எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 நவம்பர், 2024

15.சுக்குடிக் கீரைத் தண்ணிச்சாறு


15.சுக்குடிக் கீரைத் தண்ணிச்சாறு



தேவையானவை:- மணத்தக்காளிக் கீரை. - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும்., அரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப், தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் நைசாக அரைக்கவும்., எண்ணெய் - 2 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும்., உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:- கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டுச் சிவந்ததும், சீரகம் போட்டுப் பொறிந்ததும், வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும்.  2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும். கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.வெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு,  அரைத்த தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும்.

புதன், 27 நவம்பர், 2024

கருப்புக் கொண்டைக்கடலை மசாலா

கருப்புக் கொண்டைக்கடலை மசாலா

தேவையானவை :- கருப்புக் கொண்டைக்கடலை - 1 கப், பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1 , இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - அரை டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், சோம்பு -  அரை  டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று., உப்பு - அரை டீஸ்பூன். சீனி - 1 சிட்டிகை.

செய்முறை :- கொண்டக்கடலையைக் கழுவி எட்டு மணி நேரம் ஊறவைத்து பிரஷர் பானில் போட்டு உப்பு சேர்த்து மூன்று விசில் வைத்து வேகவைக்கவும். பெரிய வெங்காயம் தக்காளியைத் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கருவேப்பிலை தாளித்து அரைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டையும் போட்டு சிவக்கும்படி வதக்கவும். அதில் சீனி சேர்த்து மிளகாய், மல்லி பொடியைப் போட்டு அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து எண்ணெய் பிரியும்போது வேகவைத்த சன்னாவைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும். நன்கு கொதி வந்ததும் மூடி போட்டு ஐந்து நிமிடம் வேகவைத்து இறக்கவும். அலங்கரிக்க பொடியாக அரிந்த வெங்காயம் கொத்துமல்லித் தழை தூவவும். சூடான ரொட்டி, சப்பாத்தி, புல்கா, நான் ஆகியவற்றோடு பரிமாறலாம்.

ஞாயிறு, 24 நவம்பர், 2024

14.மாங்கொட்டைப் பருப்புக் குழம்பு


14.மாங்கொட்டைப் பருப்புக் குழம்பு

தேவையானவை:- மாங்கொட்டைப் பருப்பு – 2 ( மாங்காய் கொட்டையை உரித்து காயவைத்த பருப்பு ), சின்ன வெங்காயம் – 10 உரித்து பொடியாக நறுக்கவும்., வெள்ளைப்பூண்டு – 8 உரித்துப்பொடியாக நறுக்கவும், தக்காளி – 1 பொடியாக நறுக்கவும்., புளி – 1 நெல்லி அளவு, உப்பு – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை., சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் அல்லது மிளகாய் – 6 மல்லி – 1 டேபிள் ஸ்பூன், மிளகு சீரகம் து பருப்பு தலா ஒரு டீஸ்பூன் போட்டு வெறும் வாணலியில் வறுத்து அரைத்து வைக்கவும்., எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை:- மாங்கொட்டைப் பருப்பை வெந்நீரில் ஊறப்போடவும். புளியையும் உப்பையும் ஊறவைத்து 3 கப் சாறெடுத்துச் சாம்பார் பொடி அல்லது அரைத்த மசாலா பொடிபோட்டுக் கரைத்து வைக்கவும்.மாங்கொட்டைப் பருப்பை நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து வெந்தயம் போட்டுச் சிவந்ததும் வெங்காயம் வெள்ளைப்பூண்டு தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். சுருள வதங்கியதும் அரைத்த மாங்கொட்டைப் பருப்பு விழுதைப் போடவும். அரை நிமிடம் வதக்கி மஞ்சள் பொடி போட்டு மசாலாப்பொடியோடு கரைத்து வைத்த புளியை ஊற்றவும். கொதிவந்ததும் அடக்கி சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

புதன், 20 நவம்பர், 2024

13.நெல்லிக்காய் சாதம்

13.நெல்லிக்காய் சாதம்


தேவையானவை:- சாதம் - 2 கப், முழு நெல்லிக்காய் – 6, பச்சை மிளகாய் – 2, உப்பு - 1/2 டீஸ்பூன், மஞ்சள்பொடி - 1 சிட்டிகை, கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இ்ணுக்கு, எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:- முழு நெல்லிக்காய்., பச்சை மிளகாய்., உப்பைத் தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் கருவேப்பிலை.,உப்பு போட்டு இறக்கி சாதத்தில் சேர்க்கவும். அரைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறி தயிர்.,மசால்வடையுடன் பரிமாறவும்...

திங்கள், 18 நவம்பர், 2024

12.கிளைக்கோஸ் மசாலா


12.கிளைக்கோஸ் மசாலா



தேவையானவை:- கிளைக்கோஸ் (சின்ன முட்டைக்கோஸ்) - 200 கி, பெரியவெங்காயம் -1, தக்காளி- 1, பூண்டு -2 பல், உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை. அரைக்க:- மிளகாய் – 5, தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு, சீரகம் – சிறிது. தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து சோம்பு - தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு. 

செய்முறை:- கிளைக்கோஸை இரண்டாக வெட்டவும் வெங்காயம் தக்காளியைச் சதுரத் துண்டுகளாக வெட்டவும். பூண்டைத் தோலுரித்து நசுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றிக் கடுகு உளுந்து சோம்பு தாளித்துப் பெரியவெங்காயம், தக்காளி, பூண்டை வதக்கவும். கருவேப்பிலையுடன் கோஸையும் சேர்த்து சிறிது வதக்கவும். மசாலாவை அரைத்து உப்புடன் இதில் சேர்க்கவும். நன்கு கிளறி மூடி போட்டு சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிடவும். எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...