எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 21 ஜூன், 2016

ஆனித்திருமஞ்சன ரெசிப்பீஸ். AANITHTHIRUMANJANA RECIPES.


1. சிதம்பரம் சர்க்கரைப் பொங்கல்.
2. காப்பரிசி
3. வெள்ளை ரவை அடை
4. தினையரிசிக் கொழுக்கட்டை
5. மினி சீடைக்காய்
6. பழாப்பழ அடை.
7. கோதுமை சேமியா வெஜ் உப்புமா
8. தக்காளி ஊத்தப்பம்
9. ப்ரெட் பனீர் பகோடா
10 மனகோலம்.1.சிதம்பரம் சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை :-
பச்சரிசி - 2 கப், பாசிப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 2 கப், நெய் - ஒரு கப், பச்சைக்கற்பூரம்- ஒரு சிட்டிகை, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, கிஸ்மிஸ் ,முந்திரி - தலா 10.
செய்முறை:-
பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் லேசாக வறுத்து அதன் பின் களைந்து குக்கரில் 4 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். குக்கரைத் திறந்தவுடன் கரண்டியால் நன்கு குழைத்தபடி சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை நன்கு சேர்ந்தவுடன் உருக்கிய நெய்யை ஊற்றி நன்கு கிளறவும். இதில் பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்கவும். முந்திரி கிஸ்மிஸை நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

2. காப்பரிசி :-
தேவையானவை :-
பச்சரிசி - 2 கப், வெல்லம் - 2 கப், நிலக்கடலை, பொட்டுக்கடலை - தலா 2 டேபிள் ஸ்பூன், எள் - ஒரு டேபிள் ஸ்பூன், கொப்பரைத் தேங்காய்த் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன்,நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை. :-
அரிசியைக் களைந்து காயவைக்கவும். நெய்யில் எள், கொப்பரைத் தேங்காய், நிலக்கடலை, பொட்டுக்கடலையைப் போட்டுப் புரட்டவும்.வெல்லத்தைப் பாகாக வைத்து உலர்ந்த அரிசியை போட்டுக் கிளறவும். மிச்ச நெய்யை ஊற்றி ஏலத்தூள், நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள், கொப்பரைத் தேங்காய்த் துண்டுகள் போட்டுப் புரட்டிப் பொரிந்ததும் இறக்கி நிவேதிக்கவும்.

3. வெள்ளை ரவை அடை:-

தேவையானவை :- வெள்ளை ரவை - 2 கப், அரிசி மாவு - ஒரு டேபிள் ஸ்பூன், மைதா - 1 டேபிள் ஸ்பூன்,பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2 , சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:- ரவையில் அரிசி மாவு, மைதா போட்டுப் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு உப்பு சீரகம் சேர்க்கவும். இதை நன்கு கலந்து வெதுவெதுப்பான நீர் ஊற்றி நன்கு பிசையவும். ஸ்டார் வடிவில் கனமான அடையாகத் தட்டி எண்ணெய் தடவி தோசைக்கல்லில் சுடவும். லேசாக வெந்ததும் எடுத்துக் காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

4. தினையரிசிக் கொழுக்கட்டை.

தேவையானவை :- தினையரிசி - 1 கப், பாசிப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன்,தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - கால்டீஸ்பூன். நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை:- தினையரிசியையும் பாசிப்பருப்பையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். தினையரிசியை மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும். இரண்டு கப் தண்ணீரில் தினையரிசியைப் போட்டுக் குக்கரில் பதமாக வேகவைத்து உதிர்க்கவும்.பாசிப்பருப்பைப் பதமாக வேகவைத்துக் கொள்ளவும். பானில் நெய்யை ஊற்றி சீரகம் தாளித்து வெந்த தினையரிசி மாவையும் பாசிப்பருப்பையும் போட்டுக் கிளறி உப்பும் தேங்காய்த்துருவலும் சேர்த்து இறக்கவும். நன்கு பிசைந்து உருண்டை செய்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து இறக்கவும்.

5. மினி சீடைக்காய் :-

தேவையானவை :-
இட்லி அரிசி (அ) புழுங்கல் அரிசி - 2 கப், பொட்டுக்கடலை - 3/4 கப், சன்னமான தேங்காய்த்துருவல் - 1/2 கப், உப்பு - 1 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மிலி, ( விருப்பப்பட்டால் 1 தேக்கரண்டி சீரகம் அல்லது எள் சேர்க்கலாம்).

செய்முறை:-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவிடவும்.நன்கு மைய மாவாக அரைக்கவும்.பொட்டுக்கடலையை மிக்ஸியில் பவுடராக்கி சலிக்கவும்.உப்பு., பொட்டுக் கடலை மாவு ., அரிசிமாவு ., தேங்காய்த்துருவல் எல்லாம் சேர்த்து கட்டிகள் இல்லாமல் மென்மையாக பிசையவும்.சிறு சிறு உருண்டை அல்லது ஓவல் சைஸ் சீடைக்காய்களாக பொடிப்பொடியாக உள்ளங்கையில் வைத்து உருட்டவும். எண்ணயைக் காயவைத்து கைப்பிடி கைப்பிடியாக அள்ளிப் போட்டுப் பொறிக்கவும். நிவேதிக்கவும்.

