எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

கிச்சன் கில்லாடி:-



கிச்சன் கில்லாடி:-

சமைக்கிறது ஒண்ணும் கம்ப சூத்திரம் இல்லை. அது மிக மிக எளிமையான ஒரு ப்ராக்டிகல்தான். ஒரு சில தியரிகளை ..ஒரு சில டிப்ஸ்களைப் பின்பற்றினால் நீங்களும் கிச்சன் கில்லாடிதான்.

1.ப்ளெயின் பொரியல் :- எல்லாக் காய்கறிகளையும் ஆவியில் வேகவைத்துவிட்டுப் பொரித்தால் நிறம் மணம் சுவை மாறாது. அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு உளுந்து வரமிளகாய் கருவேப்பிலை தாளித்து உப்பு, தேங்காய் போட்டுக் கலக்கி …. படாஃபட் இறக்கவேண்டியதுதான்.

2. காரப் பொரியல் :- உருளை, வாழை, வெண்டி, கத்திரி இவற்றை கடுகு உளுந்து தாளித்து ( பிடித்தால் சோம்பு போடலாம் ) இரண்டு நிமிடம் வதக்கி உப்பு மிளகாய்ப் பொடி சேர்த்து சிம்மில் போட்டு 5 – 7 நிமிடம் கிளறி இறக்க வேண்டியதுதான். சேனை, சேம்பு போன்றவற்றை வேகவைத்து இதே முறையில் செய்யணும்.

3. ஃப்ரூட் சாலட்களில் ஜீனிக்கு பதிலாக தேனும் பேரீச்சையும் உபயோகிக்க வேண்டும்.

4. குளிர்காலத்தில் ஒரு ரசம் நல்லது. தூதுவளை, பைனாப்பிள், வெற்றிலை, கற்பூரவல்லி இலை, துளசி, இளநீர், ரோஜாப்பூ, வேப்பம்பூ ஆகியவற்றில் ரசம் வைக்கலாம்.

5. ஆப்பிள் பைனாப்பிள், தக்காளி, கோளா உருண்டை ஆகியவற்றிலும் மோர்க்குழம்பு செய்யலாம்.

6. தீயை மிதமாகவே வைத்து சமைப்பது நல்லது ( பாத்திரம் கழுவுபவருக்கு மட்டுமல்ல நமக்கும்தான் . ;)  ஃப்ரைட் ரைஸ் செய்யும்போதுதான் தீயை ஹை ஃப்ளேமில் வைக்கணும்.

7. கொத்துமல்லி, புதினா, கொழுந்து கருவேப்பிலை உபயோகித்து வெரைட்டி தோசைகளும், வெரைட்டி ரைஸஸும் செய்யலாம்.

8. ஆலிவ் ஆயிலை சாலட், நூடுல்ஸ் போன்றவற்றில் ஸ்ப்ரே செய்துதான் உபயோகிக்கணும். சூடுபடுத்தக் கூடாது.

9. அரிசி களைந்த தண்ணீரில் மணத்தக்காளி/பொன்னாங்கண்ணிக்கீரை சின்ன வெங்காயம் சீரகம் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் வாய்ப்புண் ஆறும்.

10. கடுகு உளுந்து எண்ணெயில் தாளித்து ஒரு பாட்டிலிலும், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, மஞ்சப் பொடி பாக்கெட்டுகளிலும் புளி உப்பு சிறிதும் அரிசி கொஞ்சமும் ஒரு குட்டி ரைஸ் குக்கரும் டூர் போகும் ஊர்களுக்குக் கொண்டு சென்றால் விருந்தே சாப்பிட்டு விடலாம். ஒரு 3 கப் டிபன் டப்பா இருந்தால் நலம்.

ரைஸ் குக்கரில் தண்ணீர் ஊற்றி தேவையான காய்கறிகளை வேகப்போட்டு முக்கால் பதம் வெந்ததும் உப்பு மிளகாய்ப் பொடி போட்டு இரு நிமிடம் கழித்து கடுகு உளுந்து எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றிக் கிளறி இறக்கினால் காரப் பொரியல் ரெடி.

வெங்காயம் தக்காளி, பூண்டு காய்களைக் கட் செய்து உப்புப் புளித் தண்ணீரில் போட்டு ( சீரகம், துண்டு பெருங்காயம் இருந்தால் பச்சையாகப்போடலாம் ) சாம்பார் பொடி போட்டுக் பத்து நிமிடம் கொதித்ததும் கடுகு உளுந்து எண்ணெயை ஒரு ஸ்பூன் விட்டு இறக்கினால் குழம்பு ரெடி.

பாசிப்பருப்பு சீரகம் காய் அல்லது கீரையை உப்புப் போட்டு வேகவைத்து இறக்கினால் கூட்டு ரெடி.

