எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 மே, 2020

வெங்காய பஜ்ஜி.

வெங்காய பஜ்ஜி.

தேவையானவை :- பெரிய வெங்காயம் -2, பஜ்ஜி மிக்ஸ் - 1 கப் ( அல்லது கடலை மாவு முக்கால் கப் +அரிசி மாவு கால் கப் + மிளகாய் சோம்புப் பொடி அரை டீஸ்பூன் + உப்பு அரை டீஸ்பூன் ), எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை :- பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து வட்டமாக அரிந்து வைக்கவும். பஜ்ஜி மிக்ஸில் கால் கப் தண்ணீர் விட்டுப் பதமாகக் கரைத்து வைக்கவும். அல்லது கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் சோம்புப் பொடி, உப்பு சேர்த்துக் கரைத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி போட்ட தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

வெஜ் சாலட்.

வெஜ் சாலட்.

தேவையானவை :- காரட் - 1, வெங்காயம் - 1, வெள்ளரிக்காய் - 1, தக்காளி - 1, ப.மிளகாய் -1, மி. தூள் - கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை :- காய்கறிகளை சுத்தம் செய்து ஒரே சைஸில் சீவவும் அல்லது நறுக்கவும். இவற்றை ஒரு பௌலில் போட்டு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டுக் குலுக்கி விடவும். பத்து நிமிடம் கழித்து சப்பாத்தி பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
  

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

சிவப்பரிசி அவல் உப்புமா.

சிவப்பரிசி அவல் உப்புமா :-

தேவையானவை :- சிவப்பரிசி அவல் - அரை கப், சின்ன வெங்காயம் - 4, கருவேப்பிலை - 1 இணுக்கு, வரமிளகாய் - 1. உப்பு - கால் டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- சிவப்பரிசி அவலை ஒருமுறை களைந்து நன்கு வடித்து சிறிது நேரம் அதில் மிஞ்சி இருக்கும் தண்ணீரிலேயே நனைத்தாற்போல ஊற வைக்கவும். பத்து நிமிடம் கழித்துக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து தாளித்து கருவேப்பிலை இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் போடவும். அதில் பொடியாக அரிந்த வெங்காயத்தைப் போட்டுத் தாளித்து உப்பைச் சேர்க்கவும். அதில் அவலைப் போட்டு நன்கு பிரட்டி எடுத்து உபயோகிக்கவும்.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

பனீர், ஆனியன் ஃப்ரிட்டர்ஸ்.

பனீர் ஆனியன் ஃப்ரிட்டர்ஸ் :-

தேவையானவை :- பனீர் - 1 பாக்கெட், பெரிய வெங்காயம் -1, பஜ்ஜி மிக்ஸ் அல்லது கடலை மாவு - அரை கப் ( கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை சோம்புப்பொடி, பெருங்காய்ப் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடியைக் கலக்கவும். ) உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- பனீரை மெல்லிய விரல் நீள ஸ்லைஸாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பஜ்ஜி மிக்ஸ் உப்பு சேர்க்காமல் என்றால் தண்ணீர் விட்டுக் கரைக்கவும். ( கடலைமாவு  என்றால் உப்பு + மிளகாய்ப்பொடி+ சோம்புப்பொடி+பெருங்காயப்பொடி இவற்றைக் கரைக்கவும்). எண்ணெயைக் காயவைத்து பனீரையும் வெங்காயத்தையும் மாவில் தோய்த்துப் போட்டுப் பொரித்தெடுத்து தக்காளிசாஸுடன் பரிமாறவும்.

புதன், 5 பிப்ரவரி, 2020

கீரைத்தண்டுத் துவட்டல்.

கீரைத்தண்டுத் துவட்டல்.

தேவையானவை :- கீரைத்தண்டு - முளைக்கீரையை ஆய்ந்தவுடன் கிடைக்கும் தண்டினை வேர் நீக்கி சுத்தம் செய்து கழுவி அரை இஞ்ச் அளவு பொடியாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயம் - 4, பதமாக வேகவைக்கப்பட்ட துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி, உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து - தலா கால் டீஸ்பூன், வரமிளகாய் - 1.

செய்முறை:- கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து வரமிளகாயை இரண்டாகக் கிள்ளி விதையை நீக்கிப் போடவும். அதில் பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு வதக்கிக் கீரைத்தண்டைச் சேர்த்துக் கிளறவும். கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிம்மில் வேகவைத்து பதமாக வெந்த பருப்பு போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இது புளிக்குழம்பு, கெட்டிக்குழம்பு, காரக் குழம்புக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.
  
Related Posts Plugin for WordPress, Blogger...