குறிப்பு :- 1.சீரகம் அல்லது எள்ளை மாவு பிசையும் போது கல் இல்லாமல் சுத்தம் செய்து சேர்க்கவும்.2.கட்டிகள் இல்லாமல் மென்மையாக பிசைந்து உருட்டவும் .. இல்லாவிட்டால் வெடிக்கக் கூடும்..3. அளவான தீயில் பொறிக்கவும்.

6. பலாப்பழ அடை :-
தேவையானவை :-
இட்லி அரிசி - 2 ஆழாக்கு, துருவிய தேங்காய் - 1 கப், தூள் வெல்லம் - 1/2 கப், உப்பு - 1 சிட்டிகை, வாழை இலை - 2, பலாச்சுளைத் துண்டுகள் - 1 கப்.
செய்முறை :-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும்.ஒரு காட்டன் துணியில் மாவை கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும். தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும்.இலையை சம துண்டுகளாக வெட்டவும்.இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும்.அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும்.
பலாச்சுளைதுண்டுகளைத் தூவவும்.ரெண்டாக மடித்து ஒட்டவும். ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.வாழை இலைகளை எடுத்துவிட்டு மாலைச் சிற்றுண்டியாகப் பரிமாறவும்.

7. கோதுமை சேமியா வெஜ் உப்புமா:-
தேவையானவை :-
கோதுமை சேமியா - 1 பாக்கெட், பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது., பச்சை மிளகாய் - 1 வகிர்ந்தது., காரட் - 1 நறுக்கியது., பீன்ஸ் - 4 நறுக்கியது., எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - 1 டீஸ்பூன்,
செய்முறை :-
கோதுமை சேமியாவை வெது வெதுப்பான நீரில் நனைத்து இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை., வெங்காயம்., காரட்., பீன்ஸ்., பச்சைமிளகாய் போடவும். நன்கு வதங்கியதும் தண்ணீர் தெளித்து உப்பு போடவும்.நன்கு வெந்ததும் சேமியாவை சேர்க்கவும். நன்கு கிளறி சிம்மில் வைத்து மூடி போட்டு 1 நிமிடம் வேகவிடவும். சூடாக சட்னி., சாம்பாருடன் பரிமாறவும்.


8.தக்காளி ஊத்தப்பம்:-

தேவையானவை :-
தோசை மாவு - 2 கரண்டி, தக்காளி - 1 வட்ட துண்டங்களாக்கவும்., உப்பு & மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்., எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:-
தோசை மாவை தோசைக்கல்லில் ஊத்தப்பமாக ஊற்றவும். தடவ வேண்டாம். அதில் தக்காளித்  துண்டங்களைப் பரப்பவும். உப்பு மிளகுத்தூளைத் தூவவும்.சுற்றிலும் எண்ணெய் விட்டு  மொறுமொறுப்பாக வேகவிடவும். திருப்பி போட்டுப் பொன்னிறமானதும் எடுக்கவும். சாம்பார் சட்னிகளோடு பரிமாறவும்.


9.ப்ரெட் பனீர் பகோடா:-

 தேவையானவை:-
ப்ரெட் - 4 ஸ்லைசஸ், பனீர் - பாதி பாக்கெட்.,கடலை மாவு - 1 கப்,அரிசி மாவு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் -  1/3 டீஸ்பூன், உப்பு - 1/3 டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு, எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-
ப்ரெட்டின் ஓரங்களை வெட்டி நான்கு துண்டுகளாக்கவும். பனீரைத் துண்டுகளாக்கி ப்ரெட்டின் உள்ளே வைத்துத் தண்ணீர் தொட்டு மடிக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூளை நன்கு கலக்கி தேவையான தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைக்கவும். மடித்த ப்ரெட் ஸ்லைசுகளை இதில் நனைத்து நன்கு காயும் எண்ணெயில் பொறித்தெடுக்கவும். புதினா சட்னி, மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாடோ சில்லி சாஸுடன் பரிமாறவும்.

10. மனகோலம் .

தேவையானவை:-
பாசிப்பருப்பு மாவு - 2 கப்,வெல்லம் - 2 கப்,உப்பு - 1/2 டீஸ்பூன்,டால்டா/எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு., தேங்காய் - 5 இன்ச் துண்டு, பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சீனி பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக  வறுத்து அரைத்துச் சலிக்கவும். உப்பும் தேவையான தண்ணீரும் சேர்த்து மாவு பிசையவும்.எண்ணெய் அல்லது டால்டாவைக் காயவைத்து மனகோலக் கட்டையில் போட்டு பிழிந்து  2 இன்ச் துண்டுகளாக உதிர்த்து வைக்கவும்.தேங்காயைப் பல்லுப் பல்லாக நறுக்கி நெய்யில் வதக்கவும். பொட்டுக்கடலையையும் நெய்யில் வறுத்துக் கொட்டவும்.மனகோலம், தேங்காய், பொட்டுக்கடலை மூன்றையும் ஒரு சில்வர்/பித்தளை பேசினில்  போடவும். வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து முற்றிய பாகு தயாரித்து இந்தக் கலவையில் ஊற்றிக் கலந்து விடவும். பொடித்த சீனியைத் தூவி ஆறியபின் பரிமாறவும்.

டிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் 1.7.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...