சாதம் வைத்து சிப்ஸ், தயிர் வாங்கி ஜமாய்க்க வேண்டியதுதான். போற ஊர்ல எல்லாம் சமைக்க முடியுமா என்று கேக்கிறீங்களா.. வயிறு ரொம்பப் படுத்தினா என்ன செய்றது. வெளிய விக்கிற சோறு ஒத்துக்காட்டா அவதிப்படப் போறது நாமதானே.

என் ஃப்ரெண்ட் குடும்பம் ஒருத்தங்க வெளிநாட்டு டூருக்கே ரைஸ் குக்கரோட போனாங்க. ஆனா என்ன யோகர்ட் வாங்கி பிக்கிள்ஸ் அல்லது சாலட்டோட சாப்பிட்டாங்களாம். 

சில ஹோட்டல்களில் மினி ஃப்ரிட்ஜ் இருக்கும். வீட்டிலிருந்து தக்காளித் தொக்கு, கருவேப்பிலைக் குழம்பு, புளிக்காய்ச்சல் எடுத்துட்டுப் போனா அதுல வைச்சு சாப்பிடும்போது தண்ணீல சூடு பண்ணி 3 நாளைக்கு சமாளிக்கலாம். 

ஒரு வாய் சோறு சாப்பிடாட்டா நமக்கு என்னவோ போலிருக்கும்தானே. அதுனால நார்த் இண்டியா போறதுன்னா எது எடுத்துக்கிறமோ இல்லையோ ஒரு குட்டி எலக்ட்ரிக் ரைஸ் குக்கரும் கொஞ்சம் அரிசியும் எடுத்துட்டுப் போயிடுறது வழக்கம். காலையிலயும் நைட்லயும் சப்பாத்தி சாப்பிட்ட வாய்க்கு தயிரும் ஊறுகாயுமே அமிர்தமா இருக்கும் . ட்ரை பண்ணிப்பாருங்க. J

திங்கள், 22 செப்டம்பர், 2014

புத்தாண்டு, ராமநவமி, பங்குனி உத்திரம் நிவேதனக் குறிப்புகள் NEW YEAR & RAMANAVAMI RECIPES.

இந்த நிவேதனக் குறிப்புகள் ஏப்ரல் 1- 15,   2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

1. பாற்சோறு.:-
*************************

தேவையானவை :-
பச்சரிசி - 1 கப்
வெல்லம்+கருப்பட்டி - 2 கப்
தேங்காய் ஒரு மூடி - பல்லு பல்லாக நறுக்கவும்.
தண்ணீர் - 4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:-
அரிசியை களைந்து வைக்கவும். வெல்லம்+ கருப்பட்டியைத் தண்ணீரில் போட்டு சூடாக்கி நன்கு கரைத்து வடிகட்டவும். திரும்ப அதே அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் கருப்பட்டிப் பாகை ஊற்றி கொதிவந்ததும் அரிசியை போடவும். கிளறிக்கொண்டே இருக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்ப் பல்லுகளைச் சேர்க்கவும். இறுகி வெந்து ஒட்டாமல் வந்தவுடன் நெய்யைச் சேர்த்து இறக்கவும்.
2. மதுவரக்கம்.:-

வியாழன், 18 செப்டம்பர், 2014

குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் . ( 30 விதமான சமையல் குறிப்புகள். ) CHETTINAD SPECIAL RECIPES.



செட்டிநாட்டு உணவுகளின் முக்கியத்துவம்:-
செட்டிநாடு என்றாலே கட்டுக் கோப்பான வீடுகளுக்கு அடுத்தபடியாக அவர்களின் விருந்தோம்பல்தான் ஞாபகம் வரும். செட்டிநாட்டு உணவுகள் கண்ணுக்கும் நாவுக்கும் ஒரு சேர விருந்தளிப்பவை.

 வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே  மிகச் சிறப்பான சமையலைச் செய்ய முடியும் என்பது அதன் சிறப்பு. மிகக் குறைவான பொருட்களே தேவை. சிறிது எண்ணெய் மட்டுமே அதிகம் சேர்ப்பார்கள். செட்டிநாட்டு உணவுகளில் மசாலை என்பது சிறப்பு. அம்மியில் மிளகாய் சோம்பு அரைத்துச் செய்வார்கள். கிட்டத்தட்ட தினமும் ஒரு மசாலை  இருக்கும்.

ஒரு நாள் சமையலிலேயே பொருத்தமாக சமைப்பார்கள். சாம்பார் என்றால் மசாலை, பிரட்டல், மண்டி, வடை , துவையல் போன்ற பக்க பதார்த்தங்களும், கெட்டிக் குழம்பு என்றால் பொரியல், துவட்டல் போன்ற பக்க பதார்த்தங்களும் ( வெஞ்சனங்களும் ) சூப்பு, இளங்குழம்பு என்றால் காரமான பக்கபதார்த்தங்களும் செய்வார்கள்.

