எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 20 அக்டோபர், 2015

நவராத்திரி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். NAVRATHRI SPECIAL RECIPES.

நவராத்திரி ஸ்பெஷல்:-

1.சன்னா ராப் ரோல் ( CHANNA WRAP ROLL )
2. பாசிப்பயறு சாலட்
3. தட்டைப் பயறு வடை
4. சோள தோசை
5. கேப்பை இனிப்பு இடியாப்பம்
6. கோதுமை ரவை கிச்சடி
7. கொள்ளு ரசம் & மசியல்
8. பட்டாணி பனீர் க்ரேவி
9. திணையரிசிப் பாயாஸம்.

1.சன்னா ராப் ரோல் ( CHANNA WRAP ROLL )

தேவையானவை :-


சன்னா செய்ய :-
முளைவிட்ட கொண்டைக்கடலை – 1 கப்.( பத்துமணி நேரம் ஊறவைத்து குக்கரில் உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.).வரமிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், , சின்ன வெங்காயம் – 4,. தக்காளி – 1, எள் – 1 டீஸ்பூன், சீரகம்- 1 டீஸ்பூன், கசகசா – அரை டீஸ்பூன், மாதுளை விதை – ஒரு டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி. பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 2, எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன், பட்டை – 1, எண்ணெய் – 2 டீஸ்பூன்,

ராப் செய்ய :-

டார்டில்லாஸ் – 8 ( முழு கோதுமை மாவில் ரோல் செய்யப்பட்ட சமைக்கப்படாத ரெடிமேட் சப்பாத்திகள்) அல்லது கோதுமை மாவு – 2 கப், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை :-

கோதுமை மாவில் உப்பு போட்டு தண்ணீரை லேசாகத் தெளித்து நன்கு இறுக்கமாகப் பிசைந்து அரைமணி நேரம்மூடி வைக்கவும்.மிக மெல்லியதாக சப்பாத்திகள் இட்டு வைத்து மென்மையாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

சன்னா செய்ய :-

சின்ன வெங்காயம், தக்காளி, எள், சீரகம், கசகசா, மாதுளை விதை, உப்பு, சீனி, வரமிளகாய்த்தூள், இவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்து எண்ணெயில் வதக்கவும். அதில் வேகவைத்த சன்னாவைச் சேர்த்து சுண்டவிடவும். கடைசியில் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை போட்டு கிளறி இறக்கவும். டார்டில்லாஸை தோசைக்கல்லில் இருபுறமும் சூடுபடுத்தி அல்லது மெல்லியதாக இட்ட சப்பாத்திகளை சூடுபடுத்தி சன்னா மசாலாவை உள்ளே பரப்பி வைத்து ரோல் செய்து பரிமாறவும், பரப்புமுன் டார்டில்லாஸில் வெண்ணெய், சீஸ் ஸ்ப்ரெட் போன்றவை தடவியும் ரோல் செய்யலாம்.


2. பாசிப்பயறு சாலட்

தேவையானவை :-

முளைவிட்ட பாசிப்பயறு – 1 கப், பொடியாக அரிந்த கேரட், தக்காளி, பெரிய வெங்காயம், வெள்ளரிக்காய் – 1 கப், பொடியாக அரிந்த பச்சை மிளகாய் – 1, கொத்துமல்லித்தழை – சிறிது, மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை :--

முளைவிட்ட பாசிப்பயறை ஆவியில் அரைப்பதம் வேகவைத்து எடுக்கவும். அதை ஒரு பௌலில் போட்டு பொடியாக அரிந்த கேரட், தக்காளி பெரிய வெங்காயம் வெள்ளரிக்காய், பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை, மிளகுத்தூள் எலுமிச்சை சாறு உப்பு எல்லாம் போட்டு நன்கு கலந்து உபயோகிக்கவும். சுட்ட மிளகு அப்பளத்துடன் சாப்பிடலாம்.


