எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 20 நவம்பர், 2016

ஸ்கந்தர்சஷ்டி ரெசிப்பீஸ்,SKANDAR SASHTI RECIPES.

ஸ்கந்தர்சஷ்டி ரெசிப்பீஸ்:-

1.தினை பருப்புத் தோசை
2.பொரியரிசி மாவுருண்டை
3.கினோவா கிச்சடி
4.வெல்ல பூரி.
5.பாசிப்பருப்பு டோக்ளா
6.அவல் வடை
7.புதினா மல்லி கருவேப்பிலை மோர்
8.இலந்தைப் பழப் பாயாசம்.

1.தினை பருப்புத் தோசை:-

தேவையானவை:- தினை – 1 கப், துவரம் பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப், உளுந்தம் பருப்பு – 1 கைப்பிடி, வரமிளகாய் – 4, உப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, மஞ்சள்தூள்- 1 சிட்டிகை,எண்ணெய் – 20 மிலி.
செய்முறை:- தினையைத் தனியாகவும் பருப்புகளை ஒன்றாகவும் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் முதலில் மிளகாய், உப்பு, பெருங்காயத்தைப் பொடித்து அதன் பின் பருப்பு வகைகளை அரைக்கவும். கடைசியாக தினையைச் சேர்த்து அரைத்து கொர கொரப்பாக எடுக்கவும். தேவையான தண்ணீர் ஊற்றிக் கலக்கி தோசைக்கல்லில் ஊற்றி எண்ணெய் விட்டு மெல்லிய தோசையாக வார்க்கவும். திருப்பிப் போட்டு சிறிது எண்ணெய் விட்டு மொறுமொறுப்பானதும் எடுக்கவும். நிவேதிக்கவும்.


2.பொரியரிசி மாவுருண்டை :-

தேவையானவை:- சிவப்பரிசி – 1 கப், சீனி – கால் கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன். உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- சிவப்பரிசியைப் பொரிக்கவும். பொரித்ததை மிக்ஸியில் பொடித்து சலிக்கவும். சீனியையும் சலிக்கவும். உப்புப் போட்டுக் கலக்கவும். நெய்யைக் காயவைத்து ஊற்றிப் பிசைந்து உருண்டைகள் பிடிக்கவும். பிடிக்க வராவிட்டால் சிறிது பால் தெளித்துப் பிடிக்கவும். மாவுருண்டை கப்புகளில் நிரப்பியும் குப்புற அடித்து வைக்கலாம். நிவேதிக்கவும்.

3.கினோவா கிச்சடி:-

தேவையானவை:- கினோவா – 1 கப், காரட் , பீன்ஸ், பட்டாணி – 1 கப், பெரிய வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 1, இஞ்சி – 1 துண்டு, முந்திரி – 10, நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய்- 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன். உப்பு- அரை டீஸ்பூன்.

செய்முறை:- கினோவாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். ஒரு ப்ரஷர் பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளிக்கவும். இதில் பொடியாக அரிந்த வெங்காயம், இஞ்சி,பச்சை மிளகாய், காய்கறி போட்டு வதக்கவும். மூன்று கப் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் கினோவாவைப் போடவும். உப்பு சேர்க்கவும். மூடி போட்டு ஒரு விசில் வைக்கவும். ஆறியதும் திறந்து நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து நன்கு கிளறி நிவேதிக்கவும்.

4.ார் அரிசி பூரி.

தேவையானவை:- இட்லிகார் அரிசி- 1 கப், துவரம்பருப்பு – அரை கப், வரமிளகாய் – 4, மல்லி – 1 டீஸ்பூன், பூண்டு – 4 பல், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:- அரிசி பருப்பு இவற்றைக் களைந்து ஊறவைக்கவும். மல்லியை லேசாக வறுக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து மிக்ஸியில் மிளகாய் மல்லி உப்பு, பூண்டு சேர்த்துப் பொடித்து அரிசியையும் பருப்பையும் லேசாக தண்ணீர் விட்டு நைஸ் ரவை பதத்தில் அரைக்கவும். ஒரு வெள்ளைத் துணியால் மூடி வைக்கவும். 20 நிமிடம் கழித்து எண்ணெயைக் காயவைக்கவும். ஒரு துணியில் எலுமிச்சை அளவு மாவு எடுத்து மெல்லிய பூரியாகத் தட்டவும். ஒரு கையால் துணியைப் பிடித்து இன்னொரு கையால் உரித்துக் காயும் எண்ணெயில் ஒரு ஓரமாக உள்ளே போகும்படி போடவும். அரி கரண்டியால் காய்ந்த எண்ணெயை பூரிமேல் ஊற்றி அமுக்கவும். உப்பி வந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். நிவேதிக்கவும்.

