எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 நவம்பர், 2015

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பீஸ். DEEPAVALI RECIPES.



தீபாவளி ரெசிப்பீஸ்.:-

1.ராஜ்போக்
2.பிஸ்தா பாதாம் சுர்தி காரி.
3.சாக்லெட் பர்ஃபி
4.சிரோட்டி
5.பாம்பே ஐஸ் அல்வா
6.அரிஉண்ட ( அரிசி உருண்டை ).
7.வெல்ல வடை
8.பாகர்வாடி
9.நட்ஸ் மிக்ஸர்.

1.ராஜ்போக்


தேவையானவை :-

பனீர் – கால் கி, மைதா – ஒன்றரை டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 600 கிராம், தண்ணீர் – இரண்டரை கப், யெல்லோ ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை, ஏலப்பொடி – 1 சிட்டிகை, குங்குமப்பூ – 1 சிட்டிகை, முந்திரி – 10, தோலுரித்த பாதாம் – 10.


செய்முறை:-

பனீருடன் மைதாவைச் சேர்த்து மென்மையாகப் பிசையவும். முந்திரி, பாதாம், ஏலப்பொடி, மூன்றையும் பொடித்து குங்குமப்பூவைக் கலந்து வைக்கவும். சர்க்கரையில் தண்ணீரைச் சேர்த்து பாகு வைக்கவும். பனீர் மைதாக் கலவையில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து கிண்ணங்களாகச் செய்து பொடித்த முந்திரி பாதாம் கலவையை சிறிது வைத்து நன்கு மூடி திரும்ப உருண்டைகளாக உருட்டவும். கொதிக்கும் சர்க்கரைப் பாகில் யெல்லோ ஃபுட் கலரைச் சேர்த்து பனீர் உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாகப் போடவும். 15 இலிருந்து 20 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்கும்படி ( ஹை ஃப்ளேமில் ) வைக்கவும். ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒரு முறை சர்க்கரைப் பாகு கெட்டியாகி விடாதபடி சிறிது தண்ணீர் சேர்க்கவும். 20 நிமிடம் கழித்து இறக்கி குளிரவைக்கவும். நிவேதிக்கவும்.

2.பிஸ்தா பாதாம் சுர்தி காரி.

தேவையானவை :-

மைதா – 1 கப், நெய் – 4 டேபிள் ஸ்பூன். பால் தேவையான அளவு. பூரணம் செய்ய :- பொடித்த பிஸ்தா – அரை கப், பொடித்த பாதாம் – கால் கப், மாவா ( இனிப்பில்லாத கோவா ) – 1 கப், ரவை – 2 டேபிள் ஸ்பூன், கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், குங்குமப்பூ – 1 சிட்டிகை ( ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவைக்கவும். ), போரா ( பொடித்த சர்க்கரை ) – ஒரு கப், அலங்கரிக்க :- நெய் – 8 டேபிள் ஸ்பூன், போரா ( பொடித்த சர்க்கரை ) 2 டேபிள் ஸ்பூன், பிஸ்தா – 10 ஒன்றிரண்டாக உடைத்தது. நெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-

மைதாவில் நெய், பால் சேர்த்து மென்மையாகப் பிசைந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். ரவையை வெறும் வாணலியில் சிறிது வாசம் வரும்வரை வறுத்து ஆறவிடவும். நெய்யில் கடலைமாவை வாசம் வரும்வரை வறுத்து வைக்கவும். கோவாவை உதிர்த்து 5 நிமிடம் அடுப்பில் வைத்துக் கிளறி ஏலப்பொடி, ரவை, கடலைமாவு சேர்த்து நன்கு கலக்கி பிசைந்து இருசம பாகமாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தில் பொடித்த பாதாம்,பொடித்த சர்க்கரை அரை கப், குங்குமப்பூவைச் சேர்த்துப் பிசையவும். இன்னொரு பங்கில் பொடித்த பிஸ்தா, பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும். பிஸ்தாவை சிறிது எடுத்து உருட்டி பெரிய கிண்ணங்களாகச் செய்து பாதாமை சிறியதாக உருட்டி உள்ளே வைத்து மூடவும். பிசைந்த மைதாவிலிருந்து உருண்டைகள் எடுத்து சப்பாத்திகளாக தேய்த்து இந்த உருண்டைகளை உள்ளே வைத்து மூடவும். நெய்யைக் காயவைத்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 4 மணி நேரம் ஆறவிடவும். அலங்கரிக்க 8 டேபிள் ஸ்பூன் நெய்யை மூன்று முறை காயவைத்து ஆறவிடவும். இதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கலக்கவும். பொறித்து ஆறவைத்த காரிகளை இந்த நெய் சர்க்கரைக் கலவையில் தோய்த்து ஒரு தட்டில் அடுக்கி 12 மணி நேரம் செட் செய்ய ஆறவிடவும். மேலே பிஸ்தாவைப் பதித்து நிவேதிக்கவும்.


