் பக்கமும் ஒட்டவும். எண்ணெயைக் காயவைத்து பொன்னிறமாகப் பொறித்து தக்காளி கெட்சப்புடன்  பரிமாறவும்.


6. சேப்பங்கிழங்கு சாப்ஸ்

தேவையானவை :-
சேப்பக்கிழங்கு – அரை கிலோ, எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன், கெட்டி தேங்காய்ப் பால் – முக்கால் கப், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மைதா – கால் கப், சோள மாவு – கால் கப் , மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், ரெட் ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-

சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலுரித்து இரண்டாக நீளவாக்கில் நறுக்கி எலுமிச்சை சாற்றைப் பிழிந்து அரிசி மாவில் புரட்டி வைக்கவும். தேங்காய்ப் பாலில் மைதா, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு, ரெட் ஃபுட் கலர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் திக்காக கரைத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து சேப்பங்கிழங்குகளை மைதா கலவையில் நனைத்து பொறித்தெடுக்கவும்.

7. கருணைக்கிழங்கு புளிக்குழம்பு :-

தேவையானவை :-

பிடி கருணைக்கிழங்கு – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 10, வெள்ளைப் பூண்டு – 8, தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு, உப்பு – 1 டீஸ்பூன், சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 துண்டு, கருவேப்பிலை – 1 இணுக்கு., வெல்லம் – சிறு துண்டு.

செய்முறை:-

கருணைக்கிழங்குகளை வேகவைத்துத் தோலுரித்து வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் , வெள்ளைப் பூண்டை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக்கிக் கொள்ளவும். உப்பு புளியை 4 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறெடுத்து மஞ்சள் பொடி, சாம்பார் பொடி போட்டு வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் சீரகம் வெந்தயம் பெருங்காயம் போட்டுப் பொறிந்ததும் கருவேப்பிலை, வெங்காயம் பூண்டு, தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். சுருள வதங்கியதும் கருணைக் கிழங்கைச் சேர்த்துப் புரட்டி புளி சாம்பார்த்தூள் கரைசலை ஊற்றவும். கொதி வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து எண்ணெய் பிரிந்ததும் வெல்லத்தைச் சேர்த்து இறக்கவும்.


8. நெல்லிக்காய் மோர்க்குழம்பு :-

தேவையானவை :-

முழு நெல்லிக்காய் – 6, பச்சை மிளகாய் – 3, சீரகம் – அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 கப், கெட்டித் தயிர் – 2 கப். மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – முக்கால் டீஸ்பூன், தாளிக்க :- தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 2 இணுக்கு.

செய்முறை :-

நெல்லிக்காய்களை கொட்டை நீக்கி துண்டுகள் செய்யவும். பாதி துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து அரை கப் தண்ணீரில் வேகப் போடவும். மீதி துண்டுகளுடன் பச்சை மிளகாய் தேங்காய்த் துருவல் சீரகம் உப்பு சேர்த்து அரைத்து கொதிக்கும் நெல்லிக்காயுடன் சேர்க்கவும். நுரைக்கும் போது அடுப்பை அணைத்து தயிரைக் கடைந்து ஊற்றவும். தேங்காய் எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை தாளித்து மோர்க்குழம்பில் சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து உபயோகிக்கவும்.


9. வெஜ் ஸ்க்யூவர்ஸ்:-

தேவையானவை :-

ஸ்க்யூவர்ஸ் ( மரக் குச்சிகளுக்குப் பதிலாக சில்வர் குச்சிகள் –> குழிப்பணியாரக் கருது போல் நீளமான குச்சிகள் ) – 5. சதுரமாக வெட்டிய சிவப்பு, பச்சை, மஞ்சள் குடைமிளகாய்த் துண்டுகள் – 30, சதுரமாக வெட்டிய பெரிய வெங்காயம் – 20, செரி தக்காளி – 10, குக்னி ( வெள்ளரிக்காய் ) துண்டுகள் – 30, பைனாப்பிள் துண்டுகள் -10, மெலிதாக வெட்டிய இள சோளக்கருது துண்டுகள் – 5, ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன், பேசில் – கால் டீஸ்பூன் , ஓரிகானோ – கால் டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை :-

ஆலிவ் ஆயிலில் பேசில், ஓரிகானோ பொடித்த மிளகு உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். ஸ்க்யூவர்ஸில் ( சில்வர் குச்சிகளில் அல்லது குழிப்பணியாரக் கருதுகளில் ) நடுவில் சோளக்கருது துண்டுகளும் இருபக்கமும் பச்சைக் குடைமிளகாய்த் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகள், குக்னி துண்டுகள், சிவப்பு குடை மிளகாய்த் துண்டுகள் வெங்காயத் துண்டுகள், அடுத்து குக்னி துண்டுகள், செரி தக்காளிகள், அடுத்து மஞ்சள் குடைமிளகாய்த் துண்டுகள், திரும்ப வெங்காயத் துண்டுகள் குக்னி துண்டுகள் வரும்படி செருகி வைக்கவும். இதில் ஆலிவ் ஆயில் கலவையை ஒரு ப்ரஷ் கொண்டு நன்கு தடவி ஊறவைத்து க்ரில் அடுப்பில் மேலாகப் பிடித்து எல்லாப் பக்கமும் சுழற்றி மென்மையாக வாட்டி வைக்கவும். பன் , தக்காளி சாஸ் ஆகியவற்றோடு பரிமாறவும்.


10 பூந்திப் பாயாஸம்.

தேவையானவை :-

பால் – 1 லிட்டர், மைதா – 1 டேபிள் ஸ்பூன், கடலை மாவு – ஒரு கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டீஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை, பேகிங் பவுடர் – 1 சிட்டிகை, எண்ணெய் – பூந்தி பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

பாலை வத்தக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கி வைத்து ஏலப்பொடி சேர்க்கவும். நெய்யில் முந்திரி வறுத்துப் போடவும். மைதாவையும் கடலை மாவையும் உப்பு, பேகிங் பவுடர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து எண்ணெயைக் காயவைத்து பூந்திகளாகப் பொரித்தெடுக்கவும்.

பரிமாறும் சமயம் பாலை சூடு செய்து பூந்தியைக் கலந்து பரிமாறவும்.

டிஸ்கி:- இந்தக் கோலங்களும் சமையல் குறிப்புகளும் 9.10.2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.  


டிஸ்கி :- கிருஷ்ண ஜெயந்தி ரெசிப்பீஸ் பற்றி வாழ்த்துரைத்த பனைமேடு, லெட்சுமி மணிவண்ணனுக்கு நன்றி. 


1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...