எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

வரகரிசி உப்புமாக் கொழுக்கட்டை

வரகரிசி உப்புமாக் கொழுக்கட்டை


தேவையானவை :- வரகரசி – 1 கப் , கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். தண்ணீர் – 3 கப். ( பச்சைமிளகாய் – 1, காரட் – 1 பொடியாக துருவவும், தேங்காய்த் துருவல் – அரை கப் ) உப்பு – அரை டீஸ்பூன். எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளித்து வெங்காயத்தை வதக்கவும். இதில் வரகரிசியையும் போட்டு லேசாக வறுத்து உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் குக்கரில் ஒரு விசில் வைக்கவும். குக்கரில் முக்கால் பதம் வெந்திருக்கும். இறக்கி அதில் பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், காரட் துருவல் கலந்து நன்கு பிசைந்து பிடிகொழுக்கட்டைகளாக ஆவியில் 20 நிமிடம் வேகவைக்கவும்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

பாசிப்பயறு கொழுக்கட்டை

பாசிப்பயறு கொழுக்கட்டை


தேவையானவை:- கொழுக்கட்டை மாவு – 1 கப், உடைத்த பாசிப்பயறு  – அரை கப், தேங்காய்த்துருவல் – கால் கப், உப்பு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கொழுந்து கருவேப்பிலை – சிறிது, வரமிளகாய் – 1. நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பயறை வேகவிடவும் முக்கால் பதம் வெந்ததும் இறக்கி அதில் கொழுக்கட்டை மாவு, உப்பு, தேங்காய்த்துருவலைப் போடவும். நெய்யில் சீரகம், பொடிதாக உடைத்த வரமிளகாய், கொழுந்து கருவேப்பிலை தாளித்து மாவில் போட்டு நன்கு கலந்து வெந்நீர் தெளித்துப் பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாக ஆவியில் வேகவைக்கவும்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

அவல் வெல்லக் கொழுக்கட்டை

அவல் வெல்லக் கொழுக்கட்டை


தேவையானவை :- பச்சரிசி மாவு – 2 கப், பேப்பர் அவல் – அரை கப் , துருவிய தேங்காய் – அரை கப், தூள் வெல்லம் – அரை கப், ஏலப்பொடி – ஒரு சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன். வெந்நீர் – ஒண்ணேகால் கப்.

செய்முறை:- அவலைப் பொடித்து துருவிய தேங்காய் வெல்லம் ஏலப்பொடி சேர்த்து நன்கு பிசைந்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கொதிக்கும் வெந்நீரில் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து மாவைக் கொட்டிக் கிளறி மூடி வைக்கவும். ஆறியதும் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்துக் கிண்ணம் போல் செய்து அதில் அவல் பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைக்கவும்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

கோதுமைக் கொழுக்கட்டை

கோதுமைக் கொழுக்கட்டை


தேவையானவை :- கோதுமை மாவு - 2 கப், தேங்காய்த் துருவல் - 1/2 கப், உப்பு - 1 டீஸ்பூன்., சீரகம் - 1 டீஸ்பூன், தண்ணீர் தேவையான அளவு.

செய்முறை:- வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு நன்கு மணலாக ஆகும்வரை  வறுக்கவும். அதில் உப்புத் தண்ணீர் தெளித்து தேங்காய்த் துருவலையும் சேர்த்து , சீரகம் போட்டு லேசாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதைத் தேங்காய்த் துவையலோடு பரிமாறவும்.

சனி, 2 ஆகஸ்ட், 2025

சீரகக் கொழுக்கட்டை

சீரகக் கொழுக்கட்டை


தேவையானவை :- புழுங்கல் அரிசி மாவு / கொழுக்கட்டை மாவு/ இடியாப்ப மாவு - 1 கப், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு - 1/3 டீஸ்பூன், வெங்காயம் - பொடியாக அரிந்தது 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்), துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( விரும்பினால்), வெந்நீர் - தேவையான அளவு.

செய்முறை:- சீரகம், வெங்காயம், தேங்காய், உப்பை மாவில் போடவும். தேவையான தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப்  பிசையவும்.விரலால் கிள்ளி சீடைக்காய் அளவு எடுத்து தட்டிப் போடவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.10 நிமிடம் வேக விடவும். 5 நிமிடம் வெந்தபின்பே கரண்டியால் கிளறி விடவும். ( போட்ட உடன் கிண்டினால் மாவு வெந்நீரில் கரைந்து விடும்.) 10 நிமிடம் கழித்து வடித்து எடுத்து சூடாக பருப்புத் துவையலுடன் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...