3.சாக்லெட் பர்ஃபி

தேவையானவை :-

பால் பவுடர் – ஒரு கப், இனிப்பில்லாத கோகோ பவுடர் – 5 டீஸ்பூன், சர்க்கரை – முக்கால் கப், தண்ணீர் – 1 கப், உருகவைத்த நெய் – 2 டீஸ்பூன், + ( ட்ரேயில் தடவ சிறிது ) பிஸ்தா – 5 பொடியாக ஒடித்தது ( அலங்கரிக்க )

செய்முறை :-

ட்ரேயில் நெய் தடவி தனியாக வைக்கவும். பால் பவுடரையும் கோகோ பவுடரையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். ஒரு பானில் சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். ஒற்றைக் கம்பிப் பாகு பதம் வந்ததும் பால் பவுடர் கோகோ கலவையைத் தூவியபடி கிளறவும். ( சிறிது தளரத்தான் இருக்கும். இதுதான் பதம் ). கடைசியாக மிச்ச நெய்யைச் சேர்த்து நன்கு கலக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும். வெதுவெதுப்பாக இருக்கும்போதே பொடியாக ஒடித்த பிஸ்தாவைத் தூவி பிடித்த வடிவத்தில் துண்டுகள் போடவும். நிவேதிக்கவும்.

4.சிரோட்டி:-

தேவையானவை :-

மைதா – 2 கப், அரிசிமாவு / மைதா – 4 டேபிள் ஸ்பூன், நெய் – அரை கப், போரா ( பொடித்த சீனி ) – 1 கப், நெய் – பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை :-

மைதாவை ஒரு பேசினில் எடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து தேவையான தண்ணீர் தெளித்துப் பிசையவும். ஈரத் துணியால் மூடி 20 நிமிடம் ஊறவிடவும். அரிசி மாவு அல்லது மைதாவுடன் நெய் சேர்த்து நன்கு அடித்துக் குழைத்து வைக்கவு.ம்.. மாவைத் திரும்பப் பிசைந்து 12 உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வொன்றையும் மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டி அதில் அரிசிமாவு நெய் கலவையைத் தடவவும். அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து அரிசிமாவு நெய் கலவையைத் தடவவும். அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைக்கவும். அதைத் ஒரு பக்கத்திலிருந்து உருட்டியபடி சுற்றிக் கொண்டு வந்து ஒட்டி ரோல்செய்து ஒரு இன்ச் அளவில் துண்டுகள் செய்யவும். இவற்றைத் திரும்ப சப்பாத்திக் கல்லில் படுக்கை வசமாகத் தேய்த்து மிதமான தீயில் நெய்யில் பொரித்தெடுக்கவும். பொடித்த சர்க்கரையில் புரட்டி அடுக்கி நிவேதிக்கவும்.

5.பாம்பே ஐஸ் ஹல்வா.