3. தட்டைப் பயறு வடை:-

தேவையானவை :-

முளைவிட்ட தட்டைப்பயறு – அரை கப், உளுந்து – 1 டேபிள் ஸ்பூன், பச்சரிசி – அரை டேபிள் ஸ்பூன், வரமிளகாய் = 1, பச்சைமிளகாய் – 1, இஞ்சி – அரை இஞ்ச் துண்டு, கருவேப்பிலை -  2 இணுக்கு, பொடியாக அரிந்த வெங்காயம் – 1, உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை –

உளுந்து அரிசியைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். நீரை வடித்து முளைவிட்ட தட்டைப் பயறு, வரமிளகாய், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை உப்பு சேர்த்து கெட்டியாக கொரகொரப்பாக அரைக்கவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு பிசைந்து எண்ணெயைக் காயவைத்து மசால் வடை போல் பொரித்தெடுக்கவும்.

4. ஸ்டஃப்டு சோள தோசை:-

தேவையானவை :-

சோளம் – ஒரு கப், பச்சரிசி – அரை கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், துருவிய காய்கறிக் கலவை – 1 கப், ( காரட், வெங்காயம், மல்லிதழை, பச்சை பட்டாணி ) மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன். எண்ணெய் – 20 மிலி.

செய்முறை:-

சோளத்தை 8 மணி நேரம் ஊறவைக்கவும். , அரிசியையும் உளுந்தையும் வெந்தயத்தையும் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். சோளத்தை முதலில் அரைத்து அத்துடன் அரிசி உளுந்து வெந்தயம் சேர்த்து அரைத்து உப்பு போட்டு தோசை மாவுப் பதத்தில் கரைத்து வைக்கவும். ஆறுமணி நேரம் புளிக்க விடவும். காய்கறிக் கலவையில் உப்பும் மிளகாய்த்தூளும் கலந்து வைக்கவும். மெல்லிய தோசைகளாக ஊற்றி காய்கறிக்கலவையில் இரண்டு டீஸ்பூன் வைத்து பரப்பி மூடிபோட்டு வேகவைத்து மடித்துப் பரிமாறவும்.

5. கேப்பை இனிப்பு இடியாப்பம்:-

கேழ்வரகு – 2 கப், தேங்காய் – அரை மூடி, சர்க்கரை – கால் கப். நெய் – 2 டீஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை :-

கேழ்வரகைக் கழுவி ஊறவைத்து காயவைத்து மாவாக அரைக்கவும். அதில் இரண்டு கப் எடுத்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றிப் பிசைந்து இடியாப்ப அச்சில் போட்டு இட்லித் தட்டில் இடியாப்பங்களாகப் பிழிந்து உதிர்த்து வைக்கவும். தேங்காயைத் திருகி அதில் போட்டு சர்க்கரை, நெய் கலந்து உபயோகிக்கவும்.

6. கோதுமை ரவை கிச்சடி:-

கோதுமை ரவை – 1 கப், பாசிப்பருப்பு – 2 டீஸ்பூன், கட்டமாக அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( காரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி ), பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். வரமிளகாய் – 2, கருவேப்பிலை – 1 இணுக்கு, கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு மூடி, எண்ணெய் + நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :-

கோதுமை ரவையையும் பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் வாசம் வரும்வரை வறுக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்துபோட்டு சிவந்ததும், கடலைப்பருப்பைப் போட்டு வரமிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும்.கருவேப்பிலையையும் சேர்த்து வறுத்து வெங்காயம் , காய்கறிக் கலவையைப் போடவும். நன்கு வதங்கியதும் உப்பு சேர்த்து கோதுமை ரவை, பாசிப்பருப்பு, தேங்காயைப் போட்டுப் புரட்டி 4 கப் கொதி நீர் ஊற்றி நன்கு கலந்து மூடி போட்டு சிம்மில் வைக்கவும். பத்து நிமிடம் கழித்து பொலபொலவென வெந்ததும் நெய் சேர்த்து உபயோகிக்கவும். 

