எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2020

கோதுமை கேப்பை தோசை.

கோதுமை கேப்பை தோசை. 

தேவையானவை:- கோதுமை - 1 கப், கேப்பை - அரை கப், சீரகம் - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 1, பெரிய வெங்காயம் - 1, கருவேப்பிலை கொத்துமல்லி - சிறிதளவு, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- கோதுமையையும் கேப்பையையும் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கட்டியில்லாமல் கரைக்கவும். இன்னும் கால் கப் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். இதில் சீரகம், பெருங்காய்த்தூள், உப்பைப் போட்டு வைக்கவும். பெரிய வெங்காயம் பச்சைமிளகாய், கருவேப்பிலை கொத்துமல்லியையும் பொடியாக நறுக்கி நன்கு கலந்து ஐந்து நிமிடம் வைக்கவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவைத்துத் திருப்பிப் போட்டு நன்கு பொன்னிறமானதும் எடுத்து சுண்டைக்காய்த் துவையல், மிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும். 

புதன், 29 ஜூலை, 2020

கேப்பை புட்டுக் கொழுக்கட்டை.

கேப்பை புட்டுக் கொழுக்கட்டை. 


தேவையானவை:- கேப்பை  மாவு - 1 கப், தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், தூள் சர்க்கரை/தூள் வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன். 

செய்முறை:- கேப்பையை நன்கு சலித்து லேசாக உப்புத்தூவி தண்ணீர் தெளித்துப் பிசறவும். அது பிடித்தால் கொழுக்கட்டையாகப் பிடிக்கும்படியும் உதிர்த்தால் உதிரவும் வேண்டும். இதுவே பக்குவம். இதை இட்லிச் சட்டியில் துணி போட்டு ஆவியில் வேகவைத்து எடுத்து தூள் சர்க்கரை/வெல்லம் தேங்காய், நெய் கலந்து கொழுக்கட்டையாகப் பிடிக்கவும். 
  

செவ்வாய், 28 ஜூலை, 2020

ஜவ்வரிசிப் பாயாசம்.

ஜவ்வரிசிப் பாயாசம்.

தேவையானவை:- ஜவ்வரிசி - 150 கி, தேங்காய் - அரை மூடி, ஜீனி - 50 கி, நெய் - 2 டீஸ்பூன், முந்திரி, கிஸ்மிஸ் - தலா 6, ஏலப்பொடி - ஒரு சிட்டிகை. 


செய்முறை:- தேங்காயைத் திருகி மூன்று பால் ( மூன்று அரை கப் ) எடுக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து எடுத்துக் கொண்டு அதில் ஜவ்வரிசியைப் போட்டுப் பொரிய விடவும். பொரிந்ததும் மூன்றாவது பாலை ஊற்றி வேக விடவும். கொதிவந்ததும் இரண்டாம் பாலையும் சேர்க்கவும். நன்கு கண்ணாடி மாதிரி வெந்ததும் ஜீனியைப் போட்டுக் கொதிக்க விடவும். இறக்கி வைத்து முதல் பாலைச் சேர்த்து ஏலப்பொடி முந்திரி கிஸ்மிஸைச் சேர்த்துப் பரிமாறவும்.  
  

ஞாயிறு, 26 ஜூலை, 2020

சிக்கன் சுக்கா - 1.

சிக்கன் சுக்கா - 1. 



தேவையானவை :- சிக்கன் 250 கிராம். மிளகாய் - 10,உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன். 

செய்முறை:- சிக்கனைச் சுத்தம் செய்து வைக்கவும். மிளகாயை மைய அரைக்கவும். ஒரு கடாயில் சிக்கனையும் இந்த மிளகாய் விழுதையும் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். மூடி போட்டு வேக விடவும். முக்கால் பதம் வெந்து சுண்டியதும் உப்பு சேர்க்கவும். இதை இரண்டு விதமாக வறுக்கலாம். இதன் பக்கவாட்டிலேயே எண்ணெய் ஊற்றி நன்கு வறுத்துச் சுக்காக ஆனதும் எடுக்கலாம். 

இன்னொரு முறையில் சிக்கனில் நீர் சுண்டியதும் இறக்கி அதில் ஃபுட் கலரை நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து எடுத்துப் பரிமாறவும். 
  

புதன், 22 ஜூலை, 2020

வெஜ் கொத்துப் பரோட்டா.

வெஜ் கொத்துப் பரோட்டா. 


தேவையானவை :- பரோட்டா -  2, பெரிய வெங்காயம் - 1 , காய்கறிக் கலவை - காரட், பீன்ஸ் , குடைமிளகாய், முட்டைக்கோஸ் - 1 கப், பச்சைமிளகாய் - 2, தக்காளி - சின்னம் - 1, எலுமிச்சைச் சாறு - சில துளிகள், உப்பு - கால் டீஸ்பூன்,மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன். எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன். கருவேப்பிலை - 1 இணுக்கு. முட்டை - 2 விரும்பினால். 

செய்முறை:- பரோட்டாவைப் பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு பானில் பொடியாக அரிந்த வெங்காயத்தை எண்ணெய் இல்லாமல் சிறிது நேரம் வதக்கவும். இதில் காய்கறிக் கலவையையும் கொட்டி நன்கு பரவ விட்டு வதக்கவும். ஓரிரு நிமிடம் கழித்து இதில் பொடியாக அரிந்த பரோட்டா, உப்பு, பொடியாக அரிந்த பச்சைமிளகாய்,  எண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் தோசைக்கரண்டியால் திருப்பி விட்டுக் கொத்தவும். ( விரும்பினால் முட்டை சேர்க்கலாம் ). ஐந்து நிமிடம் கழிந்ததும் துண்டுகளாக்கிய தக்காளி கருவேப்பிலை சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து நன்கு கலக்கிவிட்டு இறக்கி மாகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸுடன் பரிமாறவும். இட்ஸ் டிஃபரண்ட் :) 
    
Related Posts Plugin for WordPress, Blogger...