தேவையானவை :-

சன்ன வெள்ளை ரவா – 1 கப், நெய் – 1 கப், சீனி – 4 கப், குளிர்ந்த பால் – 4 கப், ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன், அலங்கரிக்க :- குங்குமப்பூ – 1 சிட்டிகை, ஏலப்பொடி – அரை டீஸ்பூன், பிஸ்தா – 15, பாதாம் – 15. முந்திரி – 15, பெரிய திக் ப்ளாஸ்டிக் ஷீட் – 2. க்ரீஸ் ப்ரூஃப் பேப்பர் – பெரிது – 1.

செய்முறை:-

பிஸ்தா பாதாம் முந்திரியை வறுத்து ஒன்றிரண்டாக உடைத்து ஏலப்பொடி குங்குமப்பூவைக் கலந்து வைக்கவும். ப்ளாஸ்டிக் ஷீட்டுகளின் ஒரு புறம் மட்டும் நெய்யை நன்கு தடவி வைக்கவும். ஒரு பானில் ரவா நெய், சீனி பாலைக் கலந்து அடுப்பில் வைக்கவும். அதிகபட்ச தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். கொதிக்கத் துவங்கியதும் தீயை மிதமாக வைத்து கிளறவும். இறுகத் துவங்கியதும் இறக்கி ரோஸ்வாட்டரையும் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டு நெய் தடவிய ப்ளாஸ்டிக் ஷீட்டில் கொட்டவும். கரண்டியால் சமப் படுத்தி பொடித்த முந்திரி பாதாம், பிஸ்தா ஏலப்பொடி குங்குமப் பூ கலவையைத் தூவி இன்னொரு நெய் தடவிய ப்ளாஸ்டிக் ஷீட்டால் மூடவும். சப்பாத்திக் கட்டையைக் கொண்டு மெல்லிய ஷீட்டாக ப்ளாஸ்டிக் ஷீட்டின் மேல் அழுத்தித் தேய்த்து விட்டு மேலே இருக்கும் ப்ளாஸ்டிக் ஷீட்டை கவனமாக உரித்தெடுக்கவும். நன்கு ஆறுமுன்னே துண்டுகள் போடவும். அதே துண்டுகள் அளவுக்கு க்ரீஸ் ப்ரூஃப் பேப்பரை வெட்டி வைக்கவும். ஆறியதும் பக்குவமாக உரித்து ஒன்றன் மேல் ஒன்றாக நடுவில் க்ரீஸ் பேப்பர் வைத்து அடுக்கவும். நிவேதிக்கவும்.   

6.அரிஉண்ட ( அரிசி உருண்டை )

தேவையானவை :-

கேரளா ரோஸ்மட்டை அரிசி – ஒரு கப், பொடித்த வெல்லம் – முக்கால் கப், துருவிய தேங்காய் – முக்கால் கப், முந்திரிப் பருப்பு – 20, நெய் – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 2 பொடிக்கவும்.

செய்முறை:-

வெறும் வாணலியில் ரோஸ் மட்டையரிசியைப் போட்டு மிதமான தீயில் நிறம்மாறும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் இதை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். நெய்யைக் காயவைத்து அதில் முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறியதும் முந்திரியைப் பொடித்து அரிசிமாவில் போடவும். துருவிய தேங்காயையும் வெல்லத்தையும் மிக்ஸியில் லேசாக சுற்றி எடுத்து ஏலப்பொடி சேர்த்து அரிசி முந்திரிப் பொடியையும் போட்டு இன்னும் ஒரு முறை சுற்றி எடுக்கவும். மிச்ச நெய்யையும் சேர்த்து நன்கு கலக்கி விடவும். இதில் ஒரு கைஅளவு மாவு எடுத்து நன்கு அழுத்திப் பிடித்து உருண்டைகளாக உருட்டி வைத்து நிவேதிக்கவும்.

7.வெல்ல வடை

தேவையானவை :-

உளுந்து -  2 கப், வெல்லம் – 1 கப் , உப்பு – கால் டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

உளுந்தைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும். இதில் தண்ணீர் விடாமல் அரைத்து பாதி அரைந்ததும் வெல்லம், உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக அரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து வடைகளாகப் பொரித்தெடுக்கவும்.


