எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 ஜூலை, 2016

வரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ். VARALAKSHMI VIRATHAM RECIPES.

வரலெக்ஷ்மி விரத ரெஸிப்பீஸ் :-

1.பழக் கொழுக்கட்டை
2.கலவை பருப்புசாதம்.
3.ஓட்ஸ் பருப்பு வடை.
4.தினை உப்புமாக் கொழுக்கட்டை
5..விளாம்பழப் பச்சடி
6.மாம்பழத் தொக்கு
7.மணி லட்டு
8.தேங்காய்ப்பால் அப்பம்
9.கற்கண்டு ஏலக்காய் பால்.
10.கோதுமை சேமியா பாயாசம்.

1.பழக் கொழுக்கட்டை:-

தேவையானவை :-
பச்சரிசி மாவு – 2 கப், பழக்கலவை – பொடியாக நறுக்கிய ஆப்பிள், சிறுமலைப்பழம், பலாச்சுளை – ஒரு கப், கிஸ்மிஸ் – 30, பேரீச்சை – 6, தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்.உப்பு – 1 சிட்டிகை. சர்க்கரை – ஒரு சிட்டிகை. நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:-
ஒன்றேகால் கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து நெய்யையும் உப்பையும் சேர்க்கவும். கரண்டிக் காம்பால் குத்திக் கிளறி ஈரத்துணியால் மூடிவைக்கவும். ஆறியதும் நன்கு பிசைந்து கொழுக்கட்டை செய்ய உபயோகிக்கவும். பழக்கலவையோடு பொடியாக அரிந்த பேரீச்சை, கிஸ்மிஸ், தேன் கலந்து நன்கு கையால் மசித்து உருட்டி வைக்கவும். கொழுக்கட்டை மாவில் சொப்பு செய்து இந்த பழக்கலவையை ஃபில்லிங்காக நிரப்பி கொழுக்கட்டையை மூடி ஆவியில் பத்துநிமிடம் வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும்.

2.கலவை பருப்புசாதம்.:-

தேவையானவை:-

பச்சரிசி -1 கப், பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கைப்பிடி, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – அரை டீஸ்பூன். தாளிக்க –நெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து , கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன். வரமிளகாய் – 2, கருவேப்பிலை – 1 இணுக்கு. பெருங்காயம் – 1 சிட்டிகை.
 
செய்முறை:- பச்சரிசி, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பைக் களைந்து குக்கரில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் போட்டு இரண்டு விசில் வரும்வரை வேகவைக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து கடலைப்பருப்பு சீரகம் பெருங்காயப் பொடி தாளித்து வரமிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். கருவேப்பிலையைப் போட்டுப் பொரிந்ததும் பருப்பு சாதத்தை உதிர்த்துக் கொட்டி உப்புத் தூவி நன்கு கலந்து நிவேதிக்கவும்.


3.ஓட்ஸ் பருப்பு வடை.:-

தேவையானவை :-
ஓட்ஸ் – 1 கப், கலைப்பருப்பு , பாசிப்பருப்பு – தலா கால் கப் , இஞ்சி – சிறியதுண்டு, பச்சைமிளகாய் – 1, வரமிளகாய் – 1, பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, கருவேப்பிலை கொத்துமல்லி – ஒரு கைப்பிடி., உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து பச்சைமிளகாய், வரமிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஓட்ஸையும் கடைசியில் போட்டு சுற்றி இறக்கவும். இதில் பெருங்காயத்தூள் பொடியாக அரிந்த கருவேப்பிலை கொத்துமல்லி சேர்க்கவும். பத்து நிமிடம் நன்கு ஊறியபின் மெல்லிய வடைகளாகத் தட்டிக் காயும் எண்ணெயில் பொரித்து நிவேதிக்கவும்.


4.தினை உப்புமாக் கொழுக்கட்டை

தேவையானவை:-
தினை அரிசி – அரை கப், இட்லி அரிசி – அரை கப், துவரம் பருப்பு – 1 கைப்பிடி. மிளகு – 10. எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் . கடுகு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு. உப்பு – அரை டீஸ்பூன். தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், துருவிய காரட் – ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-

தினை அரிசி இட்லி அரிசி ஆகியவற்றைத் தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ளவும். முதலில் இட்லி அரிசியைப் போட்டு நரநரப்பாக அரைத்து அதில் தினையரிசியையும் போட்டு ஒரு சில சுற்றுகள் சுற்றிக் கொள்ளவும். துவரம்பருப்பையும் மிளகையும் ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உப்பு சேர்த்து இந்தக் கலவையை சிறிது நேரம் வைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் தாளித்து கருவேப்பிலையைப் போடவும். அரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறவும். ஒட்டாத பதம் வந்ததும் இறக்கப் போகும்போது காரட் துருவலையும் தேங்காய்த் துருவலையும் போடவும். சூடு குறைந்ததும் நன்கு பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 20 நிமிடம் வேகவைத்து நிவேதிக்கவும்.