8. கொள்ளு ரசம் & மசியல்:-

தேவையானவை :-

ரசத்துக்கு :-

கொள்ளு – 1 கப், ரசப்பொடி – 2 டீஸ்பூன் ( வரமிளகாய் -2, துவரம் பருப்பு – அரை டீஸ்பூன், மல்லி – அரை டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன் , பெருங்காயம் – சிறு துண்டு இவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். ), மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன், புளி – நெல்லி அளவு, உப்பு – அரை டீஸ்பூன், பூண்டு – 2 பல், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, கொத்துமல்லித்தழை – சிறிது.

மசியலுக்கு :-

பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1, பூண்டு – 2 பல், மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன், மல்லிப்பொடி – அரை டீஸ்பூன். உப்பு – கால் டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை :-

ரசம் :- கொள்ளை வறுத்து களைந்து 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவைத்து தண்ணீரை மட்டும் இறுத்துக் கொள்ளவும். அதில் உப்பு புளியை கரைத்து ஊற்றி பூண்டைத் தட்டி தோல் நீக்கிப் போட்டு மஞ்சள் பொடி, ரசப் பொடி போட்டுக் கலந்து கொதிக்க வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு வெந்தயம் கருவேப்பிலை, தாளித்துக் கொட்டி நுரைத்ததும் கொத்துமல்லித் தழை தூவி இறக்கி வைக்கவும்.


மசியல் :- வேகவைத்த கொள்ளை பாதி எடுத்து மிக்ஸியில் லேசாக மசித்து மிச்ச கொள்ளோடு சேர்க்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்து பொடியாக அரிந்த வெங்காயம் தக்காளி பூண்டு தாளித்து மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி உப்பு சேர்க்கவும். வதங்கியதும் கொள்ளையும் சேர்த்து சுருளக் கிண்டி இறக்கவும்.  

9. மட்டர் ( பட்டாணி ) பனீர் க்ரேவி ;-

தேவையானவை :-

பச்சைப் பட்டாணி – ஒரு கப் ( உரித்தது ), பனீர் – 1 பாக்கெட், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன், மல்லித்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,

செய்முறை :-

எண்ணெயைக் காயவைத்து பனீரை ஒரு இன்ச் துண்டுகள் செய்து லேசாக வறுத்து எடுக்கவும். அதே எண்ணெயில் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை அரைத்து ஊற்றி வதக்கவும். வெங்காயம் மென்மையாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதில் சீனி உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி சேர்த்து வதக்கி பச்சைப் பட்டாணியைப் போடவும் . ஒரு நிமிடம் வதக்கியதும் தக்காளியை அரைத்து ஊற்றி கிளறி இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். மசாலா கொதிக்கத் துவங்கியதும் பனீர் துண்டுகளைச் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும். கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும்.

10. திணையரிசிப் பாயாஸம்.

தேவையானவை :-

திணை – அரை கப், தண்ணீர் – 2 கப் , பால் 2 கப், சர்க்கரை – கால் கப், நெய் – 1 டீஸ்பூன், முந்திரி – 10, ஏலப்பொடி – 1 சிட்டிகை.

செய்முறை :-

திணையை வெறும் வாணலியில் லேசாக வறுத்து மிக்ஸியில் லேசாக சுற்றிக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வரும் வரை வைக்கவும். ஆறியதும் திறந்து மசித்து இரண்டு கப் பால் ஊற்றி நன்கு கரைத்து திரும்ப குக்கரில் 4 விசில் வரும்வரை வைக்கவும். ஆறியது இறக்கி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பாலும் சர்க்கரையும் சேர்த்து கொதித்து வாசம் வந்ததும் இறக்கி ஏலப்பொடி போடவும். நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு நிவேதிக்கவும். 

டிஸ்கி :- இந்தக் கோலங்களும் ரெசிப்பீஸும்  அக்டோபர் 23, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...