8.பாகர்வாடி

தேவையானவை :-

கடலை மாவு – 1 கப், மைதா மாவு – 1 கப், உப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – முக்கால் டீஸ்பூன், வரமிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் மற்றும் பொரிக்கத் தேவையான அளவு. ஸ்டஃபிங்குக்கு :-  கசகசா – கால் கப், எள் – கால் கப், கொப்பரைத் துருவல் – அரை கப், துருவிய இஞ்சி - ஒரு டேபிள் ஸ்பூன், பொடியாக அரிந்த பச்சை மிளகாய் – 3, மல்லித்தூள் – அரை டேபிள் ஸ்பூன், சீரகத்தூள் – அரை டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-

ஒரு பேசினில் கடலை மாவு மைதாமாவைப் போட்டு உப்பு சேர்க்கவும். மஞ்சள் பொடி,மிளகாய்ப் பொடி எண்ணெய் சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு இறுக்கமாகப் பிசைந்து ஈரத்துணியால் மூடி ஊறவைக்கவும். கசகசா, எள், கொப்பரைத் துருவலைத் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். இன்னொரு பவுலில் துருவிய இஞ்சி, பச்சைமிளகாய், மல்லித்தூள், சீரகத் தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூளைப் போடவும். இதில் வறுத்த கசகசா, பெருங்காய்த்தூள் பொடியாக அரிந்த கொத்துமல்லித்தழை உப்பைப் போட்டு நன்கு கலக்கவும். மாவை எட்டு சமபாகங்களாகப் பிரித்து சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும். மேல் புறத்தில் தண்ணீர் தடவி ஸ்டஃபிங்கில் சிறிது எடுத்து சரிசமமாகப் பரப்பவும். ஃப்ளூட் போல உருட்டி அரை இஞ்ச் துண்டுகள் செய்து எண்ணெயைக் காயவைத்துப் பொன்னிறமாகப் பொறித்தெடுக்கவும். ( இந்த ஃப்ளூட்டுகளை ஆவியில் வேகவைத்து எடுத்து துண்டுகள் செய்தும் பொரிக்கலாம் ).
.
9.நட்ஸ் மிக்ஸர்.

தேவையானவை –

பாதாம் – 100 கி, பிஸ்தா ( உப்பு போட்டு ஓட்டுடன் வறுத்தது ) – 50 கிராம், முந்திரி – 100 கி, வேர்க்கடலை -100 கி, அக்ரூட் – 50 கி, ஊறவைத்த கொண்டைக் கடலை – 50 கி, ஊறவைத்த காராமணி – 50 கி, கிஸ்மிஸ் - 50 கிராம், கருவேப்பிலை – 4 ஆர்க், வரமிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், சர்க்கரை – அரை டீஸ்பூன். பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை. நெய் – பொறிக்கத் தேவையான அளவு.எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை.

பிஸ்தாவை தோல் எடுத்து ஒரு பேசினில் போடவும். பாதாமை ஊறவைத்து தோலுரித்து நெய்யில் வறுத்து போடவும். முந்திரியையும் கிஸ்மிஸையும் நெய்யில் பொன்னிறமாகப் பொரித்துப் போடவும். வேர்க்கடலையை வெறும் வாணலியில் நன்கு வறுத்து தோல் நீக்கிப் போடவும். ஊறவைத்த கொண்டைக்கடலையையும், காராமணியையும் நீர் இல்லாமல் வடித்து எண்ணெயில் பொறித்துப் போடவும். அக்ரூட்டை அப்படியே தோலுரித்துப் போடவும். ஒரு கடாயில் நெய்யைக் காயவைத்து கருவேப்பிலை, பெருங்காயப் பொடி, மிளகாய்ப் பொடி உப்பு சேர்த்து அதில் பொரித்த நட்ஸைக் கொட்டிக் கலக்கி மேலாக பொடித்த சர்க்கரையும் தூவி நன்கு கலக்கி உபயோகப்படுத்தவும். 

டிஸ்கி:- இந்தக் கோலங்களும் ரெசிப்பீஸும். நவம்பர் 6, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.

 


1 கருத்து:


  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...