5..விளாம்பழப் பச்சடி:-

தேவையானவை :-
விளாம்பழம் – 1, வெல்லம் – விளாம்பழச் சதையின் சம அளவு., நெய் – 2 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, பச்சைமிளகாய் – பொடியாக அரிந்தது. கடுகு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கெட்டிப் பாகுவைக்கவும். இதில் விளாம்பழச் சதையையும் உப்பையும் சேர்த்துப் பிசையவும். நெய்யில் கடுகையும் பொடியாக அரிந்த பச்சைமிளகாயையும் தாளித்துக் கொட்டி உபயோகிக்கவும்.  

6.மாம்பழத் தொக்கு:-

தேவையானவை:-
அரைப்பழமான மாங்காய் – 2, வரமிளகாய் – 4 வறுத்துப் பொடிக்கவும். வெந்தயம் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன். வெல்லம்- சிறு துண்டு. உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:-
அரைப்பழமான மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். வரமிளகாய் வெந்தயம் பெருங்காயத்தைத் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து மாங்காயைப் போட்டுப் புரட்டி வறுத்த பொடிகளையும் உப்பையும் சேர்க்கவும். நன்கு புரட்டிக் கொடுத்து சுருண்டதும் வெல்லம் தட்டிப் போட்டு இறக்கவும்.

7.மணி லட்டு :-

தேவையானவை :-
கடலை மாவு – 1 கப், சர்க்கரை – 1 கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை, இலவங்கம் – 4, முந்திரி கிஸ்மிஸ் – தலா 15 , முந்திரியைப் பொடியாக ஒடிக்கவும். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

சர்க்கரையை அரை கப் தண்ணீர் ஊற்றி ஒற்றைக் கம்பிப் பாகு வைக்கவும். இறக்கி வைத்து ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம், போடவும். நெய்யில் இலவங்கம், முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போடவும். கடலை மாவைத் தண்ணீர் தெளித்துப் கெட்டியாகப் பிசையவும். இடியாப்பத் துளை அளவு சிறு கண் உள்ள கரண்டியில் கையால் மாவைப் பிடித்துத் தேய்த்து எண்ணெயில் பொறித்து அள்ளவும். இதை எண்ணெய் வடிந்ததும் சர்க்கரைப் பாகில் போட்டு எல்லா மாவையும் மணி அளவில் பூந்தியாகச் செய்து பாகில் போட்டு அவ்வப்போது கிளறி விடவும். கடைசியில் நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடித்து நிவேதிக்கவும்.

8.தேங்காய்ப்பால் அப்பம்:-

தேவையானவை:-
தேங்காய்ப் பால் – 2 கப், பச்சரிசி – 1 கப், வெந்தயம் – 1 டீஸ்பூன், உளுந்து, துவரம்பருப்பு – தலா ஒரு கைப்பிடி, ஏலக்காய்- 2, வெல்லம் – முக்கால் கப், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

பச்சரிசி வெந்தயம் உளுந்து துவரம்பருப்பைக் களைந்து ஊறவைக்கவும். தேங்காய்ப் பால் ஊற்றி வெல்லம் ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். உடனே எண்ணெயைக் காயவைத்து அப்பங்களாகப் பொரித்தெடுக்கவும்.

9.கற்கண்டு ஏலக்காய் பால்.:-

தேவையானவை :-
பால் – 1 லிட்டர் , கல்கண்டு – 50 கி, ஏலக்காய் – 3.

செய்முறை:-
பாலைக் கெட்டியாகக் காய்ச்சவும். அதில் கற்கண்டைப் பொடித்துப் போட்டு மேலும் கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கொதித்ததும் இறக்கி ஏலத்தைப் பொடி செய்து போடவும். நிவேதிக்கவும்.

10.கோதுமை சேமியா பாயாசம்.:-

தேவையானவை:-
கோதுமை சேமியா- அரை கப், பால் – முக்கால் லிட்டர், சர்க்கரை- ரெண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்- 1, முந்திரி கிஸ்மிஸ்- தலா 10, நெய்- 2 டீஸ்பூன்.

செய்முறை:-

பாலைக் காய்ச்சி நன்கு கொதிக்க விடவும். கோதுமை சேமியாவை கொதிக்கும் பாலில் போட்டு வேகவைக்கவும். வெந்தபின் சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்துப் போட்டு ஏலத்தைத் தட்டிப் போட்டு இறக்கி நிவேதிக்கவும். 

டிஸ்கி:- இந்த ரெசிப்பீஸ் 29.07.2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை. 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...