எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 மே, 2021

30 வகை பிரியாணி, குமுதம் சிநேகிதிக்காக

30 வகை பிரியாணி, குமுதம் சிநேகிதிக்காகத் தேனம்மை லெக்ஷ்மணன்.

 


 

பெர்ஸியாவிலிருந்து பிரியமுடன் வந்த பிரியாணி :-

 

பிரிஞ்ச் என்றால் பெர்ஸிய மொழியில் அரிசி என்று அர்த்தம். பிரியான் என்றால் அரிசியை வறுத்துச் சமைப்பது என்றும் பொருள். பெர்ஸியாவிலிருந்து இந்தியாவுக்கு இந்த பிரியானை பதினாறாம் நூற்றாண்டிலேயே கொண்டுவந்து பிரியாணியாக வளர்த்தெடுத்த பெருமை முகலாய மன்னர்களையே சாரும். அரேபிய வணிகர்களும் இந்தியாவுக்கு இவ்வுணவைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.  ஹைதை நிஜாம் ( முதலாம் ஆஸஃப் ஜா ) அரண்மனைகளில்தான் இவ்வுணவு மிகப் பிரசித்தியடைந்தது.  நவாபுகளின் சிறப்புணவான இது இன்று இந்தியாவின் தெருக்கள்தோறும் கிடைக்கிறது. 

 

ஆசிய அரேபிய மக்களின் விருந்துணவுகளில் பிரியாணிக்கு என்றுமே முக்கிய இடம் உண்டு. பிரியாணியில் சேர்க்கப்படும் பொருட்கள் உடல்நலம் பேணுவதிலும் முக்கியத்துவம் வகிக்கின்றன. அரிசி உடலுக்கும் மூளைக்கும் எரிபொருளாகும் கார்போஹைட்ரேட்டைத் தருகிறது. நெய், தயிர், எலுமிச்சை உடலைக் குளிர்ச்சியாக்குகின்றன.  


 இஞ்சி, பூண்டு, மிளகு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி ஜீரணத்துக்கும், இறைச்சியில் கிடைக்கும் ப்ரோட்டீன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. பட்டை, கிராம்பு, ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்ப்பதால் உடல்வலி நீங்கி புத்துணர்வு ஏற்படுகிறது. இவை பித்தத்தை நீக்கிக் கல்லீரலையும் சுத்தப்படுத்துகின்றன. மஞ்சள் குடல்புண்ணை ஆற்றுவதோடு வீக்கத்தையும் நீக்குகிறது. இறைச்சியில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் நம்ம ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதோடு எலும்புக்கு வளர்ச்சி கொடுத்து , விட்டமின் குறைபாட்டையும் ( செலினியம், விட்டமின் பி, பி 6, நியசின்) நீக்குது. நெய்யும் இறைச்சியிலிருந்து கிடைக்கும் கொழுப்புகளும் உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றன. கொழுப்புச் சத்து, நெய்,வெண்ணெய் இருக்குதே, உடல் பருமனாயிடுமோன்னு கவலைப்பட வேண்டாம்.  ஏன்னா பாசுமதி அரிசி உண்பதால் உடல் எடைகுறையும் என்பதே உண்மை! எனவே பிரியாணி செய்து அனைவருக்கும் ஈந்து பிரியமுடன் உண்போம்.


  

வெள்ளி, 21 மே, 2021

வாழைக்காய் கத்திரிக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு

வாழைக்காய் கத்திரிக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு


தேவையானவை :- வாழைக்காய் - 1, கத்திரிக்காய் - 2, சின்ன வெங்காயம் - 6, பூண்டு - 6 பல், தக்காளி - 1, சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, பெருங்காயம் - சிறு துண்டு, வெந்தயம், சீரகம், சோம்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை :- ஒரு பாத்திரத்தில் உப்புப் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அதில் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, நல்லெண்ணெய், கருவேப்பிலை, பெருங்காயம், வெந்தயம், சீரகம், சோம்பைப் போடவும். தக்காளி, சின்ன வெங்காயம் பூண்டு, கத்திரிக்காய் வாழைக்காயை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி இந்தப் புளிக்கரைசலில் போடவும். 

அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து வரும்போது அடக்கி வைத்து மூடி போட்டு இன்னும் பத்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடான சோறு, அப்பளத்தோடு பரிமாறவும். 

 

வியாழன், 6 மே, 2021

அவிச்ச வேர்க்கடலை

அவிச்ச வேர்க்கடலை


தேவையானவை :- தோலுரித்த வேர்க்கடலை- 1 கப், பெரியவெங்காயம் - 1, கொத்துமல்லித்தழை - சிறிது, உப்பு - அரை டீஸ்பூன், டொமாடோ சாஸ் - 1 டீஸ்பூன்.

செய்முறை:- வேர்க்கடலையுடன் உப்புப் போட்டுக் குக்கரில் அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மூன்று விசில் வேகவைத்து நீரை வடிக்கவும். அதில் பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், கொத்துமல்லித்தழை, தக்காளி சாஸ் ஊற்றிப் பரிமாறவும்.

 

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

இனிப்பு பூந்தி.

இனிப்பு பூந்தி.






தேவையானவை:- கடலை மாவு -1 கப், சீனி - 1 கப், சோடாப்பூ - 1 சிட்டிகை, ஏலப்பொடி - 1 சிட்டிகை, பச்சைக்கற்பூரம் - 1 சிட்டிகை, முந்திரிப்பருப்பு - 10. உப்பு - 1 சிட்டிகை, கிராம்பு - 4. ( கல்கண்டு, கிஸ்மிஸ் - விரும்பினால் ஒரு டேபிள் ஸ்பூன் ) , எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. 

செய்முறை:- சீனியில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கம்பிப் பாகு வைத்துக் கொள்ளவும். இதில் முந்திரிப் பருப்பை வறுத்துப் போட்டுப் பச்சைக்கற்பூரம்,  ஏலப்போடி, கிராம்பைப் போட்டு வைக்கவும்.  

கடலைமாவில் உப்பு, சோடாப்பூ போட்டுப் பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்துப் பூந்தி பொரிக்கும் ஜாரிணியில் மாவைக் கரண்டியால் மோந்து ஊற்றி அதே கரண்டியால் தேய்க்கவும். முத்து முத்தாக எண்ணெயில் பூந்தி விழுந்ததும் இன்னொரு அரிகரண்டியால்  அனைத்தையும் திருப்பி விடவும். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு சலசலப்பு அடங்கியதும் அனைத்தையும் வடித்து வடிகட்டியில் போடவும். பூந்தியைத் தொட்டுப் பார்த்தால் சொடுக் கென்று உடையவேண்டும். மொறுக் கென்று இருக்கக் கூடாது ( நொறுங்கக் கூடாது ) . சதக் என்றும் இருக்கக் கூடாது.  

இதை சீனிப் பாகில் போட்டுப் புரட்டி விடவும். மிச்ச பூந்திகளையும் இவ்வாறே பொரித்துப் போட்டுப் பாகில் புரட்டிக் கால்மணி நேரம் வைக்கவும். அதன்பின் இதைப் பரிமாறவும். 
 

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

உப்புப் புளி ரசம்.

உப்புப் புளி ரசம். 


தேவையானவை :- சின்ன வெங்காயம் - 15, வரமிளகாய் - 4, கருவேப்பிலை -  1 இணுக்கு, தண்ணீர் - 2 கப், புளி - 1 நெல்லி அளவு, உப்பு - 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை, சீரகம் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:- புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்துப் பிழிந்து சாறெடுத்து உப்பு சேர்த்து வைக்கவும். இதில் பெருங்காயத்தூள், சீரகத்தை உள்ளங்கையில் கசக்கிச் சேர்க்கவும். வரமிளகாயை விதை நீக்கிக் கிள்ளிப் போடவும். கருவேப்பிலையையும் இரண்டாகக் கிள்ளிப் போடவும். சின்ன வெங்காயத்தை உரித்து நைஸாக அரிந்து போடவும்.எல்லாவற்றையும் சேர்த்துக் கையால் பிசைந்து விடவும். இரு நிமிடங்கள் வைத்திருந்து சூடான இட்லிகளுடன் அல்லது தோசைகளுடன் பரிமாறவும். 
. 

Related Posts Plugin for WordPress, Blogger...