ஒன்றில் தேங்காய் போட்டால் இன்னொன்றில் பருப்பு போடுவார்கள். இன்னொன்றைக் காரமாக சமைப்பார்கள். காய்கறி தோதுபார்த்துத்தான் தொட்டுக்கொள்ள வைப்பார்கள்.

அவள் விகடனில் பொங்கப் பானையும் கொப்பி கொட்டுதலும்.PONGAL AT AVAL VIKATAN

பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-

திருமணமான பெண்ணுக்குத் தாய் வீட்டில் இருந்து வரும் சீரில் முக்கியமானது பொங்கல் சீர். காரைக்குடியில் எங்கள் ஆயா வீட்டில் இருந்து வருடா வருடம் பொங்கல் சீர் எடுத்து வருவார்கள். அதைப் பொங்கப் பானை கொடுப்பது என்பார்கள். பெண் இருக்கும் வரை பொங்கல் பானை கொடுப்பார்கள்.

பொங்கலுக்கு ஓரிரு நாட்கள் முன்பு சாமி வீட்டில் அம்மா நடுவீட்டுக் கோலமிடுவார்கள். அன்று மாலை பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், ஏலக்காய், கிஸ்மிஸு, கத்திரிக்காய், வாழைக்காய், கருணைக்கிழங்கு, பரங்கிக்காய், அவரைக்காய், பலாக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, கரும்புக்கட்டு, மஞ்சக் கொத்து , வாழை இலை வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் எல்லாம் எடுத்து எங்கள் ஆயா வீட்டு ஐயாவும் மாமாக்களும் வருவார்கள்.

பொதுவாக பொங்கல் பானை விளக்கு வைத்தபின் கொடுப்பதில்லை என்பதால் அது ஒரு மாலைப் பொழுதிலேயே பொங்கல் பானை எடுத்து வருவார்கள். அம்மா சாமி வீட்டில் விளக்கேற்ற நடுவீட்டுக் கோலத்தின் முன்பு கொண்டுவந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை வைத்து ஐயாவும், மாமாக்களும் வணங்கி வருவார்கள்.

பொங்கல் பானை கொண்டு வந்தவர்களுக்குச் சிறப்பான மாலைப் பலகாரத்தை அம்மா செய்திருப்பார்கள். கந்தரப்பம், வடை, காரட் அல்வா, பாதாம் அல்வா, ரசகுல்லா, குலோப் ஜாமுன், வறுத்த முந்திரிப் பருப்பு, மிக்ஸர் இதில் இனிப்பு ஒன்றும் காரம் ஒன்றும் அத்துடன் இட்லி, தோசை அல்லது மினி ஊத்தப்பம். வெங்காயக் கோஸ்/அவியல்/கோசமல்லி இவற்றோடு இருக்கும்.

பொங்கலுக்கு முதல்நாள் திரும்ப சாமி வீடு மெழுகி அம்மா நடுவீட்டுக் கோலம் போடுவார்கள். பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கரைத்து காட்டன் துணியில் தொட்டு இந்தக் கோலத்தைப் போடுவோம். சாமிவீட்டின் வாசல்படிகளில் கோலமிட்டு சாமிவீட்டுக்கு நேரே வெளிப்பத்தியில் அல்லது கீழ் வாசலில் கிழக்கே சூரியன் உதிக்கும் திசை பார்த்துப் பொங்கலிடக் கோலம் போடுவோம். இதில் செவ்வகக் கோலத்துள் அடுப்பு வைக்க மனைகள் போட்டு தேர்க் கோபுரம்  மற்றும் கால்கள் போட்டு இரட்டை வரிசைப் புள்ளிகள் குத்துவோம். முதலில் கோலம் போட்டுப் பழகுபவர்களுக்குப் புள்ளி வைக்கத்தான் கற்றுக் கொடுப்பார்கள்.

புதன், 17 செப்டம்பர், 2014

நவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில். NAVATHANYA RECIPES

நவதானிய சமையல் குறிப்புகள். புதிய தரிசனத்தில்.

1. கவுனரிசி:-

தேவையானவை:-
கவுனரிசி - 1 ஆழாக்கு
சீனி - 1/2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1/ 2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 2 (பொடித்தது)

செய்முறை:-
கவுனரிசியை சுத்தம் செய்து கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரின் வேகவைக்கவும். வெளியில் எடுத்து நன்கு மசிக்கவும். சீனி., துருவிய தேங்காய்., நெய்., ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.


2. சிவப்பரிசிப் பணியாரம்.

தேவையானவை :-
சிவப்பரிசி - 2 ஆழாக்கு தலை தட்டி
உளுந்து அதன் மேல் கோபுரமாக வைக்கவேண்டும்.
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

Related Posts Plugin for WordPress, Blogger...