5.பாசிப்பருப்பு டோக்ளா:-

தேவையானவை:- பாசிப்பருப்பு மாவு – 1 கப், கடலை மாவு – 2 டீஸ்பூன், ஈனோ உப்பு – 1 சிட்டிகை, சமையல் சோடா – 1 சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், காரட், கொத்துமல்லி – பொடியாக துருவியது தலா ஒரு கைப்பிடி , எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன், சீனி – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பருப்பு மாவையும் கடலை மாவையும் கலந்து உப்பு, ஈனோ சால்ட், சமையல் சோடா சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்து 20 நிமிடம் வைக்கவும். இதை குக்கரில் வைத்து அல்லது இட்லியாக வேகவைத்து துண்டுகள் செய்யவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு தாளித்து இதன் மேல் கொட்டி சீனியை எலுமிச்சை சாற்றில் கரைத்து ஸ்ப்ரே செய்து, கொத்துமல்லி காரட்தூவி நிவேதிக்கவும்.

6.அவல் வடை :-

தேவையானவை:- அவல் – 1 கப், அரிசிமாவு – கால் கப், மைதா – 1 டேபிள் ஸ்பூன், பெரியவெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, காரட் துருவல் – 2 டீஸ்பூன், இஞ்சி – 1 துண்டு. உப்பு – கால் டீஸ்பூன். எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- அவலை மிக்ஸியில் லேசாகப் பொடித்து ஒரு பௌலில் போடவும். இதில் அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்துக் கலக்கவும். பொடியாக அரிந்த பெரியவெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி காரட் துருவல் சேர்த்து நன்கு கலக்கி தேவையான தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். பத்து நிமிடம் கழித்து எண்ணெயைக் காயவைத்து மெல்லிய வடைகளாகத் தட்டி எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரித்து நிவேதிக்கவும்.

7.புதினா மல்லி கருவேப்பிலை மோர் :-

தேவையானவை:- புதினா, கொத்துமல்லி, கருவேப்பிலை – தலா ஒரு கட்டு. இவற்றை ஆய்ந்து கழுவிக் காயவைத்து நைஸாகப் பொடித்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் – 1 டேபிள் ஸ்பூன், தயிர் – 2 கப், உப்பு – அரை டீஸ்பூன், தண்ணீர் – 4 கப், எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:- தயிரை நன்கு கடைந்து உப்பு, எலுமிச்சைச் சாறு, புதினா கொத்துமல்லி கருவேப்பிலைப் பொடியையும் கலந்து திரும்பக் கலக்கவும். தண்ணீரை ஊற்றிக் கலக்கி விட்டு கண்ணாடி டம்ளர்களில் ஊற்றிக் கொடுக்கவும்.

8.இலந்தைப் பழப் பாயாசம்.:-

தேவையானவை:- இலந்தைப் பழம் – கால் கிலோ அல்லது இலந்தை வடை – 2, ஜவ்வரிசி – அரை கப், பால் – 1 கப், சீனி – அரை கப், நெய் – 2 டீஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10, ஏலத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:- இலந்தைப் பழத்தைக் கொட்டையோடு அரைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை வறுத்துத் தண்ணீரில் வேகவைக்கவும். வெந்ததும் சீனி பால் சேர்த்துக் கரைந்ததும் இலந்தைப் பழத்தைக் கரைத்து இறக்கவும். அல்லது இலந்தை வடையைப் பொடித்துப் போட்டு இறக்கவும். ஏலப்பொடி தூவி நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்துப் போட்டு நிவேதிக்கவும். 

டிஸ்கி:- இந்த ரெசிப்பீஸ் & கோலங்கள் 17, நவம்பர், 2016 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.
டிஸ்கி - 2.:- தீபாவளிப் பலகாரங்களைப் பாராட்டிய வாசகர்கள்.

//எஸ். சத்யபாமா, காஞ்சிபுரம், கே. ராஜசேகர், லால்குடி, எம். சாத்தையா, சாத்தூர், கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர், மயிலை கோபி, திருவாரூர், வி.சஞ்சனா, சென்னை, ஆர். ரமணி, பல்லாவரம், பா. அச்சுதன், வயலூர்// ஆகியோருக்கு நன்றி.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...